வியாழன், 23 ஜூலை, 2009

இடைத்தேர்தல்: பங்கேற்பதா? புறக்கணிப்பதா?
- கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்று முடிவு



சென்னை, ஜூலை 21: தமிழகத்தில் நடைபெற உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பங்கேற்பதா அல்லது புறக்கணிப்பதா என்பது குறித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் புதன்கிழமை முடிவெடுக்கும் என தெரிகிறது.இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது."ஆளும் கட்சியினர் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மூலம் வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளனர். அவற்றை தடுத்து, நியாயமான தேர்தலை நடத்தும் சூழலில் தேர்தல் ஆணையம் இல்லை' என்றுக்கூறி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. திங்கள்கிழமை அறிவித்தது.அ.தி.மு.க.வைத் தொடர்ந்து ம.தி.மு.க.வும் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பை வெளியிட்டது. தேர்தலில் பங்கேற்க வேண்டாம் என பா.ம.க.வும் முடிவு செய்துள்ளது.கம்யூனிஸ்ட்டுகளின் நிலை என்ன? இந்த சூழலில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் என்ன முடிவை எடுக்கும் என்பது பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். சென்னையிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் என். வரதராஜன், தா. பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.இரு கட்சிகளும் மாநில செயற்குழுக் கூட்டங்களை தனித்தனியாக கூட்டி விவாதிப்பது எனவும், பின்னர் மீண்டும் இரு கட்சி தலைவர்களும் கூடி, கூட்டாக முடிவு எடுப்பது என்றும் செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.மாநில செயற்குழுக் கூட்டம்: இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுவும் புதன்கிழமை கூடுகிறது.இந்தக் கூட்டங்களுக்குப் பின், புதன்கிழமை மாலை இரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் சந்தித்துப் பேசுவார்கள் எனவும், அதன் பின் இடைத்தேர்தலில் பங்கேற்பது பற்றிய முடிவு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
கருத்துக்கள்

ஆளுங்கட்சிக்கு அடுத்த நிலையிலுள்ள எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதால் திமுக தேர்தல் பரப்புரைக்கு அந்தந்த தொகுதியைச் சேரந்த அமைச்சர்களைத் தவிர வேறு அமைச்சர்களையோ முதல்வரையோ துணை முதல்வரையோ அனுப்பக் கூடாது. வாக்காளர்கள் புறப் பாதிப்பு எதுவமின்றி நடுநிலையுடன் சிந்தித்து வாக்களிக்கும் களமாக இடைத்தேர்தல்களை மாற்ற வேண்டும். இவ்வாறான நல்ல சூழலை அமைக்க முன் வருமா?

- இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/23/2009 4:05:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக