வியாழன், 20 ஆகஸ்ட், 2009

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் பிரித்தானிய ஆயுதங்கள் உபயோகிக்கப்பட்டதா
பிரசுரித்த திகதி : 19 Aug 2009

இலங்கையரசானது பிரிட்டனிடம் கொள்வனவு செய்த ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுமக்களைக் கொலை செய்ததா என அச்சம் எழுந்துள்ளது.

இலங்கைக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் பிரித்தானியாவும் முக்கியமானது. கடந்த மூன்று வருடங்களில் மட்டும் 13.6 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டுகள் பெறுமதியான ஆயுதங்கள் மற்றும் தளபாடங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தி இலங்கையரசு தமிழ் மக்களைக் கொலை செய்ததா என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளதால் ஆயுத வியாபாரம் தொடர்பான ஆய்வு ஒன்றுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகைக்கள் கூறியுள்ளன.

இலங்கையுடன் ஆயுத வியாபாரத்துக்கென உள்ள அனைத்து உரிமங்கள் பற்றியும் ஆய்வு நடத்த வேண்டும் என நான்கு பாராளுமன்றக் குழுக்கள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுத்துள்ளன. இதுபற்றி ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாடுகள் அமைப்பின் தலைவர் ரோகர் பெரி கூறும்போது, அண்மைக்காலங்களில் தமது போர் நடவடிக்கைக்களை நிறைவு செய்துள்ள இலங்கை போன்ற நாடுகளில் மீண்டும் போர் வரலாம் என்பதால் அவற்றை மிகக்கவனமாக புலனாய்வு செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு விழிப்புடன் கண்காணிக்கப்பட வேண்டிய நாடுகளுள் இலங்கை மிக முக்கியமானது என்றும் கூறினார். இதேவேளை இந்த பாராளுமன்ற அமைப்புகள், பிரிட்டனின் ஆயுதங்கள் எப்படிப் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கண்டறிவது சாத்தியமற்ற ஒன்று என்று கூறியுள்ளதோடு, அவ்வாயுதங்கள் பொதுமக்களைப் படுகொலை செய்வதற்காகவே பயன்படுத்தப்பட்டுள்ளன எனபதே பொதுவான கருத்தாக உள்ளது என்று கூறியுள்ளன.

பிரிட்டன் வழங்கும் ஆயுதங்களை அவற்றுக்கான உரிம விதிமுறைகள் மீறும்விதமாக எதிர்காலத்தில் கையாளப்படலாம் என்பதால் மிகக் கவனமாக ஆராய்வது முக்கியமாகிறது. எனினும் பிரிட்டன் வழங்கும் ஆயுதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட நெறிகளுக்கு உட்பட்டவை என்பதால் உள்நாட்டுப் போர் மற்றும் வறிய நாடுகளுக்கு அனுப்பப்படும் ஆயுதங்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் பிரிட்டனின் ஆயுதங்களில் எவ்வகை ஆயுதங்களை 20,000 பொதுமக்களைக் கொல்ல இலங்கையரசு பாவித்தது என்பது தமக்குத் தெரிய வரவேண்டும் என்று கேட்டுள்ளார்கள்.

இலங்கையில் மிக உக்கிரமான போர் தொடங்கியதும் பிரிட்டன் அரசாங்கமானது இலங்கையுடன் மேற்கொள்ளப்பட்ட ஆயுத விவகாரம் சம்பந்தமான அனைத்து உரிமங்கள், ஒப்பந்தங்கள் பற்றியும் மீளாய்வு செய்யத் தொடங்கியுள்ளது எனவும், அந்த ஆய்வானது முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதால் வெகு விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று வெளிநாட்டு அலுவலக பேச்சாளர் லண்டன் டெய்லி டெலிகிராஃப் பத்திரிகைக்குக் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் மட்டும் மொத்தமாக 21 உரிமங்களை பிரிட்டன் ஏற்றுக் கொண்டதென்றும், ஐரோப்பிய ஒன்றிய சட்டவிதிகளை மீறியதால் இரு உரிமங்கள் மறுக்கப்பட்டதென்றும் த ரைம்ஸ் கூறுகிறது. கடந்த ஆண்டும் ஏப்பிரல் முதல் மார்ச் வரையான ஒரு ஆண்டில் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கவென மொத்தமாக 34 உரிமங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த வருட கடைசியில் புலிகளையும், பொதுமக்களையும் இலங்கையரசு கொன்று குவித்ததால் இலங்கைக்கு ராணுவ உதவிகள் மற்றும் விற்பனைகள் செய்வதை அமெரிக்கா நிறுத்தியிருந்தது. இவ்வாறு பிரிட்டனும் முன்னரே தமது ஆயுத வியாபாரத்தை நிறுத்தியிருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். உண்மையில் பிரிட்டன் இவ்வாறு செய்யும் என தாம் எதிர்பார்த்திருந்ததாக பெரியும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக