மணிப்பூர்க் கோப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மணிப்பூர்க் கோப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 237 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 13

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 236 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 12 தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள் 

(MANIPUR FILES)

 காதை (13)

புது தில்லி மகாவீர் வளாகத்தில் கிறித்துவ அரசுசாரா நிறுவனமாகிய ‘இவாஞ்செலிக்கல் பெலோசிப்பு ஆஃப் இந்தியா‘ நிறுவனத்தின் ஏற்பாட்டில் அவர்களின் கருத்தரங்கக் கூடம் இடைக்காலத் தங்கல்முகாமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 9-10 குக்கிக் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 50 பேர் இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளோம்.

என் பெயர் (உ)ரோசலிந்து. குக்கி இனம். அகவை 58. மெய்த்திக் கூட்டம் எங்கள் வீட்டைச் சூழ்ந்து கொண்டு தாக்கிய போது சமையலறையில் எரிவாயு உருளை வெடிக்கக் கண்டு அவர்கள் கைத்தட்டி மகிழ்ந்தார்கள். நான் சுவரேறிக் குதித்து காலை உடைத்துக் கொண்டேன். இங்கே புது தில்லியின் மகாவீர் வளாகத்தில் கட்டுப்போட்டுக் கொண்டு படுத்திருக்கிறேன்.

தில்லியில் தஞ்சம் பெற்று வாழ்வது தாயகத்தில் வாழ்வது போன்றதல்ல. ஆனால் உயிரோடு மட்டும் இருப்பதிலேயே மகிழ்ச்சிதான். தட்பவெப்ப நிலைகள் அவ்வளவு சிறப்பாக இல்லைதான். நான் பாதுகாப்பாக இருப்பதுதான் முகன்மையானது.

நான் டாக்டர் தாரா மஞ்சின் ஃகாங்குசோ, அகவை 58. இம்பாலை விட்டுத் தப்பி வரும் போது என் 87 வயது தாயாரையும், மனவளர்ச்சி குன்றிய தங்கையையும் அழைத்து வர வேண்டியதாயிற்று.

அவர்கள் கூட்டம் கூட்டமாக எங்கள் குடியிருப்புக்குள் கத்திக்கொண்டே வந்தார்கள். கையில் தடிகளும் மின்சாரக் கைவிளக்குகளும் வைத்திருந்தார்கள். குக்கிகளைக் கொல்வோம்! குக்கிகளைக் கொல்வோம்! என்று கத்தினார்கள். நாங்கள் அரண்டு போனோம், செய்வதறியாது திகைத்து நின்றோம். எப்படியோ தப்பிப் பிழைத்து வந்து விட்டோம்.

நற்பேறு பெற்றவர்களில் நானும் ஒருத்தி என்றுதான் சொல்ல வேண்டும். அகவை முதிர்ந்த என் தாயாருக்கும், மனவளர்ச்சி குன்றிய என் தங்கைக்கும் இது பேரதிர்ச்சியான துன்பம். மாற்று உடைகள் இல்லாமல்தான் வந்தோம். தில்லியின் சூழல்கள் எங்களுக்குத் தெரியவில்லை. பணம் எடுக்கும் பொறி எங்குள்ளது, கடைக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. இருந்தாலும் நற்பேறு பெற்றவர்கள் என்பதால்தான் இன்று உயிரோடிருக்கிறோம்.

இம்பாலில் எங்கள் வீட்டில் பணிப் பெண்ணாக இருந்தவரும் உய்ர்தப்பி தில்லிக்கு வந்து விட்டார். ஆனால் அவருக்கு ஆங்கிலமோ இந்தியோ தெரியாது. எங்கு போனாலும் யாராவது துணைக்குப் போக வேண்டும்.

எங்களைத் துரத்தி விட்டனர், மெய்யாகவே விரட்டியடித்து விட்டனர். திரும்பி வரக் கூடாது என்று தூக்கியெறிந்து விட்டனர். ஏனென்றால் நாங்கள் அயலாராம்! 60 ஆண்டுக் காலமாக மணிப்பூரில் வாழ்ந்திருக்கிறோம். எனக்கு 58 வயதாயிற்று. வாழ்நாள் எல்லாம் இம்பாலுக்குச் சொந்தமாகவே இருந்துள்ளேன். என் தாயாருக்கு 87 வயதாயிற்று. திரும்பிப் போக வேண்டும், தாயகத்தில் உயிர் விட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

நான் இலால்போய் மங்குதே. அகவை 30.  எங்கள் அண்டை வீட்டார், நானும் என் குடும்பமும் அவர்களோடு அறுபதாண்டுக் காலம் சேர்ந்து வசித்திருகிறோம். அவர்களே எங்களைத் தாக்க வந்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. ‘இவர்கள் எப்படி நம்மைத் தாக்கக் கூடும்?’ கூட்டத்தில் சிலர் சாலையின் எதிர்ப் பக்கத்திலிருந்து வந்திருந்தனர். நாங்கள் அடிக்கடி பொருள் வாங்கச் செல்லும் கடைக்காரர்களும் இருந்தனர். ‘அட கடவுளே! இவர்கள் எப்படி நம்மைக் கொல்ல வரக் கூடும்?’

எதிர்காலம் பற்றிய பெரிய நம்பிக்கை எதுவுமில்லை. தாயக மாநிலத்துக்குத் திரும்ப முடியுமா? என்று தெரியவில்லை. ஏதோ இயல்புநிலை போன்ற சூழலில் வாழத்தான் விரும்புகிறோம்.

நான் சியார்சு தங்குகோலா. அகவை 38. பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உள்நாட்டுப் போரில் தப்பி இந்த ஏதிலி முகாமுக்கு வந்துள்ளேன். ஆமாம், அது உள்நாட்டுப் போர்தான். ஒரு சமுதாயம் மற்றச் சமுதாயத்தையே பகையாகப் பார்த்தது. வாய்ப்புக் கிடைத்ததும் கொலை செய்யவும், வீட்டை கொளுத்தவும் தயங்கவில்லை. யாருக்கும் பாதுகாப்பில்லை. நீங்கள் குக்கி என்றால் மெய்த்திகள் உங்களுக்குத் தீமை செய்யாமல் விட மாட்டார்கள்.

முதல் தாக்குதல் அலையிலேயே பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் தப்பியோடிப் பிழைத்தனர். இளைஞர் பலரும் வேலை இழந்து விட்டனர்.

நான் (இ)லல்லியன் வைப்பே. அகவை 28. போன மாதம்தான் இம்பாலில் எனக்கு அரசு வேலை கிடைத்தது. அங்கிருந்து தில்லிக்கு உயிர்தப்பி ஓடி வந்து விட்டதால் வேலை போய் விட்டது. இப்போது தில்லியில் வேலை தேடிக் கொண்டிருக்கிறேன். இம்பாலில் எனக்குக் கிடைத்த வேலை பொதுக் கணக்காயர் அலுவலகத்தில் தரவுப் பதிவு செய்யும் பணியாகும். இது மைய அரசுப் பணி, ஒரு திங்கள் மட்டுமே இந்த வேலையில் இருந்தேன். எதிர்பாராமல் வெடித்த வன்முறையால் வேலையும் இடமும் இழந்து வெளியேறி வந்து விட்டேன். நாட்டின் தலைநகரில் அதே போன்ற வேலைக்காக அலைகிறேன்.

நான் மாங்கு நிகைத்தே. எவாஞ்செலிகல் பெலோசுப்பு ஆஃப் இந்தியா ஒழுங்கு செய்துள்ள  துயர்தணிப்பு முகாமில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறேன். காலையும் பகலும் இரவும் அவர்களே உணவு சமைத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் இங்கிருக்கும் காலத்தில் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வியாவது கிடைக்க வேண்டும், அதே போல் தமக்குள்ள திறன்களுக்குப் பொருத்தமான வேலைகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என விரும்புகிறோம்.

மேலும், இவர்களில் பெரும்பாலாரின் வீடுகளும் மற்ற உடைமைகளும் எரிக்கப்பட்டு விட்டன. இவர்கள் தில்லியிலேயே நீடித்து வாழ்வதற்கு வேலை வாங்கித்தர இயன்றதனைத்தும் செய்கிறோம்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 267


செவ்வாய், 10 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 236 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 12

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 235 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 11 தொடர்ச்சி)

மணிப்பூர்க் கோப்புகள்

(MANIPUR FILES) 

காதை (12)

என் பெயர் நான்சி தௌத்தாங்கு. அகவை 34. குக்கி இனப்பெண். நால்வரடங்கிய எங்கள் குடும்பம் வன்முறை வெறியாட்டத்தில் தப்பிப் பிழைத்து காங்குபோக்குபியில் ஒரு துயர்தணிப்பு முகாமில் தஞ்சடைந்துள்ளது. மணிப்பூர் மாநிலமெங்கும் இது போன்ற பல ஏதிலியர் முகாம்கள் இருப்பதாக அறிகிறோம்.

இம்பாலிலிருந்து தப்பி இந்த முகாமுக்கு வரும் போது எங்கள் உடைமைகளில் மிகச் சிலவற்றை மட்டுமே எடுத்து வர முடிந்தது. நானும் என் கணவரும் வாழும் வழி இழந்து தவிக்கிறோம். ஆனால் தப்பி வராமல் சிக்கியிருந்தால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிக் கொல்லப்பட்டிருப்பேன். எங்கள் இல்லம் முதலமைச்சரின் தொகுதியில் உள்ளது. அங்கிருந்து வெளியேறி வரவேண்டியதாயிற்று என்பதை இப்போதும் நம்ப முடியவில்லை.

பின்கதை: மே 28ஆம் நாளிலிருந்து சூரசந்துபூர் துயர்தணிப்பு முகாமில் தங்கியிருக்கும் கிரேசு நிங்கொம்பம் என்ற குக்கியினப் பெண்ணால் தன் துயரத்தை எடுத்துச் சொல்லக்கூட முடியவில்லை. “இளையோரும் முதியோருமான இந்தப் பெண்களைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் உடலும் மனமும் நடுங்குகின்றன” என்கிறார் கிரேசு.

(
தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 266

திங்கள், 9 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 235 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 11

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள்

(MANIPUR FILES)

கதை (11)

நாட்டைக் காத்தேன்! கட்டிய மனைவியைக் காக்க முடியாதவன் ஆனேன்! இந்த என் சொற்களை அனைவரும் கேட்டிருப்பீர்கள். இந்திய இராணுவத்தில் அசாம் படைப் பிரிவில் சுபேதாராகப் பணியாற்றினேன். கார்கில் போரில் நாட்டுக்காகப் போர் புரிந்தேன். இலங்கை சென்ற இந்திய அமைதிப் படையிலும் இடம் பெற்றேன்.

மே 4ஆம் நாள் ஆடையின்றி ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டுப் பாலியலாக மானபங்கம் செய்யப்பட்ட இரு பெண்களில் என் மனைவியும் ஒருத்தி. என் மனைவியையும் மற்றவர்களையும் அந்த வெறியர்கள் காவல்துறை வண்டியிலிருந்துதான் பறித்து இழுத்துச் சென்றார்கள். காவல் துறையினர் எவ்வகையிலும் அதைத் தடுக்கவோ எதிர்க்கவோ இல்லை. கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் எனபதே உண்மை.

அந்தக் கொடுநிகழ்வின் அதிர்ச்சியிலிருந்து எங்களால் இன்னும் மீளமுடியவில்லை. என் மனைவி தன்னைத் தாக்கியவர்களின் பக்கத்திலேயே வாழ முடியாமல் தவிக்கிறாள். நடுத்தெருவில் தனக்கு நேரிட்ட மானக் கேட்டை இவ்வளவு பேர் பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்ற எண்ணமே அவளை வதைக்கிறது. இரவில் அடிக்கடிக் கொடுங்கனவு கண்டு விழித்து அலறுகிறாள். சில நேரம் தோலைக் கிழித்துக் கொள்கிறாள்.

வீடுகளை எரித்தவர்களும் பெண்களை மானபங்கப்படுத்தியவர்களும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அந்தத் தண்டனை மற்றவர்களுக்குப் பாடமாக வேண்டும்.

இங்கே பெரும்பான்மைச் சமுதாயம் எங்களைப் போன்ற சிறுபான்மைச் சமுதாயங்களை எப்போதுமே ஒடுக்கித்தான் வைத்துள்ளது. அவர்களோடு எங்களால் இனியும் சேர்ந்து வாழ முடியாது. அரசு இப்போது நிலையான தீர்வு காண வேண்டும்.

பின்கதை: மணிப்பூர் மாநிலம் தௌபால் மாவட்டத்தில் இந்தக் கொடுநிகழ்வு நடைபெற்ற இடம் நோங்குபோக்கு செக்குமாய் காவல் நிலையத்திலிருந்து ஒரே ஒரு அயிரைப் பேரடி(கிலோ மீட்டர்) தொலைவில் உள்ளது. இந்தக் காவல் நிலையம்தான் 2020ஆம் ஆண்டு இந்தியாவிலேயே சிறந்த காவல் நிலையம் என்று இந்திய அரசின் விருது பெற்றதாகும்.

அந்த மே 4 காணொளி பரவிய பிறகுதான் பல பாலியல் வன்கொடுமை நேர்வுகள் வெளியே தெரிய வந்துள்ளன. இந்தப் போரில் எப்படிப் பாலியல் வன்தாக்குதல் ஒரு கருவியாக ஆளப்படுகிறது என்பதை உலகம் பார்த்து வருகிறது. அதே போது இவை போன்ற இன்னும் பல நேர்வுகள் வெளிவராமல் உள்ளன என்பதை மறக்க வேண்டாம் என்று மூத்த குக்கி இனத் தலைவர் ஒருவர் சொல்கின்றார்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 266

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 234 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 10

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 233 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 8 & 9 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை 10

என் பெயர் சிங்கனிமோய் சூ. குக்கி இனம், அகவை 25. என் கணவர் தங்கூலால் மணிப்பூரில் கடந்த இரு மாதக் காலமாக நடந்து வரும் வன்முறையில் கொல்லப்பட்ட நூற்றுக் கணக்கானோரில் ஒருவர். எனக்குத் தெரிந்தவரை நடந்ததைச் சொல்கிறேன்.

என் கணவர் பாசக சட்டமன்ற உறுப்பினர் உங்சாகின் வால்து என்பவரின் வண்டி ஓட்டுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். மே 5ஆம் நாள் தலைநகரம் இம்பாலில் சட்டமன்ற உறுப்பினர் வால்த்தை ஒரு வன்முறைக் கும்பல் சூழ்ந்து கொண்டது.

இந்தத் தாக்குதலில் வால்து பிழைத்துக் கொண்டார். ஆனால் ஓட்டுநர் தங்கூலாலை அந்தக் கும்பல் மூர்க்கமாக அடித்தும் கத்தியால் குத்தியும் வீழ்த்தியது. மறுநாள் மே 6ஆம் நாள் அவர் உயிரிழந்தார்.

மே 3ஆம் நாள் பழங்குடி ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது அல்லவா? அதையொட்டி முதலமைச்சர் பிரேன் சிங்கு ஒரு கூட்டம் கூட்டினார். அந்தக் கூட்டத்துக்குச் சட்டமன்ற உறுப்பினரோடு என் கணவரும் போய் விட்டார்.

நான் தொலைபேசியில் அவரோடு பேசினேன். “இந்தக் கூட்டங்கள் ஆபத்தானவை, நீங்கள் ஏன் போனீர்கள்?” என்று கேட்டேன். “சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் முதலமைச்சர் அழைத்திருப்பதால் நான் போகத்தான் வேண்டும்” என்றார். “வீடு திரும்பியதும் உன்னை அழைக்கிறேன் என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டார்.

சிறிது நேரம் கழித்து அவரை அழைக்க முயன்றேன். தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரும் திருப்பி அழைக்கவில்லை. அவருடைய மற்ற எண்களும் வேலை செய்யவில்லை. அவருடன் தொடர்பு கொள்ள வழியே இல்லை. சிறிது நேரம் கழித்து அவருடைய நண்பர்களின் தொடர்பு கிடைத்தது.

“கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது மெய்த்தி வன்முறைக் கும்பல் எங்களைத் தாக்கியது, நாங்கள் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் இருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.

தங்கூலாலின் நண்பர்கள் அவரை உடனே கவனிக்கவில்லை. முதலில் காவல் நிலையத்துக்குக் கொண்டுசென்று, பிறகுதான் மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றுள்ளார்கள்.
”காயமுற்ற சட்டமன்ற உறுப்பினரை அவசர வானூர்தியில் தில்லி கொண்டுசெல்ல இருப்பதாகச் சொன்னார்கள். அவரோடு சேர்த்து என் கணவரையும் ஏற்றிச் செல்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் அதே நாளில் சட்டமன்ற உறுப்பினரை தில்லிக்கு வான்வழி அவசர ஊர்தியில் கொண்டுசென்று விட்டனர். அதேபோது என் கணவரை இம்பால் (இ)ரிம்சு (வட்டார மருத்துவ ஆராய்ச்சிக் கழக) மருத்துவமனையில் வைத்திருந்தனர்.

“எங்களால் இம்பால் சென்று என் கணவரின் உடலைப் பெற்றுக் கொள்ளக் கூட முடியாது. இம்பால் செல்வது எங்கள் உயிருக்கும் ஆபத்தாகி விடும். கணவரின் உடல் இருக்கும் நிலை கூட எனக்குத் தெரியவில்லை.

தங்கூலாலின் உடலைக் கூட இது வரை நான் பார்க்கவில்லை. இந்தப் படங்களைப் பார்க்கப் பொறுக்கவில்லை. அவரது முகம் அறவே சிதைக்கப்பட்டுள்ளது. வயிற்றில் கத்திக்குத்து பட்டிருக்கிறார்.

சூரசந்துபூர் வீட்டில் கைக்குழந்தை உள்ளிட்ட என் இரு குழந்தைகளோடு இருக்கிறேன். வாசல் திறக்கும் போதெல்லாம் அப்பா வந்து விட்டாரா? என்று ஓடிச் சென்று பார்க்கிறான் என் மகன். அவர் இனி வரவே மாட்டார் என்பதை நம்புவது எனக்கே கடினமாகத்தான் உள்ளது.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 265

வெள்ளி, 6 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 232 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 7

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 231 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 6 தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை 7

என் பெயர் (இ)ரெய்னா ஃகாவுகிப்பு. குக்கி இனப் பெண். அகவை 18. நாட்டைக் குலுக்கிய அந்த மே 4 காணொளி 75 நாளுக்குப் பின் வெளிவந்து, உச்சநீதிமன்றத்தை அதிர்ச்சி தெரிவிக்கச் செய்து, இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோதியைப் பேச வைத்தது அல்லவா? அதன் பிறகு அதே போன்ற பல வன்கொடுமைச் செய்திகள் வந்த வண்ணமுள்ளன. அந்த வன்கொடுமைகைளில் சிக்கிச் சிதைந்த பெண்களில் நானும் ஒருத்தி.

என் கதையைச் சொல்கிறேன், கேளுங்கள். இம்பாலில் புதுச் செக்கோன் வட்டாரத்தில் பிறந்து வளர்ந்தேன். இந்தப் பகுதியில் குக்கி-சோமிக்கள், நாகர்கள், மெய்த்திகள், நேபாளிகள் என்று எல்லா இனத்தவரும் பல்லாண்டுகளாகச் சேர்ந்துதான் வாழ்ந்து வந்தோம். இந்தப் பகுதியில் என் இனத்துக்காகவே ஒரு நாள் என்னை மிருகத்தனமாகத் தாக்குவார்கள் என்று கற்பனையும் செய்ததில்லை நான்.

கலவரம் மூண்ட போது என் குடும்பத்தினர் இம்பாலை விட்டு வெளியேறி விட்டனர். என்னால் அவர்களுடன் சேர்ந்து வெளியேற முடியவில்லை. நான் இசுலாமியர் வசிக்கும் ‘பங்கல்’ வட்டாரத்தில் குக்கித் தோழி ஒருத்தியின் வீட்டில் ஒளிந்திருந்தேன். (முசுலிம்கள் அனைவரையும் பங்கல் என்று குறிப்பிடுவது மெய்த்திகளின் வரலாற்று வழக்கம்.) இந்த இடம் எங்கள் வீட்டிலிருந்து அரை மணிநேரத் தொலைவுதான். இரு வாரக் காலத்துக்கு மேல் அங்கு பதுங்கியிருந்தேன். பங்கல்களுக்கும் கலவரத்துக்கும் தொடர்பில்லை என்பதால் நான் பாதுகாப்பாக இருப்பதாய் உணர்ந்தேன்.

என் தோழியின் கணவர் முசுலிம். அவர் வெளியே போய் தேவைப் பொருட்கள் எல்லாம் வாங்கி வருவார். ஆனால் என்னைப் பொறுத்த வரை பாரதிய சனதா மாநில அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அவர்கள் ஏதாவது செய்வார்கள் என்று நம்பினேன். நிலைமை சீரடையவில்லை என்றதும் நம்பிக்கை குறைந்து போயிற்று. என் தோழிகள் தங்கள் பாதுகாப்பு பற்றிக் கவலைப்படலானார்கள். இந்த நிலையில்தான் எப்படியாவது என் குடும்பத்திடம் போய்ச் சேர்ந்து விட வேண்டும் என்று நினைக்கலானேன்.

பயணச் செலவுக்காகப் பணம் எடுக்க என் தோழியுடன் புதுச் செக்கொனில் இருக்கும் ஏடிஎம்முக்குப் போய்க் கொண்டிருந்தேன். வெண்ணிற பொலேரோவிலும் நீலநிற சுவிப்ட்டிலும் கும்பலாக வந்த மெய்த்தி ஆண்கள் எங்களை வளைத்துக் கொண்டனர். எங்களை ஆதார் அட்டையைக் காட்டச் சொன்னார்கள். எனக்கு இடம்கொடுத்ததற்காக என் தோழியைத் தாக்கலானார்கள். பிறகு என்னைத் திட்டி அடிக்கத் தொடங்கினார்கள். என் தோழியை விட்டு விட்டு என்னைப் பிடித்து பொலேரோ வண்டிக்குள் தள்ளினார்கள்.

அங்கிருந்து கிட்டத்தட்ட 24 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வாங்கீ அயங்பேலி என்ற மெய்த்தி இனத்தவர் நிறைந்து வாழும் பகுதிக்கு வண்டி விரைந்தது. வண்டிக்குள்ளும் என்னை அடித்துத் துவைத்துக் கொண்டே வந்தார்கள். உன்னைக் கொன்று விடுவோம், குக்கிகளை ஒருவர் விடாமல் வேட்டையாடி அழிப்போம் என்றார்கள்.

வாங்கீ அயங்குபேலியில் ஆண்களும் பெண்களுமான மேலும் பலர் வந்து சேர்ந்தனர். அவர்கள் பனேக்கு என்னும் மெய்த்திகளின் மரபுச் சேலை உடுத்தியிருந்தார்கள். அந்தப் பெண்கள்தாம் ‘மீரா பைபி’க்கள் (பெண் சுடரேந்திகள்). இவர்களுக்கு அன்னையர் என்ற பெயரும் உண்டு. இந்த அமைப்பு குடிவெறிக்கும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கும் மனிதவுரிமை மீறல்களுக்கும் பெண்கள் மீதான தாக்குதலுக்கும் எதிராகப் போராடுவதற்கென 1970களில் நிறுவப் பெற்றது. அறப் போராட்டங்களுக்காக அது உலகப் புகழ் பெற்றது.

முதலில் அந்த ‘மீரா பைபி’ பெண்கள் என்னை அடிக்கத் தொடங்கினார்கள். “உங்களைப் போல நானும் ஒரு பெண்” என்று நான் மன்றாடிய போது அவர்கள் இன்னும் கடுமையாகத் தாக்கினார்கள். இந்தப் பெண்கள் இன்னும் சில ஆண்களையும் அழைத்துக் கொண்டார்கள். அந்த ஆண்கள் இலச்சினை பொறித்த கருப்பு நிற T–சட்டை அணிந்திருந்தார்கள். அவர்கள் மெய்த்தி இந்து அமைப்பான அரம்பை தெங்கோல் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். என்னைக் கொன்று விடும் படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது.

அந்த ஆண்கள் என் கண்ணைக் கட்டி கையைக் கட்டி இம்பாலின் வட பகுதியில் உள்ள (இ)லங்கோல் மலைக் குன்றுகளுக்கு இழுத்துச் சென்றார்கள். “நாங்கள் சொன்னபடி கேள்” என்று அதட்டினார்கள். என்னை வல்லுறவு கொள்ளப் போவதாக மிரட்டினார்கள். நான் அழுது புலம்பி என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சினேன். ஒருவன் துவக்குக் கட்டையால் ஓங்கியடித்தான். என் கண்களிலும் காதுகளிலும் குருதி வடிந்தது. நான் இணங்க மாட்டேன் என்று தெரிந்ததும் என்னைக் கண்ட படி தடவத் தொடங்கினார்கள்.

நான் உணர்விழந்தேன். விழித்துப் பார்த்த போது என் கீழாடை அவிழ்க்கப்பட்டிருந்தது. அது விடிகாலை நேரம். என்னை அவிழ்த்து விடுங்கள், கடன் கழிக்க வேண்டும் என்றேன். அது உன் கடைசி விருப்பம் என்றால் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிச் சிரித்தனர். கண்கட்டையும் கைகட்டையும் அவிழ்த்து விட்டனர். நான் சிறிது தூரம் நடந்து சென்று அங்கிருந்து மலையில் உருண்டேன். சேறும் சகதியும் குருதியுமாகச் சாலையில் விழுந்து கிடந்த என்னை ஒரு பங்கல் மிதியூர்தி(ஆட்டோ) ஓட்டுநர் காப்பாற்றினார். வெண்ணிற பொலேரோ வண்டி தொடர்ந்து வரக் கண்டு அருகிலிருந்த விட்ணுப்பூர் காவல் நிலையத்துக்கு எதிரில் கொண்டுபோய் நிறுத்தினார். காவல் நிலையத்துக்கு எதிரில் நான் நிற்கக் கண்ட வெறியர்கள் கிளம்பி விட்டனர்.

ஆனால் மெய்த்திக் காவலர்களை எப்படி நம்புவது? என்னைப் புதுச் செக்கோனில் கொண்டுபோய் இறக்கி விடும்படிக் கேட்டேன். சிவசேனைக்காரரும் முன்னாள் பாசக சட்டமன்ற உறுப்பினருமான டி.டி. ஃகாவுகிப்பு என்னை வரவேற்றுப் பேணினார்.

இம்பாலிலிருந்து சற்றொப்ப 136 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) தொலைவில் கொகிமாவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்ற பின் மீண்டும் குடும்பத்தினருடன் ஒன்று சேர்ந்தார். நான் மீண்டு வந்து விட்டேன் என்றாலும் என் குடும்பத்தினரின் கவலை தீரவில்லை. நான் பயங்கரக் கனாக் கண்டு விழித்துக் கத்துவதாக என் தங்கை (உ)டோனா ஃகாவுகிப்பு (வயது 16) சொல்கிறாள்.

இப்போது எங்கே இருக்கிறேன்? எப்படி இருக்கிறேன்? என்று கவலைப்படுவீர்கள் என்பதால் அதைச் சொல்லி முடிக்கிறேன்.

மணிப்பூரில் இம்பாலுக்கு வடக்கே காங்குபோக்குபி மாவட்டத்தில் குக்கி – சோமி இன மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தோர் துயர் தணிப்பு முகாமில் தங்கியுள்ளேன். முன்பு ஏதோ பயிற்சிக் கழகமாக இருந்த இடத்தை இப்போது எங்களுக்கான ஏதிலி முகாமாக மாற்றி அமைத்துள்ளனர். நெல் வயல்கள் சூழ்ந்த இந்த முகாமில் கிட்டத்தட்ட 30 குக்கி-சோமி இனக் குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.

என் உடலெங்கும் காயங்கள். அதற்காக மருத்துவம் செய்து கொள்கிறேன். நேரம் தவறாமல் மாத்திரைகள் உட்கொள்கிறேன். இந்தக் காயங்கள் ஒரு நாள் ஆறி விடும். ஆனால் எனக்கு மே 15ஆம் நாள் நேரிட்ட அந்தக் கொடுமை தந்த மன வலிக்கு மட்டும் மருந்தில்லை மக்களே! நடந்தவற்றை மறக்க நினைத்தாலும் மறக்க முடியவில்லை. விழிப்பிலும் உறக்கத்திலும் அந்த நினைவுகளும் கனவுகளும் வாட்டி வதைக்கின்றன.

என் கதையைச் சொல்ல இன்னமும் நான் உயிரோடு இருக்கிறேன். நடந்ததை நடந்தபடி சொல்லும் தெளிவோடும் துணிவோடும் இருக்கிறேன். ஆனால் எத்தனையோ குக்கி இனப் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்ல இப்போது உயிருடனில்லை. உயிருடன் இருந்தாலும் வெளியே சொல்ல அஞ்சிக் கிடக்கின்றார்கள்.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 263


வியாழன், 5 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 231 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 6

      05 October 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 230 : மணிப்பூர்க் கோப்புகள் – 4-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை (6)

என் பெயர் சோசுவா ஃகான்சிங்கு. மணிப்பூரில் குக்கி இனத்தைச் சேர்ந்தவன். என் மனைவி மீனா ஃகான்சிங்கு (அகவை 45) மெய்த்தி இனத்தைச் சேர்ந்த கிறித்தவப் பெண். எங்கள் ஏழு வயது மகன் தொன்சிங்கு ஃகான்சிங்கு. எங்கள் உறவினரான லிடியா (இ)லூரம்பம் (அகவை 37). அவரும் மெய்த்தி கிறித்தவர்.

நாங்கள் அனைவரும் இம்பாலில் இராணுவ முகாம் ஒன்றில் தங்கியிருந்தோம். எங்களுக்கு ஆபத்து வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

சூன் 4ஆம் நாள். 20-அசாம் தோணணி துப்பாக்கிப் படைப் பிரிவின் தண்ணீர் வழங்கல் ‘தோலனி’ல் என் மனைவி மீனாவும் மகன் தொன்சிங்கும் அறைக்குள் இருந்தனர். நான் தரைத் தளத்திலிருந்து தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தேன். அப்போது என் மகன் சாளரத்தில் இருமுறை துள்ளி விழக் கண்டேன். அவன் சுடப்பட்டுக் குண்டு பாய்ந்து காயமடைந்தான். எப்படி யாரால் சுடப்பட்டான் என்று தெரியவில்லை. யாரோ மறைந்திருந்து சுட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

“ஃகே பா! ஃகே பா!” [அப்பா! அப்பா!] என்று என் மகன் அலறினான். மூன்றாவது முறை அவனிடமிருந்து ஓசை இல்லை. என் மனைவி மெய்த்தி மொழியில் கத்தினாள்: “தாதா, அங்காங்கு யதாரே” [தாதா, நம் மகன் போய் விட்டான்!”]

நாங்கள் எங்கள் குழந்தையை இராணுவ ஆய்வு அறைக்குத் தூக்கிப் போனோம். தலையில் குண்டு பாய்ந்து குருதி பெருகிக் கொண்டிருந்தது. அவர்களால் இவனைக் காப்பாற்ற முடியாது என்று எங்களுக்குத் தெரிந்து விட்டது.

அவர்கள் அவனை ஊருக்குள் மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற போது என் மனைவி மெய்த்தி என்பதால் எதுவும் நேராது என்று நினைத்தேன். நாங்கள் இருப்பது இராணுவ முகாம் என்பதால் அவசர ஊர்தியில் இம்பால் செல்வதில் ஆபத்தில்லை என்று என் மனைவி கருதினார். அவசர ஊர்திக்கு வழிக்காவலாக மூன்று கொமாண்டோ சிப்சி வண்டிகள் அழைக்கப்பட்டன. ஆனால் இராணுவம் அவர்களுக்குப் பாதுகாப்பாகச் செல்லவில்லை.

மனைவியுடன் சென்ற தோழி (இ)லிடியாவும் மெய்த்திதான். (இ)லிடியாவின் கணவரும் மெய்த்திக்னு கிறித்தவர். அவர்களுக்கு ஏதும் தீங்கு நேராது என்று நினைத்தேன். ஆனால் நடந்தது வேறாகி விட்டது.

என் மகனும் மனைவியும் எங்கள் உறவினரான (இ)லிடியாவும் மணிப்பூர் இம்பாலில் உயிருடன் எரிக்கப்பட்டனர். மெய்த்தி வன்முறை வெறிக்கும்பல் அவர்களைப் பிடித்து எரித்து விட்டது. ஆனால் எப்போது அவர்கள் செத்தார்கள் என்று யாரும் எனக்குச் சொல்லவில்லை. சூன் 4ஆம்நாள் இரவு 7 மணியளவில் அவர்கள் இறந்து விட்டாலும், 5ஆம் நாள் எனக்கு எதுவும் சொல்லப்படவில்லை. 6ஆம் நாள்தான் எனக்கு செய்தி தெரிந்தது. என் மனைவியின் குடும்பம் மெய்த்தி இனம் என்பதால் உள்ளூர் செய்தி பார்த்து என் மாமனார்தான் எனக்குத் தகவல் தந்தார். கதறியழுவது தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை.

என் மனைவியும் மகனும் இறந்த செய்தியை மற்ற இரு பிள்ளைகளுக்கும் சொல்லாமலிருந்தேன். எப்படியோ செய்தி கிடைத்து அவர்கள் துடித்தழுது மயங்கி விழுந்து விட்டார்கள்.

என்னால் இந்தத் துயரத்திலிருந்து மீள முடியவில்லை. என் மகன் குக்கிக்கும் மெய்த்திக்கும் மகனாகப் பிறந்தது அவன் குற்றமா? அவன் மெய்த்திகளுக்கு மருமான் இல்லையா? மனிதர்கள் இந்த அளவுக்கு மனிதத் தன்மையற்று நடந்து கொள்வதை இப்போதுதான் பார்க்கிறேன்.

நாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் நான்கைந்து மெய்த்தி இல்லங்கள் உள்ளன. அவர்களுக்கு நாங்கள் எந்தக் கேடும் செய்ததில்லை. ஆனால் அவர்கள் இபப்டிச் செய்து விட்டார்கள். மெய்த்திகளின் மனப்போக்கு இப்போதுதான் எனக்கு விளங்குகிறது.

நான் என் மெய்த்தி உடன்பிறப்புகளைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வெறுப்புச் சிந்தையிலிருந்து விடுபடுங்கள். நாங்களும் உங்கள் மீது வன்மம் வளர்க்க மாட்டோம். இது மிக மோசமான குற்றம், இதற்கு மேல் ஒரு குற்றத்தை எண்ணிப் பார்க்க முடியாது. நான் உங்களைப் பணிவுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்: இவ்வகையான மனப்போக்கை விட்டொழியுங்கள்.

இறுதியாக, “ஃகே பா! ஃகே பா!” என் மகனின் கடைசிக் குரல் என்னை வாட்டுகிறது. மூன்றாவது முறை அவன் என்னை அழைக்க மாட்டானா? “ஃகே பா!”

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 262

புதன், 4 அக்டோபர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 230 : மணிப்பூர்க் கோப்புகள் – 4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 229 : மணிப்பூர்க் கோப்புகள் – 3 – தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

மணிப்பூர்க் கோப்புகள் (MANIPUR FILES)

காதை (5)


என் பெயர் தியன்ன வைப்பே சௌண்டாக்கு. மணிப்பூர் மாநிலம் பெய்டாச்சிங்கு சிற்றூரில் கிறித்துவ சமயக் குரு. மே 7ஆம் நாள் பெரிய வெறிக்கும்பல் ஒன்று எங்கள் ஊரைத் தாக்கியது.

மறுநாள் இரு குழந்தைகளின் தாயான 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் பாதி எரிந்து கருகிய நிலையில் கிடக்கக் கண்டேன். உடலில் ஆடையில்லை. இம்பாலில் உள்ள ஓர் அரசு மருத்துவமனைக்கு அந்த உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அது இப்போது எங்குள்ளது என்று தெரியவில்லை.

மே 6ஆம் நாள் கருஞ்சட்டை அணிந்து ஆயதமேந்திய ஆட்கள் ஊருக்குள் வந்தார்கள். மணிப்பூர் காவல் துறையின் ‘அதிரடிப்படை’களும் வன்முறைக் கும்பலுடன் சேர்ந்து வந்திருந்தார்கள்.

பின்கதை: காங்குபோக்குபியில் பதியப்பெற்ற இன்னொரு சுழிய முதல் தகவல் அறிக்கையில் [ZERO FIR] கண்டுள்ளபடி, மே 4ஆம் நாள் இம்பால் கிழக்கில் இரு பெண்களைப் பாலியல் வல்லுறவு கொண்டு கொலை செய்து விட்டனர். அந்தப் பெண்களில் ஒருத்தியின் தாய் முறைப்பாடு செய்து முதல் தகவல் அறிக்கை பதிந்துள்ளார். கோனுங்கு மாமாங்கு அருகிலுள்ள தங்களின் வாடகை வீட்டில் வைத்து நூறு இருநூறு பேர் கொண்ட வெறிக்கும்பல் தங்களைத் துன்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார். கொலையுண்ட பெண்களின் உடல்கள் இது வரை கிடைக்கவில்லை. காவல்துறை “அடையாளந்தெரியாத குற்றவாளிகள்” மீது வழக்குப் பதிந்துள்ளதாம்!

தாழி: சுழிய முதல் தகவல் அறிக்கை [ZERO FIR] என்றால் என்ன? குற்றத்தால் பாதிப்புற்றவர் குற்றம் நடைபெற்ற சரகத்திற்குரிய காவல் நிலையத்தில்தான் முறைப்பாடு செய்ய வேண்டும் என்றில்லாமல், எந்தக் காவல் நிலையத்தில் வேண்டுமானாலும் முறைப்பாடு செய்யலாம், அதாவது முதல் தகவல் அறிக்கை பதியலாம் என்பதற்கான வழிவகைதான் சுழிய முதல் தகவல் அறிக்கை. மணிப்பூரில் நடந்த குற்றங்களுக்கு முறைப்பாடு செய்ய இது பெரிதும் பயன்பட்டு வருகிறது.

(தொடரும்)
தோழர் தியாகு

தாழி மடல் 261