ஞாயிறு, 19 மே, 2024
தோழர் தியாகு எழுதுகிறார் : நினைவுச்சுடர் வழிகாட்டும் ஒளிவிளக்கம்!
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 19 May 2024 அகரமுதல
(தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழம் – . . . . பகைத்தது இந்தியாவா? . . . . ஈழமா? – தொடர்ச்சி)
தமிழீழ மாவீரர் நினைவுச்சுடர்:
வருங்காலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கம்!
தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் தந்து, தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழுலகிலும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்து விட்ட பல்லாயிரம் மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்!
அயல் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் போராடித் தமிழீழ மாவீரர்கள் அடைந்த போர்க்கள வெற்றிகளின் அடித்தளம் சமூக விடுதலைக்கான போராட்டத்தில் அவர்கள் காட்டிய தெளிந்த உறுதியே ஆகும். ஆணாதிக்கமும், சாதியாதிக்கமும் கோலோச்சுகின்ற ஒரு சமூகம் அயலாதிக்கத்தை எதிர்த்து ஒன்றுபடத் தகுதியற்றது என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தார்கள்.
உயிராய்தம் ஏந்தித் தாய் நிலத்திலும் தாய்க் கடலிலும் தாய்க் காற்றிலும் போயடங்கி விட்ட கரும்புலிகள் எனும் அதிசய மாந்தர்கள் உட்பட நம் மாவீரர்கள் எந்த நாட்டிலும் எந்தக் காலத்திலும் விளையாத வியக்கத்தக்க வீரமும் ஈகமும் ஈழத் தமிழ் மண்ணில் விளைந்திடச் செந்நீர் பாய்ச்சினார்கள்.
மாவீரர் துயிலும் இல்லங்களையும் நினைவுச் சின்னங்களையும் சிதைத்து அழித்து விட்டதாகச் சிங்களப் பேரினவாதம் இறுமாந்திருக்கலாம். மாவீரர்கள் துயில் கொண்டுள்ள தமிழ் மண் தமிழ் மக்களுக்கே உரியது. அது அயலானுக்கு வணங்காமண்! ஆதிக்கத்துக்கு அடங்காப் பற்று!! ஒல்லாந்தரும் போர்த்துகேயரும் பிரித்தானியரும் சிங்களரும் பெருவிலை கொடுத்துக் கற்ற பாடத்தை இந்தியரும் கற்க விரும்பினர், கற்றுத் திரும்பினர்.
தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகின் முதல் விடுதலைப் போராட்டமன்று. நம் காலத்திலேயே நடந்து வெற்றிகண்ட சில போராட்டங்களைக் குறிப்பிடுவதானால், தென் ஆப்பிரிக்க மக்கள் இனவொதுக்கலுக்கு எதிராக நடத்திய நீண்ட போராட்டத்தையும், நமீபியாவிலும் சிம்பாப்வேயிலும் வெள்ளைக் குடியேற்ற ஆதிக்கத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களையும் குறிப்பிடலாம். வல்லரசியங்களின் விருப்பங்களையும் சூழ்ச்சிகளையும் மீறி ஒடுக்குண்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றி காண முடியும் என்பதற்கு இவை வரலாற்றுச் சான்றுகளாக நம் முன்னுள்ளன.
இன்றளவும் அயராமல் தொடரும் பாலத்தீன மக்களின் தாயக மீட்புப் போராட்டம் உலகைக் குலுக்கும் நிகழ்வாகி நம் தோழமையைக் கோரி நிற்கிறது. தமிழர்கள் தமக்கு நேர்ந்த இனவழிப்புப் பேரவலத்துக்கு ஈடுசெய் நீதி கோரிப் போராடும் போது உலகில் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று சோர்வடையத் தேவையில்லை. மாந்தரை மாந்தர் அடிமை கொள்ளும் கொடுமைக்கு எதிரான விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.
உரோமானிய ஆண்டைகளை எதிர்த்து வெள்ளை அடிமைகளைப் படைதிரட்டிப் போர்தொடுத்த இசுபார்ட்டகசைத் தூக்கிலிட்டுக் குதூகலித்த கோமான்கள் ஒழிந்து விட்டார்கள். இசுபார்ட்டகசு இன்றளவும் புரட்சிக்கும் விடுதலைக்கும் அடையாளச் சின்னமாக நம் உணர்வில் வாழ்கிறார்.
இசுபார்ட்டகசு மறைந்து சற்றொப்ப ஈராயிரம் ஆண்டு கழித்து பிரெஞ்சு ‘மாவீரன்’’ நெப்போலியனை எதிர்த்து ஐத்தியின் கருப்பு அடிமைகளைத் திரட்டிப் போர் புரிந்த (உ)டூசான் லூவர்சூர் (Toussaint L’Ouverture) புரட்சிக்கும் விடுதலைக்கும் மற்றுமோர் அடையாளச் சின்னமாவர்.
‘வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும்’ மாந்தரைப் போல் அல்லாமல், வாழ்வையும் சாவையும் மக்களுக்காகத் தன்னளிப்புச் செய்த நம் மாவீரர்கள் காலங்களும் வெளிகளும் கடந்து உலகின் ஒடுக்கப்பட்டோரது விடுதலை வேட்கையின் புனிதச் சின்னங்களாக மதிக்கப் பெறுவார்கள்.
வியத்துனாம், கியூபா, அல்சீரியா, தென் ஆப்பிரிக்கா என்று உலகெங்கும் கடந்த காலத்தில் வெற்றி கண்ட விடுதலைப் போராட்டங்கள் போலவே இன்றளவும் எண்ணிறந்த இடர்ப்பாடுகளுக்கு முகங்கொடுத்துத் தொடர்ந்து களங்கண்டு நிற்கும் பாலத்தீனம், குர்திசு, காசுமீரம் உள்ளிட்ட மூத்த விடுதலைப் போராட்டங்களின் தொடரியில் தமிழீழப் போராட்டத்தை ஒளிரும் கண்ணியாக்கிய பெருமை நம் மாவீரர்களைச் சாரும்.
ஒவ்வொரு தேசத்தின் விடுதலைப் போராட்டமும் தனக்கான அணிவகுப்பை உருவாக்கும் போது உள்நாட்டுச் சூழலை மட்டுமல்லாமல் பன்னாட்டுச் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். அனைத்துலகச் சூழலையும் வட்டாரச் சூழலையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கும். ஏதேனும் ஓர் வல்லரசை நத்தி நிற்கும் அழுத்தங்கள் எழும். இந்த அழுத்தங்களுக்குப் பணியாமல் அடிப்படையில் சொந்த மக்களைச் சார்ந்து விடுதலைப் பயணத்தை முன்னெடுத்தால் மட்டுமே விடுதலைக் குறிக்கோளைத் தொலைத்து விடாமல் தொடர இயலும்.
சப்பானை நத்தி நிற்கும் அழுத்தம் வியத்துநாம் விடுதலைப் போராட்டத்துக்கு எழுந்த போது தெளிவாக அதனை மறுதலித்தவர் ஓ- சி-மின். பாலத்தீன விடுதலைப் போராட்டத்தை அரபு அரசுகளின் புவிசார் அரசியலோடு பிணைக்கும் முயற்சிகளை எதிர்த்து உறுதி காத்தவர் யாசிர் அராபத்து. தமிழீழ விடுதலைப் போராட்ட நலன்களை இந்திய வல்லரசிய நலன்களுக்கு உட்படுத்த மறுத்து அதற்காக ஒரு பெரும் போரையே சந்தித்தவர் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களப் படையை எதிர்த்துக் கண்ட களங்கள் போலவே இந்திய வல்லரசிய அமளிப் படையை எதிர்த்துக் கண்ட களங்களும் மாவீரர்களின் புகழைப் பேசும். அவற்றிலிருந்து பெற்ற அரசியல் படிப்பினைகள் தமிழீழ விடுதலைக்காகத் தொடரும் போராட்டத்தின் பாதையெங்கும் ஒளியூட்டும்.
போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலக்கு மாறுவதில்லை என்று முள்ளிவாய்க்காலுக்கு முன்பே தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைநோக்குடன் சாற்றினார்கள். இன்று விடுதலைப் போராட்டம் நீதிக்கான போராட்டமாக வடிவெடுத்துள்ளது. மறப் போரில் வீரம் விளைத்த மாவீரர்களின் நினைவுகள் இன்று அறப் போரிலும் நமக்குத் துணையாகும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பன்னாட்டுலகச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் விடுதலைப் போராட்டங்கள் “சாத்தியமற்றவை” ஆகி விட்டதாக இன்றளவும் ஒருசிலர் கதைக்கக் கேட்கிறோம். அது வெறும் மாயைதான். ஒடுக்குமுறை இருக்கும் வரை அதற்கு எதிரான விடுதலைப் போராட்டமும் நடக்கத்தான் செய்யும் என்பதே வரலாற்று நெறி. உலக நிகழ்வுகள் இதற்கான புதிய சான்றுகளைக் காட்டிய வண்ணம் உள்ளன. பாலத்தீனத்துக்கு எதிராக இசுரேல் நடத்தி வரும் காசாப் போர் மிக அண்மைய சான்றாகும். பாலத்தீன விடுதலைக்காகவும் இனவழிப்புப் போரை உடனே நிறுத்துவதற்காகவும் புவிபரப்பெங்கும் முற்போக்கு ஆற்றல்கள் குரல் கொடுத்து வருகின்றன. தமிழீழ மாவீரர்களின் பெயரால் அந்தக் குரலில் நம் தமிழ்க் குரலும் இணைகிறது. இது வரை இணைந்திருபப்து போதாது என்றால், இன்னும் விரிவாகவும் முனைப்பாகவும் பாலத்தீனத்துக்கான நம் குரல் ஒலிக்க வகைசெய்ய வேண்டும் என மாவீரர்கள் பெயரால் அழைக்கிறேன்.
நம் மாவீரர்களின் மகத்தான தனிச் சிறப்புகளில் ஒன்று அவர்கள் தமிழின உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் களம் கண்டவர்களே தவிர ஒருபோதும் இனவாதிகள் அல்ல. சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக சிங்களக் குடியாட்சிய ஆற்றல்கள் முன்னெடுக்கும் போராட்டம் மண்ணுக்குள் உறங்கிடும் மாவீரர்களால் வாழ்த்தப்பெறும்.
வட்டுக் கோட்டைத் தீர்மானத்தின்படி விடுமையும் இறைமையும் கொண்ட தமிழீழக் குமுகியக் குடியரசு (FREE AND SOVEREIGN REPUBLIC OF SOCIALIST TAMIL EELAM) அமைக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டை நம் மாவீரர்கள் மக்கள் தமக்களித்த கட்டளையாகவே கொண்டார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. உலகில் பல விடுதலை இயக்கங்கள் மதவெறிச் சார்பின் பக்கம் இழுக்கப்படுவதற்கு மாறான உலகிய (SECULAR) நிலைப்பாட்டில் நம் மாவீரர்கள் ஊன்றி நின்றார்கள்.
உறுதியான போராட்டங்களுக்கு மாற்றாக உருப்படாத 13ஆம் திருத்தம் போன்ற உலுத்துப் போன சமரசத் திட்டங்களை அரசியல் மேசையில் உருட்டும் இந்திய-சிங்களச் சூதாட்டங்கள் குறித்து நாம் எச்சரிக்கையோடு இருப்பதையே மாவீரர்களின் பெயரால் வலியுறுத்த வேண்டியுள்ளது.
இருதுருவ உலகம் ஒருதுருவ உலகமாகி, பலதுருவ உலகமாகி வருவதாகப் பன்னாட்டு அரசறிவியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர். ஆளும் அரசுகளை மட்டுமே இவர்கள் கணக்கில் கொண்டுள்ளார்கள். உண்மையில் போராடும் தேசங்களே இறுதிநோக்கில் வரலாற்றுச் சக்கரங்களை உருட்டிச் செல்கின்றன. அரசுகளற்ற தேசங்கள் என்ற அணிவரிசையில் தமிழீழமும் புகழார்ந்த இடம்பெற மாவீரர்களின் வீரமும் ஈகமும் வழிசெய்தன என்பதை நெஞ்சில் நிறுத்தி அவர்களை வணங்குவோம்!
தோழர் தியாகு /தாழி 387 / 27.11.2023 /திருவள்ளுவராண்டு 2054, கார்த்திகை 11, திங்கள்
சனி, 18 மே, 2024
தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத்தைப் பகைத்தது இந்தியாவா? இந்தியாவைப் பகைத்தது ஈழமா?
(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்?-தொடர்ச்சி)
ஈழத்தைப் பகைத்தது இந்தியாவா?
இந்தியாவைப் பகைத்தது ஈழமா?
தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளாமல், இந்திய அரசை நத்தி ஏதாவது தீர்வு பெற்றுக் கொள்வது என்ற கோழைத்தனமான அணுகுமுறையைத் தமிழ் மக்களின் சார்பிலேயே சிலர் முன்மொழிந்து வரக் காண்கிறோம். அடிப்படையில் இந்திய வல்லரசுதான் ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டது என்ற உண்மையைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு தமிழீழ மக்கள் மீதும் புலிகள் மீதும் இவர்கள் சுற்றடியாகப் பழி போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இப்போதைக்கு ஈழத் தமிழர் நலனை விடவும் இந்திய வல்லரசின் நலன்தான் உயர்ந்தது என்ற கருத்தைத் தலைவர் பிரபாகரன் பெயரிலேயே செல்லுபடியாக்க இழிமுயற்சி செய்து வருகின்றனர். இவர்களின் பொய்மைகளைத் தோலுரிக்கவும், ஈழ தேசத்துக்கும் இந்திய வல்லரசுக்குமான உறவு எத்தகையது என்பதை விளக்கவும் தேவை இருப்பதாக நம்புகிறேன். தலைவர் பிரபாகரனின் மாவீரர் நாள் உரைகளையே எடுத்துக் காட்டி வரலாற்றுப் புரட்டர்களை மறுதலிக்க முடியும் என நம்புகிறேன். படியுங்கள்! புரிந்து கொண்டு உரையாடுங்கள்!
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஈழத் தேசமும் இந்திய வல்லரசும்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்று எழுந்துள்ள பல்வேறு சிக்கல்களுக்கும் மையமாக இருக்கும் ஒரு வினா: இந்திய அரசு குறித்தான நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
ஒருசில நண்பர்கள் அடிக்கடி சொல்லி வரும் கருத்துத் துளிகள் இவை: நாம் இந்தியாவையே நம்பியிருக்கிறோம். இந்தியாவின் தயவில்தான் ஈழம் அமைக்க முடியும். இந்தியாவைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பது மட்டுமன்று, இந்தியாவைக் குறை கூறவே கூடாது. இந்தியாவின் நிகழ் அணுகுமுறையை மட்டுமன்று, கடந்த கால நடைமுறையையும் கூட குற்றாய்வு செய்யக் கூடாது. இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்குத் தனித் தமிழீழமே ஏற்றது என்பதை இந்திய அரசுக்குப் புரிய வைக்க வேண்டும்.
இந்த இந்தியச் சார்புக் கொள்கையினர் தமிழீழ விடுதலைப் புலிகளையும் தேசியத் தலைவர் பிரபாகரனையும் போற்றக் கூடியவர்கள். அவர் பெயரால் தம் அணுகுமுறையை நியாயப்படுத்தவும் செய்கிறவர்கள்.
ஆனால் தலைவர் பிரபாகரனின் ஆழ்ந்த பார்வைகளுக்குச் சான்றாகத் திகழும் அவரது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த இந்தியச் சார்பு ஈழக் கொள்கையினர் வாதுரைப்பதில்லை. 1987 ஆகட்டு 4 சுதுமலைச் சாற்றுரை ஈழத் தேசத்துக்கும் இந்திய வல்லரசுக்குமான உறவு பற்றிய முகன்மையான ஆவணமாகும். அடுத்து, தலைவர் பிரபாகரன் 1989 முதல் 2008 வரை ஆற்றிய 20 மாவீரர் நாள் உரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. இன்னும் சில செவ்விகளும் உள்ளன. இவற்றைப் படித்துப் புரிந்து உள்வாங்கிக் கொள்வது இந்திய வல்லரசு குறித்தான ஈழத் தேசக் கொள்கையை வகுக்க உதவும்.
ஈண்டு நான் தலைவர் பிரபாகரனின் இறுதி மாவீரர் நாள் உரையை (2008 நவம்பர் 27) எடுத்துக்காட்டி அவரது அணுகுமுறையை விளங்கிக் கொள்ளவும் விளக்கிக் காட்டவும் முயல்கிறேன். இந்த உரையில் நம் கருத்தாய்வுக்குப் பொருத்தப்பாடுள்ள சில பகுதிகளைப் பார்ப்போம்.
“உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டு கொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.”
தமிழின அழிப்புப் போருக்கு முண்டு கொடுத்து நின்ற நாடுகளில் இந்தியாவும் ஒன்றல்லவா? அதிலும் முதன்மையான ஒன்றல்லவா? போரியல் வகையிலும், பொருளியல் வகையிலும் மட்டுமன்று. அரசியல் வகையிலும் அரசதந்திர வகையிலும் சிங்களத்தின் நேர் இன அழிப்புப் போருக்கு இந்திய வல்லரசு முண்டு கொடுத்து நின்றதும், இன்றளவும் கட்டமைப்பியல் இன அழிப்புக்கு முண்டு கொடுத்து நிற்பதும் இந்திய வல்லரசே என்ற உண்மையை மறுக்கவோ மறக்கவோ மறைக்கவோ எப்படிக் கூடும்?
இன அழிப்புக்கு ஈடுசெய் நீதி பெறுவதற்காகத் தமிழீழத் தேசம் பன்னாட்டு அரங்கில் எடுத்து வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று இந்திய அரசு தன் பாவத்துக்குக் கழுவாய் தேட முயன்றிருக்கலாம் அல்லவா? மாறாக, ஐநா மனிதவுரிமைப் பேரவை விவாதங்களிலும் தீர்மானங்களிலும் நேரடியாகவும் சுற்றடியாகவும் சிங்கள அரசைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வரக் காண்கிறோம்.
கடந்த காலத்திய, நிகழ்காலத்திய உண்மைகளை மூடி மறைப்பதுதான் அரசதந்திரம் என்று இந்திய சார்பு ஈழக் கொள்கையினர் நம்புவதாக இருக்கக் கூடும். ஆனால் இந்த அரசதந்திரத்தால் இது வரை என்ன பயன் விளைந்துள்ளது? என்று அவர்கள் விரல்விட்டுச் சொல்லட்டும். இந்தியா குட்டக் குட்ட நாம் குனிவதும், நாம் குனியக் குனிய அவர்கள் குட்டுவதும்தானே கண்ட பலன்?
இத்தனைக்குப் பிறகும் நம் அன்பர்களில் சிலர் “நாங்கள் இந்தியாவைத்தான் நம்பியிருக்கிறோம்” என்று திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பதில் பொருளில்லை. தந்தை செல்வா அவர்களோ, தலைவர் பிரபாகரன் அவர்களோ இந்தியாவை நம்பியோ பிற அயல் அரசுகளை நம்பியோ இந்த விடுதலைப் போராட்டத்தை நடத்தவில்லை. வேறு எதை நம்பித் தொடங்கி நடத்தினார்கள்? கேளுங்கள், தலைவரே உங்களுக்கு விடை சொல்வார்: “எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.”
கடந்த காலத்தில், குறிப்பாக 1983 கறுப்பு யூலைக்குப் பின் “இந்தியப் படையை ஈழத்துக்கு அனுப்பித் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று தமிழ்நாட்டில் ஒரு கோரிக்கை எழுந்ததுண்டு. திராவிட முன்னேற்றக் கழகம் இதற்காக ஒரு மறியல் போராட்டமே நடத்தியது. ஆனால் எவ்வித நெருக்கடியிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தக் கோரிக்கையை வழிமொழிந்ததில்லை.
“எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.”
தலைவர் பிரபாகரன் குறிப்பிடும் “வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகள்” யார்? சிங்களம் தவிர, தமிழீழத்தை ஆக்கிரமித்த எதிரி என்பது இந்தியாவே அல்லவா? ஈழத்தைப் பகைத்து இந்தியாவா? இந்தியாவைப் பகைத்தது ஈழமா?
“இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்தது.”
சமாதான முயற்சிகளுக்கு ஊறு விளைவித்த உலக நாடுகளில் இந்தியாவுக்கு முக்கிய இடமுண்டா? இல்லையா?
“எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.”
சிறிலங்கா தவிர ஈழ விடுதலை இயக்கத்தை ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சித்திரித்த முதல் நாடு இந்தியாதான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு முதன்முதலாகத் தடை விதித்ததும் இன்றளவும் தடையை நீடித்து வருவதும் இந்தியாதான்.
ஈழத் தமிழர்கள் மறக்கக் கூடாத ஒரு வரலாற்று உண்மை என்ன தெரியுமா? சிங்களம் தவிர, தமிழீழத்தின் மீது படையெடுத்த ஒரே அயல்நாடு இந்திய வல்லரசுதான்! தமிழ் மக்கள் இன்றளவும் ஒவ்வொரு ஒன்றுகூடல் நிகழ்வைத் தொடங்கும் போதும் அகவணக்கம் செலுத்துவது சிங்களப் படைகளாலும் இந்தியப் படைகளாலும் கொலையுண்ட தமிழர்களுக்கே அல்லவா? இந்த அகவணக்கத்திலிருந்து இந்தியப் படையால் கொலையுண்டவர்களை நீக்கினால்தான் இந்திய வல்லரசின் பரிவைப் பெற முடியும் என்று நினைப்பதே அம்மக்களின் நினைவைக் களங்கப்படுத்துவது அல்லவா?
எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.
“தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.”
இப்படியெல்லாம் இந்தியா செய்யவில்லை என்று நம் இந்தியச் சார்பு ஈழக் கொள்கையினரால் சொல்ல முடியுமா?
“மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக் கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும், இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.”
இந்தச் சில நாடுகளில் இந்தியாவும் முதன்மையான ஒன்றில்லையா?
ஈழப் போராட்டம் இந்திய நாட்டின் தேசிய நலன்களுக்கு எதிரானதா? இந்த வினாவிற்குத் தலைவர் பிரபாகரனின் விடை இதோ:
“உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.
“எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.”
இந்திய நாட்டுக்கு மட்டுமல்ல, வேறு எந்த நாட்டுக்கும் ஈழ விடுதலைப் போராட்டம் எதிரானதன்று. நீண்ட போராட்ட வரலாற்றில் எந்த நாட்டையும் நாம் பகைத்துக் கொண்டதில்லை. இந்தியாவை மட்டும் எதற்காகப் பகைத்துக் கொள்ளப் போகிறோம்? இந்தியா தன் வல்லரசிய நலன்களுக்கு ஈழப் போராட்டம் எதிரானது எனக் கருதினால் அதற்கு நாம் எப்படிப் பொறுப்பாவோம்?
“எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும், எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.
“இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்து விடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மைத் தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்து கொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.”
அன்று இந்தியாவுடன் நட்பை வளர்த்துக் கொள்ளவே தலைவர் விரும்பினார். இன்றும் ஈழ மக்களின் விருப்பம் அதுவே. ஆனால் அன்றும் இன்றும் தடை விதித்து நட்புக்குத் தடை போட்டுக் கொண்டிருப்பது இந்திய வல்லரசுதான் என்பது கண்கூடான உண்மையல்லவா?
“நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகைச் சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.”
இந்தியா சாதகமான நிலைப்பாட்டை எடுப்பதானால் அதற்கான முதல் நடைபடி, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதுதான். பதினைந்து ஆண்டுகள் கரைந்த பின்னும் தலைவர் பிரபாகரனின் சொற்கள் உண்மையாக ஒலிக்கின்றன. இந்தியாவைப் பகைச் சக்தியாக நாம் கருதவில்லை, கருத வேண்டிய தேவையும் இல்லை. இந்தியாவை நட்புச் சக்தியாகவே தமிழர்கள் கருதினார்கள், இன்றும் கருதுகின்றார்கள். ஆனால் இந்தியப் பேரரசின் அணுகுமுறைதான் ஈழ மக்களுக்கும் அவர்தம் போராட்டத்துக்கும் பகையாக உள்ளது.
கற்றுக்குட்டித்தனமான சில நாடகங்களை அரங்கேற்றுவதன் மூலம் இந்திய வல்லரசின் இந்த அணுகுமுறையை மாற்றி விட முடியாது என்பதை “இந்தியாவையே நம்பியிருக்கும்” நம் அன்பர்கள் விரைவில் உணர்ந்து கொண்டால் நன்று.
தோழர் தியாகு
தாழி மடல் 417
(தொடரும்)
திங்கள், 13 மே, 2024
புதன், 8 மே, 2024
தமிழ்க்காப்புக்கழகம் : 12.05.2024 காலை 10.00 : ஆளுமையர் உரை 93 & 94 ; என்னூலரங்கம்
தமிழே விழி! தமிழா விழி!
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள், 414)
தமிழ்க்காப்புக்கழகம் : இணைய அரங்கம்
நிகழ்வு: சித்திரை 29, 2055 — 12.05.2024 காலை 10.00
ஆளுமையர் உரை 93 & 94 ; என்னூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
“தமிழும் நானும்” – உரையாளர்கள்
காது மூக்கு தொண்டை மருத்துவர் மு.குமரேசன்
எழுத்தாளர் கலைச்செல்வி புலியூர் கேசிகன்
தொடர்ந்து என்னூல் திறனரங்கம் –
“படைப்பாளர் பார்வையில் பேராசிரியர் சி. இலக்குவனார்”
திறனாய்வறிஞர் கவிஞர் முனைவர் மெய்ஞானி
நிறைவுரை: பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை உரைச்சுடர் செல்வி ந. காருண்யா