ஞாயிறு, 5 மே, 2013

அரங்கேற்று க் காதையின் அரங்கேற்றம் எப்போது?

அரங்கேற்று க் காதையின் அரங்கேற்றம் எப்போது?

கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இலக்கியங்கள் கற்பிக்கப்படும் முறை பெரிதும் கவலைக்கிடமாகவே உள்ளது. தமிழார்வலர்களைப் பெரிதும் வருத்தும் செய்தி சிலப்பதிகாரத்தில் வரும் "அரங்கேற்றுகாதை'யை நீக்கிவிட்டு அவ்விலக்கியத்தைக் கற்பிப்பதாகும். பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் சிலப்பதிகாரத்தைப் பாடத்திட்டத்தில் சேர்க்கும்போது "அரங்கேற்றுகாதை நீங்கலாக' என்றே குறிப்பிட்டுள்ளன.
அரங்கேற்றுகாதைதான் தமிழிசை பற்றியும் தமிழ்க் கூத்துக் கலையைப் பற்றியும் நாம் அறிந்து கொள்வதற்கான மிக அதிகமான செய்திகளையும் நுணுக்கங்களையும் கூறுகிறது. தமிழில் எஞ்சியிருக்கும் இசை பற்றிய நூல்களில் முதல் நூலாக இருப்பது சிலப்பதிகாரமும் அதன் அங்கமாகிய அரங்கேற்று காதையுமே. இதைப் பின்பற்றியே ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிருதசாகரமும், விபுலானந்தரின் யாழ் நூலும், ராமனாதனின் சிலப்பதிகார (இசை பற்றிய) ஆய்வும், வீ.ப.கா. சுந்தரம் மற்றும் குடந்தை சுந்தரேசனாரின் ஆய்வுகளும் இன்னோரன்ன பல ஆய்வுகளும் எழுந்தன. நம்மிடையே எஞ்சியிருக்கும் "இசைக்கருவூலம்' அரங்கேற்றுகாதைதான். தமிழ் மொழியின் ஆத்மாவாகவும், சமயத்தின் ஆத்மாவாகவும் இருக்கும் அரங்கேற்றுகாதை, பல்கலைக்கழகப் பாடத்திட்டக் குழுவினரால் நீக்கப்பட்டிருக்கிறது.
பேரறிஞர் அண்ணா "அரங்கேற்றுகாதை ஏன் கற்பிக்கப்படுவதில்லை' என்று கேட்டு, "தகுதியுள்ள ஆசிரியர்கள் இல்லை' எனவறிந்து அதிர்ச்சியுற்று, குடந்தை சுந்தரேசனாரிடம் அரங்கேற்றுகாதை பற்றிக் கேட்டறிந்து நிலைமையைச் சீர்செய்ய வேண்டுமெனக்கூறி 45 ஆண்டுகள் ஆகின்றன. ஆயினும், அரங்கேற்றுகாதை பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையே நீடிக்கிறது.
முத்தமிழ் என்ற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனரே தவிர, அரங்கேற்று காதையைக் கற்பிக்கும் ஆசிரியர்களைத் தமிழிசை இயக்கமும் பல்கலைக்கழகங்களும் இதுவரை கண்டறியவில்லை; உருவாக்கவில்லை.
இளங்கோவடிகளால் மாதவியின் அரங்கேற்றம் நிகழ்ந்தது. ஆனால், பல்கலைக்கழகங்களால் "அரங்கேற்றுகாதை' இன்னும் அரங்கேற்றப்படவில்லை. இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து, அரங்கேற்றுகாதையைப் பாடத்திட்டத்தில் சேர்த்து கற்பிக்க வேண்டும். இலக்கியப்புலம் இசைப் புலத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். அதற்குத் தேவையான ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க வேண்டும். இதைச் செய்தால் அரங்கேற்றுகாதை அரங்கேறும்.
ராவ்சாஹேப் கே.கோதண்டபாணிப் பிள்ளை என்பவர், அய்ஸ்ரீண்ங்ய்ற் பஹம்ண்ப் ஙன்ள்ண்ஸ்ரீ என்ற ஆங்கிலக் கட்டுரையில் "இசை மொழியின் ஆத்மா' என்று கூறியுள்ளார்.
தமிழ் இலக்கியம் பயிலும் மாணவர்கள் தமிழிசையின் பாலபாடத்தையாயினும் பயில வேண்டும். தமிழ்மொழி தனது ஆத்மாவைத் திரும்பப்பெற வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக