வியாழன், 22 அக்டோபர், 2009

இந்தியாவையே ஆள்கிறது கேரளம்: ராமதாஸ் குற்றச்சாட்டு



சென்னை, அக். 21: இந்தியாவை ஆள்வது மத்திய அரசு அல்ல; கேரளம்தான் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"முல்லை பெரியாறு பிரச்னையில் கேரள அரசின் செயல்பாடுகளால், இப்போது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற மாநிலம் எது என்ற சந்தேகம் எழ நேரிடும் என முதல்வர் கருணாநிதி எச்சரித்திருக்கிறார். இதுவரை என்னைப் போன்றவர்கள் சொல்லி வந்த குற்றச்சாட்டை இப்போது கருணாநிதியும் உணரத் தொடங்கியிருக்கிறார்.
இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது கேரளம்தான்; இதில் நமக்குச் சந்தேகமே வேண்டாம்.
இது இந்தியாவா அல்லது கேரள தேசமா என்று எண்ணும் அளவுக்கு கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மத்திய ஆட்சி நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் செயலாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ. நாயர், பிரதமர் அலுவலக மூத்த அதிகாரி கோபாலகிருஷ்ணன், ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தியின் செயலாளர் ஜார்ஜ் வின்சென்ட், மத்திய அமைச்சரவைச் செயலாளர் கே.எம். சந்திரசேகர், உள்துறை செயலாளர் சி.கே. பிள்ளை, வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா மேனன் ராவ் ஆகியோர் கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் மாதவன் நாயர் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
நாட்டின் 30 மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளம். ஆனால் மத்திய அரசுத் துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது, 33 சதவீதத்திற்கு மேலானவர்கள் கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் எனக் கூறப்படுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஒரே ஒரு அதிகாரிதான் இப்போது மத்திய அரசில் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
இத்தகைய நிலையில், இன்றைக்கு இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது எந்த மாநிலம் என்ற சந்தேகமே தேவையில்லை. இந்த அசாதாரணமான நிலைமையினால்தான், இன்றைக்கு கேரளத்துக்கு சாதகமாக காரியங்கள் நடக்கின்றன. தமிழர்களின் நலன் புறக்கணிக்கப்படுகிறது.
முல்லை பெரியாறு அணை பிரச்னை இப்போது உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. ஆனால் மத்திய இணை அமைச்சராக இருக்கும் ஒருவர், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரளத்துக்கு அனுமதி அளிக்கிறார்.
அவருக்கு அந்த துணிச்சல் எப்படி வந்தது? மத்தியில் ஆளும் கூட்டணியின் முக்கியக் கட்சி ஆட்சி நடத்துகின்ற தமிழகத்திற்கு பாதகமாகவும், எதிர்க்கட்சி ஆட்சி நடத்தும் கேரளத்துக்கு சாதகமாகவும் முடிவெடுக்கும் துணிச்சலை அவருக்கு யார் கொடுத்தது? அவர் வெறும் பொம்மைதான். அவரைச் செயல்பட வைத்தவர்கள் யார் என்பதைத் துணிந்து அறிவிக்க முதல்வர் கருணாநிதி முன்வர வேண்டும்.
கேரளத்துக்கு சாதகமான சூழ்நிலை மத்திய அதிகார வர்க்கத்தில் ஏற்பட்டிருக்கிறது. எனவே, தமிழகம் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். இல்லையெனில் கேரள மாநிலத்திற்கு ஏற்பட்டிருக்கும் செல்வாக்கு, ஆதிக்கத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநில முதல்வர் அச்சுதானந்தன் நினைத்ததைச் சாதித்து விடுவார்.
முல்லை பெரியாறு, காவிரி நீர் தகராறு போன்ற நதி நீர் பிரச்னைகளில் அண்டை மாநிலங்களைப் போல, மத்திய அரசும் குற்றவாளிதான். மத்திய அரசையும் குற்றவாளி என பிரகடனம் செய்ய தமிழகம் முன்வர வேண்டும்.
மாநில நலனைக் காக்க, மத்திய அரசுக்கு சவால் விடும் துணிவு மிக்க மாநிலமாக தமிழகம் மாறினால் தவிர, முல்லை பெரியாறு உள்ளிட்ட நதி நீர் பிரச்னைகளில் நமது உரிமையைப் பாதுகாத்திட முடியாது' எனக் கூறியுள்ளார் ராமதாஸ்.

கருத்துக்கள்

கேரளமும் ஆரியமும் தான் இந்தியாவை ஆளுகின்றன;தமிழினத்தை அழிக்கின்றன. நாம் அடிமைகளாய்த் துதிபாடிக் கொண்டிருநதால் இதுதான் நடக்கும். இதற்குக் காரணமான காங்.உடன்தானே கூட்டணி வைக்கத் துடிதுடித்தார்; துடிதுடிக்கிறார் இராமதாசு. தமிழ் நலத்தைத் தூக்கி எறியும் தலைவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரை இந்நிலை தொடரத்தான் செய்யும். திருந்துமா தமிழகம்? அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2009 3:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக