புதன், 19 ஜனவரி, 2011

Seygu thambi paavalar name after victoriya hall : சென்னை விக்டோரியா அரங்கிற்குச்செய்குதம்பிப்பாவலர் பெயர் சூட்டப்படுமா

கவனக நூற்றின் வல்லுநர் செய்குதம்பிப் பாவலர் பெயர் சூட்டல கோரிக்கை நியாயமானது. தமிழின் பெருமையை அறியவும் தமிழ்ப்புலவர்களின் சிறப்பினைஅறியவும் இஃது உதவும். முதல்வர் விரைவில் வேண்டுகோளை ஏற்று ஆணை பிறப்பிப்பார் என நம்பலாம். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

சென்னை விக்டோரியா ஹாலுக்கு செய்குதம்பி பாவலர் பெயர் சூட்டப்படுமா?

First Published : 19 Jan 2011 03:31:02 AM IST


நாகர்​கோ​வில் இட​லாக்​கு​டி​யி​லுள்ள சதா​வ​தானி செய்​கு​தம்பி பாவ​லர் நினைவு மண்​ட​பம் மற்​றும் நூல​கம்.​ ​(உள்​ப​டம்)​ சதா​வ​தானி செய்​கு​தம்பி பாவ​ல
நாகர்கோவில்: தமிழ்ப் பெரும்புலவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான சதாவதானி செய்குதம்பி பாவலர் சதாவதானம் எனும் அருங்கலை அவதானத்தை நிகழ்த்திய இடமான சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு "சதாவதானி செய்குதம்பி பாவலர் அரங்கம்' என்று பெயர்சூட்ட வேண்டும் என்ற தமிழ் அமைப்புகளின் கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. நாகர்கோவில் அருகே இடலாக்குடியைச் சேர்ந்தவர் செய்குதம்பி பாவலர். 1907 மார்ச் 10-ல் சென்னை மாநகராட்சி அருகேயுள்ள விக்டோரியா பப்ளிக் ஹாலில் வித்துவான் கண்ணப்ப முதலியார் தலைமையில், ஒரே நேரத்தில் 100 வினாக்களுக்கு விடையளித்து தமிழன்னைக்குப் பெருமை சேர்த்தார்.அவருக்குப்பின், இதுபோன்ற அருங்கலை சதாவதானத்தை நிகழ்த்தியதாக வரலாறு இல்லை. அங்கு சதாவதானம் செய்து முடித்ததும் அவருக்கு மகாமதி, சதாவதானி என்ற பட்டங்கள் வழங்கப்பட்டன."சரித்திரம் கண்டறியா சதாவதானம்' என்ற அருங்கலையை நிகழ்த்திக் காட்டிய செய்குதம்பி பாவலரைப் பெருமைப்படுத்தும் வகையில், அவர் சதாவதானம் செய்து சாதனை படைத்த விக்டோரியா ஹாலுக்கு அவர் பெயர்சூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளும் பல மாதங்களாகவே அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன.குமரி மாவட்ட தமிழ்நல எழுத்தாளர் சங்கம், சதாவதானி செய்குதம்பி பாவலர் தமிழ்ச் சங்கம், பன்னாட்டு தமிழுறவு மன்றம், குமரித்தமிழ் வானம், கவிதை உறவு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகளும் இக்கோரிக்கையை வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக சதாவதானி செய்குதம்பி பாவலரின் பேரனும், பாவலர் தமிழ்ச் சங்கத் தலைவருமான பாவலர் பி.ஏ. சித்தீக் கூறியதாவது:தமிழகத்தில் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சதாவதானி செய்குதம்பி பாவலருக்கு புகழ் சேர்க்கும் வகையில், அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. ஆண்டுதோறும் அவர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார். இன்றுவரை ஆண்டுதோறும் இவ் விழா அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் இடலாக்குடியில் உள்ள அவரதுநினைவிடத்தில் நினைவு மண்டபம் கட்ட 1984-ல் எம்.ஜி.ஆர். காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1987-ல் திறக்கப்பட்டது. அது இன்றளவும் அரசால் பராமரிக்கப்படுகிறது.இடலாக்குடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 1984-ல் அவரது பெயர் சூட்டப்பட்டது. 2008-ல் முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையை ஏற்று, மத்திய அரசு செய்குதம்பி பாவலர் உருவம் பொறித்த தபால்தலையை வெளியிட்டு சிறப்பு செய்தது.முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையால் 2009-ல் அவரது நூல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டன. அவருக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில், சென்னையில் அவர் சதாவதானம் செய்த விக்டோரியா ஹாலுக்கு அவரது பெயரைச் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். தமிழன்னையை அணி செய்துவந்த அணிகலன்களில் தனிச்சிறப்பு பெற்ற ஒரு பல்மணிக்கோவை அவதானக்கலை. இக் கலையில் சரித்திரம் கண்டறியா சதாவதானம் என்னும் நூறு அவதானங்களைச் செய்து வெற்றிபெற்று தமிழ்த்தாயின் மணிமகுடத்தில் வைரக்கல் பதித்தவர், நாஞ்சில் நாட்டைச் சேர்ந்த செய்குதம்பி பாவலர். தமிழ்ப் பெரும்புலவர், தேவாமிர்த பிரசங்க களஞ்சியம், கலைக்கடல் என்றெல்லாம் பல்வேறு பட்டங்களுக்கு சொந்தக்காரர் அவர். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அரசு, தமிழ் அமைப்புகளின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார் குமரி மாவட்ட கவிதை உறவு அமைப்பாளர் டாக்டர் கு. சிதம்பர நடராஜன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக