சனாதனம் – பொய்யும் மெய்யும் 33-34
- ?.33.“சனாதனம் மனிதன் பின்பற்ற வேண்டிய ஒழுக்கம், கடமை பற்றிக் கூறுகிறது. இது தனி மனிதரின் போதனைகளைப் பின்பற்றி உருவாக்கப்படவில்லை. மாறாக மனிதன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியதைத்தான் விவரிக்கிறது.” – புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருட்டிணசாமி இவ்வாறு கூறுகிறாரே!
- பாசகவிற்கு ஆதரவாகக் கூறவேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறுகிறார். அதற்கு முன்பு குறைந்தது சனாதனம் பற்றிய உண்மைகளைப் படித்துத் தெரிந்திருக்கலாம்.
சூத்திரன் மன்னனாக இருக்கும் நாட்டில் வசிக்கக் கூடாது.. .. ..சண்டாளர்கள் வசிக்கும் நாட்டிலும் வசிக்கக் கூடாது. (மனு 4.61)
சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை யுடையதாயிருக்கும். (மனு 8. 22)
சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும் யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராமணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். மனு 11. 13)
நற்பண்பான(யோக்கியமான) அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைக் தண்டிக்கக் கூடாது. (மனு 11. 20)
சனாதனம் கூறும் இவற்றைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறரா? அதைத்தான் புதிய தமிழகமாகக் காண விரும்புகிறாரா அதன் தலைவர்? படிக்காமலேயே தனக்கு எல்லாம் தெரியும் என்று எண்ணுபவர்கள், சொல்ல வருவது குறித்துப் படித்துப் பார்க்காமல் பிதற்றினால் இப்படித்தானே இருக்கும்!
“பெண்களுக்குச் சொத்தில் பாத்தியம் கொடுக்கப் போறாளாம்; அவாளுக்கு சொத்துலே பங்கு கொடுத்தால் என்னாகும் தெரியுமா?”
“ அபாண்டமா அபச்சாரமா போயிடும்” என்னும் சனாதனவாதிகளைப்பற்றிக் கேள்விப்பட்ட பின்பும் சனாதனத்தைப்
போற்றும் இவரை நம்பி மக்கள் எப்படிப் பின்பற்றுவார்கள் என்று எண்ண வேண்டாவா?
பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவது குறித்துச் சட்டம் இயற்றுவதற்கான வரைவை நாடாளுமன்றத்தில் நேரு அளிக்க இருந்தார். அப்பொழுது இது குறித்துச் சொன்னவர் கருத்தை அவர் நடையிலேயே தருகிறோம். படித்து உண்மையை உணருங்கள்:
பெண்களுக்கு சொத்துரிமை என்ற செய்தி வந்தவுடனேயே மகா பெரியவர், “லோகமே அழியப் போறது ஓய்! அழியப் போறது… ஃச்த்ரிகளுக்கு சொத்துல பாத்யம் கொடுத்தா என்ன ஆகும்? இஃச்ட்டப்பட்டவா கூட ஃச்திரிகள் ஓடிப்போவா, அபாண்டமா, அபச்சாரமா போயிடும்! ஃச்திரிகளுக்கு பாத்யமோ, சம்பாத்யமோ இருக்கப்படாதுன்னு, மனுஃச்மிருதி சொல்லிருக்கு! ஃச்த்ரீ தர்மத்தை பாதுகாக்க இந்த ‘பில்லை’ எதிர்த்து ஊரெல்லாம் கூட்டம் போடணும், இதுக்கு நிறைய ஃச்த்ரீகளை திரட்டனும்…” என்றெல்லாம் அவசர ஆணைகளைர் பிறப்பித்தார் மகா பெரியவர் காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (இந்துமதம் எங்கே போகிறது நூல் பக். 108-109)
- ? 34. சனாதனத்தைக் கூறும் ஆரிய நூல்கள் அனைவருக்குமானது எனவே அனைவரும் போற்ற வேண்டும் என்கிறார்களே!
- இரிக்கு வேத, மனுநீதி, மொழிபெயர்ப்பாளர் வெண்டி தோனிகர்(Wendy Doniger) பிராமணர்கள், தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காகச் சற்றும் அடக்கவுணர்வோ கூச்சமோ தயக்கமோ மனச்சான்றின் உறுத்தலோ இல்லாமல் பேசுவதையும் வேதங்களில் காணலாம் என்றும் வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுவதோ டல்லாமல் அவையே உலகநெறி யென்றும் உலக நோக்கமென்றும் காட்டப்படுகின்றன என்றும் விளக்குகிறார்.
- வேதங்களின் அடிப்படை இலட்சியம் மிருகத்தனமானது(Brutal) என்று தமது பிராமணர்களின் ஈகைக் கோட்பாடு (La Doctrine du Sacrifice Dans Les Brahmanas) நூலில் சில்வியன் இலவி (Sylvian Levi) விளக்குகிறார்.
பிராமணங்கள், “மாந்தர்களில் பிராமணர்களே தெய்வங்கள் என்று வணங்கப்படவேண்டியவர்கள்” என்கிறது.
36, 37 ஆம் வினாக்களுக்கான விடைகளையும் காண்க..
இவ்வாறு பிராமணர்களை மட்டும் உயர்த்திக் கூறும் சனாதனத்தைத்தான் அனைவருக்கும் பொதுவானது என்றும் போற்ற வேண்டும் என்றும் சிறிதும் நாணமின்றிப் போற்றுகின்றனர்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 61-63
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக