புதன், 19 மே, 2010

முன்னாள் அமைச்சர் கே.ஏ.​ கிருஷ்ணசாமி மறைவு



சென்னை,​​ மே 18: தமிழக முன்னாள் அமைச்சர் கே.ஏ.​ கிருஷ்ணசாமி ​(78) சென்னையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார்.​ ​உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.​ இந்நிலையில் சென்னை,​​ கோபாலபுரம்,​​ அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அவர் காலமானார்.​ ​அவருக்கு மனைவி புனிதவதி,​​ மகள்கள் மாங்கனி,​​ கயல்விழி,​​ மகன்கள் அருண்,​​ முகில் ஆகியோர் உள்ளனர்.​ இவர்களில் முகில் எம்.ஜி.ஆர்.​ இளைஞர் அணி இணைச் செயலாளராக உள்ளார்.​ ​தலைவர்கள் அஞ்சலி:​ ​கே.ஏ.​ கிருஷ்ணசாமியின் மறைவுச் செய்தி கேட்டு,​​ அவரது வீட்டுக்குச் சென்று முதல்வர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.​ கிருஷ்ணசாமியின் மகன் அருணுக்கு கருணாநிதி ஆறுதல் கூறினார்.​ அவருடன் துணை முதல்வர் மு.க.​ ஸ்டாலின்,​​ மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.​ ​அ.தி.மு.க.​ பொதுச் செயலாளர் ஜெயலலிதா,​​ தமது கட்சியினருடன் சென்று கே.ஏ.​ கிருஷ்ணசாமியின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.​ கிருஷ்ணசாமியின் மகன் கே.ஏ.கே.​ முகில் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.​ ​ ​ ​ ஜெயலலிதாவுடன் அவரது தோழி சசிகலா மற்றும் அ.தி.மு.க.​ தலைமைக் கழக நிர்வாகிகள் இ.​ மதுசூதனன்,​​ சி.​ பொன்னையன்,​​ கே.ஏ.​ செங்கோட்டையன்,​​ டி.​ ஜெயக்குமார்,சு.​ முத்துசாமி,​​ ஈ.வெ.கி.​ சுலோச்சனா சம்பத்,​​ விசாலாட்சி நெடுஞ்செழியன்,​​ பா.​ வளர்மதி,​​ தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.​ செந்தமிழன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.​ ​இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.​ பாண்டியன்,​​ தமிழக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம்.​ வீரப்பன்,​​ செ.​ மாதவன்,​​ அரங்கநாயகம்,​​ சு.​ திருநாவுக்கரசர்,​​ பூவராகன்,​​ நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.​ சண்முகம் உள்ளிட்டோர் கே.ஏ.​ கிருஷ்ணசாமியின் இல்லத்தில் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.​ ​ ​கருணாநிதி இரங்கல்:​​ ​கே.ஏ.​ கிருஷ்ணசாமி மறைவையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:​ ​பெரியார்,​​ அண்ணா மற்றும் என்னைப் போன்றவர்களுக்கு மிக நெருங்கிய தொடர்புடையது கே.ஏ.​ கிருஷ்ணசாமியின் கணியூர் குடும்பம்.​ ​அந்தக் குடும்பத்துக்கு மிகப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.​ எங்களால் "கிட்டு' என்ற அன்பொழுக அழைக்கப்பட்ட கே.ஏ.​ கிருஷ்ணசாமியின் மறைவு,​​ மிகுந்த வேதனைக்குரியது.​ ​அவர் திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்காக வாழ்நாள் எல்லாம் பாடுபட்டவர்.​ அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.​ ​ஜெயலலிதா இரங்கல்:​ மாணவப் பருவம் முதலே திராவிட இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் கே.ஏ.​ கிருஷ்ணசாமி.​ அண்ணா அறிவித்த மொழிப் போராட்டத்தில் பங்கேற்று,​​ சிறை சென்றவர்.​ ​​ எம்.ஜி.ஆர்.​ அ.தி.மு.க.வைத் தொடங்கியபோது அவருக்கு உறுதுணையாக இருந்த கட்சி முன்னோடி கிருஷ்ணசாமி.​ ​​ அவர்,​​ கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான "தென்னகம்' நாளேட்டின் ஆசிரியராக இருந்ததோடு,​​ பல வார,​​ மாத இதழ்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.​ ​அ.தி.மு.க. ​ அமைப்பாளர்,​​ அமைப்புச் செயலாளர்,​​ துணைப் பொதுச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்த கே.ஏ.​ கிருஷ்ணசாமி,​​ மாநிலங்களவை உறுப்பினர்,​​ சட்டப்பேரவை மேலவை உறுப்பினர்,​​ சட்டப்பேரவை உறுப்பினர்,​​ அமைச்சர் ஆகிய பொறுப்புகளில் பணியாற்றி,​​ அனைவரின் அன்பையும்,​​ நன்மதிப்பையும்,​​ பாராட்டையும் பெற்றவர்.​ ​​ கே.ஏ.​ கிருஷ்ணசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,​​ அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.​ ​​ வாழ்க்கைக் குறிப்பு:​​ ​​ ​ 1932-ம் ஆண்டு கோவை மாட்டம்,​​ உடுமலைப்பேட்டை அருகேயுள்ள கணியூரில் பிறந்தவர் கே.ஏ.​ கிருஷ்ணசாமி.​ தி.மு.க.வின் தொடக்க கால முன்னணித் தலைவர்களில் ஒருவரான கே.ஏ.​ மதியழகன்,​​ கிருஷ்ணசாமியின் அண்ணன் ஆவார்.​ எம்.ஏ.பி.எல்.​ பட்டதாரியான கிருஷ்ணசாமி,​​ 1972-ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது தி.மு.க.​ சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.​ ​​ பின்னர் அதே ஆண்டில் எம்.ஜி.ஆர்.​ அ.தி.மு.க.வைத் தொடங்கியபின்,​​ கிருஷ்ணசாமியும் அ.தி.மு.க.வில் சேர்ந்தார்.​ ​​ 1978-ம் ஆண்டு தமிழக மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கிருஷ்ணசாமி,​​ எம்.ஜி.ஆர்.​ தலைமையிலான தமிழக அரசில் இரண்டு முறை அமைச்சராகப் பணியாற்றினார்.​ ​​ 1980,​ 1984 மற்றும் 1991 சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கிருஷ்ணசாமி,​​ ஜெயலலிதா தலைமையிலான அரசிலும் அமைச்சராகப் பணியாற்றினார்.​ ​​ கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த கிருஷ்ணசாமி,​​ இதய நோயால் பாதிக்கப்பட்டு,​​ சிகிச்சை பெற்று வந்தார்.​ ​​ கே.ஏ.​ கிருஷ்ணசாமியின் உடல்,​​ பெசன்ட் நகர் மின் மயானத்தில் புதன்கிழமை தகனம் செய்யப்பட உள்ளது.
கருத்துக்கள்

நல்ல பண்பாளர்;இப்போதைய அரசியலில் ஓரங்கட்டப்பட்டவர்;தி.மு.க. வரலாற்றிலும் அ.இ.அ.தி.மு.க வரலாற்றிலும் குறிப்பிடத் தகுந்தஇடமபெற்றவர்; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்குத் தினமணி நேயர்களின் சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2010 3:46:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக