வியாழன், 7 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : புதுவைக் குயில் தமிழ்ஒளி (1)

 




(தோழர் தியாகு எழுதுகிறார் : கலியுகமும் கிருதயுகமும்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

பாரதியார், பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! இவர்களை நீங்கள் அறியாதிருக்க முடியாது. ஆனால் இந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்க கவிஞர் தமிழ்ஒளியை உங்களில் பலரும் அறிந்திருக்க மாட்டீர்களோ? செ.து. சஞ்சீவி அவர்கள் அந்தப் பாவலரையும் அவர்தம் படைப்புகளையும் எனக்கு அறிமுகம் செய்வதற்கு முன் நானும் தமிழ்ஒளி குறித்து இருளில்தான் இருந்தேன். அவரைப் பற்றிப் புதுமலரில் எழுதும் படி அன்பர் குறிஞ்சி அழைத்த போது மீண்டும் ஒரு முறை தமிழ்ஒளியில் நனையும் வாய்ப்புப் பெற்றேன். இதோ தமிழ்ஒளி பற்றி உங்களை மேலும் அறியத் தூண்டும் ஓர் அறிமுகம் —

புதுவைக் குயில் தமிழ்ஒளி அறிவீரா?

இப்போதாவது அறிக!

இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன் முதலாக மே நாள் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் எனும் பெருந்தமிழர். மே நாளைப் போற்றித் தமிழிலே முதல் கவிதை இயற்றியவர் பெருங்கவிஞர் தமிழ்ஒளி!

கோழிக்கு முன்னெழுந்து கொத்தடிமைப் போலுழைத்துக்
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக!”

என்று மே நாளை வாழ்த்தி வரவேற்றார்.

மண்ணை இரும்பை மரத்தைப் பொருளாக்கி
விண்ணில் மழையிறக்கி மேதினிக்கு நீர்ப்பாய்ச்சி
வாழ்க்கைப் பயிரிட்டு வாழ்ந்த தொழிலாளி கையில்

விலங்கிட்டுக் காலமெலாம் கொள்ளையிட்ட
பொய்யர் குலம் நடுங்கப் பொங்கி வந்த மே தினமே!

தாழ்வைத் தகர்க்கத் தலைநிமிர்ந்த மேதினியில்
வாழ்வின் சமாதானம் வாய்ந்த நெடுந்திரையில்
சீவியமாய் நின்றதொரு சித்திரம் நீ; வானமரர்
காவியம் நீ; கற்பனை நீ; காணுமொரு காட்சியும் நீ!
தீரா இருளொழிந்து திக்கு விளங்க
இதோ வாராய் வளர்பொருளே
மே தினமே வாராய் நீ!”


“பொந்தில் உயிர்வாழ்ந்தார்;
போக்கற்றார்; இன்பமிலார்
கந்தல் மனிதரவர் கையில் அதிகாரம்
ஏற்றி வைத்த நின்பெருமை
என்னுயிர்க்கும் மேலன்றோ!
போற்றினேன் வையப் புரட்சியொடு நீ வருக!’


தமிழ் ஒளிக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல்” என்று தி க. சிவசங்கரன் அவர்களால் பாராட்டப் பெற்ற செ.து. சஞ்சீவி அவர்கள்தான் இதை எழுதும் எனக்குத் தமிழ் ஒளியின் பெயரையும் படைப்புகளையும் அறிமுகம் செய்தவர். தமிழ் ஒளி எழுதியவையும், அவரைப் பற்றி மற்றவர்கள் எழுதியவையுமான சில படைப்புகளின் வெளியீட்டு விழாவை செ.து. சஞ்சீவி சென்னை பெரியார் திடலில் நடத்திய போது என்னை அழைத்துத் தமிழ் ஒளியின் கவிதைகள் பற்றிப் பேசச் செய்தார். எப்போது என்று நினைவில்லை. 1990 வாக்கில் இருக்கக் கூடும். அதன் பிறகுதான் அவரிடம் ஆர்வம் கொண்டு படிக்கலானேன்.

பாரதி வழி வந்தவர், பாரதிதாசனின் மாணவர் என்றெல்லாம் அவர் பலவாறு அறியத் தரப்பெற்ற போதிலும் தூய பொதுமைப் பாவலராக விளங்கியதுதான் அவரது தனித் தன்மை என மதிக்கிறேன்.

விசயரங்கம் எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் தமிழ்ஒளி 1924 செட்டம்பர் 21ஆம் நாள் புதுவையில் பிறந்தார். சற்றொப்ப 41 ஆண்டு வாழ்ந்து 1965 மார்ச்சு 29ஆம் நாள் மறைந்தார். சற்றொப்ப 39 ஆண்டுகளே வாழ்ந்து மறைந்த பாரதியாரை விடவும், 72 ஆண்டுக்கு மேல் வாழ்ந்து மறைந்த பாரதிதாசனை விடவும் அரசியலில் தெளிவான முடிவுகளுக்கு வந்தவர் தமிழ் ஒளி என்பது என் துணிவு. யார் சிறந்த கவிஞர் என்பதன்று இந்த ஒப்பீடு. எல்லாவகையிலும் பாரதியார் மீது பாரதிதாசன் கொண்டிருந்த உயர் மதிப்பு சொல்லித் தெரிய வேண்டிய ஒன்றன்று. ஆனால் பாரதியார் அடிப்படையில் இந்தியத் தேசியப் பாவலராகவே விளங்கினார் எனபதும், பாரதிதாசன் தமிழ்த் தேசியத்தின் தலைப் பாவலர் என்பதும் மாற்றவொண்ணா வரலாற்று உண்மைகள். தமிழ்ஒளி தூயப் பொதுமைப் பாவலராக விளங்கினார் என்பது சொல்லால் மட்டுமன்று, செயலாலும் உறுதிப்படும்.

புதுவை முத்தியாலுப்பேட்டை நடுநிலைப் பள்ளியிலும் கலவைக் கல்லூரியிலும் படித்த தமிழ்ஒளி மாணவராய் இருந்த போதே பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டார். நாள்தோறும் குயில் தோப்புக்குச் சென்று பாரதிதாசனிடம் தாம் எழுதிய கவிதைகளைப் படித்துக் காட்டிப் பாராட்டும் பெற்றார். திராவிடர் கழக மாணவர் மாநாட்டில் கலந்துகொண்டு பாரதிதாசன் கொடுத்தனுப்பிய வாழ்த்துக் கவிதையைப் படித்ததுதான் அவரது பொது வாழ்வின் தொடக்கமாக இருக்க வேண்டும்.

பாரதிதாசனின் பரிந்துரையின் அடிப்படையில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார். திராவிடர் கழகத்தில் இருந்த போதே பொதுமைப் பாக்கள் புனையத் தொடங்கி விட்டார். மே நாள் வாழ்த்துப் பா குறித்துத் தொடக்கத்திலேயே பார்த்தோம்.

1949ஆம் ஆண்டில் ‘புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்‘ என்னும் கவிதை எழுதினார். நிலை பெற்ற சிலை, வீராயி, மே தின (உ)ரோசா ஆகிய மூன்று காவியங்கள் படித்தார்.

பொதுமை இயக்கம் இன்று வரைக்கும் கூட சாதியச் சிக்கலுக்கு உரிய முகன்மை தரவில்லை என்ற குற்றாய்வு உண்டு. வகுப்பு (வருக்கம்) அல்லாத குமுகக் கூறுகளை உரியவாறு அறிந்தேற்காத வகுப்புக் குறுக்கியத்தை (CLASS REDUCTIONISM) அப்போதே கடந்து நின்றார் தமிழ்ஒளி. வகுப்புச் சுரண்டலையும் சாதிய ஒடுக்குமுறையையும் இணைத்துச் சாடும் தெளிவு தமிழ்ஒளியின் எல்லாப் படைப்புகளிலும் காணக் கிடைக்கிறது.

தலித்து என்ற சொல் அப்போதே புழக்கத்துக்கு வந்து விட்டதா என்று தெரியவில்லை. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிக்க தலித்து என்ற சொல்லை ஆள்வதில் பிழையில்லை என்றால், தமிழ்ஒளியைத் தலித்து இலக்கிய முன்னோடி என்று குறிப்பிடலாம்.

தமிழ்ஒளியின் மூன்று காவியங்களும் தணிந்த(தலித்து) மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும், தணிந்த(தலித்து) மக்களின் விடுதலையையும் முன்னேற்றத்தையும் பேசுகின்றன. வீராயி என்னும் காவியத்தில் கதைத் தலைவி வீராயி ஒரு தணிந்த(தலித்துப்) பெண்.

ஐந்து தொகுதிகளாக வந்துள்ள தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் கதைமாந்தர்களில் பெரும்பாலார் தணிந்தோர்(தலித்துகள்), தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களே.

அக்காலத்தில் இடதுசாரி இயக்கப் படைப்புகளில் நேராகச் சாதியச் சிக்கல்களைப் பேசுவதில் தயக்கம் காணப்பட்டது. சாதியை வெறும் மேற்கட்டுமானம் என்றும், கிழாரியச் சுரண்டல் ஒழிந்தால் சாதிய ஒடுக்குமுறையும் ஒழிந்து போகும் என்றும் கருதுவதே பொதுமை இயக்கத்தின் பொதுவான பார்வையாக இருந்தது. போராட்டப் பட்டறிவுகள் இந்தப் பார்வையில் மாற்றம் கொண்டுவந்த நேர்வுகளும் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை.

அக்காலத்திலேயே தமிழ்ஒளி பாட்டாளியக் கண்ணோட்டத்தில் சாதிய எதிர்ப்பையும் தணிந்தோர்(தலித்து) விடுதலையையும் பாடினார்.

மாணவப் பருவத்தில் திராவிட நாடு, குடியரசு, புதுவாழ்வு ஆகிய திராவிட இதழ்களிலும் கவிதைகளை எழுதினார்.

தாமரை இலக்கிய இதழில் வனமலர் என்னும் தலைப்பில் சில உருவகக் கதைகள் எழுதினார்.

தமிழ் ஒளி, விஜய ரங்கம் விஜயன் சி.வி.ர என்பன அவருடைய புனைப்பெயர்கள் ஆகும். முன்னணி, புதுமை இலக்கியம், சாட்டை போன்ற இதழ்களில் பணியாற்றினார். சனயுகம் என்னும் திங்கள் இதழைத் தம் சொந்த முயற்சியில் நடத்தி மார்க்கியக் கருத்துகளைப் பரப்பினார்.

அகவை இருபது வரை புதுவையில் வாழ்ந்து பாரதிதாசன் இல்லத்திலேயே கிடையாய்க் கிடந்த தமிழ்ஒளி அக்காலத்தில் எழுதிய தம் கவிதைகள் அனைத்தையும் இரு தொகுதிகளாக்கி வெளியிடும் முயற்சியில் தோல்வி கண்ட பின் 1945இல் சென்னைக்குப் புறப்பட்டார்.

கவிஞர் தமிழ்ஒளி தோற்றத்தில் எளியவர் ஆயினும் தெளிவானவர், மனத்திட்பம் மிக்கவர்” என்பார் சஞ்சீவி. திடசித்தம் உடையவர். சென்னை வந்து ஈராண்டுக்குப் பின் கருப்புச் சட்டையைக் களைந்து பொதுமைக் கட்சியில் இணைந்தார்தடை செய்யப்பட்டுத் தலைமறைவான பிறகும் பொதுவுடைமைக் கட்சியில் முழுநேரப் பணியாளராகி முனைப்புடன் உழைத்தார்.

தமிழ்ஒளியின் பொதுமை இயக்கச் செயல்பாட்டின் காலம் 1947-54 என்பார் சஞ்சீவி. அவர் பொதுமை இயக்க அனுதாபியாகவோ ஆதரவாளராகவோ அல்ல, ஒரு பொதுவுடைமையாளராகவே வாழ்ந்தார், உழைத்தார். 1947இல் தமிழ் ஒளி படைத்த மூன்று குறுங்காப்பியங்கள் வெளிவந்தன. அவற்றில் இரண்டு நூல்களின் அட்டைகளிலும் ‘சுத்தி அரிவாள்’ சின்னம் இடம் பெற்றிருந்தது.

இவை தவிர அவர் படைத்த தனிக் கவிதைகளின் திரட்டாக, ‘நீ எந்தக் கட்சியில்?’-‘மே தினமே வருக!’ என்ற தலைப்புகளில் இரண்டு சிறு நூல்களும் வெளிவந்தன. மேற்கூறிய இரு காவியங்களும், இரு கவிதைத் திரட்டுகளும் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களுக்கு அவர் செலுத்திய காணிக்கை என்றே கூறலாம்.

தமிழ்ஒளியின் புரட்சியமான வகுப்புப் போராட்ட(வருக்கப் போராட்ட)க் கவிதைகள் உலகில் வகுப்புப் போராட்டம் உள்ளளவும் பொருந்தக் கூடியவை.

பாட்டாளியாகவும் தமிழனாகவும் இருப்பதில் தமிழ்ஒளியின் ஓர்மைக்கு எவ்விதச் சிக்கலும் முளைக்கவில்லை.

அவர் தான் யார் என்பதை ஓங்கிச் சொன்னார்:

தமிழனே நான் உலகின் சொந்தக்காரன்
தனிமுறையில் நான் உனக்குப் புதிய சொத்து!
அமிழ்தான கவிதைபல அளிக்க வந்தேன்!
அவ்வழியில் உனைத்திருத்த ஓடி வந்தேன்!”

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 319

புதன், 6 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : கலியுகமும் கிருதயுகமும்

 





(தோழர் தியாகு பகிர்கிறார் : சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க. – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

கலியுகமும் கிருதயுகமும்…

கலி முத்திப் போச்சு! இது கலி காலம்! இப்படியெல்லாம் மக்கள் பேசக் கேட்டிருப்பீர்கள். இந்துத் தொன்மவியலின் பார்வையில் உலகக் குமுகாயம் நான்கு வளர்ச்சிக் காலங்களின் வழிச் செல்கிறது. இவை நான்கு உகங்களாகக் குறிக்கப்படுகின்றன: கிருத யுகம் (சத்திய யுகம்), திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்!

இந்த நான்கு உகங்களின் கால அளவைப் பார்த்தாலே இது புராணிகக் கதை என்பது விளங்கும்.
1) கிருதயுகம் – 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள்;
2) திரேதாயுகம் – 12 லட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள்;
3) துவாபரயுகம் – 8 லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள்;
4) கலியுகம் – 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள்.
இப்போது நடப்பது கலி உகமாம்! கலிஉகம் முடிந்ததும் மீண்டும் கிருத உகம் தொடங்குமாம்! அடுத்து திரேதாஉகம், துவாபரஉகம், மீண்டும் கலிஉகம் என இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்குமாம்!


கலிஉகம் எப்போது தொடங்கியது? கண்ணன் (கிருட்டிண பரமாத்துமா) இறந்த நாளில் கலிஉகம் தொடங்கியதாகச் சிறிமண் மகாபாகவதம் (முதல் கந்தம்: அத்தியாயம் – 15, சுலோகம் – 36). இராமன் பிறந்த நாள், கிருட்டிணன் இறந்த நாள் இதெல்லாம் ‘அவாவா’ நம்பிக்கையைப் பொறுத்தது. இது பற்றிக் கேள்வி எழுப்பினால் அவாள் மத நம்பிக்கை புண்படும். ஆனால் இந்த நம்பிக்கையிலும் அவாளுக்குள் நிறைய வேறுபாடுகள் உண்டு.

கி.பி. (பொது ஊழி) 476ஆம் ஆண்டு பிறந்த வானியலர் ஆரியபட்டர் சொல்கிறார்… கி.மு. (பொ.ஊ.மு.) 3102 பிப்ரவரி 18ஆம் நாள் வெள்ளிக்கிழமை கலிஉகம் தோன்றியதாம்! வராகமிகிரர் என்னும் மற்றொரு வானியலர் சொல்கிறார்… கலிஉகம் கி.மு. (பொ.ஊ.மு.) 2449ஆம் ஆண்டில் தொடங்குகிறதாம்!

கலிஉகம் 4,32,000 ஆண்டுகள் என்ற கணக்கையே மறுக்கிறார் சிறியுக்குதேசுவர்: கலிஉகம் 2,400 ஆண்டுகள்தானாம்! 1,200 ஆண்டு இறங்குமுகம், 1,200 ஆண்டு ஏறுமுகமாம்! இப்போது நடப்பது துவாபர உகமாம்!
கலிஉகத்தில் என்னவெல்லாம் நடக்குமாம்?
அரசர்களின் செங்கோல் தாழுமாம்! கொடுங்கோல் ஏற்றம்.பெறுமாம்! வரிகள் உயருமாம். அரசுகள் இறை நம்பிக்கையையும் இறை வழிபாடுகளையும் பாதுகாக்க மாட்டார்களாம்! அரசே மக்களை வாட்டி வதைக்குமாம்! மக்கள் உணவின்றித் தவிப்பார்களாம்!

(ஏதோ கொஞ்சம் நம்ம மோதிசிக்குப் பொருந்துவது போலவும் உள்ளது! பொருந்தாதது போலவும் உள்ளது அல்லவா?)

கலிகாலத்தில் மக்கள் எப்படி இருப்பார்களாம்? பொறாமை கூடுதலாகுமாம்! ஒருவருக்கொருவர் வெறுப்பு வளருமாம். குற்றவுணர்ச்சியே இல்லாமல் கொலைகள் நடக்குமாம்! காம வெறியும் பாலின ஒழுக்க கேடும் சமூகத்தில் தலையெடுக்குமாம்!

ஆசிரியர்களுக்கு மதிப்பு கிடைக்காதாம்! அவர்களுக்கு மாணவர்களால் ஆபத்து வருமாம்! அப்படித்தான் சில காரியங்கள் நடக்கின்றன!

திருமணம் அவரவர் விருப்பபடி நடக்குமாம்! பெரியவர் இசைவின் பேரில் அல்லவாம்! நல்லது, நடக்கட்டும்!

கலிஉகத்தின் முடிவில் கல்கி அவதாரம் நிகழுமாம். வெள்ளை குதிரையில் வந்து கலிஉக நிகழ்வுகளுக்குக் காரணமான “கலி”யுடன் போரிட்டுத் தீயசக்திகளை அழிப்பாராம். அதன் முடிவில் உண்மை வெல்கின்ற சத்திய உகம் (கிருத உகம்) பிறக்குமாம்.

இந்துத் தொன்மவியலின் கருத்துருக்களைக் காலத்துக்கேற்ப மீட்டெடுத்து அவற்றுக்குப் புது உள்ளடக்கம் தந்து தமது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர் பாவலர் பாரதியார்.
கலியுகம், கிருதயுகம் ஆகிய தொனமங்களை முறையே பழமைக்கும் புதுமைக்குமான குறியீடுகளாக அவர் ஆளும் அழகையும் அதனால் விளையும் தெளிவையும் அடுத்த மடலில் பார்க்கலாம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 317

செவ்வாய், 5 டிசம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் : சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க….

 




 (தோழர் தியாகு பகிர்கிறார் : ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க…

“வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!
தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!

இது பாரதியார் எழுதிய தமிழ்மொழி வாழ்த்து என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதன் ஆழமான உட்பொருளை எண்ணிப் பார்த்தீர்களா? தமிழ்மொழியை வாழ்த்திப் பலரும் பலவாறு பாடியுள்ளனர். ஆனால் இந்தப் பாட்டு வெறும் வாழ்த்துப் பாடலாக மட்டும் நின்று விடவில்லை.
பாரதியார் தமிழ்மொழியின் அழகைப் போற்றுவதோடு அதன் பயனையும் எடுத்துரைக்கிறார். “பண்பும் பயனும்” என்பாரே திருவள்ளுவர், அத்தகைய பார்வை இது.
தமிழ் வாழ்க! என்றென்றும் வாழ்க! வானத்தின் கீழ் கிடக்கிற அனைத்தையும் அறிந்துரைக்கும் வளமார் தமிழ் மொழி வாழ்க! அண்டம் முழுவதிலும் அசைந்தாடும் பொருட்களும் நிகழ்வுகளுமான பொருண்மையை நமக்கு அறியத் தருவது தமிழ்மொழி! வானம் அளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி என்றால் அளந்து முடித்து விட்டதா? அளந்து கொண்டிருக்கிறதா? அளக்கப் போகிறதா? எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம். வளர் மொழி என்பதும் அதே போலத்தான்! வளர்ந்த மொழி, வளரும் மொழி, வளர வேண்டிய மொழி! உயிரோட்டமான மொழி என்பது இப்படித்தான் இருக்க வேண்டும்.
பாரதியின் இந்த வாழ்த்துப் பாடலில் என்னைப் பெரிதும் ஈர்த்த பொருட்செறிவு மிக்க வரி இதுதான்: சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே! சூழ்கலி என்றால் என்ன? தமிழ்மொழி ஓங்கினால் வையகம் எப்படித் துலங்கும்? ஒரு மொழி வாழ்வதற்கும் உலகம் துலங்குவதற்கும் என்ன தொடர்பு? இந்த வினாக்களுக்கு விடை தேடும் முயற்சியாக –
நாளை (19.09.2023) செவ்வாய் பிற்பகல் பூவிருந்தவல்லியில் திரு இருதயக் குருத்துவக் கல்லூரியின் தமிழ்க் கழகத்தில் “சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க” என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 317

திங்கள், 4 டிசம்பர், 2023

தோழர் தியாகு பகிர்கிறார் : ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு

 




(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 4/4-தொடர்ச்சி)

ஐயா வைகுண்டர் வழியில் சனாதன எதிர்ப்பு 

– குருநாதன் சிவராமன்

சனாதனம் தொடர்பாக அமைச்சர் உதயநிதி அவர்கள் பற்றவைத்த நெருப்பு சனாதனிகளைச் சுட்டெரிக்கிறது. ஆளாளுக்கு ஒவ்வொரு விளக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

“சனாதனத்தில் மட்டும்தான் மனிதன் கடவுள் ஆக முடியும். சிறந்த உதாரணம் ஐயா வைகுண்டர் அவர்கள். அவர் மனிதனாக பிறந்தார். ஆனால் கடவுளாக வணங்குகின்றோம்” என்று பேசியிருக்கிறார் அண்ணாமலை. இந்தப் பேச்சு வழக்கம்போல அவரின் அரை வேக்காட்டுத்தனத்தைக் காட்டுகிறது.

ஐயா வைகுண்டரைக் கடவுளாக வணங்கும் மக்கள் தற்காலத்தில் பலர் உள்ளார்கள், குறிப்பாகத் தென் மாவட்டங்களில். அது தனிநபர் விருப்பம் என்பதால் அதை விமர்சிக்க முடியாது. ஆனால் ஐயா வைகுண்டர் ஒரு சனாதனி எனச் சொல்லும் வரலாற்றுத் திரிபை அம்பலப்படுத்தி உண்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை.

ஐயா வைகுண்டரின் சிந்தாந்தம் “நீ தேடும் இறைவன் உனக்குள்ளேயே இருக்கின்றான்” என்பதுதான். அதனால்தான் உருவ வழிபாட்டை ஐயா வழி நிராகரிக்கிறது. ஐயா பதிகளில் (கோவில் அல்ல) உள்ளே ஒரு கண்ணாடி மட்டுமே இருக்கும். இது எப்படிச் சனாதனம் ஆகும்?

1800களில் திருவிதாங்கூர் சமத்தானத்தில் பெண்களுக்கு மார்பு சேலை அணிதல், இடுப்பில் குடம் எடுத்தல், பொன்நகைகள் அணிதல் ஆகியன தடை செய்யப்பட்டிருந்தது. ஆண்கள் தலைப்பாகை கட்டுதல், மீசை வளர்த்தல், வளைந்த கைப்பிடி கொண்ட குடையைப் பயன்படுத்தல் தடை செய்யப்பட்டிருந்தது.
தங்கள் குழந்தைகளுக்கு இந்துக்கடவுளரின் பெயரை சூட்டுவது தடுக்கப்பட்டன. 
ஐயா வைகுண்டரின் பெற்றோர்கள் அவருக்குத் தாங்கள் விரும்பிய ‘முடிசூடும் பெருமாள்’ என்ற பெயரைச் சூட்ட முடியாமல் ‘முத்துக்குட்டி’ என்ற பெயரையே தேர்ந்தெடுக்க நேர்ந்தது.

சாதிக் கொடுமைகளிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்களை மீட்க ‘அய்யா வழி’ என்னும் தனி சமயத்தைத் தோற்றுவித்தார் ஐயா வைகுண்டர். அவர் சனாதனத்தை ஏற்றுக் கொண்டிருந்தாலோ, சனாதனம் அவரை ஏற்றுக் கொண்டிருந்தாலோ ஏன் ஒரு தனிச் சமயத்தைத் தோற்றுவிக்கப் போகிறார்?

இடுப்பில் கூட துண்டு அணிய முடியாத நிலை இருந்தது. ஐயாவழியில் துண்டைத் தலைப்பாகையாய் அணியச் சொன்னார் ஐயா வைகுண்டர். இன்றும் ஐயா வழியில் தலைப்பாகை அணியும் வழக்கத்தின் பின்னணி இதுதான்.

ஐயா வழியில் அனைத்து மக்களும் பதியின் உள்ளே வரை செல்ல முடியும். சாதி வேறுபாடு, பாலியல் வேறுபாடு, பொருளாதார வேறுபாடு என எந்த வேறுபாட்டுக்கும் ஐயா வழியில் இடமில்லை. அனைத்து மக்களும் சரிசமமாக அமர்ந்து அன்னம் உண்ணும் பழக்கம் இன்றும் அனைத்து அய்யா வழி பதிகளிலும் இருக்கிறது.

ஐயா வழியினரின் பதிகளிலும், தாங்கல்களிலும் ஆணும், பெண்ணும் சமம். இருபாலருக்கும் பதியினுள் சென்று வணக்கம் செலுத்தல், ஏடுவாசித்தல் என எதற்கும் தடையில்லை. ஏராளமான தாங்கல்கள் பெண்களாலே நடத்தப்படுகின்றன. இதனை சனாதனம் ஏற்றுக் கொள்கிறதா?

ஐயா வழியின் வழிபாட்டு முறைகள் அனைத்தும் எளிய தமிழில் இருக்கின்றன. சமற்கிருத மந்திரங்களுக்கு எந்த இடமுமில்லை. இதனைச் சனாதனம் ஏற்றுக் கொள்ளுமா?

தாழக் கிடப்பாரை தற்காப்பதே தருமம்” என்றார் ஐயா வைகுண்டர் என்னும் போராளி.
காணிக்கையிடாதீங்கோ,
காவடிதூக்காதீங்கோ,
வீணுக்கு தேடுமுதல் விறுதாவில் போடாதீங்கோ
‘ என்று அகிலத்திரட்டு நூலில் இருக்கிறது.

பேய், பிசாசு, மாந்திரீகம் ஆகிய மூடப் பழக்கங்களைக் கடுமையாகச் சாடினார் ஐயா வைகுண்டர்.

பொய்யில்லை பிசாசுயில்லை

பில்லியின் வினைகளில்லை

நொய்யில்லை நோவுமில்லை

நொன்பலத் துன்பமுமில்லை” என்கிறார் அய்யா வைகுண்டர்.

சாதியை உருவாக்கியவர்களை ‘கலிநீசன்‘ என கடுமையாகச் சாடுகிறார் ஐயா.

“அறிந்து பலசாதி முதல் அன்பொன்றுக்குக் குள்ளானால்

பிரிந்து மிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார்“

“தான மானங்களும் அதைப் பெற்றவர்க்குக்

கிட்டிக் கொள்ளும் பேதமில்லை மகனே“

(தான தருமம் தவம் முதலானவற்றின் பலன்கள் அவற்றை மேற்கொண்டவர்களுக்குத் தவறாமல் கிடைக்கும். இதில் உயர்சாதி, தாழ்ந்த சாதி என்ற பேதங்களுக்கு இடமில்லை மகனே)

“அவனவன் தேடுமுதல் அவனவன் வைத்து ஆண்டிடுங்கோ,

எவனுக்கும் பதறி இனி மலைய வேண்டாம்“

ஒவ்வொருவரும் அவரவர் சம்பாதிக்கும் பொருளை அவரவரே தம் குடும்பத்தாருடன் அனுபவியுங்கள். எவனுக்கும் பதறி தேடிய பொருளை அவனிடம் கொடுத்து ஏமாந்து போக வேண்டாம்)

ஏடுதந்தேன் உன்கையில் எழுத்தாணியும் கூடத் தந்தேன்

பட்டங்களும் பட்டயமும் தந்து பகை தீர்ந்தேன் என் மகனே

(ஏழைச் சாதிகளுக்குக் கல்வியும், ஞான நூல்களும் தேவையற்றவை என்று நீசர்கள் வகுத்த நெறியை மாற்றும் வகையில், நீயும் அறிவைப் பெறும் படியாக உன் கையிலும் ஏட்டையும் எழுத்தாணியையும் தருவதோடு பலவிதப் பட்டங்களும் விருதுகளும் தந்து என் பலநாள் பகையைத் தீர்த்துக் கொள்வேன் மகனே)

இவ்வாறு அகிலத்திரட்டு முழுக்க ஆதிக்க எதிர்ப்பு ஓங்கி இருக்கிறது. சனாதனம் எந்த இடத்தில் இவ்வாறு கூறுகிறது?

மக்களைப் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நால்வகையாகக் கூறுபோடும் வருணாசிரமக் கட்டமைப்பை ஐயா வழியோடு ஒப்பிடுவதே தவறு.

சனாதனத்திற்கு எதிராகக் கலகம் செய்த புத்தர், நாராயண குரு, வள்ளலார், ஐயா வைகுண்டர் என எல்லாருக்கும் காவிச் சாயம் கொடுக்கப் பார்க்கிறது பாசக. உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கே மதச் சாயம் பூசும் கும்பல் ஆச்சே இது!

– குருநாதன் சிவராமன்

தாழி மடல் 306

(தொடரும்)
தோழர் தியாகு

ஞாயிறு, 3 டிசம்பர், 2023

திருச்சி அறிவாளர் பேரவை, முப்பெரும் விழா, சீர்மிகு சான்றோர் பெருந்தகை விருது வழங்கல்

 




திருச்சி அறிவாளர் பேரவை
முப்பெரும் விழா

பேரவையின் 24 ஆவது ஆண்டு விழா
நிறுவுநர் பிறந்த நாள் விழா
சான்றோர் பெருந்தகை விருது விழா

கார்த்திகை 24, 2054 ஞாயிறு 10.12.2023 காலை 10.00

சிறப்பு விருந்தினர் மாண்புமிகு ந.நல்லுசாமி
மேனாள் அமைச்சர், தமிழ்நாடு அரசு

வாழ்த்துரை தமிழ்த்திரு மு.சிதம்பரபாரதி

முன்னிலை
தொழிலதிபர் பி.கே.தியாகராசன்
தொழிலதிபர் வாழையிலை மனோகரன்
துவரங்குறிச்சி ந.பாலசுப்பிரமணியன்
நாயகன் ஆ.மோகன்

ஆட்சித்தமிழறிஞர்
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களுக்கு

நிறுவுநர் கோ.அரங்கநாதன் அவர்களின் நினைவாக,

சீர்மிகு சான்றோர் பெருந்தகை
விருது வழங்கிச் சிறப்பிக்கிறோம்.

தாங்கள் நண்பர்களுடனும் குடும்பத்தோடும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பேராசிரியர் முனைவர் செ.அசோகன்
மேனாள் தலைவர்- முதன்மை ஆலோசகர்
கல்வியாளர் சு.வரதராசன்
தலைவர் (பொ)
அரங்க திருமாவளவன்
பொதுச் செயலாளர்
முனைவர் என்.நல்லசேகர்
பொருளாளர்

மதிய விருந்து 1.00 மணி யளவில்
அனைவரும் உண்டு மகிழ்விக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு : புதிய கால வரையறைகள்

 





ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு  :

புதிய கால வரையறைகள்

மதிப்பிற்குரிய தமிழறிஞருக்கு,

வணக்கம். சிகாகோவில் நடைபெறவுள்ள ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாட்டில் பங்கேற்கத் தயாராகி வருகிறீர்கள் என்பதை அறிவோம். கடந்த சில நாட்களாக கட்டுரைச் சுருக்கம் அனுப்பவதற்கான கால வரையறையை நீடிக்கப் பலர் தொடர்பு கொண்டிருந்தனர். ஆய்வுக்குழுவும் அனைவரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டது. அதன்படி திருத்தி அமைக்கப்பட்ட புதிய கால வரையறைகள் பின்வருமாறு:

ஆய்வுச் சுருக்கம் வந்தடைய வேண்டிய நாள்:

15, திசம்பர்.2023 (சிகாகோ நேரம்)

முழு ஆய்வுக் கட்டுரை வந்தடைய வேண்டிய நாள்:

31, சனவரி, 2024.

மாநாட்டில் படைக்கப்படுகின்ற கட்டுரை முடிவுகள் அறிவிக்கப்படும் நாள்: 29.பிப்பிரவரி, 2024.

ஆய்வுக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி :

academic-committee@thirukkuralconference.org

இம்மாநாட்டில் பங்கேற்க ஆர்வத்துடன் ஆய்வுச் சுருக்கத்தை அனுப்பிய அறிஞர்களுக்கு நன்றி.

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாட்டினைப் பற்றிய செய்திகளை https://thirukkuralconference.org என்ற மாநாட்டின் இணையதளத்தில் காணவும். ஆய்வுக் கட்டுரைகள் தொடர்பான வினாக்கள் மற்றும் கருத்துகளை contact@thirukkuralconference.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

நன்றி.

ஆய்வுக்குழு,

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு,

சிகாகோ

பின் குறிப்பு :  திருக்குறள் தொடர்பான புதிய நூல் வெளியீட்டிற்கும் பழைய நூல் அறிமுகத்திற்கும்  பதிவு நாளைக் கார்த்திகை 29, 2054 / 15.12.2023 வரை நீட்டித்துள்ளோம். நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 4/4

 

   03 December 2023      அகரமுதல



(தோழர் தியாகு பகிர்கிறார் : உதிரும் தமிழ் மலர்கள் 3/4 – குலோத்துங்கன்-தொடர்ச்சி)

உதிரும் தமிழ் மலர்கள் 4/4

இந்திய நாட்டின் தட்பவெப்பநிலைகளைப் பொறுத்த வரையில் 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த ஓலைச் சுவடிகளால் வாழ முடியாது என்பதையும், 300 ஆண்டுகளுக்குள் இவை படி எடுக்கப்படவில்லையென்றால் அடியோடு அழிந்து விடும் என்பதையும், இவ்வாறே எங்கள் தமிழ்ச் சமுதாயம் அச்சு இயந்திரம் வருவதற்கு முன்னரே ஏராளமான தமிழ் ஓலைச் சுவடிகளை இழந்துவிட்டது என்பதையும் குறிப்பிட்டேன். அச்சு இயந்திரம் வந்த பின்பும் 53,000 ஓலைச் சுவடிகள் பாதுகாப்பார் இன்றி அழியும் நிலையில் உள்ளன. 300 ஆண்டுகளுக்கு மேல் வாழ முடியாத இச்சுவடிகளில் பெரும்பாலான சுவடிகள் 200 அல்லது 250 ஆண்டுகளை ஏற்கெனவே கடந்து விட்டன. இவற்றை விரைவில் காப்பாற்ற வேண்டும். இவற்றை அழியவிடுவது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே அவமானம் என்றும் நான் குறிப்பிட்டேன்.

இத்துறையில் ஆசியவில் ஆய்வு நிறுவனம் மேற்கொண்டு வரும் பணிகள் பற்றி நான் விரிவாக விளக்கியது பன்னாட்டு அறிஞர்களை மிகவும் கவர்ந்தது. எனது உரையினை அன்று நிகழ்த்தப்பட்ட உரைகளுள் மிகச் சிறப்பு வாய்ந்த உரையாக அனைவரும் பாராட்டினர். ஆபத்துக்கிடமான உலக ஆவணங்களின் வரிசையில் 53,000 தமிழ் ஓலைச் சுவடிளும், இணைக்கப்பட வேண்டுமென்று வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. இந்தக் குழுவின் கூட்டம் ஒருங்கே பிரெஞ்ச் மொழியிலும் ஆங்கிலத்திலும் நடந்தது.

கூட்டத்தின் இறுதிப் பகுதி பெரும்பாலும் பிரெஞ்சு மொழியில் நடத்தப்பட்டது. “இந்திய நாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாட்டில் 53,000-த்திற்கும் மேற்பட்ட தமிழ் ஓலைச் சுவடிகள் பாதுகாப்பார் இன்றி அழிந்து கொண்டிருக்கின்றன. இவை பற்றிய போதுமான தகவல்கள் பன்னாட்டு அறிஞர்களைக், குறிப்பாக ஐரோப்பிய சமுதாயத்தை வந்து எட்டவில்லை. இந்த ஓலைச் சுவடிகள் மனித குலத்தின் அறிவு வளர்ச்சியில் மிகக் குறிப்பிடத் தகுந்த இடத்தைப் பெறுகின்றன என்று இந்திய நாட்டின் சார்பாளர் மிகச் சிறப்பாக விளக்கினார். அவற்றைப் பாதுகாக்கும் முயற்சியை யுனெசுகோ நிறுவனம் மேற்கொள்ள வேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகிறது.” என்று பிரெஞ்சு மொழியில் பன்னாட்டு வல்லுநர் குழுவின் பரிந்துரை படிக்கப்பட்ட போது கரை காணாத மகிழ்ச்சியில் என் உள்ளம் துள்ளிக் குதித்தது. வார்சாவில் பன்னாட்டு அறிஞர்களின் பரிந்துரையைப் பெற்று, ஐக்கிய நாடுகளின் அமைப்பான யுனெசுகோ நிறுவனத்தின் வாயிலாகச் செயல்பட இருப்பதை எண்ண எண்ண நெஞ்சில் பெருமிதம் ஏற்பட்டது.

அன்றிரவு போலந்து நாட்டு மரபுப்படி ஒரு பெரிய விருந்துக்கு யுனெசுகோ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குளிரால் நடுங்கும் போலந்து நாட்டின் இயற்கை எழில்மிக்க அரண்மைனையின் பக்கத்தில் அமைதியாகப் பனியைப் போர்த்துக் கொண்டு அசைந்தாடிச் செல்லும் ஆற்றின் கரையில் பன்னாட்டு அறிஞர்களுக்கு இரவில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைதியான சூழலில் எங்கள் ஆய்வுப் பயணத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த விருந்து நடைபெற்றது. உலகின் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் முழு வெற்றி பெற்று விட்டது போன்ற மகிழ்ச்சியில் பன்னாட்டு அறிஞர்கள் ஒருவரோடு ஒருவர் கை குலுக்கிக் கொண்டனர்.

“அன்றிரவு ஆசியவில் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வுப் பணிகளைப் பற்றி நானும், டாக்டர் சீ ஃகிகோசகாவும், சப்பானியச்சார்பாளர் முனைவர் அகியோபாசுவும், சில ஐரோப்பிய நாட்டு அறிஞர்களும் இணைந்து விரிவாகக் கலந்துரையாடினோம். அடுத்த நாள் காலை வார்சாவில் உள்ள தலைமை ஆவணக் காப்பகத்தைப் பார்வையிட்டு விட்டு மறு நாள் இலண்டன் செல்வதாகத் திட்டமிட்டோம்” என்று திரு சி. சான் சாமுவேல் அவர்கள் முப்பது வருடங்களுக்கு முன்னர் போலந்து நாட்டின் தலைநகரம் வார்சா நகரத்தில் நடைபெற்ற யுனெசுகோ கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை (1994இல் வெளியான) அவரது நூல்களில் வெளிப்படுத்தினார்.

தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை உலகம் தழுவிய நிலையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்ற இக்காலத்தில் பழந்தமிழ்ச் சுவடிகள் தாங்கி வந்துள்ள அறிவுக் கருவூலங்களையெல்லாம் உலகுக்குக் கொண்டு காட்டுவது தமிழரின் கடமையாகும்..

ஆங்காங்கே அழிந்து கொண்டிருக்கும் தமிழ் ஓலைச் சுவடிகளில் ஏறத்தாழ 40,000க்கும் மேற்பட்ட சுவடிகள் மருத்துவம், போன்ற தொன்மையான அறிவியல் துறைகளைச் சார்ந்தனவாக உள்ளன. ”தமிழ் ஓலைச் சுவடிகள் காட்டும் மரபு அறிவியல்” என்ற தலைப்பில் ஆசியவியல் ஆய்வு நிறுவனம் ஒரு பெரிய ஆய்வுத் திட்டத்தைத் தீட்டிச் செயல்படுத்தி வருகின்றது.

மேலைநாட்டு அறிவியல் சிந்தனைகள் இங்கு வந்து சேரும் முன் நமது அறிவியல் சார்ந்த முயற்சிகளின் நிலை என்ன என்பதையும், அவை மேலைநாட்டு ஆதிக்கத்தால் எவ்வாறு அழிந்தன என்பதையும் ஆய்ந்து காணும் இந்நிறுவனத்தின் முயற்சியால் தோன்றியதே மேற்கூறிய ஆய்வுத் திட்டம்.

மேற்கின் தொடர்பு நமக்கு ஏற்படுவதற்கு முன்னர் நமது நாடு மருத்துவம், கட்டடக் கலை போன்ற பல்வேறு அறிவியல் சார்ந்த துறைகளில் மிக உயர்ந்த நிலையைப் பெற்றிருந்ததை யாராவது மறுக்க முடியுமா?

மருத்துவக் கலையிலும், பிற கலைகளிலும் நாம் பெற்றிருந்த திறமைகள் உலகத்தையே வியக்க வைக்கின்றனவே. நமது தொன்மையான அறிவியல் சிந்தனைகளைத் தாங்கி நிற்கும் இந்தப் பழந்தமிழ் ஓலைச் சுவடிகளைப் படியெடுத்து அவற்றின் கருத்துகளை ஆய்வது கல்வி வளர்ச்சிக்கு மிகவும் தேவை. இந்தத் திட்டத்தைப் பன்னாட்டு நிலையில் பல்வேறு நாட்டு அறிஞர்களின் துணையோடு இந்நிறுவனம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.

மரபு அறிவியல் சார்ந்த தமிழ் ஓலைச் சுவடிகள் பல்வேறு தலைப்புகளில் கிடைக்கின்றன.

  1. சித்தவைத்தியம், ஆயுர்வேதம், யுனானி முறையிலமைந்த மருத்துவச் சுவடிகள்.
  2. வருமம், போன்ற போர்க்கலையும், மருத்துவம் பற்றிய சிந்தனைகளும் இணைந்த சுவடிகள்.
  3. விலங்குகள் வைத்தியம் அல்லது வாகடம் தொடர்பான சுவடிகள்.
  4. பயிர்த்தொழில் சார்ந்த கூவநூல், சரநூல் போன்ற சுவடிகள்.
  5. கட்டடக் கலை, கப்பல் கட்டுதல், கோயில்கள் அமைத்தல், சிற்ப வேலைப்பாடு, உலோகத்தை மையமாகக் கொண்ட கலைகள், ஓவியம் போன்றன தொடர்பான சுவடிகள்.
  6. இசை நூல்கள், இசைக் கருவிகள் செய்யும் முறை ஆகியன பற்றிய சுவடிகள்..
  7. கணிதம், வானநூல் தொடர்பான சுவடிகள்.
  8. ஓகம் தொடர்பான சுவடிகள்.
  9. விலங்குகளைப் பழக்குதல் போன்றன தொடர்பான சுவடிகள்.
  10. போர்க்கலை சார்ந்த சுவடிகள்.
  11. உடற்கூறு அல்லது அங்கசாத்திரம் (சாமுத்திரிகா இலட்சணம்) தொடர்பான சுவடிகள் போன்றன.

மேற்குறிப்பிட்ட மரபு அறிவியல் சார்ந்த தமிழ் ஓலைச் சுவடிகள் ஆய்வும், நூல்களாக வெளியிடுவதும் இன்றைய மனித அறிவு வளத்திற்கு மிகவும் தேவை. இந்த ஓலைச் சுவடிகளை அழிய விடுவது மனித குலத்திற்கே பேரிழப்பாக அமைந்து விடும்…
என்று ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் முனைவர் திரு சி.சான் சாமுவேல் தனது நூல்களில் தனது கவலையை வெளிப்படுத்துகிறார்.

ஆசியவியல் ஆய்வு நிறுவனம் தற்பொழுது சென்னையில் செம்மஞ்சேரியில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனம் மூலமாக நாட்டுப்புற இலக்கியங்களைத் தாங்கிய ஓலைச் சுவடிகளில் வெளிப்பட்ட வாய்வழி இலக்கியங்கள் நூல்களாகப் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன.


நாட்டுப்புற இலக்கியங்கள் , வாய்மொழி இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இந்த வாய்மொழி இலக்கியங்களும், ஓலைச் சுவடிகளில் பதிவு செய்யப்பட்டு ஆவணப் பதிவுகளாக கிடைக்கின்றன. இத்தகைய ஆவணப் பதிவுகளே ”ஒடுக்கப்பட்டவர்கள், சமுதாயத் தகுதியைப் பெறாதவர்கள், தோல்வி கண்டவர்கள், சூழ்ச்சியால் முறியடிக்கப்பட்டவர்கள், அதிகார வருகத்தை எதிர்த்துக் குரலெழுப்பியவர்கள், ஆளும் வருக்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டிச் சிறைகளில் செத்தவர்கள் பற்றிய வரலாறுகளை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய நாட்டுப்புற இலக்கியங்களைத் தாங்கிய ஓலைச் சுவடிகளை திரு.சான் சாமுவேல் அவர்களது தலைமையிலான ஆசியவியல் ஆய்வு நிறுவனமே சேகரித்துப் பாதுகாத்து நூல்களாகத் தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டார்கள்..

இந்த வரிசையில் “சின்னத் தம்பி” கதை, ”குருக்களாஞ்சி” கதை, ”உச்சினி மாகாளியம்மன்” கதை என்ற மூன்று கதைப் பாடல்களை ஓலைச் சுவடிகளிலிருந்து பதிப்பித்து விளக்க உரையுடனும், ஆங்கில மொழிபெயர்ப்புடனும் நூல்களாக வெளியிட்டார்கள்.. இது தவிர ஆசியவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட ”பலவேசஞ் சேர்வைக்காரன்” கதை, ”வெங்கலராசன்” கதை, ”பூலித் தேவன் கதைப் பாடல்”, “சந்தனத் தேவன் கதைப் பாடல்”, ”அண்ணன்மார் கதைப்பாடல், ”பெருமாள் சுவாமி கதைப் பாடல்” போன்ற நூல்கள் முக்கியமானவை..

ஆசியவியல் ஆய்வு நிறுவனர் திரு சி. சான் சாமுவேல் அவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதற்காக யுனெசுகோவில் பேசிய தலைசிறந்த வரலாற்றுச் சாதனை நிகழ்வை அவர் எழுதிய இரண்டு நூல்கள் மூலமாக அறிந்து கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.

திரு. சி. சான் சாமுவேல் அவர்கள் எழுதிய அந்த இரண்டு நூல்கள்:

1) குமரி முதல் வார்சா வரை.

2) உதிரும் தமிழ் மலர்கள்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::;

கட்டுரை ஆக்கம் –

மா. குலோத்துங்கன் (தொன்மை தரிசனம் டி.வி – யூடியுப் சேனல்)

குறிப்பு- கட்டுரை எழுதப் பயன்பட்ட நூல்கள் –

  1. குமரி முதல் வார்சா வரை
  2. உதிரும் தமிழ் மலர்கள்.
  3. தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்,
    ஆசிரியர்: திரு குடவாயில் பாலசுப்பிரமணியன்
  4. மதுரையில் சமணம்.
    ஆசிரியர்: முனைவர் திரு சாந்தலிங்கம்..

(தொடரும்)
குலோத்துங்கன்
தோழர் தியாகு
தாழி மடல் 304