சனி, 16 ஜனவரி, 2010

அற்புத சூரிய கிரகணம்



தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் - கன்னியாகுமரி - சென்னை
சென்னை,ஜன.15: 108 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றிய அற்புத கங்கண சூரிய கிரகணம் மதுரை, கன்னியாகுமரி, ராமேசுவரம், தனுஷ்கோடியில் வெள்ளிக்கிழமை முழுமையாகக் காட்சி அளித்தது.பகல் 11.10 மணிக்கு சூரியனை சந்திரன் நிழல் லேசாக மறைக்கத் தொடங்கியது. பிறகு படிப்படியாக சூரியன் வலதுபுறம் மறையத் தொடங்கியது. பிற்பகல் 1.15 மணிக்கு சூரியனின் மையத்தில் சந்திரன் முழு வட்டமாக அமைந்ததைக் காண முடிந்தது. அப்போது பிரகாசமான வைர வளையல் போல சூரியன் காணப்பட்டது.மதுரையில் அப்போது வெளிச்சம் குறைந்து, வெப்பமும் குறைவாக இருந்தது. மாலை 3.15 மணிக்கு கிரகணம் முழுமையாக நீங்கியது.விசேஷக் கண்ணாடிகள் மூலமும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையினர் அமைத்திருந்த டெலஸ்கோப்புகள் மூலமும் மக்கள் இந்தக் கிரகணத்தைக் கண்டு ரசித்தனர்.ராமேசுவரம், தனுஷ்கோடி நிலப்பரப்பில் வெள்ளிக்கிழமை காலை 11.14 மணிக்கு முதல்கட்ட சூரிய கிரகணம் ஆரம்பமானது. பின்னர் சூரியனை சந்திரன் மெல்ல மெல்ல முழுமையாக மூடி மறைத்தபோது முழு வட்ட வடிவிலான கங்கண சூரிய கிரகணம் பகல் 1.16 மணிக்குத் தொடங்கி 1.26 மணி வரை நீடித்தது.இந்த முழு கங்கண சூரிய கிரகணத்தின் மத்திய கோடு தமிழகத்தில் ராமேசுவரத்தில் இருந்து 7 கி.மீ தாண்டி உள்ள தனுஷ்கோடி நிலபரப்பில் விழுவதால் மிக தெளிவாகக் காணலாம் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்தன்படி, தனுஷ்கோடி அருகே முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் விசேஷ கண்ணாடி அணிந்து சூரிய கிரகணத்தைப் பார்வையிட்டனர்.சூரிய கிரகணம் மாலை 3.12 மணிக்கு முடிவடைந்தது.கோயில் நடை சாத்தப்பட்டது:சூரிய கிரகணத்தையொட்டி பழனி, மதுரை, ராமேசுவரம் உள்பட எல்லா ஊர்களிலும் பெரிய கோவில்களில் நடை காலை 11 மணிக்கு சாத்தப்பட்டது. கிரகணம் முடிந்து 4 மணிக்குதான் கோவில்கள் திறக்கப்பட்டன.சென்னை கிண்டியில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் ஏராளமானோர் இந்த சூரியகிரகணத்தைக் கண்டு ரசித்தனர். சென்னையில் 82 சதவீதம் அளவுக்கு சூரிய கிரகணம் தெரிந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.டெலஸ்கோப் இல்லாமல் கிரகணத்தைப் பார்க்க உதவும் வகையில் விசேஷ கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.இதற்கு முன்பு தமிழகத்தில் 1901-ல் கங்கண சூரிய கிரகணம் தெரிந்தது என அவர்கள் கூறினர்.சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால் பார்ப்பது ஆபத்து என்ற பிரசாரம் மக்களிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக