buses லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
buses லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 28 ஜூன், 2012

பேருந்து ஓட்டுநர்களுக்குப் புத்துணர்வுப் பயிற்சி !


""மன அழுத்தம், குடி பழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கும், பஸ் ஓட்டுனர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்க, மாநகர போக்குவரத்து கழகம் முன்வந்தால், தேவையற்ற விபத்துகளை தவிர்க்க முடியும்,'' என, மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆய்வில் அதிர்ச்சி: சென்னையில், 3,461 மாநகரப் போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களை இயக்கும் பணியில், 8,988 ஓட்டுனர்களும், 8,943 நடத்துனர்களும் ஈடுபடுகின்றனர். இப்போக்குவரத்து கழகத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள், மதுபழக்கத்தில் சிக்கி தவிப்பதாக, ஏற்கனவே நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. குடும்பப் பிரச்னை, பணியின்போது அதிகாரிகளால் ஏற்படும் நெருக்கடி, வேலைப்பளு ஆகியவற்றால், மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளிட்டவைகளில் இவர்கள் சிக்கி தவிப்பதும் உள்ளது. மது பழக்கத்திற்கு இவர்கள் அடிமையாகியுள்ளதற்கு, இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
விதிகளை மதிப்பதில்லை
: இது ஒருபுறம் என்றால், மறுபுறம் சில ஓட்டுனர்கள், கட்சி சங்கங்கள் ரீதியான பலம் பெற்றவர்களாக தங்களை கருதிக்கொண்டு, அதே மனநிலையில், போக்குவரத்து சிக்னல்களை மதிப்பதில்லை. போக்குவரத்து சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும்போதே, அதை மதிக்காமல் சர்வ சாதாரணமாக அந்த இடத்தை, மாநகர பஸ்கள் கடந்து செல்வதும், சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதுபோன்று, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும், மாநகர பஸ் ஓட்டுனர்களை பிடித்து, வழக்கு போட முடியாத நிலையில், போக்குவரத்து போலீசார் உள்ளனர். பல ஓட்டுனர்கள் பஸ்சை இயக்கும்போதே, மொபைல்போனில் பேசியபடி செல்வதால், கவனம் திசை திரும்பி, விபத்திற்கு காரணமாக அமைந்துவிடுகிறது.யிற்சி தேவை: எனவே, மன அழுத்தம், குடி பழக்கம், புகை பழக்கம், கவனக்குறைவு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கும், சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உடனடியாக, புத்துணர்வு பயிற்சியையும், யோகா உள்ளிட்ட பயிற்சிகளையும் அளிக்க வேண்டியது அவசியமாகவுள்ளது.
இதுகுறித்து, சென்னை அரசு பொது மருத்துவமனை மனநல மருத்துவர்கள் கூறும்போது, "" ஓட்டுனர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் மற்றும் அதீத நம்பிக்கையே தேவையற்ற விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. இதுபோன்ற மன அழுத்தத்தை குறைக்க, அவர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை புத்துணர்ச்சி பயிற்சி அளிக்கலாம். போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியத்தை, அப்போது வலியுறுத்தலாம். விபத்தால் ஏற்படும் உயிரிழப்பால், மற்றவர் குடும்பம் மட்டுமின்றி, ஓட்டுனர்கள் குடும்பமும் பாதிக்கப்படும் என்பதையும், அவர்களுக்கு தெளிவுப்படுத்தலாம்,'' என்றனர்.

போதிய பராமரிப்பின்மையே விபத்துகளுக்கு காரணம்? போதிய பராமரிப்பின்மை மற்றும் தரமான உதிரி பாகங்களை பயன்படுத்தாதது போன்ற பல்வேறு காரணங்களால், அவ்வப்போது, அரசு பேருந்துகள் விபத்திற்குள்ளாவது தொடர் கதையாகிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன், தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி பயணம் செய்த, அரசு விரைவுப் பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் தனியாகவும், பேருந்து தனியாகவும் சென்ற சம்பவம் நடந்தது. இதேபோல், சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட பேருந்துகள், அடிக்கடி மக்கராகி நிற்பதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு, பேருந்துகளில் தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்தாதது, தொடர் பராமரிப்பின்மை, அரசு போக்குவரத்து கழகங்களில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமிக்காதவை ஆகியவை காரணமாக கூறப்படுகிறது.

அனுபவம் உள்ளது: இதுகுறித்து, பேசிய சி.ஐ.டி.யு., தொழிற்சங்க தலைவர் சந்திரன், ""மாநகர பேருந்துகளை தொடர்ந்து சரியாக
பராமரிக்காததால் தான், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. ஒரு விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட ஓட்டுனரை, தற்காலிக பணிநீக்கம் செய்கின்றனர். ஆனால், விபத்திற்கான காரணத்தை மறைத்து விடுகின்றனர். அந்த காரணத்தை கண்டறிந்து, மேற்கொண்டு நடக்காத வகையில், எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை. அண்ணா சாலையில், விபத்துக்குள்ளான பேருந்து, ஐந்து ஆண்டு பழமையானது. அனுபவம் வாய்ந்த ஓட்டுனர் தான் பேருந்தை ஓட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொழில்நுட்பப் பணியாளர்கள் நியமித்து, சரியாக பராமரிக்காதது தான் விபத்துக்கு காரணம்,'' என்றார். இருக்கையின் அவலம்: அரசு பேருந்துகளில், ஓட்டுனர்களின் இருக்கை பெரும்பாலும் "ஓயர்'களால் கட்டப்பட்டுள்ளன. நேற்று விபத்துக்குள்ளான மாநகர பேருந்தின் இருக்கை, வலுவாக பொருத்தப்படாமல், நைலான் கயிறால் கட்டப்பட்டிருந்தது. அதுவும், உறுதித்தன்மையுடன் இருக்கிறதா எனவும் சரிபார்க்கவில்லை. கயிறு அறுந்ததால், இருக்கை கவிழ்ந்தது விபத்துக்காரணம் என, ஓட்டுனர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பாலத்தின் உறுதித்தன்மை எப்படி? பாலத்தின் மீது மோதி, அரசு பஸ் கவிழ்ந்ததற்கு, பாலத்தின் உறுதியில்லாத் தன்மையும் காரணம் என கூறப்படுகிறது. பாலம் அடிக்கடி பராமரிக்கப்பட்டிருந்தால், பஸ் கீழே விழுந்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பாலங்களின் உறுதித்தன்மை குறித்து, நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: பாலத்தின் உறுதித்தன்மைக்கும், விபத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை. 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அப்பாலம், இன்னும் உறுதித்தன்மையுடன் காணப்படுகிறது. பஸ் ஓட்டுனர் குறிப்பிட்ட வேகத்தைத் தாண்டி, அதிவிரைவாக வந்துள்ளார். அதற்கு பாலத்தின் மீது குறை சொல்ல முடியாது. அதிவேகமாக மோதினால் எந்த பாலமும் உடையும் என்பது இயல்பானது. கூடவே, பஸ்சின் வேகத்தையும், கனத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பழைய பாலம், புதிய பாலம் என்ற வேறுபாடு பார்க்காமல் பராமரித்து வருகிறோம். பாலத்தின் உறுதித்தன்மை குறித்து, அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.- நமது நிருபர் -

வெள்ளி, 3 ஜூன், 2011

Delhi: Biogases for buses: அனைத்து அரசுப் பேருந்துகளையும் பயிர்வளியில் இயக்கத் திட்டம்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

அனைத்து அரசு பஸ்களையும் பயோகேஸில் இயக்கத் திட்டம்

First Published : 03 Jun 2011 02:45:38 AM IST


புது தில்லி, ஜூன் 2: தில்லியில் இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களும் விரைவில் பயோ கேஸ் மூலம் இயக்கப்படவுள்ளன.கேஷோபூரில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பயோகேஸ் தயாரிக்க சுவீடன் அரசுடன் தில்லி அரசு உடன்பாடு செய்து கொள்ளத் திட்டமிட்டுள்ளது.இதிலிருந்து தயாரிக்கப்படும் பயோகேஸ் மூலம் தில்லியில் உள்ள அரசு பஸ்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.தில்லியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் பயோகேஸ் தயாரிக்கப்படவிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் தயாரிக்கப்படும் பயோகேஸில் மீத்தேன் வாயுவின் அடர்த்தி 60 சதவீதம் இருக்கும். இதனை சிஎன்ஜி வாயுவாக ஆக்க மீத்தேனின் அடர்த்தி 90 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டியிருக்கும். உலகிலேயே பயோகேஸ் மூலம் அரசு பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவது தில்லியில்தான் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.இந்த திட்டத்துக்கு கொள்கையளவில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கான 50 சதவீத நிதியை சுவீடன் அரசும் எஞ்சிய தொகையை தில்லி அரசும் தரவிருக்கின்றன. இந்தத் திட்டம் வரும் செப்டம்பரில் தொடங்கக்கூடும் எனத் தெரிகிறது.இப்படியொரு திட்டத்தை செயல்படுத்தலாம் என மாற்றத்தக்க மின்உற்பத்தி நிர்வகிப்பு மையம் யோசனை தெரிவித்து அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டது. 2010-ல் சுவீடன் அரசுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. இதையடுத்து தில்லியில் உள்ள துவாரகா, கேஷோபூர், காரனேஷன் பார்க், ஓஹ்லா ஆகிய இடங்களில் உள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சுவீடன் நாட்டு நிபுணர்கள் 3 மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இவற்றில் கேஷோபூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில் பயோகேஸ் தயாரிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மற்ற இடங்களில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகள் மிக பழையவை அல்லது பயன்படாதவை என நிராகரிக்கப்பட்டன.இந்த புதிய முயற்சி வெற்றிபெற்றால் தில்லியில் உள்ள 17 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் பயோகேஸ் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் தில்லியில் இயக்கப்படும் அரசு பஸ்களின் பெரும்பாலான பஸ்களின் சிஎன்ஜி தேவை இதன் மூலம் பூர்த்தி செய்யப்படக்கூடும் என்கின்றனர் அதிகாரிகள்.ஒவ்வொரு சிஎன்ஜி வாயு ஆலை அருகிலும் சிஎன்ஜி வாயுவை நிரப்பும் லாயங்களை அமைக்க வேண்டியதுதான் உடனடியான தேவை. கேஷோபூர் காய்கறி மார்க்கெட்டில் வீணாகும் திடக்கழிவுகள் அடர் சிஎன்ஜி வாயு தயாரிக்கப் பயன்படுத்திக் கொள்ளப்படும்.