ஞாயிறு, 16 டிசம்பர், 2012

இந்தோநேசியாவில் அன்னை வேளாங்கண்ணி மாதாத் திருத்தலம்


 

எல்.முருகராசு

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலம் உலகப்பிரசித்தம் பெற்றது. எல்லா சமயங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து அன்னை மரியாவை வணங்கிச் செல்கின்றனர்.
வேளாங்கண்ணி மாதாவை சிறப்பிக்கும் வகையில் "அன்னை வேளாங்கண்ணி' என்ற திரைப்படம் எடுத்த போது, மாதா மீதிருந்த பக்தியின் காரணமாக, அந்த படத்திற்கு சம்பளம் வாங்காமலே நடித்துக்கொடுத்ததாக, கடந்த வாரம் கூட முதல்வர் ஜெயலலிதா ஒரு விழாவில் கூறியிருந்தார்.

இவ்வளவு புகழ் பெற்ற மாதா திருக்கோவில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தவிர, சென்னை பெசசன்ட் நகர், மதுரை அண்ணாநகர், போன்ற சில இடங்களில் அமைந்திருப்பதை பலர் பார்த்திருக்கலாம்.
ஆனால் முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவில், கிறிஸ்தவர்களின் தமிழ்க்கடவுளான வேளாங்கண்ணி மாதா கோவில் அமைந்திருக்கிறது என்ற தகவலை, மதுரை பத்திரிகையாளர் இதயகுமார் படங்களுடன் பகிர்ந்து கொண்டபோது ஆச்சர்யமாக இருந்தது.ஆச்சர்யத்திற்கு காரணம் அந்த ஆலயம் தமிழகத்தில் உள்ள இந்துக்களின் கோபுர வடிவில் அமைந்திருப்பதும், அதனை வடிவமைத்து கட்டியவர் தமிழ்நாட்டைச் சார்ந்த பாதிரியார் என்பதும்தான். இதை கொஞ்சம் விரிவாக பார்ப்போமா.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜேம்ஸ் சிங்கராயர் என்ற இயேசு சபை துறவி, மதப்பணிக்கென இந்தோனேஷியா அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு மேடான் என்ற நகரில் ஒரு மாதா கோவில் கட்டும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்துக்கள் மத்தியில் அம்மனுக்கு பல பெயர்களும், பல தோற்றங்களும் இருப்பது போல, கத்தோலிக்க மதத்தில் மேரிமாதாவுக்கும் பல பெயர்களும், பல தோற்றங்களும் உண்டு. (உதாரணத்திற்கு சகாய மாதா, ஆரோக்கிய மாதா, லூர்து மாதா, பனிமய மாதா, பூண்டி மாதா என்று பட்டியல் நீளும்.) இதில் எந்த மாதாவின் கோவிலை மேடானில் அமைக்கலாம் என்ற பேச்சு வந்த போது, பாதிரியார் ஜேம்ஸ் தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும், வேளாங்கண்ணி மாதா பெயரில் கோவில் கட்டலாம் என பேசி, அனைவரது சந்தோஷமான சம்மதத்தை பெற்று கோவில் கட்டத்துவங்கினார்.
தமிழ்நாட்டில் இருக்கும் தேவாலயங்கள் எல்லாம் ஐரோப்பிய நாட்டு கோபுரங்களின் சாயலை தாங்கி நிற்கும் போது, வெளிநாட்டில் முதன் முதலாக கட்டப்படும் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தை ஏன் தமிழ் கலாச்சாரத்துடன் அமைக்கக்கூடாது என்று எண்ணினார்.

அவரது எண்ணம் ஈடேற பலரது கடுமையான உழைப்பும், சில வருடங்களும் தேவைப்பட்டது. தமிழகத்தில் உள்ள வேளாங்கண்ணியின் பக்தர்கள் (இதில் நிறைய பேர் இந்துக்கள்) உள்பட பல்வேறு நாடுகளில் உள்ள பக்தர்களின் நிதியுதவியுடன் தேவாலயம் ஏழு மாடங்களுடன் கடந்த 2008ம் ஆண்டு முதல் பக்தர்களை வரவேற்றபடி கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
இந்த தேவாலயத்தின் முதல் மாடத்தில் மட்டுமே வழிபாடுகள் நடக்கின்றன. கீழ் மண்டபம் மதங்களின் சின்னங்கள் எதுவும் இல்லாமல் தியான மண்டபமாக செயல்படுகிறது. கதவுகளே இல்லாமல் எப்போதும் திறந்திருக்கும் இந்த மண்டபத்திற்கு கிறிஸ்தவர்கள் மட்டுமில்லாது இந்துக்களும், புத்த மதத்தினரும் கூட வந்து அமைதியாக தியானம் செய்து விட்டு செல்கிறார்கள்.

இந்த ஆலயத்திற்கு திட்டமிடாமல் கொடுக்கப்பட்ட ஏழு வர்ணங்கள் இப்போது ஆழமான அர்த்தம் கொண்டுள்ளது,.ஆரம்பத்தில் உள்ள கறுப்பு, பாவ இருளை குறிக்கிறது. அந்த பாவங்களுக்காக வருந்தி, அந்த தீய குணங்களை எரித்து சாம்பலாக்கி விட்டால், வெள்ளை எனும் புனிதத்தன்மை வந்து சேருகிறது. சிவப்பு எனும் தியாகத்தை செய்யத் துவங்கி விட்டால், பச்சை எனும் வளமான வாழ்வு நம்மை வந்தடையும். அதையடுத்த மறுவாழ்வு நீலமான வான்லோகத்தில் (சொர்க்கத்தில்) நமக்கு அமையும். அங்கு தங்க விக்கிரகம் போல் இருக்கும் ஆண்டவனை தரிசித்து மகிழலாம்.
மேற்கண்ட தகவலை சொன்னவர் இந்த தேவாலயத்தின் பாதிரியார் ஜேம்ஸ் சிங்கராயர். இப்போது இவரது பெயர் ஜேம்ஸ் பாரதபுத்ரா.

அந்த "பாரத புத்ரா' பெயருக்கு பின்னால் ஒரு சின்ன சுவராசியம், அதையும் அவரே சொல்கிறார், 1988ல் 'குடியுரிமை பெற்றால்தான் இந்தோனேஷியாவில் தொடர்ந்து நீடிக்க முடியும்' என்ற புதுச் சட்டம் வந்தது. சரியென நானும் குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன். ஆனால் 'இந்தோனேஷிய பெயரைத்தான் பதிவு செய்ய முடியும்' என்று கூறி விட்டனர். பாரதம், புத்திரன் போன்ற வார்த்தைகள் எல்லாம் இங்கும் உண்டு. எனவே இந்தோனேஷிய குடிமகனாக மாறினாலும், பாரதத்தின் புத்திரனாகவே இருப்போம் என முடிவெடுத்து பாரதபுத்ரா ஆனேன்'' என்று சிரித்தபடி சொன்னார் பழைய ஜேம்ஸ் சிங்கராயர். இவருடன் தொடர்பு கொள்ள: 62-8163141172., 62-8163141172.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக