திங்கள், 17 ஆகஸ்ட், 2009

‘முகவரி அல்ல முகம்’ கட்டுரைத் தொடர் (பாகம் 16 – 25 வரை) – கண்மணி

-25-
ஈழம் கனவுதான்
ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது
ஆமாம்
ஈழம் என்பது
எங்கள் கனவுதான்
உங்களால் எங்கள்
உறக்கத்தைதான்
கலைக்க முடியும்
எங்களை
உறங்க வைக்காத
ஈழக்கனவை
யாராலும் கலைக்க முடியாது

-யாழ்அகத்தியன்
(லங்காசிறி இணையத்தளத்திலிருந்து)

மாந்தகுல வாழ்வென்பது மகத்தானது. அதன் ஒவ்வொரு படிமங்களும், வடிவங்களும் தம்மையே மாற்றிக் கொண்டு இந்த புவியையும் மாற்றி செயலாற்றிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு அழிவிலிருந்தும் புதிய புதிய செய்திகளை அது கற்றுக் கொள்கிறது. பலமுறை தோல்வி கண்டாலும் பேரழிவை சந்தித்தாலும் மாந்தத்தின் தேடல் என்பது இடைவிடாமல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. இத்தேடலில் ஒரு துளிகூட தன்னலமில்லை. ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு இயக்கமும் எதிர்கால மக்களின் ஒருமித்த தன்மைக்கே அர்ப்பணிக்கப்படுகிறது. எடுக்கும் பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் முயற்சி எடுப்பதில் இருந்து மாந்தகுலம் பின்வாங்குவதில்லை. பல முயற்சிகள் தோல்விகளை போல் தோன்றினாலும் அதுவே வெற்றியின் தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடுகிறது. மாந்தகுல வாழ்வில் வரலாற்று ஆய்வோடு பார்க்கும் போது பல்வேறு இனக்குழுக்கள் தமது இன அடையாளத்தையும், தமக்கான அதிகாரத்தையும் காத்துக் கொள்வதற்கு தம்மை தயார் நிலையில் வைத்துக் கொண்டிருக்கிறது.

இக்குழு இன மோதல்களில் கோடிக்கணக்கான உயிர்கள் களப்பலியாக்கப்பட்டாலும் கவலையே இல்லாமல் தமக்கான அடையாளத்தை காத்துக் கொள்ள அதன் ஒவ்வொரு செயலும் அமைந்துவிடுகிறது. இது மாந்த குல வரலாற்றில் இதுவரை தமக்கான இன அடையாளத்தையும், தமக்கான மொழி தேசத்தையும் காத்துக் கொள்வது என்பது தமது லட்சியமாக இந்த மனிதம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இனக்குழுவின் மொழி என்பது அந்த குழுவின் முகவரி அல்ல. அந்த குழுவின் முகம்.

ஒவ்வொரு இனக்குழுவுக்கும் தமது முகத்தை காத்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மொழியும், மொழி சார்ந்த வாழ்வும் அவசியம் ஆகும். கட்டாயமாகவும் இந்த மக்களோடு இணைந்து விடுகிறது. ஒரு காலகட்டத்திற்கு பின் காற்று, நீர், உணவு போன்று அது அவர்களின் கட்டாய தேவையாகிவிடுகிறது. இத்தேவைகளில் இருந்து அவர்கள் தம்மை விடுவித்துக் கொள்ள முடியாது. தமது முகங்களை கழற்றி வைத்துவிட்டு முகமூடி அணிந்து கொள்ள முடியாது. அணிந்து கொள்ளும் முகமூடி நிரந்தரமானது அல்ல. இதை மாற்றி அமைக்க முடியாது. இந்த முகத்தை மறுகட்டமைப்பு செய்ய முடியாது. காரணம் மொழி என்ற முகம் மாந்தகுலத்தின் தேசிய அடையாளம். தமது வாழ்வுக்கான உத்திரவாதம்.

நாம் தொடர்ந்து வாழ்வதற்காக உள்ள ஆதாரம். இதை சிதைக்க எந்த ஆற்றலும் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றதில்லை. காரணம் இதற்கு எதிரான போராட்டம் என்பது தமது வாழ்வின் உயிராதார போராட்டம். ஒவ்வொரு துளி குருதியிலும் அதன் கொந்தளிப்பு வெளிப்படும். ஒவ்வொரு வார்த்தையிலும் அதன் உறுதி தெளிவாகும். இப்போது சொல்லுங்கள் தமிழ் மொழியையும், மொழி பேசும் அந்த இனத்தையும் இல்லாது அழிக்கும் முயற்சி சிங்கள பேரினவாத அர
சால் செய்யப்பட்டதை எப்படி அந்த இனம் பொறுத்துக் கொள்ளும். அடங்கி, அடங்கி அடக்குமுறையின் உச்சத்தை தொட்ட போது வெடித்து சிதறிய உணர்வுகள் தமிழ் தேசிய விடுதலை போராளிகளை தமிழீழ மண்ணிலே கருவித்தறித்தவராக களம் காண வைத்தது. அந்த இனத்தை கள்ளம் கபடம் இல்லாமல் நேசித்த காரணத்தினால் இனம் காக்கும் அந்த போர்களத்திலே தம்மை பலியாக்கி கொள்ள உணர்வு மிக்க இளைஞர்கள் ஒன்று திரண்டார்கள். யாருக்கு என்ன மொழி புரிகிறதோ அதே மொழியில் பேசத் தொடங்கினார்கள். தோட்டாக்களின் ஓசை சிங்களர்களுக்கு தெரிந்த மொழி என்பதால் அம்மொழியை கற்றுக் கொண்டு சிங்கள இன ஆதிக்க வெறியாட்களிடம் அதே மொழி பேசத்தொடங்கினார்கள். அதுவரை எகத்தாளமாகவும், ஏமாளிகளுமாகவும் நினைத்த சிங்கள இனவெறியாட்களுக்கு தமிழ் இளைஞர்களின் வீரம் செறிந்த துப்பாக்கி மொழி சிம்ம சொப்பணமாய் மாறிப்போனது. தமிழ் பெண்கள் மீதான சீண்டல் தடுத்து வைக்கப்பட்டது. தமிழர்களுக்கு எதிரான நிகழ்வுகள் அடங்கிப்போனது. தமிழர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது மாறி சிங்களர்கள் அச்சத்திற்கு ஆளானார்கள். பெரும்பான்மையான ஒரு தேசிய இனம் சிறுபான்மையான ஒரு தேசிய இனத்தை ஒடுக்கிப்போட முடியாது என்பதை சிங்களர் மட்டுமல்ல. இந்த உலகிற்கே அறைகூவலாய் அழைப்பு விடுத்தார்கள். அடங்க மறுத்த அந்த அடலேறுகள் சிங்களர் கொட்டத்தை அடக்கியதோடு மட்டுமல்லாமல் தமது தாய் நிலத்திலே தமது தேசிய அடையாளத்தின் அங்கீகாரமான தமிழீழ தேசிய குடியரசை நிறுவினார்கள். அவர்கள் நிறுவிய அந்த நாட்டிலே கொலை, கொள்ளை, மோசடி, அடக்குமுறை, அதிகாரத்திமிர் என மாந்த குலத்திற்கு எதிராக எந்த நிகழ்வும் நடைபெறவில்லை.

தமிழீழ அரசு என்பது இந்த பூமியிலே ஒரு சொர்க்கத்தைப் படைத்து மக்கள் மகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்டவர்களாய் வாழ்ந்தார்கள். தமது மூதாதையர் மண்ணை அவர்கள் பெருமிதத்தோடு அனுபவித்தார்கள். இன விடுதலைக்கான போரிலே வீரவித்துக்களான மாவீரர்களின் துயிலகம் அவர்கள் மாந்தத்தை எப்படி நேசித்தாõர்கள் என்பதற்கான சாட்சியாக அமைந்திருந்தது. அவர்கள் அமைத்த காவல்துறையிலே கையூட்டு இல்லை. அவர்கள் அமைத்த சாலைகளிலே பள்ளம், மேடு இல்லை. அவர்கள் அளித்த நீதியிலே பொய்சாட்சி இல்லை. அவர்கள் அளித்த கல்வியிலே மொழிக்கலப்பு இல்லை.

தமிழீழ அரசை அவர்கள் ஒரு நிறைவான நாடாகக் கட்டியமைத்திருந்தார்கள். அதன் செயல்பாடுகளை கண்ணியமாகவும், நேர்மையாகவும் வகுத்திருந்தார்கள். தமிழீழ தேசம் என்பது உலக நாடுகளுக்கு வியப்பைத் தந்தது.

தமது நாட்டின் தேவைகளுக்காக அவர்கள் உலக நாடுகளிடம் பிச்சை கேட்கவில்லை. தமது நாட்டின் அனைத்து தேவைகளையும் தமது மக்களின் மூலமே நிறைவாக்கிக் கொண்டார்கள். குறைந்த நிலப்பரப்புள்ள தமிழீழ அரசுக்கு சொந்தமான தரைப்படை, வான்படை, கடற்படை என முப்படைகளை அரணாக வைத்திருந்தார்கள். எதற்கும் அஞ்சாத துணிவு, தனது இன அடையாளத்தைக் காத்துக் கொள்வதற்கான நெறிமாறாத வீரம் இவர்களிடம் குவிந்து கிடந்தது.

அவர்கள் தமது இன மக்களை உயிரை விட மேலாக நேசித்தார்கள். தமது மொழியை அவர்கள் சிதைவு ஏற்படாமல் காத்தார்கள். மொழியால் ஒன்றுபட்ட தமிழ்நாட்டில் நாம் வாழ்ந்தாலும் கூட அந்த மக்களின் உன்னத போராட்டத்தை உடனின்று ஆதரிக்காத பெறும் தவறை செய்து விட்டதாக வரலாறு நம்மை பதிவு செய்து வைத்திருக்கும்.

இந்த களங்கம் துடைக்கப்பட எத்தனை காலங்கள் ஆகுமோ தெரியாது.

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக