வியாழன், 14 ஜனவரி, 2010

தமிழர் புத்தாண்டில் கறுக்கும் சூரியன்



ஞாயிறு போற்றினர் நம் முன்னோர். சூரியன் என்றும் அளவு மாறாமல் நிலைத்து நிற்கிறது என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். அறிவியலாரிடம் கேட்டால் அப்படி இல்லை என்று மறுக்கிறார்கள்.÷தாவரங்கள் வளரவும், உயிரினங்கள் வாழவும் விளம்பரம் இல்லாமலே தன்னார்வத் தொண்டாற்றி வருவது அண்டவெளிச் சூரியன் மட்டுமே. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அய்யன் திருவள்ளுவர் ஒருவேளை இதையே "ஆதி பகல(வ)ன்' என்றே பாடி இருப்பாரோ? இரவு, பகல் பாராமல் சொந்தக் கணக்கில் இருந்து இலவச ஒளியினை அள்ளி வழங்குகிற சூரியன் சுயநலம் அற்றது. பல கோடி ஆண்டுகளாய்த் தினமும் மாலையில் பணிமுடித்து சம்பளமோ, கிம்பளமோ, பட்டமோ, விருதோ எதுவும் கேட்டு வாங்காமல் ஆடம்பரம் இன்றி அமைதியாய்ப் போய், மறுநாள் தானே வந்து பணி தொடர்கிறது.÷இடையறாது ஒளியை வாரி இறைப்பதால் சூரியச் சட்டியில் உள்ளிருப்பு குறைந்து வருகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சார்பியல் சித்தாந்தப்படி ஆற்றலும், பொருளும் சமம் அல்லவா? ஆதலால் சூரியன் ஒவ்வொரு நொடியிலும் இழக்கும் பொருள் அளவு 60 லட்சம் டன்கள். கிட்டத்தட்ட 3 லட்சம் சரக்கு லாரி எடைக்குச் சமம் என்றால் பாருங்களேன்.÷சூரியனின் நிறை ஈர்ப்புக் குன்றுவதால், தனக்குத்தானே பலூனாய் ஊதிப் பெருகி வருகிறது. அத்துடன் சூரியனுக்குள் நிகழும் அணுக்கரு வினைகள் மந்தம் அடைகின்றன. அதனால், இன்று மஞ்சள் விண்மீனாகத் தோன்றும் சூரியன், எதிர்காலத்தில் செம்பூத விண்மீனாக 100 மடங்கு குண்டாகிவிடும். பூமிக்கு அது உபத்திரவம். இங்கு கடல்கள் வற்றும். நீர்நிலைகள் ஆவி ஆகும்.÷இன்னொரு ரகசியத் தகவல். நமக்கும் இந்தச் சூரியனுக்கும் உரிய இடைவெளி அதிகரித்து வருகிறது (சாமி சத்தியம், இது பிசகாத வானவியல் கணிப்பு). ஒவ்வோராண்டும் சூரியன் அரை அடி வீதம் அடியெடுத்து நம்மை விட்டு விலகுகிறது என்பது உண்மை. 2004-ம் ஆண்டு கிரிகொரி ஏ. கிராசின்ஸ்கி மற்றும் விக்டர் ஏ. ப்ரம்பர்க் ஆகியோரின் ஆராய்ச்சி முடிவு இது.÷ஆனால் ஜப்பானில் ஹிரோசாகி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தக்கோஹா மியுரா ஆகியோர் சிந்தனையும் முக்கியம் ஆனது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையிலான ஈர்ப்பு உராய்வினால் பூமியின் ஆண்டுச் சுழற்சிக் காலம் 2100-ம் ஆண்டுவாக்கில் இன்றைக்கு உள்ளதைவிட 3 மில்லி நொடி குறைந்துவிடுமாம். இவ்விதம் வேகம் தளர்ந்த பூமியின் சுற்றுவட்டம் மெல்ல விரிவடைந்து வருவதில் ஆச்சரியம் இல்லை.÷பூமி மட்டும்தான் தனது சுழற்சியில் தளர்ந்து வருகிறது என்று இல்லை. சந்திரனின் புவி சுற்றுவட்டம் வேறு ஆண்டுதோறும் மூன்று விரல்கடை அளவு வீதம் விரிவடைந்து வருகிறது.