வெள்ளி, 24 செப்டம்பர், 2010

தஞ்சைக் கோவில் : கொண்டாட்டத்திற்கு இடையில் சில கேள்விகள்

(within the last minute) Ilakkuvanar Thiruvalluvan said:
<<பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விரிந்திருந்த சோழர் ஆட்சியில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அற்புதம் இந்தக் கோவில் >>அருமையான கட்டுரையில் எப்படி இந்தத் தவறு நேர்ந்தது. உடனே பத்தாம் நூற்றாண்டில் எனத் திருத்துங்கள். உங்கள் கடைசி வினாவிற்கு விடை: இப்பொழுது உள்ள பலரின் பெயர்கள் வரலாற்றில் இருந்தே துடைத்து எறியப்படும். சிலரின் பெயர்கள் எட்டப்பர்களாகவும் ஊழல் பேரரசர்களாகவும் கறை படிந்து நிலைத்து நிற்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++

முகப்புக் கட்டுரை

தஞ்சைக் கோவில் : கொண்டாட்டத்திற்கு இடையில் சில கேள்விகள்

-மணா  
natpu ''தற்காலத்தில் கட்டப்படுகிற கட்டிடங்கள் எவ்வளவு காலத்துக்குத் தாங்கும் ?'' - இன்று இந்தக்கேள்வி கேட்கப் பட்டால் இதையொட்டிப் பல துணைக்கேள்விகள் எழும்.
''கட்டியவர்கள் யார்?'''' காண்டிராக்டரா? அவர் எந்த அளவுக்குக் கட்டியிருப்பார்?'' '' குறைந்தபட்சம் இருபது ஆண்டுகளுக்காவது தாங்குமா?'' - இப்போதுள்ள உழைப்பின் மதிப்பு அவ்வளவு தான்.
ஆனால் இதே காலத்தை எதிர்கொண்டு -ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இயற்கை இடையூறுகளை எல்லாம் தாண்டி இன்றைக்கும் பிரமாண்டமாக தஞ்சை பெரிய கோவில் நிலைத்து நிற்கிறது என்றால் - அன்றைக்கு அவர்கள் கோவில் கட்டுமானத்தில் காட்டிய அர்ப்பணிப்புணர்வு மிக்க உழைப்பு கெட்டிதட்டி இப்படி வானத்தை நோக்கி நிமிர்ந்து நிற்கிறது.
natpuபிரகதீஸ்வரர் கோவில் என்றழைக்கப்படும் தஞ்சைக்கோவில் பழந்தமிழில் பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்பட்டாலும் -மக்கள் மொழியில் அதை '' பெரியகோவில்'' என்றே அழைக்கிறார்கள்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விரிந்திருந்த சோழர் ஆட்சியில் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட அற்புதம் இந்தக் கோவில். கோவில் கட்டுமானத்தில் காலத்தை மிஞ்சி நிற்க என்னென்ன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த முடியுமோ அவற்றை அன்றே பயன்படுத்தி இருக்கிறார்கள். கருங்கற்கள் அவ்வளவு நுட்பமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. கோவிலைத் தாங்கிய அடித்தளம் கூட நிலநடுக்கத்தைத் தாங்கும் விதத்தில் சிறு பாறைகளைத் தாங்கியபடி கட்டப்பட்டிருக்கிறது.
வெகு தூரத்திலிருந்து கற்களை வரவழைத்து -13 அடுக்குகளைக் கொண்ட கோவில் கோபுரத்தைத்தாங்கும் சுவர் இரண்டு பகுதிகளாக இருப்பதால் கூடுதல் கனத்தைத் தாங்கக்கூடியதாக இருக்கிறது.
கி.பி 1004 ஆம் ஆண்டு துவங்கி 1010 ஆம் ஆண்டு நிறைவு பெற்றுள்ள கூம்பு வடிவில் குவிந்த கோபுரத்தை வெகு கவனமாகக் கட்டி முடித்திருக்கிறார்கள். குஞ்சரமல்லன் தலைமையிலான சிற்பிகள் குழு இந்த அற்புதத்தைச் சாதித்திருக்கிறது. அப்போது கோவில் கலசத்திற்குப் பொற்கூரை வேய்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நூற்றுக்கணக்கான கல்வெட்டுக்கள் இறைந்து கிடக்கும் கோவிலில் வேலைபார்த்த சிற்பிகளின் பெயர்கள் எல்லாம் செதுக்கப்பட்டிருப்பது ராஜராஜ சோழனுக்கும் பெருமை. பணியாற்றிய சிற்பிகளுக்கும் பெருமை.
கோவிலுக்குள் உயர்ந்து நிற்கும் லிங்கத்தின் உயரம் 13 அடி. கோவிலுக்கு ராஜராஜன் வழங்கியிருக்கிற நகைகளை எல்லாம் பார்க்கும்போது அடுத்தடுத்த படையெடுப்புகளின் போது அவை கொள்ளை போய்விட்டாலும் கோவிலில் இருக்கும் ஒவ்வொரு பதிவும் மன்னரான ராஜராஜன் தான் கட்டிய கோவிலின் மீதிருந்த அளவு கடந்த மதிப்பை வெளிப்படுத்துகின்றன.
natpuஅவருக்கு விசாலமான மனம் இல்லாவிட்டால் இப்படியொரு சாதனை நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அன்றைக்கு இருந்த தமிழர்களிடம் இருந்த அளப்பரிய கட்டடக் கலை வெளியுலகிற்குத் தெரிய வந்திருக்கிறது. உழைப்பின் வீர்யத்தைக் காட்டும் இந்த ஈடுபாடு இன்றைக்கு ஏன் தொடரவில்லை ?
அருண்மொழித்தேவன் என்ற இயற்பெயர்கொண்ட ராஜராஜசோழன் இந்தக் கோவிலைக் கட்டி முடித்த போது - அதற்குச் சூட்டப்பட்ட பெயர் ராஜராஜேஸ்வரம். கோவிலில் உள்ள இரண்டாம் கோபுர வாசலின் பெயரே ராஜராஜன் வாசல் தான்.
எத்தனையோ தியாகங்களும்,அர்ப்பணிப்புகளும் நிறைந்து கிடக்கிற கோவிலுக்குள் இருக்கும் '' உணர்வுவயப்பட்ட தன்மை''க்கு ஓர் உதாரணம் -இந்தக் கோவிலில் இருக்கும் ஒரு கல்வெட்டு. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தரச் சோழன் உயிர்துறந்த போது அரசியான வானவன்மாதேவியும் உடன்கட்டை ஏறி உயிர் நீத்தத்தாகவும் ,அவருக்கு ராஜராஜனின் தமக்கையான குந்தவை கோவிலுக்குள் சிலை எழுப்பியிருப்பதாகவும் அந்தக் கல்வெட்டு சொல்கிறது.
இனி அந்த நினைவுகளை விட்டு நிகழ்கால வெக்கைக்குள் வருவோம்.
natpu காலத்தை மிஞ்சி இன்னொரு கரைக்கு வந்து சேர்ந்திருக்கிற கோவிலின் சிறப்பைத் தாமதமாக 1987 ல் உணர்ந்து உலகப்பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக தஞ்சைக் கோவில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே ராஜராஜனுக்கு ஒரு சிலையைச் செய்து - கோவிலுக்கு முன்னால் ஒரு ஓரத்தில் அவரை இழிவு படுத்துகிற மாதிரி ராஜராஜன் சிலையை வைத்தது ஒன்று தான் காலங்கடந்து செய்த கைங்கர்யம். அந்தச் சிலையைக் கோவிலுக்குள் வைக்கக்கூடாதா என்கிற கேள்விகள் எழுந்தபிறகு சென்ற ஏப்ரலில் கூட கோவிலுக்குள் சிலையை நிறுவ இருப்பதாக அறிவித்தவர்கள் - ஆயிரமாண்டு விழா கொண்டாடப்படும் நேரத்தில் ஏன் சௌகர்யமாக மறந்து போனார்கள்?
ராஜராஜனின் பிறந்த தினமாகிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று இன்றும் கோவிலுக்குள் சதயவிழா கொண்டாடப்படும் போது , அவர் புகழ்பாடும் கல்வெட்டுக்கள் கோவில் முழுக்க நிறைந்திருக்கும் போது - உருவாக்கிய மன்னர் சிலையை கோவிலுக்குள் கொண்டு போவதில் என்ன பாரபட்சம் ?
இதற்குப் பின்னும் ஒரு மூடநம்பிக்கை புதைந்து கிடப்பது தான் ராஜராஜ சோழன் சிலை நகராமல் அதே இடத்தில் இருப்பதற்கும் காரணம்.
natpu ராஜராஜன் சிலையை கோவிலுக்குள் நகர்த்தினாலோ,கோவிலுக்குள் ஆட்சி செய்பவர்கள் போனாலோ - ஆட்சிக்குப் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்று நிலவுகிற மூட நம்பிக்கையை சிலர் நம்பலாம். அது வேறு. ஆனால் பகுத்தறிவுவாதிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்களுக்கும் இந்த சந்தேகமும்,தயக்கமும் வரலாமா?
இல்லையென்றால் ,மத்தியில் தி.மு.க வும் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இருந்து கொண்டு இதைக்கூடச் செய்யவில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம் ?
ஆயிரமாண்டுக்கு முந்திய ஆட்சியில் தலைநிமிர்ந்த ஒரு மன்னரை நம்முடைய மிகக் குறுகிய கால அரசியலுக்குள் புகுத்திப்பார்க்கலாமா?
natpuஇதே ராஜராஜனின் செப்புச் சிலையும்,அவருடைய மனைவி சிலையும் குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்தும் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? எப்படி இங்கிருந்து அந்தச் சிலைகள் குஜராத் மியூசியத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன என்பது குறித்த விசாரணையாவது முறையாக நடந்ததா? இந்தியாவில் இன்னொரு மாநிலத்திற்குள் இருக்கும் ஒரு தமிழ் மன்னரின் சிலையைக் கூட ஆயிரமாண்டு விழாவின் போதுகூட ஏன் கொண்டுவர முடியவில்லை?
கும்புகோணத்திற்கு அருகில் உள்ள உடையாளுருக்கு அருகில் சோழர்களின் பழைய தலைநகரம் இருந்ததாக தஞ்சையில் செய்திகள் அடிபடுகின்றன.அங்கு ராஜராஜ சோழனின் சமாதி பாழடைந்த நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தாலும் அவற்றைப்பற்றி அரசு எந்த பதிலையும் தரவில்லை. அதேசமயம் மறுக்கவும் இல்லை.
அந்த இடத்திற்கு அருகில் கிரந்த எழுத்துக்கள் அடங்கிய தூண்கள் எல்லாம் இருந்தும் அவை இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. அதைப்போல அமெரிக்காவைச் சேர்ந்த ரொனால்ட் என்பவர் கோவிலுக்கு வழங்கிய அபூர்வமான ருத்ராட்ச மாலை காணாமல் போனது பற்றியும் இப்போது சில விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
தஞ்சையில் உள்ள தஞ்சை உரிமை மீட்புக்குழுவைச் சேர்ந்தவர்களால் இப்போது முன் வைக்கப்படும் ஒரு கேள்வி.'' தஞ்சைப் பெரிய கோவில் கட்டப்பட்டது 1010 இல். அதைக்கட்டிய ராஜராஜன் தமிழ் மன்னர். சோழர் ஆட்சி முடிவுக்கு வந்தது கி.பி.1535ல். அதன் பிறகு நாயக்க மன்னர்கள் ஆண்டு அதன்பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் மராட்டிய மன்னர்கள்.தமிழர்கள் கட்டிய கோவிலை மராட்டிய வாரிசுகள் நிர்வகிக்கலாமா? '' என்ற கேள்வியும் கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் அரசு நிர்வாகத்தில் உள்ள அறநிலையத்துறையே தஞ்சைக் கோவிலின் நிர்வாகத்தையும் எடுத்துக் கொண்டால் என்ன என்கிற கேள்வியும் இதையொட்டி எழுந்திருக்கிறது.
ஒருபக்கம் - காவிரியில் கூடுதலாக நீரைவிடச் சொல்லி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் கூட நிறைவேற்ற மத்தியக்கூட்டணி அரசில் இருந்தும் சரிவர முயலாத தமிழக அரசு மேலே எழுப்பியுள்ள கேள்விகளுக்கு என்ன பதில் அளிக்கப் போகிறது?
natpu25 கோடி ரூயாயை மத்தியஅரசு செலவழிக்க -தமிழக அரசு அதைவிடக்கூடுதலான பணத்தைச் செலவழிக்கத்தயார் ஆன நிலையில் தஞ்சைக் கோவிலுக்கு ஆயிரமாண்டு விழா நடக்கலாம்.தஞ்சை மாவட்ட மக்களும் சில நாட்கள் கேளிக்கைகளை வேடிக்கை பார்க்கலாம்.
ஆயிரமாண்டுகளுக்கு முன்பு ஆட்சி செய்த ராஜராஜசோழனுக்குத் தன்னுடைய சாதனை என்று சொல்லிக்கொள்ள காலம் கடந்தும் எத்தனையோ அம்சங்கள் மிஞ்சியிருக்கின்றன.
இப்போது உள்ளவர்களுக்கு அப்படி என்ன மிஞ்சும் ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக