வியாழன், 12 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 238 : நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 237 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 13 தொடர்ச்சி)

நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க!

(போராட்ட அமைப்பினரின் முழக்கங்கள்)

நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனமே!

1) உழவர்களிடம் நிலம் பறிப்பதைக் கைவிடு!

2) கைப்பற்றிய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கு!

3) நிலம் கொடுத்த உழவர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்காவது நிலையான வேலை கொடு!

4) மூன்றாம் சுரங்கத் திட்டத்தைக் கைவிடு!

இந்திய அரசே!

1) புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்று! புதிய சுரங்கம் தோண்டுவதை நிறுத்து! இப்போதிருக்கும் சுரங்கங்களையும் படிப்படியாக மூடு!

2) பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வால் சுற்றுச் சூழல் கெட்டுப் புவி வெப்பமாதல் வளர்ந்து கேடான விளைவுகளும் பேரழிவும் ஏற்படுவதைத் தடுத்து நிறுத்து!

3) புதுப்பிக்கவியலா ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் பயன்பாட்டைக் கூடுதலாக்கு!

4) புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டையும், கரியுமிழ்வையும், புவி வெப்பமாதலையும் கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு ஒப்பந்த நெறிகளை மதித்து நட!

5) இயற்கை வளங்கள் மீதான தமிழகத்தின் இறைமையை ஒப்புக்கொள்!

6) நெய்வேலி பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தையும், அனல் மின் நிலையத்தையும் முழுமையாகவோ பகுதியாகவோ தனியார் மயமாக்கும் முயற்சியை அறவே கைவிடு! இவற்றைத் தமிழ் நாட்டுடையாமையாக்கு!

தமிழ்நாட்டரசே!

1) நெ.ப.நி.(என்எல்சி)-இன் நிலப்பறிப்புக்குத் துணை போகாதே! போராடும் மக்கள் மீதான அடக்குமுறையைக் கைவிடு! பொய் வழக்குகளைத் திரும்பப் பெறு!

2) நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்பைத் தடுத்துச் சட்டமியற்று!

3) நெ.ப.நி.(என்எல்சி) முதலிய பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறச் சட்டமியற்று!

4) சுற்றுச் சூழலுக்கும் மக்கள் நலனுக்கும் பொருத்தமான சுரங்கக் கொள்கை வகுத்து அறிவித்து நடைமுறைப்படுத்து!

5) புதைபடிவ எரிபொருள், பசுங்குடில் வாயுக்கள் உமிழ்வு, புவி வெப்பமாதல் ஆகியவை குறித்து விழிப்புப் பெறு! மக்களிடம் விழிப்புண்டாக்கு!

6) நெ.ப.நி.(என்எல்சி) நிறுவனத்தைத் தமிழ் நாட்டுடமையாக்க இந்திய அரசிடம் வலியுறுத்து! தமிழ்நாடுச் சட்டப் பேரவையில் தீர்மானம் இயற்று!

7) தமிழ்நாட்டு இயற்கை வளங்கள் மீது தமிழ்நாட்டு மக்களின் இறைமையை நிலைநாட்ட அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய இந்திய அரசை வலியுறுத்து!

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 267

புதன், 11 அக்டோபர், 2023

குவிகம் குறும்புதினப் போட்டி

 




குவிகம் குறும்புதினப் போட்டி

முதல் பரிசு – உரூபாய் 10,000/-

இரண்டாம் பரிசு – உரூபாய் 6,000/-

மூன்றாம் பரிசு -உரூபாய் 4,000/-

குவிகம் இதழில் வெளியிடத் தகுதி பெறும் ஒவ்வோர் படைப்பிற்கும் உரூபாய் 1,000/-

தேர்வுபெறும் படைப்புகள்    ‘குவிகம் குறும்புதினம்’ மாத இதழில் வெளியாகும். இந்த இதழ்  அங்கத்தினர்களுக்கு  ஒவ்வொரு மாதமும் பதிவுஅஞ்சல் அல்லது தூதஞ்சல் (Registered Post/Courier) மூலம் அனுப்பப்படும்.

படைப்புகள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் kurumpudhinam@gmail.com

படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : மார்கழி 15, 2054 / 31.12.2023

அன்புடன்

சுந்தரராசன்  

(+91 9442525191 -பகிரி/WhatsApp)

கிருபானந்தன்

(+91 9791069435)

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளையின் ஓவியப்போட்டி

 




புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை

தமிழறிஞர் மன்னர்மன்னன் 96 ஆவது பிறந்த நாள்

மாணவர்களுக்கான ஓவியப்போட்டி


புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் ( கோபதி) அவர்களின் 96 ஆவது பிறந்த நாள் வரும் 03/11/2023 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டுப் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது.
தலைப்பு : கலைகள் வளர்த்திடுவோம்!
( மன்னர் மன்னன் அவர்களின் கவிதை வரி )
எவ்வகை ஓவியமாகவும் இருக்கலாம்.
ஓவியம் வரைய வேண்டிய பொருட்களை மாணவர்கள் கொண்டு வரவேண்டும்.
போட்டியில் பங்கேற்க என்ற 9486748522 புலன எண்ணில் (வாட்சு அப் ) வரும் 18/10/2023 நாளுக்குள் பெயர், வயது, கல்வி, கல்வி நிறுவன விவரம் இவற்றுடன் புலன எண் ( வாட்சுஅப் ) உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மாணவர்கள்- கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.
75 மாணவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.முதலில் பதிவு செய்பவருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பங்கேற்கும் அனைவருக்கும் பாராட்டிதழ் வழங்கப்படும்.
பரிசு விவரம்:-
மொத்த பரிசுத்தொகை உரூபாய் 5000/-
(தேர்வு பெறும் பத்து ஓவியங்களை வரைந்த பள்ளி மாணவர் ஏழுபேர்  கல்லூரி மாணவர் மூன்று பேர் என ஒவ்வொருவருக்கும் ரூபாய் 500/- வழங்கப்படும் .)

நிகழ்விடம்:
பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம்,
115, பெருமாள் கோயில் தெரு,புதுச்சேரி -605001.

நாள் : ஐப்பசி 17, 2054 – 03/11/2023  வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் 12.00 வரை

தொடர்புக்கு
கலைமாமணி முனைவர் கோ. பாரதி
தலைவர்,
பாரதிதாசன் அறக்கட்டளை, புதுச்சேரி
பேசி : 86676 09521.
பங்கேற்க வருக.

“செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!”-சென்னையில் கருத்தரங்கு

 


உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான

செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!

சென்னையில் மகளிர் ஆயம் விளக்கக் கருத்தரங்கு!

“உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயம் சார்பில், சென்னையில் நூல் திறனாய்வு – விளக்கக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

சென்னை எம்ஞ்சியார். நகர் அண்ணா முதன்மைச் சாலையிலுள்ள மகா மகாலில், வரும் சனிக்கிழமை புரட்டாசி 27, 2054 /14.10.2023 /  மாலை 4.30 மணிக்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வுக்கு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா தலைமை தாங்குகினார். மகளிர் ஆயம் பொருளாளர் தோழர் ம. கனிமொழி முன்னிலை வகிக்கிறார். மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆனந்தி வரவேற்கிறார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வேங்கடராமன் அவர்கள் எழுதியுள்ள “செறிவூட்டப்பட்ட அரிசித் திணிப்பு – தமிழர் கிராமங்கள் அழிப்பு” நூல் குறித்து, மகளிர் ஆயம் துணைத் தலைவர் தோழர் க. செம்மலர் நூல் திறனாய்வுரை நிகழ்த்துகிறார்.

இதனையடுத்து, மரபு வேளாண் அறிஞர் பாமயன் (தாளாண்மை உழவர் இயக்கம்), மருத்துவர் கோ. பிரேமா (மக்கள் மருத்துவக் கூட்டமைப்பு), மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் தோழர் மு. செந்தமிழ்ச்செல்வி ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர். நிறைவாக, தோழர் கி.வேங்கடராமன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.

மகளிர் ஆயம் செயற்குழு உறுப்பினர் தோழர் க. மாதவி நன்றி கூறுகிறார்.

இந்நிகழ்வில், தமிழ் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க வரும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

==============================
மகளிர் ஆயம்

முகநூல் : www.fb.com/MagalirAyam
==============================






தோழர் தியாகு எழுதுகிறார் 237 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 13

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 236 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 12 தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள் 

(MANIPUR FILES)

 காதை (13)

புது தில்லி மகாவீர் வளாகத்தில் கிறித்துவ அரசுசாரா நிறுவனமாகிய ‘இவாஞ்செலிக்கல் பெலோசிப்பு ஆஃப் இந்தியா‘ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவர்களின் கருத்தரங்கக் கூடம் இடைக்காலத் தங்கல்முகாமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 9-10 குக்கிக் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளோம்.

என் பெயர் (உ)ரோசலிந்து. குக்கி இனம். அகவை 58. மெய்த்திக் கூட்டம் எங்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தாக்கிய போது சமையலறையில் எரிவாயு உருளை வெடிக்கக் கண்டு அவர்கள் கைத்தட்டி மகிழ்ந்தார்கள். நான் சுவரேறிக் குதித்து காலை உடைத்துக் கொண்டேன். இங்கே புது தில்லியின் மகாவீர் வளாகத்தில் கட்டுப்போட்டுக் கொண்டு படுத்திருக்கிறேன்.

தில்லியில் தஞ்சம் பெற்று வாழ்வது தாயகத்தில் வாழ்வது போன்றதல்ல. ஆனால் உயிரோடு மட்டும் இருப்பதிலேயே மகிழ்ச்சிதான். தட்பவெப்ப நிலைகள் அவ்வளவு சிறப்பாக இல்லைதான். நான் பாதுகாப்பாக இருப்பதுதான் முகன்மையானது.

நான் டாக்டர் தாரா மஞ்சின் ஃகாங்குசோ, அகவை 58. இம்பாலை விட்டுத் தப்பி வரும் போது என் 87 வயது தாயாரையும், மனவளர்ச்சி குன்றிய தங்கையையும் அழைத்து வர வேண்டியதாயிற்று.

அவர்கள் கூட்டம் கூட்டமாக எங்கள் குடியிருப்புக்குள் கத்திக்கொண்டே வந்தார்கள். கையில் தடிகளும் மின்சாரக் கைவிளக்குகளும் வைத்திருந்தார்கள். குக்கிகளைக் கொல்வோம்! குக்கிகளைக் கொல்வோம்! என்று கத்தினார்கள். நாங்கள் அரண்டு போனோம், செய்வதறியாது திகைத்து நின்றோம். எப்படியோ தப்பிப் பிழைத்து வந்து விட்டோம்.

நற்பேறு பெற்றவர்களில் நானும் ஒருத்தி என்றுதான் சொல்ல வேண்டும். அகவை முதிர்ந்த என் தாயாருக்கும், மனவளர்ச்சி குன்றிய என் தங்கைக்கும் இது பேரதிர்ச்சியான துன்பம். மாற்று உடைகள் இல்லாமல்தான் வந்தோம். தில்லியின் சூழல்கள் எங்களுக்குத் தெரியவில்லை. பணம் எடுக்கும் பொறி எங்குள்ளது, கடைக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. இருந்தாலும் நற்பேறு பெற்றவர்கள் என்பதால்தான் இன்று உயிரோடிருக்கிறோம்.

இம்பாலில் எங்கள் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்தவரும் உய்ர்தப்பி தில்லிக்கு வந்து விட்டார். ஆனால் அவருக்கு ஆங்கிலமோ இந்தியோ தெரியாது. எங்கு போனாலும் யாராவது துணைக்குப் போக வேண்டும்.

எங்களைத் துரத்தி விட்டனர், மெய்யாகவே விரட்டியடித்து விட்டனர். திரும்பி வரக் கூடாது என்று தூக்கியெறிந்து விட்டனர். ஏனென்றால் நாங்கள் அயலாராம்! 60 ஆண்டுக் காலமாக மணிப்பூரில் வாழ்ந்திருக்கிறோம். எனக்கு 58 வயதாயிற்று. வாழ்நாள் எல்லாம் இம்பாலுக்குச் சொந்தமாகவே இருந்துள்ளேன். என் தாயாருக்கு 87 வயதாயிற்று. திரும்பிப் போக வேண்டும், தாயகத்தில் உயிர் விட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

நான் இலால்போய் மங்குதே. அகவை 30.  எங்கள் அண்டை வீட்டார், நானும் என் குடும்பமும் அவர்களோடு அறுபதாண்டுக் காலம் சேர்ந்து வசித்திருகிறோம். அவர்களே எங்களைத் தாக்க வந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ‘இவர்கள் எப்படி நம்மைத் தாக்கக் கூடும்?’ கூட்டத்தில் சிலர் சாலையின் எதிர்ப் பக்கத்திலிருந்து வந்திருந்தனர். நாங்கள் அடிக்கடி பொருள் வாங்கச் செல்லும் கடைக்காரர்களும் இருந்தனர். ‘அட கடவுளே! இவர்கள் எப்படி நம்மைக் கொல்ல வரக் கூடும்?’

எதிர்காலம் பற்றிய பெரிய நம்பிக்கை எதுவுமில்லை. தாயக மாநிலத்துக்குத் திரும்ப முடியுமா? என்று தெரியவில்லை. ஏதோ இயல்புநிலை போன்ற சூழலில் வாழத்தான் விரும்புகிறோம்.

நான் சியார்சு தங்குகோலா. அகவை 38. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உள்நாட்டுப் போரில் தப்பி இந்த ஏதிலி முகாமுக்கு வந்துள்ளேன். ஆமாம், அது உள்நாட்டுப் போர்தான். ஒரு சமுதாயம் மற்றச் சமுதாயத்தையே பகையாகப் பார்த்தது. வாய்ப்புக் கிடைத்ததும் கொலை செய்யவும், வீட்டை கொளுத்தவும் தயங்கவில்லை. யாருக்கும் பாதுகாப்பில்லை. நீங்கள் குக்கி என்றால் மெய்த்திகள் உங்களுக்குத் தீமை செய்யாமல் விட மாட்டார்கள்.

முதல் தாக்குதல் அலையிலேயே பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தப்பியோடிப் பிழைத்தனர். இளைஞர் பலரும் வேலை இழந்து விட்டனர்.

நான் (இ)லல்லியன் வைப்பே. அகவை 28. போன மாதம்தான் இம்பாலில் எனக்கு அரசு வேலை கிடைத்தது. அங்கிருந்து தில்லிக்கு உயிர்தப்பி ஓடி வந்து விட்டதால் வேலை போய் விட்டது. இப்போது தில்லியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இம்பாலில் எனக்குக் கிடைத்த வேலை பொதுக் கணக்காயர் அலுவலகத்தில் தரவுப் பதிவு செய்யும் பணியாகும். இது மைய அரசுப் பணி, ஒரு திங்கள் மட்டுமே இந்த வேலையில் இருந்தேன். எதிர்பாராமல் வெடித்த வன்முறையால் வேலையும் இடமும் இழந்து வெளியேறி வந்து விட்டேன். நாட்டின் தலைநகரில் அதே போன்ற வேலைக்காக அலைகிறேன்.

நான் மாங்கு நிகைத்தேஎவாஞ்செலிகல் பெலோசுப்பு ஆஃப் இந்தியா ஒழுங்கு செய்துள்ள  துயர்தணிப்பு முகாமில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். காலையும் பகலும் இரவும் அவர்களே உணவு சமைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் இங்கிருக்கும் காலத்தில் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வியாவது கிடைக்க வேண்டும், அதே போல் தமக்குள்ள திறன்களுக்குப் பொருத்தமான வேலைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.

மேலும், இவர்களில் பெரும்பாலாரின் வீடுகளும் மற்ற உடைமைகளும் எரிக்கப்பட்டு விட்டன. இவர்கள் தில்லியிலேயே நீடித்து வாழ்வதற்கு வேலை வாங்கித்தர இயன்றதனைத்தும் செய்கிறோம்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 267


செவ்வாய், 10 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 236 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 12

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 235 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 11 தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள்

(MANIPUR FILES) 

காதை (12)

என் பெயர் நான்சி தௌத்தாங்கு. அகவை 34. குக்கி இனப்பெண். நால்வரடங்கிய எங்கள் குடும்பம் வன்முறை வெறியாட்டத்தில் தப்பிப் பிழைத்து காங்குபோக்குபியில் ஒரு துயர்தணிப்பு முகாமில் தஞ்சடைந்துள்ளது. மணிப்பூர் மாநிலமெங்கும் இது போன்ற பல ஏதிலியர் முகாம்கள் இருப்பதாக அறிகிறோம்.

இம்பாலிலிருந்து தப்பி இந்த முகாமுக்கு வரும் போது எங்கள் உடைமைகளில் மிகச் சிலவற்றை மட்டுமே எடுத்து வர முடிந்தது. நானும் என் கணவரும் வாழும் வழி இழந்து தவிக்கிறோம். ஆனால் தப்பி வராமல் சிக்கியிருந்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருப்பேன். எங்கள் இல்லம் முதலமைச்சரின் தொகுதியில் உள்ளது. அங்கிருந்து வெளியேறி வரவேண்டியதாயிற்று என்பதை இப்போதும் நம்ப முடியவில்லை.

பின்கதை: மே 28ஆம் நாளிலிருந்து சூரசந்துபூர் துயர்தணிப்பு முகாமில் தங்கியிருக்கும் கிரேசு நிங்கொம்பம் என்ற குக்கியினப் பெண்ணால் தன் துயரத்தை எடுத்துச் சொல்லக்கூட முடியவில்லை. “இளையோரும் முதியோருமான இந்தப் பெண்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் உடலும் மனமும் நடுங்குகின்றன” என்கிறார் கிரேசு.

(
தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 266

திங்கள், 9 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 235 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 11

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள்

(MANIPUR FILES)

கதை (11)

நாட்டைக் காத்தேன்! கட்டிய மனைவியைக் காக்க முடியாதவன் ஆனேன்! இந்த என் சொற்களை அனைவரும் கேட்டிருப்பீர்கள். இந்திய இராணுவத்தில் அசாம் படைப் பிரிவில் சுபேதாராகப் பணியாற்றினேன். கார்கில் போரில் நாட்டுக்காகப் போர் புரிந்தேன். இலங்கை சென்ற இந்திய அமைதிப் படையிலும் இடம் பெற்றேன்.

மே 4ஆம் நாள் ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுப் பாலியலாக மானபங்கம் செய்யப்பட்ட இரு பெண்களில் என் மனைவியும் ஒருத்தி. என் மனைவியையும் மற்றவர்களையும் அந்த வெறியர்கள் காவல்துறை வண்டியிலிருந்துதான் பறித்து இழுத்துச் சென்றார்கள். காவல் துறையினர் எவ்வகையிலும் அதைத் தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை. கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் எனபதே உண்மை.

அந்தக் கொடுநிகழ்வின் அதிர்ச்சியிலிருந்து எங்களால் இன்னும் மீளமுடியவில்லை. என் மனைவி தன்னைத் தாக்கியவர்களின் பக்கத்திலேயே வாழ முடியாமல் தவிக்கிறாள். நடுத்தெருவில் தனக்கு நேரிட்ட மானக் கேட்டை இவ்வளவு பேர் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்ற எண்ணமே அவளை வதைக்கிறது. இரவில் அடிக்கடிக் கொடுங்கனவு கண்டு விழித்து அலறுகிறாள். சில நேரம் தோலைக் கிழித்துக் கொள்கிறாள்.

வீடுகளை எரித்தவர்களும் பெண்களை மானபங்கப்படுத்தியவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அந்தத் தண்டனை மற்றவர்களுக்குப் பாடமாக வேண்டும்.

இங்கே பெரும்பான்மைச் சமுதாயம் எங்களைப் போன்ற சிறுபான்மைச் சமுதாயங்களை எப்போதுமே ஒடுக்கித்தான் வைத்துள்ளது. அவர்களோடு எங்களால் இனியும் சேர்ந்து வாழ முடியாது. அரசு இப்போது நிலையான தீர்வு காண வேண்டும்.

பின்கதை: மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் இந்தக் கொடுநிகழ்வு நடைபெற்ற இடம் நோங்குபோக்கு செக்குமாய் காவல் நிலையத்திலிருந்து ஒரே ஒரு அயிரைப் பேரடி(கிலோ மீட்டர்) தொலைவில் உள்ளது. இந்தக் காவல் நிலையம்தான் 2020ஆம் ஆண்டு இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையம் என்று இந்திய அரசின் விருது பெற்றதாகும்.

அந்த மே 4 காணொளி பரவிய பிறகுதான் பல பாலியல் வன்கொடுமை நேர்வுகள் வெளியே தெரிய வந்துள்ளன. இந்தப் போரில் எப்படிப் பாலியல் வன்தாக்குதல் ஒரு கருவியாக ஆளப்படுகிறது என்பதை உலகம் பார்த்து வருகிறது. அதே போது இவை போன்ற இன்னும் பல நேர்வுகள் வெளிவராமல் உள்ளன என்பதை மறக்க வேண்டாம் என்று மூத்த குக்கி இனத் தலைவர் ஒருவர் சொல்கின்றார்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 266

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 233 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 8 & 9 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை 10

என் பெயர் சிங்கனிமோய் சூ. குக்கி இனம், அகவை 25. என் கணவர் தங்கூலால் மணிப்பூரில் கடந்த இரு மாதக் காலமாக நடந்து வரும் வன்முறையில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கானோரில் ஒருவர். எனக்குத் தெரிந்தவரை நடந்ததைச் சொல்கிறேன்.

என் கணவர் பாசக சட்டமன்ற உறுப்பினர் உங்சாகின் வால்து என்பவரின் வண்டி ஓட்டுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மே 5ஆம் நாள் தலைநகரம் இம்பாலில் சட்டமன்ற உறுப்பினர் வால்த்தை ஒரு வன்முறைக் கும்பல் சூழ்ந்து கொண்டது.

இந்தத் தாக்குதலில் வால்து பிழைத்துக் கொண்டார். ஆனால் ஓட்டுநர் தங்கூலாலை அந்தக் கும்பல் மூர்க்கமாக அடித்தும் கத்தியால் குத்தியும் வீழ்த்தியது. மறுநாள் மே 6ஆம் நாள் அவர் உயிரிழந்தார்.

மே 3ஆம் நாள் பழங்குடி ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது அல்லவா? அதையொட்டி முதலமைச்சர் பிரேன் சிங்கு ஒரு கூட்டம் கூட்டினார். அந்தக் கூட்டத்துக்குச் சட்டமன்ற உறுப்பினரோடு என் கணவரும் போய் விட்டார்.

நான் தொலைபேசியில் அவரோடு பேசினேன். “இந்தக் கூட்டங்கள் ஆபத்தானவை, நீங்கள் ஏன் போனீர்கள்?” என்று கேட்டேன். “சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் முதலமைச்சர் அழைத்திருப்பதால் நான் போகத்தான் வேண்டும்” என்றார். “வீடு திரும்பியதும் உன்னை அழைக்கிறேன் என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்.

சிறிது நேரம் கழித்து அவரை அழைக்க முயன்றேன். தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரும் திருப்பி அழைக்கவில்லை. அவருடைய மற்ற எண்களும் வேலை செய்யவில்லை. அவருடன் தொடர்பு கொள்ள வழியே இல்லை. சிறிது நேரம் கழித்து அவருடைய நண்பர்களின் தொடர்பு கிடைத்தது.

“கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது மெய்த்தி வன்முறைக் கும்பல் எங்களைத் தாக்கியது, நாங்கள் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

தங்கூலாலின் நண்பர்கள் அவரை உடனே கவனிக்கவில்லை. முதலில் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று, பிறகுதான் மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றுள்ளார்கள்.
”காயமுற்ற சட்டமன்ற உறுப்பினரை அவசர வானூர்தியில் தில்லி கொண்டுசெல்ல இருப்பதாகச் சொன்னார்கள். அவரோடு சேர்த்து என் கணவரையும் ஏற்றிச் செல்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் அதே நாளில் சட்டமன்ற உறுப்பினரை தில்லிக்கு வான்வழி அவசர ஊர்தியில் கொண்டுசென்று விட்டனர். அதேபோது என் கணவரை இம்பால் (இ)ரிம்சு (வட்டார மருத்துவ ஆராய்ச்சிக் கழக) மருத்துவமனையில் வைத்திருந்தனர்.

“எங்களால் இம்பால் சென்று என் கணவரின் உடலைப் பெற்றுக் கொள்ளக் கூட முடியாது. இம்பால் செல்வது எங்கள் உயிருக்கும் ஆபத்தாகி விடும். கணவரின் உடல் இருக்கும் நிலை கூட எனக்குத் தெரியவில்லை.

தங்கூலாலின் உடலைக் கூட இது வரை நான் பார்க்கவில்லை. இந்தப் படங்களைப் பார்க்கப் பொறுக்கவில்லை. அவரது முகம் அறவே சிதைக்கப்பட்டுள்ளது. வயிற்றில் கத்திக்குத்து பட்டிருக்கிறார்.

சூரசந்துபூர் வீட்டில் கைக்குழந்தை உள்ளிட்ட என் இரு குழந்தைகளோடு இருக்கிறேன். வாசல் திறக்கும் போதெல்லாம் அப்பா வந்து விட்டாரா? என்று ஓடிச் சென்று பார்க்கிறான் என் மகன். அவர் இனி வரவே மாட்டார் என்பதை நம்புவது எனக்கே கடினமாகத்தான் உள்ளது.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 265