÷ஏதாயினும், இந்த ஆங்கிலப் புத்தாண்டு (2010) சந்திர கிரகணத்துடன் விடிந்தது. அந்த "நீல நிலா' இரவில் சந்திர விளிம்பு நகத்தளவு கறுத்தது. "திங்கள் கோள் நேர்தல்' என்று சங்கத் தமிழில் சொன்னால் நம்மவர்க்குத் தெரியவே தெரியாது. சந்திர கிரகணம் என்கிறோம். அதுசரி, நீல நிலா என்னவென்று தானே கேட்கிறீர்கள்? ஏதேனும் ஒரு ஆங்கில மாதத்தில் பெüர்ணமி இரண்டு முறை வருமானால் இரண்டாம் தடவையாகத் தோன்றும் முழு நிலாவுக்கு இந்தப் பெயர். 2009 டிசம்பர் முதல் நாளில் பெüர்ணமி பூத்தது. அதே மாதம் 31 அன்று இரவு "நீல நிலா' கிரகணம் பிடித்தது. அடுத்த நீல நிலா காண இனி 2012 ஆகஸ்ட் 31 அன்று வரை காத்திருக்க வேண்டியதைத் தவிர வேறு வழி இல்லை.÷எப்படியோ, தமிழர் புத்தாண்டின் அமாவாசை சந்திரன் திருவள்ளுவர் தினத்தன்று மதிய வேளை சூரியனை மையத் தட்டில் மறைக்க இருக்கிறது. அதுதான் 2010 ஜனவரி 15 அன்று நிகழ இருக்கும் கங்கண கிரகணம். சென்ற ஆண்டு (2009) ஜனவரி 26 அன்று கங்கண கிரகணம் தோன்றியது. அதே ஆண்டு 177 நாட்கள் 4 மணி அளவு நேரம் கழித்து மீண்டும் ஜூலை 22 அன்று முழு சூரிய கிரகணம் நேர்ந்தது. இந்த நூற்றாண்டின் மிக நீண்ட கிரகணம் அது. (6 நிமிடம் 39 வினாடிகள்). இந்தப் புத்தாயிரம் ஆண்டில் 2186 ஜூலை 16 அன்றுதான் அதி நீண்டகால கிரகணம் (7 நிமிடம் 29 வினாடிகள்) நடக்கும். எந்த முழு கிரகணமும் 7 நிமிடங்கள் 31 வினாடிகளுக்கு மேல் நீடிக்காது.÷தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு, 2010 ஜூலை 11 அன்று சூரியனுக்கு 5 நிமிடங்கள் 20 வினாடிகள் முழு கிரகணம் பிடிக்கும். அடுத்த ஆண்டு தேர்தலுக்கும் திருவள்ளுவர் தினத்துக்கும் முன்னதாக ஜனவரி 4 அன்று மீண்டும் சூரியனில் கங்கண கிரகணம் வரும். ஆனால் இந்த இரண்டு கிரகணங்களுமே தமிழ்நாட்டில் என்ன, இந்தியாவிலேயே தெரியாது.÷எல்லாம் சரிதான். உண்மையில் சூரியனுக்கும் பூமிக்கும் நேர் நடுவில் அமாவாசைச் சந்திரன் குறுக்கிட்டு மறைப்பதே சூரியகிரகணம் என்பது பழைய பள்ளிப்பாடம். அப்படியானால் ஒவ்வொரு அமாவாசை நாளன்றும் சூரியன் கிரகணம் ஆக வேண்டுமே. அதுதான் இல்லை. காரணம், சந்திரன்-பூமியைச் சுற்றும் பாதையும், பூமி-சூரியனைச் சுற்றும் பாதையும் ஒரே தளத்தில் இல்லை. இரண்டு சுற்றுப்பாதைகளுக்கும் இடையே 5 பாகை சாய்மானம் இருக்கிறது.÷அதனால் இரண்டு வட்டப் பாதைகளும் ஒன்றுக்கொன்று வெட்டிக்கொள்ளும் புள்ளிகளில் மட்டுமே சூரியகிரகணம் தோன்றும். சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி இயங்குவது போல் தோன்றும் உத்தராயணத்தில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களிலோ, சூரியனில் தெற்கு நோக்கிய தட்சிணாயனத்திலோ நிகழ்கிறது. ஆண்டுக்குச் சராசரி 2 கிரகணங்கள் நிச்சயம்.÷ஆனால் 1582 முதல் இன்றைய ஆங்கில நாள்காட்டி எனப்படும் கிரகோரியன் நாள்காட்டி வழக்கத்துக்கு வந்தபிறகு, அதிசயமாக 1693, 1758, 1823, 1870, 1935 ஆகிய ஆண்டுகளில் ஐந்து சூரிய கிரகணங்கள் நிகழ்ந்துள்ளன. இனி 2206-ம் ஆண்டுதான் ஐந்து சூரிய கிரகணங்கள் ஒரே ஆண்டில் நிகழ இருக்கிறது.÷இருந்தாலும் சந்திரன், பூமியைச் சுற்றிவரும் பாதை சரிவட்டமாக இல்லை. ஒரு குறித்த நீள்வட்டத்தில் இருக்கிறது. பூமிக்கு அருகுப் புள்ளியில் இயங்கும்போது சந்திரனின் நிழல் சூரியனை முழுவதுமாக மறைக்கிறது. அதுவே முழு கிரகணம். அன்றி, சந்திரன் பூமியின் தொலைவுப் புள்ளியில் இருக்குமானால், சூரிய முகத்தில் கங்கண கிரகணம் வளையம் இட்டுத் தோன்றும்.÷ஆனால், ஏறத்தாழ 14 லட்சம் கிலோமீட்டர் குறுக்களவு கொண்ட மிகப் பிரம்மாண்டச் சூரியனை வெறும் 3,476 கிலோமீட்டர் சந்திரன் மறைப்பதாவது? இதையே வேறு விதமாகச் சொன்னால், சூரியன் "தினமணி'யின் தலையங்கப் பக்க அளவு என்றால் தலைப்பில் வரும் ஒரு கரும்புள்ளிதான் சந்திரன். சூரியனைவிட 400 மடங்கு சிறியது. ஆனால், சூரியனைக் காட்டிலும் 390 மடங்கு நமக்கு அருகில் இருக்கிறது. அதனால்தான் சூரியனையே மறைக்கிறது.÷இயேசு நாதர் சிலுவையில் அறையப்பட்ட தறுவாயில், ""நண்பகல் தொடங்கி, மூன்று மணி வரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று'' (மாற்கு15:33-34) என்கிறது வேதாகமம். இது சூரிய கிரகணமோ என்னவோ? அதுமட்டுமா, அண்ணல் முகம்மது நபி உதித்த கி.பி. 569-570 ஆண்டுக் கட்டத்தில் நிகழ்ந்த ஒரு சூரிய கிரகணம் வரலாற்றில் பதிவாகி இருக்கிறது. ஆயினும் முகம்மது நபி பிறப்புக்கும், சூரிய கிரகணத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை.÷எவ்வளவுதான் வாயைப் பிளந்து வானத்தைப் பார்த்தாலும், இந்த 2010 ஜனவரி 15 திருவள்ளுவர் தினச் சூரிய கிரகணம் சென்னைப் பட்டணத்தில் தெரியவே தெரியாது. மாலத்தீவு, திருவனந்தபுரம் (தென் கேரளா), கன்னியாகுமரி, ராமேஸ்வரம் (தென் தமிழ்நாடு), யாழ்ப்பாணம் (வட இலங்கை) வழி 300 கிலோமீட்டர் அகலப் பாதையில் இந்தக் கங்கண கிரகணத்தைப் பார்க்கலாம். மதுரை தொடங்கி, வட தமிழ்நாட்டில் கொடைக்கானல், ஈரோடு, நெய்வேலி, கடலூர் வரை தெரியும், அவ்வளவுதான்.÷வானவியல் ஆர்வலர்களோ, தனுஷ்கோடியில் உள்ள கோதண்டராமர் கோயிலுக்குப் போனால் உத்தமம். இந்தக் கங்கண கிரகணத்தைத் தரிசிக்க உகந்த இடம் அது. இப்போதைக்கு அதைக்கடந்து போய்விட வேண்டாம். சூரியனை கிரகணம் பிடிக்கிறதோ இல்லையோ, உங்களை இலங்கை ராணுவம் பிடித்துச் சிறை வைத்துவிடக் கூடும். எச்சரிக்கை.
கருத்துக்கள்

உங்கள் கருத்தை முதலாவதாகப் பதிவு செய்யுங்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக