செவ்வாய், 18 மே, 2010

இன்று சர்வதேச அருங்காட்சியக தினம்: தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அருங்காட்சியகம் இல்லை!



வேலூர்: ​ தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் மட்டுமே அருங்காட்சியகங்கள் உள்ளன.​ மற்ற மாவட்டங்களில் இவை இன்னும் தொடங்கப்படவில்லை.​ ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவு முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.​ தமிழகத்தில் முதல் முறையாக 1851-ம் ஆண்டு சென்னையில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது.​ அதன் பிறகு,​​ புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டது.​ 1980-களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அப்போதைய முதல்வர் எம்ஜிஆர்,​​ ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டார்.​ இதையொட்டி,​​ சென்னை மற்றும் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது.​ தமிழர்களின் கலை,​​ பண்பாடு,​​ நாகரீகம்,​​ தமிழகத்தை ஆண்ட பிற சமயத்தினர்,​​ படையெடுப்பு,​​ சிற்பக் கலை எனப் பல்வேறு தகவல்களைக் கொண்ட பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய தகவல் களஞ்சியங்களாக இந்த அருங்காட்சியகங்கள் செயல்படுகின்றன.​ இதில்,​​ தமிழக அளவில் கிடைத்த பொருள்கள் மட்டுமின்றி,​​ அந்தந்த மாவட்டங்களின் சிறப்பை விளக்கும் வகையிலான பொருள்களும் வைக்கப்பட்டிருக்கின்றன.​ இவையே,​​ ஒவ்வொரு காலகட்டத்தில் இருந்த சமூக,​​ இலக்கிய,​​ சமயத்தின் அடையாளங்களை விளக்கும் கண்ணாடிகளாக இருக்கின்றன.​ ஆனால்,​​ 21 இடங்களில் உள்ள இந்த அருங்காட்சியகங்களில்,​​ சென்னை,​​ புதுக்கோட்டை,​​ திருநெல்வேலி,​​ திருச்சி மாவட்டங்களில் மட்டுமே இவை சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன.​ கோவை,​​ கடலூர்,​​ ஈரோடு,​​ காஞ்சிபுரம்,​​ கன்னியாகுமரி,​​ கரூர்,​​ கிருஷ்ணகிரி,​​ மதுரை,​​ நாகை,​​ பழனி,​​ ராமநாதபுரம்,​​ சேலம்,​​ சிவகங்கை,​​ திருவாரூர்,​​ உதகை,​​ வேலூர்,​​ விருதுநகர் இடங்களில் உள்ள அருங்காட்சியகங்கள் தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களிலும்,​​ பிற அரசு அலுவலகங்களிலும் வாடகைக்கு இயங்குகின்றன.​ இதுதவிர,​​ தமிழகத்தின் பிற 11 மாவட்டங்களில் இன்றுவரை அருங்காட்சியகங்கள் தொடங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.​ குறைந்தபட்சம் அந்தந்த மாவட்டங்களின் தகவல்கள் தொகுப்பையாவது கொண்ட அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.எளிதில் அணுகும் இடமா?​​ மொத்தம் உள்ள 21 அருங்காட்சியகங்களில் சில மட்டுமே,​​ மக்கள் அதிகம் சென்றுவரும் சுற்றுலா தலத்தையொட்டிய இடத்தில் அமைந்திருக்கிறது.​ அதனால் மட்டுமே அங்கு அதிகமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.​ குறிப்பாக,​​ வேலூர் கோட்டைக்குள் அருங்காட்சியகம் இருப்பதால்,​​ கோட்டையைச் சுற்றிப்பார்க்க வரும் பொதுமக்கள்,​​ அருங்காட்சியகத்தைப் பார்வையிட எளிதாக இருக்கிறது.​ இதுபோல,​​ வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அருங்காட்சியகங்களை,​​ மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளுக்கு மாற்றுவதன் மூலம்,​​ அதிகமானோர் கண்டுகளிக்க ஏதுவாக இருக்கும்.
கருத்துக்கள்

தமிழ்நாட்டுக் கலை வடிவங்களையும் கலை உடைகளையும் வெளிப்படுத்தும் பன்னாட்டுக் கலையருங்காட்சிகயகம் அமைக்கப்பட வேண்டும். அனபுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/18/2010 2:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக