ஞாயிறு, 5 மே, 2013

என் பெயர் பாப்பாத்தி

என் பெயர் பாப்பாத்தி
சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து பண்ணைவாடி கிராமத்திற்கு போகும் வழியில், கொளத்தூரின் நுழைவு பகுதியில் உள்ள செக்போஸ்ட் அருகே இருக்கிறது அந்த கம்பங்கூழ் விற்கும் தள்ளுவண்டி கடை.
வெயிலுக்கு ஏற்ற உணவான கம்பங்கூழை அந்த வழியாக செல்லும் வாகன ஒட்டுனர்களும் மற்றவர்களும் ஓரு சொம்பில் வாங்கிக் குடித்து செல்கின்றனர்.
நடுத்தர வயது பெண் ஒருவர் சிரித்த முகத்துடன் சுறு,சுறுப்பாக அந்த கம்பங்கூழ் கடையில் இயங்கிக் கொண்டு இருந்தார். வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப பார்த்து, பார்த்து கொடுத்துக் கொண்டு இருந்தார்.
கம்பங்கூழ் கொடுத்த சொம்பின் சுத்தம், மற்றும் பானைகளின் பளபளப்பு, கம்பங்கூழும் அதற்கு துணை உணவான மிளகாய் வத்தல், மிதுக்கு வத்தல், மாங்காய் போன்றவைகளின் அருமையான ருசி காரணமாக ஒன்றுக்கு மூன்று சொம்பாக (ஒரு சொம்பின் விலை பத்து ரூபாய்) கம்பங்கூழை குடித்துவிட்டு, அந்த கம்பங்கூழ் உணவு தந்த திருப்தியில் ஐம்பது ரூபாயை கொடுத்து விட்டு, மீதம் ரூபாயை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கடையின் உரிமையாளரான அந்த பெண்ணிடம் சொன்னபோது, "வேணாங்கய்யா... உழைச்சு சம்பாதிக்கிற காசே போதும் ''என்று கூழின் விலைக்கு மேல் கூடுதலாக வாங்க மறுத்து திரும்ப இருபது ரூபாயை கொடுத்துவிட்டார்.
இந்த வார்த்தை மட்டுமல்ல இவரது வாழ்க்கையே பலருக்கு படிப்பினைதான்.
எவ்வளவு சோதனை வந்தாலும் அதை சாதனையாக மாற்றிக் கொள்ளாவிட்டாலும் வேதனையாக நினைத்து வருந்தாதவர் இவர்.
பெயர் பாப்பாத்தி...
சின்ன மேட்டூர் கோழிப்பண்ணை பகுதியில் பிறந்தவர், தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை தினங்களில் மட்டுமே இட்லி, பூரி போன்ற "வசதியான' உணவை சாப்பிடக்கூடிய குடும்பத்தை சேர்ந்தவர்.
வீட்டின் பிரதான உணவு கம்பங்கூழ்தான்.
ஏழாவது வரை படித்தார் அதற்கு மேல் படிக்க வசதிப்படவில்லை, அம்மா, அப்பாவுடன் கூலி வேலைகளை செய்ய ஆரம்பித்தார்.
சிறு வயதிலேயே மரமேறும் தொழிலாளியான மாதப்பன் என்பவருடன் திருமணம், அடுத்த இரண்டு ஆண்டுகளில் குழந்தையைப் போன்ற இவருக்கு இரண்டு குழந்தைகள்.
நன்றாக போய்க் கொண்டிருந்த குடும்பத்தில் திடீர் சோதனை, இவரும் சம்பாதித்தால்தான் குடும்பம் நடக்கும் என்ற நிலை.
யாரையும் தெரியாது, எதுவும் புரியாது ஆனாலும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற சூழ்நிலையில் இவருக்கு தெரிந்த கம்பங்கூழ் தயாரிப்பு இவருக்கு கை கொடுத்தது.
வீட்டில் கம்பங்கூழ் தயாரித்து ரோட்டில் கொண்டுவந்து விற்பனை செய்தார். கம்பங்கூழ் விற்றே தனது மகளுக்கு திருமணம் செய்துவைத்தார், முப்பத்தியேழு வயதாகும் இவர், இப்போது இரண்டு பெண் குழந்தைகளுக்கு பாட்டியாவார்.
பேரப்பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் மீது தனி அக்கறை கொண்டுள்ளார்.
இதற்காக காலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் இவரது உழைப்பு இரவு 11 மணி வரை தொடர்கிறது. இடையில் குட்டித்தூக்கம், வாரவிடுமுறை பொதுவிடுமுறை என்று எதுவும் கிடையாது.எந்த நேரமும் உழைப்பு, உழைப்புதான்.
இவ்வளது உழைக்கும் இவருக்கு ஒரு நாள் வருமானமாக முன்னூறு ரூபாயில் இருந்து ஐநூறு ரூபாய் வரை கிடைக்குமாம்.
இன்னும் நிறைய சம்பாதிக்கணும், கடையை பெரிசாக்கணும் என்பது போன்ற எந்த எண்ணமும் இல்லாமல், "இந்த பொழப்பு இப்படியே போனால் போதுமுங்க' என்று வெள்ளந்தியாக பேசுகிறார்.
பத்து ரூபாய் கொடுத்து கூழ் குடிக்கிறவங்க மனசும், வயிறும் நிறைஞ்சா போதும் அதுவே எனக்கு பரம சந்தோஷம் என்கிறார்.
- எல்.முருகராசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக