சனி, 22 ஜனவரி, 2011

Attempt to eradicate thamizh culture in Ilangai: இலங்கையில் இந்து சமயம், தமிழர் பண்பாட்டை அழிக்க முயற்சி: அர்சுன் சம்பத்

இலங்கையிலும் ஈழத்திலும் உளள்வர்கள் ஆரிய சமயத்தவராக  இருந்தால் இந்நேரம் இந்துசமயத் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்கள் கிளர்ந்தெழுந்திருப்பார்கள். அவ்வாறில்லாமையால் சிங்கள ஆரியருக்குத் துணை நிற்கிறார்கள்.  இந்து சமயத்தையும் தமிழர் பண்பாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்பவர்கள் இந்து சமயத்தில் சீர்திருத்தம்  வேண்டிய தந்தை பெரியாரின் சிலையை உடைப்பதைக்  கைவிட வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


இலங்கையில் இந்து சமயம், தமிழர் பண்பாட்டை அழிக்க முயற்சி: அர்ஜுன் சம்பத்

First Published : 21 Jan 2011 01:01:12 PM IST


திருச்சி, ஜன. 20: இலங்கையில் இந்து சமயத்தையும், தமிழர் பண்பாட்டையும் அழிக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது என்றார் இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் அர்ஜுன் சம்பத்.  பெரியார் சிலை இடிப்பு வழக்குக்காக, திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:  "தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில், இந்து வாக்கு வங்கி துவக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தொகுதிக்கு 5 ஆயிரம் இந்து வாக்குகளைச் சேர்க்கத் திட்டமிட்டு, அதற்கான விண்ணப்பங்கள் வீடு, வீடாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.  இலங்கையில் இந்து கோயில்களை, புத்த மதக் கோயிலாக மாற்றும் முயற்சியில் அந்த நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு உடன்படாத 3 சிவாசாரியர்கள் இலங்கை ராணுவத்தினரால் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  இலங்கை அரசு இந்து சமய, தமிழர் பண்பாட்டை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதை இந்திய அரசு வேடிக்கை பார்த்து வருகிறது.  இந்த பிரச்னை குறித்து சிவசேனை கட்சித் தலைவர் பால்தாக்கரேக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளேன். பா.ஜ. கட்சியினருடன் கலந்து பேசி, மக்களைவையில் இதுகுறித்து பிரச்னை எழுப்பப்படும் என சிவசேனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை யாத்திரை, திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தருவதில்லை. இதன் காரணமாக சபரிமலையில் ஏற்பட்ட விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இதற்கு சபரிமலை தேவஸ்தானம், கேரள மாநில அரசு ஆகியவைதான் பொறுப்பேற்க வேண்டும். வரும் காலத்தில் பக்தர்களை ஒழுங்குபடுத்த ராணுவத்தைப் பயன்படுத்த வேண்டும்.  பழனியில் தைப்பூசத் திருவிழாவுக்காக 10 லட்சத்துக்கும் அதிமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இவர்களுக்கு குடிநீர், சுகாதார வசதி போன்றவற்றை தமிழக அரசு செய்து தரவில்லை. திருச்சி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி ஜம்புகேசுவரர் கோயிலில் மாசி சிவராத்திரிக்குள் பூஜை முறைகளை ஒழுங்குபடுத்தி, யானை வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இல்லாவிட்டால், இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தி, யானையை வைத்து பூஜை, வழிபாடுகளை நடத்தும்.  ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வழிபாட்டு முறைகளில் அரசியல் கட்சிகள் தலையிடுவதைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் ஜன. 24-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது' என்றார் அவர். பேட்டியின் போது, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் நா. பால்ராஜ்சாமி, மாநகரச் செயலர் டி. நாகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக