சனி, 25 செப்டம்பர், 2010

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்க மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்குப் புறம்பானவை: வைகோ

சென்னை, செப். 24: விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிக்க நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக தில்லி உயர் நீதிமன்ற தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கில் வெள்ளிக்கிழமை ஆஜரான வைகோ எடுத்துவைத்த வாதம்:விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீட்டிப்பதற்கு மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் உண்மைக்கு புறம்பானவை. உலகெங்கும் உள்ள தமிழர்களுக்காகவும், இந்தியாவில் உள்ள தமிழர்களுக்காகவும் சேர்த்து தனி தமிழ் ஈழ நாடு கோருவதால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தாக முடியும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. தனி ஈழம் என்பது இலங்கைத் தீவில் உள்ள வடக்கு, கிழக்குப் பகுதி. அது அவர்களின் தாயகம். வரலாற்றின் தொடக்கத்திலிருந்து அவர்கள் அரசாண்ட பூமி. தமிழகத்தின் ஒரு அங்குல இடத்தைக்கூட அவர்கள் தனி ஈழத்தோடு சேர்த்துக் கொள்ள விரும்பவில்லை. இதற்கு மத்திய அரசு ஆதாரத்தை காட்ட முடியுமா? புலிகள் பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்த மத்திய அரசு செய்யும் திட்டமிட்ட பிரசாரமாகும். நான் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிரானவன் அல்ல. நாட்டுப்பற்றில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. தமிழகத்தைப் பிரிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. தனித்தமிழ் ஈழ நாட்டை ஆதரிக்கிறோம். அதை அமைப்பதுதான் எங்களின் குறிக்கோள். புலிகள் மீது தடை இருப்பதால் அகதிகளாக தமிழகத்துக்கு வரும் தமிழர்களை புலிகள் என்று முத்திரை குத்தி சிறை முகாமுக்கு அனுப்புகிறார்கள் அல்லது இலங்கைக்கே திருப்பி அனுப்புகிறார்கள். இதற்காகவே தடையை நீட்டிக்க கூடாது என்கிறேன்.உலகம் முழுவதும் இணையதளத்தில் புலிகளுக்கு ஆதரவாக, இந்தியாவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படுவதாக மத்திய அரசு ஆணையில் குறிப்பிட்டுள்ளார்கள். மனித உரிமைகளைக் காக்க உலகில் எழுகின்ற குரல் அது. தமிழர்களுக்கு துன்பம் விளைவிப்பதற்காகவே புலிகள் மீதான தடையை அரசு பயன்படுத்துகிறது. எனவே, புலிகள் மீதான தடையை நீட்டிக்க அனுமதிக்கக் கூடாது என்றார் வைகோ.
கருத்துக்கள்

மிக மிக மிகச் சரியாக வைக்கோ அவர்கள் தெரிவித்தார்கள். எனினும் என்ன பயன்? நடுவுநிலைமையுடன் தீர்ப்பு கூறினால் அறம் வெல்லும்.முன்னரே எழுதி வைத்த தீர்ப்பை வாசிப்பதாக இருந்தால் பயன் இல்லை. எனினும் கொடுங்கோன்மை ஒடுக்கு முறையில் இருந்து மீட்கத் தம் உயிரையும் இழ்நத இழக்க ஆயத்தமாக உள்ள அமைப்பை எதிர்ப்போர் விரைவில் தக்க விலை செலுத்துவர். ஆம்! அவர்களின் மோசடிகள் வெளியாகித் தண்டனை பெறுவர். வெல்க தமிழ் ஈழம்! வளர்க தமிழீழ இந்திய உறவு! வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 3:00:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக