வியாழன், 29 ஏப்ரல், 2010


ஆதிதிராவிடர் மானியக் கோரிக்கையின் போது அமளி - துமளி வேண்டாம்: முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்



சென்னை, ஏப். 28: ஆதிதிராவிடர் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமளி - துமளி வேண்டாம் என்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் சொ. கருப்பசாமி திமுக அரசைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அதற்கு அமைச்சர்களும், திமுக உறுப்பினர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கருப்பசாமி பேசிய குறிப்பிட்ட சில பகுதிகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் உத்தரவிட்டார்.அதன்பிறகு பேசிய திமுக உறுப்பினர் சங்கரி நாராயணன், முன்னாள் மத்திய அமைச்சர் அருணாச்சலம் தலித் என்பதற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகக் கூறினார்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் அடித்தட்டு மக்கள். இவர்களைப் பற்றிய விவாதம் நடைபெறும்போது ஆளும் கட்சி செய்தவற்றைக் குறிப்பிட்டு இவை போதாது இன்னும் செய்ய வேண்டும், செய்தவை தவறு, அவை திருத்தப்பட வேண்டும் என்று சொல்கிற நிலையில் எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும்.அதற்கு நிதானமாக, அமைதியாக விளக்கம் அளிக்கும் நிலையில் ஆளும் கட்சி இருக்க வேண்டும். இதுதான் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த அனைவருக்கும் நாம் செய்கின்ற சேவையாகும்.ஆதிதிராவிடர் மானிய கோரிக்கையை விவாதிக்கும்போது அமளி - துமளி என்ற பத்திரிகைகளில் செய்தி வருவது அந்த மக்கள் பார்த்து மகிழ்ச்சி அடையக் கூடியதாக இருக்காது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அடித்தட்டு மக்கள் அதாவது கூன் விழுந்தவர்கள் நிமிர வேண்டும் என்பதற்காக எடுக்கப்படும் முயற்சி, ஆளும் கட்சியின் முயற்சியாகவும், எதிர்க்கட்சிகளின் முயற்சியாகவும் இருக்க வேண்டும்.இதிலே ஒருவருக்கொருவர் போட்டி போட்டிக் கொண்டு அவர்களுக்காகப் பணியாற்றி வேண்டுமே தவிர, ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்வது அந்த மக்களுக்கு செய்கின்ற உதவியாக இருக்காது.எனவே, அந்த மக்கள் நம்மைப் பார்த்து நகையாடாமல் இருப்பதற்கு, அமைதியான முறையிலே இந்த மானியத்தை விவாதித்து, நிறைவேற்றித் தரவேண்டும் என்று அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் முதல்வர் கருணாநிதி கேட்டுக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் சங்கரி நாராயணன் பேசிய சில பகுதிகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.
கருத்துக்கள்

எத்துறை விவாதம் ஆயினும் அமளி துமளி இல்லாமல் அமைதியாக நடைபெறுவதே நன்று. உரையில் காரசாரம் இருக்கலாம். செயல்பாட்டில் ஒழுங்கு இருக்க வேண்டும். இவ்வினத்தவருக்கு எதிரான தவறுகள் அல்லது அநீதிகள் அல்லது தீங்குகள் களையப்பட வேண்டும் என்றால் முதலில் கலைபண்பாட்டுத் துறையில் இவ்வினத்தவருக்கான பதவிகளில் குறிப்பிட்ட இனத்தவர்மட்டுமே நியமிக்கப்பட்டள்ள அவலத்தைப் போக்கிட அனைத்து நியமனங்களையும் நீக்கி விட்டுப் புதிய நியமனங்கள் மேற்கொள்ள வேண்டும். முதல்வரின் கருத்திற்கு இச்செய்தி போனால் அவர் அவ்வாறு செய்ய வாய்ப்பு உள்ளது. முதல்வரின் துறையிலேயே பட்டியல் இனத்தவருக்கு அநீதிகள் இழைக்கப்பட்டு வருகையில் அதற்கு முரணாக அவர்களின் சம வாய்ப்பு குறித்தும் நல வாழ்வு குறித்தும் பேசுவது பொருந்தாமையாக உள்ளது. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
4/29/2010 3:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக