புதன், 19 ஜனவரி, 2011

தமிழ் மொழி மற்றும் கிரந்த எழுத்துக்களை
கணினி வழிப் பயன்பாட்டிற்காக ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து
அனைத்துக் கருத்துகளையும் ஆய்வு செய்திட

ஒய்வு பெற்ற நீதியரசர் திரு. மோகன் அவர்கள் தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்து
முதலமைச்சர் கலைஞர் ஆணை!

மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் தலைமையில் 4-11-2010 அன்று நடைபெற்ற
அமைச்சர் பெருமக்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் -
தமிழ் மொழி எழுத்துக்கள், கிரந்த எழுத்துக்கள் ஆகியவற்றைக் கணினி வழிப்
பயன்பாட்டிற்காக, யூனிகோட் சேர்த்தியம் (Unicode consortium) என்னும் நிறுவனம்
ஒருங்குறி அட்டவணையில் அமைப்பது குறித்து விரிவான விவாதம் தேவை எனவும், அதனை
விரிவாக விவாதித்து அரசுக்குப் பரிந்துரை செய்யும் பொருட்டு உயர் மட்டக் குழு
அமைக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், அனைத்துக் கருத்துக்களையும் ஆய்வு செய்திட, ஓய்வு
பெற்ற நீதியரசர் திரு. ச. மோகன் அவர்கள் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களைக்
கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றினை அமைத்து, மாண்புமிகு முதலமைச்சர் கலைஞர்
அவர்கள் இன்று (18-1-2011) ஆணையிட்டுள்ளார்கள்:-
1. பேராசிரியர் ம. இராசேந்திரன்,
துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
2. முனைவர் வா.செ. குழந்தைசாமி, முன்னாள் துணை வேந்தர்,
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைவர், தமிழ் இணையக் கல்விக் கழகம்.
3. பேராசிரியர் மு. ஆனந்தகிருட்டிணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் (அறிவியல்
நகரம், சென்னை)
4. பேராசிரியர் பொன். கோதண்டராமன் (பொற்கோ)
5. முனைவர் ஐராவதம் மகாதேவன், இ.ஆ.ப., (ஓய்வு)
6. பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
7. பேராசிரியர் கே. நாச்சிமுத்து, உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர்
பேரவை
8. பேராசிரியர் அ.அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
9. முனைவர் ப.அர. நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை
10. முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எசு.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.
11. திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர் மற்றும் கவிஞர்
12. திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்
13. திரு. மணி மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி), சீமேன்டெக்
கழகம், சென்னை.
14. முனைவர் ந. தெய்வசுந்தரம், சென்னை.

மேற்காணும் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து, தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக, இக்குழு தனது அறிக்கையை விரைவில் வழங்கும்.

· * * * *

வெளியீடு: - இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, தலைமைச் செயலகம், செ-9.

இக்குழுவினர் ஒத்துப் போதல் விட்டுக் கொடுத்தல் முதலான நிலைப்பாடுகளை எடுக்காமல் தமிழைக் காக்கும் எண்ணத்திலேயே
செயல்பட வாழ்த்துகள்.
தோழமையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக