ஞாயிறு, 16 டிசம்பர், 2012

திசம்பர் இசை விழா உலகத் திருவிழாவாக மாற வேண்டும்: முதல்வர்

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே  தமிழிசை சிறந்திருந்ததைக் கூறியுள்ள முதல்வருக்குப் பாராட்டுகள். இதனை மார்கழி இசைவிழாவாகவும் முழுமையும் தமிழிசை விழாவாகவும் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்த ஆவன செய்ய வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

 ++++++++++++++++++++++++++++++++++++

திசம்பர் இசை விழா உலகத் திருவிழாவாக மாற வேண்டும்: முதல்வர் வேண்டுகோள்









சென்னையில் நடைபெறும் டிசம்பர் இசை விழாவை உலக இசைத் திருவிழாவாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்.
சென்னை மியூசிக் அகாதெமியின் 86-வது ஆண்டு இசை விழாவை முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்த ஆண்டு சங்கீத கலாநிதி பட்டத்துக்கு தேர்வு பெற்றுள்ள கர்நாடக இசைப் பாடகர் திருச்சூர் வி.ராமசந்திரனுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை வழங்கி அவர் பேசியது: டிசம்பர் மாதத்தில் தமிழ் மாதமான மார்கழியும் வருகிறது. புனிதமான இந்த மாதத்தில் திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவற்றை அதிகாலையிலே இசைத்து இறைவனை பக்தியோடு வணங்குவோம்.
சென்னையில் டிசம்பர் மாதத்தில் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய விழாவாக இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன.  உள்நாட்டு, வெளிநாட்டு ரசிகர்களின் முன்னிலையில் கர்நாடக இசைப் பாடகர்களும், நடனக் கலைஞர்களும் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துகின்றனர்.
ஆன்மிகமும், ஆனந்தமும் மிகச்சிறப்பான முறையில் இணைந்து ரசிகர்களைக் கட்டிப்போடுகின்றன. இத்தகைய அனுபவம் பிற நகரங்களில் நடைபெறும் விழாக்களில் கிடைப்பதில்லை.
சென்னையில் நடைபெறும் இந்த டிசம்பர் விழாவை உலக இசை மற்றும் நடன விழாவாகக் கொண்டாட அனைத்துத் தகுதிகளும் உள்ளன. இந்த விழாவை உலக விழாவாக மாற்றுவது குறித்து நீங்கள் அனைவரும் ஆலோசிக்க வேண்டும். இந்த முயற்சிக்கு என்னுடைய உதவியும், ஆதரவும் நிச்சயமாக இருக்கும்.
கர்நாடக இசை நமது கலாசாரத்தின் மிகச்சிறந்த கொடையாகும். தூய்மை, அழகு என்ற உலகை கர்நாடக இசை நமக்கு வழங்குவதோடு நமது ஆன்மாவையும் மேம்படுத்துகிறது. பக்தி, மன வலிமை, அமைதியை நமது மனதுக்கு அளிக்கிறது.
இசை மனிதர்களின் ஒரு பகுதி ஆகும். நமக்குள் உள்ள மனிதத்தன்மையை இது நமக்கு உணர்த்துகிறது. தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாரம்பரியமாக, இசைப் பாரம்பரியத்தைக் கூறலாம். கடந்த 2 ஆயிரம் ஆண்டுகளாக கர்நாடக சங்கீதம் மேம்பட்டு வருகிறது.
இதில் உள்ள ஸ்ருதி, ராகம், பாவனை, சாகித்யம் ஆகியவற்றுக்கு உலக இசையில் ஈடு இணையே கிடையாது. பழங்காலத் தமிழகத்தில் பண்கள் வடிவத்தில் இசையை மிகப்பெரிய துறவிகளும், பக்தர்களும் வெளிப்படுத்தினர். அதன் பிறகு, ராகங்கள் இசையில் முக்கியத்துவத்தைப் பெற்றன. ராகங்களின் மூலம் மனித உணர்வுகளும், இசையும் துல்லியமாக வெளிப்பட்டன.
தமிழிசை வரலாற்றை நீளமாகக் குறிப்பிடவில்லையென்றாலும், சில முக்கிய அம்சங்களை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன். தொல்காப்பியத்தில்கூட இசை குறித்த நுண்ணியத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதன்மூலம் இசை குறித்த விவாதங்கள் அப்போதே மிக நுட்பமாக இருந்துள்ளன என்பதை அறியலாம்.
சிலப்பதிகாரத்தில் இசை, நடனம், இசைக் கருவிகள் தொடர்பான தகவல் சுரங்கமே உள்ளது. ஸ்ருதி, ஸ்வரம், பண்கள் குறித்த குறிப்புகளும், தக்க ராகம், பழந்தக்க ராகம், மேக ராகம், நாட்ட ராகம் போன்ற ராகங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அந்தக் காலத்திலேயே 103 வகையான பண்கள் புகழ்பெற்று விளங்கியுள்ளன.
பண்ணிசைத்தலில் பாடகர்கள் தங்களது திறமையின் மூலம் வெவ்வேறு ராகங்களை உருவாக்கியுள்ளனர். கர்நாடக இசை குறித்துப் பேசும்போது, இந்த பெயர் தெரியாத, முகம் தெரியாத பாடகர்கள் மற்றும் ஆசிரியர்களையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த இசைகளில் இருந்து சிறந்த கூறுகளை எடுத்துக்கொண்டு கர்நாட சங்கீதம் உருப்பெற்றது.
இரண்டாவதாக ஆழ்வார்களும், நாயன்மார்களும் தங்களது பிரபந்தங்களாலும், திருப்பதிகங்களாலும் இறைவன் மீதான அன்பை இசையால் வெளிப்படுத்தினர். நாயன்மார்கள் நமது மனதைத் தொடும் பக்திப் பாடல்களை உருவாக்கியுள்ளனர். மாணிக்கவாசகரின் திருவாசகம் மிக ஆழ்ந்த, அழகான இறைப்பாடல்களைக் கொண்டது.
தமிழிசை மூவரான முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகியோர் தமிழ் கீர்த்தனைகளை பாவனைகளுடன் இயற்றி கர்நாடக இசையை வளர்த்தனர்.
திருவாரூரைச் சேர்ந்த இசை மூவரான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் கர்நாடக இசையை புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றனர்.
நமது காலத்தில் ராமானுஜ ஐயங்கார், முசிறி சுப்பிரமணிய ஐயர், ஜி.என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் போன்றோர் கர்நாடக இசையில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்தனர்.
எதிர்காலம் இளம் இசைக் கலைஞர்களுக்கானது. நூற்றுக்கணக்கானோர் இப்போது புதிதாக வருகின்றனர். நமது கலாசார தூதுவர்களாக விளங்கும் அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், பயிற்சி செய்யுங்கள், தீவிரமாக பயிற்சி செய்து திறமையை மேம்படுத்துங்கள். அதுதான் நமது முன்னோர்களின் வழியாக இருந்தது என்றார் அவர்.
கர்நாடக இசைக் கலைஞர் ஆர்.வேதவல்லி, மிருதங்க வித்வான் திருச்சி சங்கரன், மியூசிக் அகாதெமியின் தலைவர் என்.முரளி, செயலாளர்கள் என்.ராம்ஜி, கே.வி.கிருஷ்ணபிரசாத் உள்ளிட்டோரும், ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்களும், ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக