வியாழன், 29 ஏப்ரல், 2010

ஆதிதிராவிடர் என்ற பெயரை மாற்ற வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை



சென்னை, ஏப். 28: ஆதிதிராவிடர் என்ற பெயரைப் பட்டியல் இனம் என மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஆர். ராமசுப்பு கோரிக்கை விடுத்தார்.சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:தலித்துகள், தாழ்த்தப்பட்டோர், பட்டியல் இனம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மக்களை இனி ஆதிதிராவிடர் என்று அழைக்க வேண்டும் என 24-1-2007 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 76 பிரிவுகள் கொண்ட இந்த இனத்தை ஆதிதிராவிடர் என்று அழைப்பது சரியல்ல. எனவே அந்த அரசாணையை திரும்ப பெற வேண்டும். ஆதிதிராவிடர்களைப் பட்டியல் இனம் என்று அழைக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என்பதை பட்டியல் இனம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தும் வறுமை காரணமாக பல ஆதிதிராவிட மாணவர்கள் படிக்க முடியாத நிலையில உள்ளனர்.எனவே,ஆதிதிராவிடர் மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் படித்தாலும் அவர்களுக்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும்.தாட்கோ மூலம் நடைபெறும் பணிகளை ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. இப்போது யார் வேண்டுமானாலும் தாட்கோ பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரலாம் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த அரசாணையை திரும்பப் பெற்று தாட்கோ பணிகள் முழுவதையும் ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கே வழங்க வேண்டும் என்றார்.எஸ்.கே. மகேந்திரன் (மார்க்சிஸ்ட்):மக்கள் தொகைக்கு ஏற்றவாறு ஆதிதிராவிடர்களுக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உயர் கல்விக்கு ரூ. 22 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அதிகரிக்க வேண்டும்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீண்டாமை கொடுமை இன்னும் தலைவிரித்தாடுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் கோயில் நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. போலீஸ் உயர் அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டார்.அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இத்துறையின் மூலம் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை.திண்டுக்கல் மாவட்டம் உத்தபுரத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் நிழற்குடை அமைக்க மார்க்சிஸ்ட் கட்சியைச் சேரந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் தனது தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 3.5 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார். ஆனாலும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆதிக்க சக்திகள் எதிர்ப்பதால் நிழற்குடை அமைக்க முடியவில்லை என்று மாவட்ட ஆட்சியர் கூறுகிறார். இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டி வீரனுக்கு நினைவுச் சின்னத்துக்கு பதிலாக நினைவு மண்டபம் அமைக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக மத்திய அரசு அளிக்கும் நிதி சரியாக பயன்படுத்தப்படுவதில்லை என்று புகார் வந்துள்ளது. அதனை முறையாக பயன்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மகேந்திரன்.
கருத்துக்கள்

புரட்சித்தலைவர் ஆதித் தமிழர் எனக் குறிக்க வேண்டும் என்றார். இதன் அடிப்படையில் சிலர் தொல் தமிழர் எனக் கூறுகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இவ்வகைப்பாட்டில் நன்மை பெறுவோரில் மிகுதி ஆதித் தெலுங்கராகத்தான் உள்ளனர். அரசமைப்புச் சட்டப்படி பட்டியல் இனம் என்பதுதான் சரி. எனவே, இராமசுப்புவின் வேண்டுதல் சரியானதே. எனினும் பெயரால் ஒன்றும் விளையப்போவதில்லை. மாண்புமிகுமுதல்வரின் துறையிலேயே பட்டியல் இனத்தவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி வாய்ப்புகள் ஆளும் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள சூழலில் உண்மையான செயல்பாடு இருந்தாலன்றிப் பயன் இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/29/2010 3:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக