வியாழன், 31 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 196 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 3/4

      31 August 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 195 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.).! 2/4 – தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 3/4


புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?
இவை காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாசக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக் காலத்தில் ஆண்டொன்றுக்கு 13 சஎதச(ஊபா) வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு 34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது.

பெரும்பாலான சஎதச(ஊபா) வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதற்கான சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற சந்தேகக் காரணத்திற்கே பிரிவு 18 பயன்படுத்தப்படுகின்றது. தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வால் புலனாய்வு செய்யப்படும் 357 சஎதச(ஊபா) வழக்குகளில் 238 வழக்குகளில் பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெறும் 36% வழக்குகளில் மட்டுமே ஏதோ ஒரு பயங்கரவாதச் சம்பவம் நடந்திருக்கிறது. மற்றவற்றில் எல்லாம் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை; சதிதிட்டம் தீட்டினார்கள் என்ற பெயரில் பணம் கிடைத்தது, ஆயுதம் கிடைத்தது என்று சொல்லி பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரைத் தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது.

சஎதச(ஊபா) வழக்குகளின் விசாரணை முடிவதற்குக் குறைந்தது 3 இல் இருந்து 5 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பிணையை மறுத்து ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறையில் அடைத்து வைப்பதே சஎதச(ஊபா)வின் குறி.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் கொடுத்த புள்ளிவிவரப்படி சஎதச(ஊபா) வழக்குகளில் சிறைபட்டோரில் 2018 இல் 16.32%, 2019 இல் 32.08%, 2020 இல் 16.88% மட்டுமே பிணையில் வெளிவந்துள்ளனர்.

சஎதச(ஊபா) வழக்குகளில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டுத் தண்டனை பெறும் விழுக்காடு சராசரியாக 27.57( 2015 – 2020 காலத்தில்) மட்டுமே. இதேகாலப்பகுதியில் சஎதச(ஊபா)வில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெறும் ஆட்களின் விழுக்காடு சராசரியாக 2.80 மட்டுமே.

(மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் அனைத்தும் மக்கள் குடிமை உரிமைக் கழகம்(PUCL) கடந்த 2022 அட்டோபரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இருந்து பெறப்பட்டவையாகும்.)

‘குற்றம் இழைக்கவில்லை’ என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வேறுவிதமாக மெப்ப்பிக்கப்படும்வரை யாரும் குற்றவாளி அல்ல என்ற இயற்கை நீதிக்கான கருத்தைத் தலைகீழாக மாற்றுகிறது சஎதச(ஊபா).

சஎதச(ஊபா) சொல்லும் அதிருப்தி என்றால் என்ன?
“இந்தியாவிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு குடிமகனையும் கைது செய்ய இந்தச் சட்டம் அரசுக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்குகிறது.அல்லது எதிர்காலத்தில் இத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய ஆட்களைத் தடுத்து வைக்கலாம் என்கிறது.

இந்த அதிருப்தியின் பொருள் என்ன? பழங்குடிகள் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான உரிமைக்காகவோ (காடுகள் உரிமைச் சட்டத்தின்படி) உழவர்கள் நிலத்தை உழுவதற்கான உரிமைக்காகவோ தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைக்காகவோ இசுலாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவோ ஒருவர் பேசத் துணிந்தால், அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக அவர் சஎதச(ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்படலாம்!

யாரைத்தான் விட்டுவைத்தது சஎதச(ஊபா)?
மராட்டியத்தில் பீமா கோரேகான் வழக்கு!

கனிம வளங்களை பெருநிறுமங்கள்(கார்ப்பரேட்கள்) கொள்ளையடிப்பதற்கு எதிராக பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்குத் துணைநின்றவர்கள், தணிந்த(தலித்து) மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் இவ்வழக்கில் சிக்க வைக்கப்பட்டனர். நாடறிந்த மனிதவுரிமைச் செயற்பாட்டாளர், கலைஞர்கள், பேராசிரியர்கள், அருட்தந்தை இசுடான் சுவாமி முதலான 16 பேர் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் சிறைப்பட்ட அருட்தந்தை இசுடான் சுவாமி பார்க்கின்சன் நோய்க்கு ஆளாகியிருந்த 85 அகவை முதியவர். சிறையில் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு இவர் சாகடிப்பட்டதை நாடே கண்டது.

பீமா கோரேகான் வழக்கில் மூன்றுமுறை குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டுப் புதியபுதிய ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தலைமை அமைச்சரைக் கொல்ல சதிசெய்தனர் என்பதொரு குற்றச்சாட்டு. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணிணிக்குள் திருட்டுத்தனமாகச் சான்றுகளைத் திணித்துள்ளது மோடி அரசு என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. ஆனாலும் இவ்வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் இன்றளவும் பிணை மறுக்கப்பட்டுச் சிறையில் வாடிவருகின்றனர்.

மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்கு துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித்து, சருசீவு இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று சஎதச(ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஃபூரா சார்கர், குல்சிமா பாத்திமா, நடாசா நர்வால், அசிப் இக்குபால் தன்கா, மீரான் ஐதர், தேவங்கனா கலிடா முதலான மாணவர்கள் சஎதச(ஊபா) வின் கீழ் வழக்கை எதிர்கொண்டவர்கள் ஆவர்.

ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இராசுதீபு சருதேசாயும் வினோத்து கே சோசும் உழவர் போராட்டத்தின் நிகழ்வுகளைக் குற்றாய்வு செய்ததற்காக அரசஇரண்டகச் சட்டத்தின்கீழ் வழக்கை எதிர்கொண்டனர். கவுகர் கீலானி, மசுரத்து சாக்குரா, பீர்சாடா ஆசிக்கு ஆகிய காசுமீரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மீது சஎதச(ஊபா)வின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சித்திக்கு கப்பான் மீது உத்தரபிரதேச அரசு சஎதச(ஊபா) பிரிவுகளின்கீழ் வழக்குப் போட்டது.

பாசக அரசால் இயற்றப்பட்ட மக்கள் எதிர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர் போராட்டத்தின் போது அவர்கள் மீது சஎதச(ஊபா)வின்கீழ் வழக்குப் போட்டது மோடி அரசு.
அரசு உதவிபெறும் சுரங்க நிறுவனங்கள், தனியார் சுரங்க நிறுவனங்களிடம் உள்ள சட்டஎதிர் சுரங்கத்தை எதிர்த்துப் போராடும் மாவோவியர்கள், பிற பழங்குடிகளை இச்சட்டத்தின் கீழ் வேட்டையாடுகின்றனர். சார்க்கண்டின் மசுதூர் சங்கதன் சமிதி (இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டப்பூர்வமாக செயல்பட்டு 22,000 பழங்குடியினத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம்) போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களை அமைப்பாக்கும் தொழிலாளர்கள் அல்லது பம்பாய் மின்சார ஊழியர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஊபா( UAPA)வின் கீழ்க் கைது செய்யப்பட்டுச் சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் தொழிற்சங்கம் சிதைக்கப் பட்டது.

இசுலாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையிருக்கு எதிராக இச்சட்டம் மிக மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆண்டுக்கணக்கில் பிணையின்றிச் சிறையில் வாடுவது நடந்து கொண்டிருக்கிறது. எந்தக் குற்றமானாலும் இசுலாமியர் என்றால் சஎதச(ஊபா) பிரிவுகளைப் பயன்படுத்துவதும் அரச இயந்திரத்தின் இயல்பாக மாறிவருகின்றது. எடுத்துக்காட்டாக, முகமது அமீர் கான் என்ற இசுலாமிய இளைஞர் சஎதச(ஊபா) வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு ’குற்றமற்றவர்’ என்று விடுதலை ஆவதற்கு முன்பு 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.


இவர்களுக்கு வாதாட முன்வரும் வழக்கறிஞர்கள் மீதும் சஎதச(ஊபா) பாய்கிறது. மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங்கு, தெலங்கானாவைச் சேர்ந்த 9 வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டில் வழக்கறிஞர் முருகன் எனசஎதச(ஊபா) வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களை சிறையில் அடைத்து மிரட்டும் வரிசையில்தான் இன்று முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்துத்துவத்தின் இந்து தேசியத்தை ஏற்காத இசுலாமியர்கள் ஒருபக்கம்! இந்து தேசியத்தை ஏற்காத காசுமீர், தமிழ்நாடு, பஞ்சாப்பு, நாகலாந்து, மணிப்பூர்முதலான மாநிலங்களைச் சேர்ந்த தேசிய இன அரசியல் ஆற்றல்கள் இன்னொருபக்கம்! இந்துத்துவத்தின் பெருநிறுமக்(கார்ப்பரேட்டு) கொள்ளையை எதிர்க்கும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள், நக்குசல்பாரி அமைப்பினர், உழவர்கள், தொழிலாளர்கள், இன்னொருபக்கம்! இவர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக சஎதச(ஊபா)வின் கீழ்க் குற்றஞ்சாட்டப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223

புதன், 30 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 195 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 2/4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 194 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 1/4 – தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 2/4

இதைக் கண்டித்து மதுரை வழக்கர் சங்கம்(பார் அசோசியேசன்), தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கர் சங்கக் கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தைத் தமிழ்நாடு அரசு உடனே கொண்டுவர வேண்டும்; வழக்கறிஞர்களை பொய் வழக்குகளில் கைது செய்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.)அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதைக் கண்டித்துத் தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று இவர்களுக்குப் போராடவில்லை எனில் நாளை எந்தவொரு சாமானியனும் வழக்கறிஞரை வைத்து சட்டமுறையில் கூடச் சிறையிலிருந்து வெளியே வர முடியாது.

இசுலாமியர்களைக் குதறும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.):
திறந்த வீட்டில் ஏதேதோ நுழைவது போல் தே.பு.மு.(என்.ஐ.ஏ.). தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்களை வேட்டையாடி வருகிறது. அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சோதனை நடத்துவதன் மூலம் இசுலாமிய மக்களைத் தொடர் அச்சுறுத்தலில் வைப்பதும் பொது சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதும் நடந்து வருகிறது.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) அமைப்பின் மீதான தடையைக் காரணமாகச் சொல்லிக் கொண்டு இந்தச் சோதனைகளும் கைதுகளும் நடத்தப்படுகின்றன.

நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.)–பாசகவின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை எதிர்த்து இசுலாமியர்கள் அமைப்பாவதையும் போராடுவதையும் பயங்கரவாதமென முத்திரை குத்தி அச்சுறுத்த நினைக்கிறது அரசவன்ம பாசக அரசு.

கடந்த செட்டம்பரில் போடப்பட்ட வழக்குக்கான குற்றப் பத்திரிகையைப் பதிவு செய்யாமல் மார்ச்சு 27 வரை இழுத்தடித்தது தே.பு.மு.(என்.ஐ.ஏ.).! அதையும்கூட நீதிமன்றத்தில் முன் வைக்காமல் காலந்தாழ்த்தியது; குற்றஞ்சாட்டப்பட்டோர் உயர்நீதிமன்றத்தை அணுகித்தான், ”குற்றப் பத்திரிகையைத் தே.பு.மு.(என்.ஐ.ஏ.). வெளியிட்டாக வேண்டும்” என்ற ஆணையைப் பெற்றனர். இந்நிலையில்தான் மேற்படி ஐவரையும் இவ்வழக்கில் இணைத்துச் சிறைப்படுத்தியுள்ளது தே.பு.மு.(என்.ஐ.ஏ.).

கோவையில் நடந்த எரிவாயு உருளை வெடிப்பையும் பயன்படுத்திக் கொண்டு ஏதோ தமிழ்நாட்டில் இசுலாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது போல் கதைகட்டத் துடிக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.). கேட்பார் யாரும் இல்லை என்பது போல் தமிழ்நாட்டில் சோதனைகளும் கைதுகளும் தொடர் கதையாகி இருக்கிறது.
அரசவன்முறையின்(பாசிசத்தின்) அடக்கு முறை கருவியாய் சஎதச(ஊபா)!


சஎதச(ஊபா) வந்த பாதை:
1962 சூன் மாதத்தில் தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவையை நேரு தலைமையிலான காங்கிரசு அரசு அமைத்தது. அப்பேரவை தேசிய ஒருமைப்பாடு, வட்டாரவியம் குறித்த குழுவொன்றை அமைத்தது. அக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையையும் பாதுகாப்பதற்கும் நீடிக்கச் செய்வதற்கும் ஒன்றிய அரசுக்குப் போதுமான அதிகாரங்களை உரித்தாகும் வகையில் கருத்தை வெளியிடுவதையும் கூட்டம் கூடுவதையும் அமைப்பாவதையும் அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடிக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 19 ஐ திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு இணங்க 1963ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 16 ஆவது சட்டத் திருத்தம் உறுப்பு 19ஐ இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் நலனின் பெயரால் கட்டுப்படுத்தக் கூடிய திருத்தத்தைப் புகுத்தியது. 16 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை செயல்படுத்தும் நோக்கில் சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) 1967 ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசு அரசால் இயற்றப்பட்டது. அதுவரை மக்கள் அமைப்பாவதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்தன. இந்தச் சட்டத்தின் மூலம் அமைப்புகளைத் தடைசெய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கிக் கொண்டது. நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்படுவதாக காரணம் சொல்லப்பட்டது.

மிசா, தடா, பொடா என அடுத்தடுத்து வந்த அடக்குமுறைச் சட்டங்கள் சனநாயக ஆற்றல்களின் போராட்டத்தால் முடிவு கட்டப்பட்டன. ஆனால் ஒரு கருப்புச்சட்டத்தை கைவிடும்போது அதன் கூறுகளைக் கொண்ட இன்னொரு புதிய சட்டத்தைக் கொண்டு வருவதை ஆளும்இனம் வாடிக்கையாகக் கொண்டிருந்தது.
2001 ஆம் ஆண்டு செட்டம்பரில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத் தாக்குதலைப் பயன்படுத்திக் கொண்டு ’பன்னாட்டுப் பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்றது அமெரிக்கா. புதிய தாராளவாதப் பொருளியல் கொள்கையை எதிர்க்கும் மேற்காசியாவில் உள்ள அரபு நாடுகளை ஒடுக்குவதற்கு அவர்களின் எதிர்ப்பைப் ‘பன்னாட்டுப் பயங்கரவாதம்’ என்று முத்திரை குத்தியது அமெரிக்கா. அந்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் புதிய தாராளவாதம் என்னும் அரசியல்பொருளியல் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்கான இராணுவக் கோட்பாடாக வடிவமைத்தது அமெரிக்கா. இரட்டைக் கோபுரத் தாக்குதலை பயன்படுத்திக் கொண்டு ஐ.நா. பாதுகாப்புப் பேரவையில் 2001 செட்டம்பர் 21 அன்று பன்னாட்டுப் பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்மானம் 1373 ஐ இயற்றியது. இத்தீர்மானம் ஐ.நா. வின் அனைத்து உறுப்பரசுகளும் பன்னாட்டுப் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றது.

உலகில் உள்ள எல்லா அரசுகளும் தன்னாட்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு அமெரிக்க வல்லரசியம் (ஏகாதிபத்தியம்) உருட்டிவிட்ட ’பயங்கரவாத தடுப்பு’ என்ற பகடைக் காயைப் பயன்படுத்திக் கொண்டன.

2002ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தாக்குதலைச் சாக்காகக் கொண்டு பொடா சட்டத்தைப் பாசக அரசு அறிமுகப்படுத்தியது. அந்தக் கறுப்புச் சட்டத்தின் பேயாட்டம் கிளப்பிவிட்ட போராட்டப் புழுதியால் சட்டத்தைத் திரும்பப் பெறும் கட்டாயம் ஏற்பட்டது.

வழமைப் போலவே, 2004 ஆம் ஆண்டு பொடா சட்டத்தைத் திரும்பப் பெற்றவுடன் காங்கிரசு அரசு சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டத்தில்( ஊபா) பயங்கரவாத தடுப்புக் கூறுகளை சேர்த்தது. சட்டஎதிர் தடுப்புச் செயல்களின் வரைவிலக்கணத்தில் ’பயங்கரவாத செயல்’ , ‘பயங்கரவாத அமைப்பு’ ஆகியவை சேர்க்கப்பட்டன. பிணை கிடைப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் சிறைப்பட்டவரின் முதல் நோக்கிலான குற்றமின்மையை நீதிமன்றம் ஒப்புகொண்டால்தான் பிணை தரப்படும் என்ற திருத்தம் செய்யப்பட்டது.

2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு சஎதச(ஊபா) சட்டம் திருத்தப்பட்டது. இப்போது மிக வெளிப்படையாகவே மேற்சொன்ன ஐ.நா. தீர்மானம் 1373 ஐச் சுட்டிக்காட்டி அதன் அடிப்படையிலேயே இத்திருத்தத்தைக் கொண்டுவருவதாக சொன்னது இந்திய அரசு. இச்சட்டத்தில் உள்ள பிரிவு 43(ஈ) இல் செய்யப்பட்ட திருத்தங்கள் பிணை கொடுப்பதில் கூடுதல் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தன. ஆறு மாதத்திற்கு மேல் தடுத்து வைப்பதற்கும் புலனாய்வு செய்வோர் 90 நாட்களுக்குள் புலனாய்வை முடிக்க இயலாவிடில் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவரை தடுத்து வைப்பதற்கான காலத்தை 180 நாட்கள் வரை நீட்டிக்கவும் திருத்தங்கள் வழிவகுத்தன. இந்தத் திருத்தத்தின் மூலம் சஎதச(ஊபா) என்பது பண்பளவில் ஆபத்தான சட்டமாக மாற்றப்பட்டது. இதே ஆண்டில், தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டமும் இயற்றப்பட்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) என்றொரு புதிய புலனாய்வு நிறுவனம் உருவாக்கப்பட்டது.

2012இல் மீண்டும் ஒருமுறை இச்சட்டம் திருத்தப்பட்டது. நிதியியல் நடவடிக்கைக்கான செயலணி (Financial action task force) என்ற பன்னாட்டு அமைப்பில் ஒப்புக்கொண்டதற்கு இணங்கப் பண மோசடியையும் பயங்கரவாதத்திற்கு பணம் கொடுப்பதையும் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் திருத்தங்கள் செய்யப்பட்டன. எந்த ஓர் இயக்கத்தையும் காரணம் சொல்லாமல் ’சட்ட எதிர்’ என அறிவித்துக் கைதுகளைச் செய்யலாம், ஆறு மாதங்கள் வரை இப்படிச் சட்டஎதிராக அறிவித்ததற்கான காரணங்கள் என எதையும் சொல்ல வேண்டியதில்லை ஆகிய திருத்தங்களும் செய்யப்பட்டன.

2019இல் செய்யப்பட்ட திருத்தம் எந்தவோர் ஆளையும் ‘பயங்கரவாதி’ என அரசு முத்திரையிடுவதற்கு வழிசெய்கிறது. இதன் காரணமாக இச்சட்டம் இருப்பவற்றில் மிகவும் ஆபத்தான சட்டமாக மாறிவிட்டது.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

தமிழ் அகராதியியல் நாள் – ஆய்வு மலருக்குக் கட்டுரைகள் வேண்டப்படுகின்றன

 


செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
தமிழ் அகராதியியல் நாள் 2023

ஆய்வு மலர்

கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய நாள் : 15.09.2023 மாலை 5,00 மணிக்குள்
அனுப்ப வேண்டிய மின்வரி : agarathimalar2020@gmail.com

விவரம் அறிவிப்பில் காண்க





தோழர் தியாகு எழுதுகிறார் 194 : இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! 1/4

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 193 : நலங்கிள்ளி , பொன்.சந்திரன் கருத்தூட்டங்கள்-தொடர்ச்சி)

இனிய அன்பர்களே!

தேசியப் புலனாய்வு முகமையையும் சஎதச(ஊபா) சட்டத்தையும் கண்டித்து அரசவன்முறை(பாசிச) எதிர்ப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கையை தாழி (216) மடலில் வெளியிட்டிருந்தோம். இவ்வறிக்கை மேலும் செப்பம் செய்யப்பெற்று மீண்டும் வெளியிடப்படுகிறது. தெளிவு பெறுங்கள். பிறரையும் தெளிவு பெறச் செய்யுங்கள்.

++++

இசுலாமியர்களை வேட்டையாடும் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!


வழக்கறிஞர்கள் மீதும் சஎதச(ஊபா)வின் கீழ்ப்
பொய் வழக்கு!
அரசவன்முறையின்(பாசிசத்தின்) வன்முறை நிறுவனமாய்த் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!
அரசவன்முறையின்பாசிசத்தின் அடக்குமுறைக் கருவியாய் சஎதச(ஊபா)!
மோடி அரசின் அரச பங்கரவாதத்தை முறியடிப்போம்!

தமிழ்நாட்டில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) நடத்திய மற்றுவொரு கைது நடவடிக்கை!.
புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) அமைப்பு கடந்த ஆண்டு செட்டம்பரில் தடைசெய்யப்பட்டவுடன் அவ்வமைப்பைக் கலைத்து விட்டதாக அதன் நிருவாகிகள் அறிவித்து விட்டனர். அதன் பிறகும் கூட, ஏறத்தாழ ஏழு மாதங்கள் கழித்து, அவ்வமைப்பில் முன்னாள் நிருவாகியாய் இருந்த சென்னையைச் சேர்ந்த தோழர் அத்துல் இரசாக்கு முதலான ஐந்து இசுலாமியர்கள் கடந்த 2023 மே 9 அன்று தேசியப் புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்!

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வழக்காடிய முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் அதே வழக்கில் சேர்க்கப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) இசுலாமியர்கள் மீதான நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.) – பாசகவின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் மாநில உரிமைகளுக்காகவும் சஎதச(ஊபா) முதலான அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராகவும் அரசமைப்புச் சட்ட உரிமைகளைப் பாதுகாக்கவும் மக்களிடையே பரப்புரை செய்தது; இசுலாமியர்களை அமைப்பாக்கியது; இசுலாமியர்கள் அமைப்பாக்கிக் கொள்வதையும் போராடுவதையும் கட்டுப்படுத்தும் நோக்கில் புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) மீது பயங்கரவாத முத்திரை குத்தி தடை விதித்தது அரசவன்ம பாசக அரசு.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) அமைப்பைத் தடை செய்வதற்குக் காரணமாக அவ்வமைப்பினர் வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக் கொண்டு பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிட்டனராம்; சட்டஎதிர் செயல்கள், பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்குத் சதித்திட்டம் தீட்டினராம்; இரு பிரிவினருக்கு இடையே பகை வளர்க்கும் செயல்களில் ஈடுபட்டனராம்: தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்சேர்த்தனராம்; பேரணி நடத்தினராம்; ஈ.சி.இ.அ.(ஐ.எசு.ஐ.எசு.) போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் கமுக்கத் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களை ஆதரித்தனராம்; இதுபோன்ற தகவல்கள் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வுக்குக் கிடைத்ததாம். அதன் அடிப்படையில் அவ்வமைப்பை தடை செய்தார்களாம்! மேற்சொன்ன குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடுத்திருக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.).

கணக்கற்ற கலவரங்களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான இசுலாமியர்களைப் படுகொலை செய்து, மசூதிகளை இடித்துத் தள்ளி, மசூதிகளுக்கு வெடிகுண்டு வைத்து, காந்தி தொடங்கி பன்சாரே, தபோலர், கவுரி இலங்கேசு, கல்புரிகி எனப் பலரையும் சுட்டுக் கொன்று, இசுலாமியர்களை இனவழிப்பின் அபாயத்தில் நிறுத்தியிருக்கும் நா.தொ.ச.(ஆர்.எசு.எசு.) தலைமையிலான ‘சங்’ பரிவார அமைப்புகள் செயல்படுவதற்கு அனுமதியுண்டு. ஆனால், இதற்கு எதிராக அமைப்பாக்கிக் கொண்டு போராடுவதற்கு தடையாம்! இந்த வெட்கக் கேடான தடையை எதிர்த்து நிற்போம்! அரசவன்ம(பாசிச)த்தை ஒருவர் எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டால் அவர் கட்டாயம் இந்தத் தடையை எதிர்த்துப் போராடியாக வேண்டும்.

புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) கடந்த 2022 செட்டம்பர் 28 ஆம் நாள் தடைசெய்யப்பட்டது. கடந்த 2022 செட்டம்பர் 19 அன்று போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120(ஆ), 153-அ, 153-அஅ ஆகியவற்றின் கீழும் சட்ட எதிர் செயல்கள் தடுப்புச் சட்டப் (ஊபா, UAPA) பிரிவுகள் 13,17,18, 18(ஆ), 38, 39 ஆகியவற்றின் கீழும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 9 பேர் சிறைபட்டிருந்தனர். சஎதச(ஊபா) முதலான அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றின் தமிழ் மாநில அமைப்பாளராகச் செயல்பட்ட தோழர் காலித்து முகமது முதலான 9 பேர் சிறைபட்டுள்ளனர்.

கடந்த 2022 ஏப்பிரல் 13 அன்று மேற்சொன்னப் பிரிவுகளுடன் சஎதச(ஊபா) பிரிவுகள் 20, 22ஆ. ஐயும் சேர்த்து முன்னமே இன்னொரு வழக்குப் போடப்பட்டிருந்தது. முதல் வழக்குப் போடப்பட்டதோ ஏப்பிரலில்! ஆனால், அதற்கான கைது நடவடிக்கையை தே.பு.மு.(என்.ஐ.ஏ.)மேற்கொண்டது செப் 22 இல்! இதில் 21 பேர் சிறைப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர்.

  1. ஒரே குற்றத்திற்காக இரண்டு வழக்குகளைச் சட்டஎதிராகப் போட்டுள்ளது.
  2. பயங்கரவாதக் குற்றங்களுக்கான பிரிவுகளின் கீழ் ஏப்பிரல் மாதத்தில் ஒரு வழக்கைப் பதிந்துவிட்டு ஐந்து மாதங்கள் கழித்து அவ்வழக்குக்காகக் கைது செய்திருப்பதில் இருந்தே தெரிகிறது குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை!
  3. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்ட சட்டஎதிர் செயல்கள் என்ன என்பது பற்றி எதுவும் பதிவு செய்யாத நிலையில் பிரிவு 13இன் கீழ்ச் சட்டஎதிராகச் சிறையிலடைத்திருக்கிறது
  4. இரு பிரிவுகளுக்கு இடையே நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தார்கள் என்ற குற்றஞ்சாட்டிற்கு எவ்வித சம்பவமோ ஆதாரமோ காட்டப்படவில்லை
  5. பிரிவு 38, 39 ஆகியவை பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராய் இருப்பது பற்றியது. ஆனால் புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்) பயங்கரவாத அமைப்பு என்பதற்காகத் தடை செய்யப்படவில்லை, மாறாகச் சட்டஎதிர் செயல்களில் ஈடுபடும் அமைப்பு என்ற பெயரிலேயே தடைசெய்யபட்டுள்ளது. உறுப்பினராக இருந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக சஎதச(ஊபா) சட்டத்தின் கீழ்க் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் மார்ச்சு 2023இல் தீர்ப்பளித்த பிறகும் கூட இதே காரணத்திற்காக சஎதச(ஊபா)வின் கீழ்க் கைது செய்யப்பட்டிருப்பது அப்பட்டமான சட்ட மீறல் மட்டுமல்ல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தூக்கி எறிவதும் ஆகும். அதுமட்டுமின்றி, அப்படித் தடைசெய்யப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சஎதச(ஊபா)வின் கீழ்க் கைது செய்திருப்பது திட்டமிட்ட அரச பயங்கரவாதமே.
  6. வழக்கம் போலவே, சஎதச(ஊபா)வின் பிரிவு 18 – பயங்கரவாத செயல்களைச் செய்ய சதிதிட்டம் தீட்டியக் குற்றத்திற்கான பிரிவு இவ்வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போலவே, எவ்விதப் பயங்கரவாதச் செயல்களும் நடக்காமலே இப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிவைக்கப்படும் வழக்கறிஞர்கள்:
இவ்வழக்கு சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதை நீக்கக் கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தே.பு.மு.(என்.ஐ.ஏ.) தன் விருப்பப்படி விசாரணைக்கு அழைப்பதையும் பொருட்களைப் பறிமுதல் செய்ததையும் அவர்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள்தான் முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் ஆவர்.

முகமது அப்பாசு தே.பு.மு.(என்.ஐ.ஏ.) போட்ட வழக்குகளில் கைதானவர்களின் சார்பாக 10 வழக்குகளில் வாதாடியவர்; 4 வழக்குகளில் முகமது யூசுப்பும் வாதாடியிருந்தார்.
இதற்கிடையே 5.3.2023 அன்று மதுரை கோரிபாளையத்தைச் சேர்ந்த முகமது அலி சின்னா என்பவரை ’விசாரணை’ என்ற பெயரில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)அதிகாரி கா.து.க.(டி.எசு.பி.) செந்தில்குமார் கூட்டிச் சென்று மிக மோசமாகச் சித்திரவதை செய்கிறார். இதனால் மயங்கி விழுந்ததை மறைத்து, மருத்துவமனைக்கு அருகில் வலிப்பு வந்து விழுந்து கிடந்தார் என்று பொய்யாகக் கூறி மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். ஆனால் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) அதிகாரிகள்தான் சின்னாவைச் சேர்த்ததாக வழக்கறிஞர் முகமது அப்பாசு கமுக்க அகக்காட்சிகளைப்(சிசிடிவி) ) பெற்றுத் தெரிந்துகொள்கிறார். இதை முகநூலில் அம்பலப்படுத்துகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தே.பு.மு.(என்.ஐ.ஏ.). கா.து.க.(டி.எசு.பி.) செந்தில்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் தே.பு.மு.(என்.ஐ.ஏ.). மீதான அவதூறு பரப்பல்’ என்று முகமது அப்பாசு மீது வழக்கு பதிவு செய்கிறார். பின்னர் பயங்கரவாதச் சட்டமான சஎதச(ஊபா)வைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டுவிட்ட பி.எப்.ஐ அமைப்பின் உறுப்பினர் எனப் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு தே.பு.மு.(என்.ஐ.ஏ.).வால் கைது செய்யப்படுகிறார்.
தே.பு.மு.(என்.ஐ.ஏ.)வால் பொய்யாகப் புனையப்படுகின்ற வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்கான வழக்கறிஞராக வருபவர்களை எல்லாம் ’பயங்கரவாதி’ என முத்திரை குத்திக் கைது செய்வது அப்பட்டமான அரசியல் சட்ட மீறலாகும். இது மோடி ஆட்சியின் அரசவன்ம ஒடுக்குமுறையின் கோர வடிவமாகும். இது அரச பயங்கரவாதமாகும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று மேனாள் உச்சநீதிமன்ற நீதியர் மார்க்கண்டேய கட்சுவே கண்டித்திருக்கிறார்.


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223

திங்கள், 28 ஆகஸ்ட், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 193 : நலங்கிள்ளி , பொன்.சந்திரன் கருத்தூட்டங்கள்

 





(தோழர் தியாகு எழுதுகிறார் 191 : கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்!- தொடர்ச்சி)

அன்பர் நலங்கிள்ளி எழுதுகிறார்.


தாழி 221 கண்டேன்.

இந்து அறநிலைத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா? என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை கண்டேன்.

அனைவருக்கும் தெளிவை ஏற்படுத்தும் கட்டுரை.

இது குறித்து என் கருத்தையும் பதிவிட விரும்புகிறேன்.

மதச் சார்பின்மை என்பது எல்லா மதத்தையும் சமமாக நடத்துவதில்லை, எல்லா மதத்திலிருந்தும் விலகியிருத்தல்.

அமைச்சர்கள் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது, மத விழாக்களில் கலந்து கொள்வது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

அரசு அலுவலகங்களில் தொங்கும் கடவுளர் படங்களை அகற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் உள்ள கோயில்களை அகற்ற வேண்டும். பள்ளிகளில் மத போதனை கூடவே கூடாது. சொல்லப் போனால், மத அமைப்புகள் பள்ளிகளை நடத்தக் கூடாது. அனைத்துப் பள்ளிகளையும் மதச் சார்பற்ற வகையில் அரசே ஏற்று நடத்த வேண்டும்.

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் இந்து மதச் சார்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.

உடனே எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. முதலமைச்சர் மு. க. தாலினின் மனைவி துருக்கா தாலின் சுமங்கலிகளை வைத்துக் குத்து விளக்கு பூசை நடத்தினார். அதில் சேகர் பாபுவும் கலந்து கொண்டு சிறப்பித்தார். பெண்களை இழிவுபடுத்தும் பூசையை துருக்கா தாலின் நடத்தி விட்டுப் போகட்டும், அங்கு அமைச்சருக்கு என்ன வேலை?

துருக்கா தாலின் அவரது கணவருக்காக இறை வழிபாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லைதான். ஆனால் அவரது வழிபாட்டு முறை பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிப்பதாக உள்ளது. கோயில்களில் யாகம் வளர்ப்பது, புரோகிதர்களை கெளரவிப்பது என மாமி வேடம் போடுகிறார்.

Durga Stalin’s Pooja Room Tour என்ற பெயரில் ஒரு வலையொளி. அந்தக் காணொளியில் துருக்கா தாலின் அவர்கள் தன் வழிபாட்டு முறைகளை விளக்குகிறார். அனுமார் படம் ஒன்றைக் காட்டி, இதுதான் உண்மையான அனுமார் என்கிறார். சரி, இதெல்லாம் அவரது தனிப்பட்ட சமய வாழ்வியல். ஆனால் இந்தப் பூசையறைக் காட்சிகள் மு.க.தாலின் இசைவின்றி வெளிவந்திருக்குமா? அப்படியானால் நாங்கள் இந்து மதத்துக்கு நெருக்கமானவர்கள் எனத் திமுக காட்டிக் கொள்ள விரும்புகிறதா?

இது மட்டுமல்ல, சங்கப் பரிவாரம் நடத்தும் வினாயக சதுர்த்தி ஊர்வலங்களைத் திமுக தலைவர்களும் அமைச்சர்களும் நடத்துகின்றனர்.

அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி புரோகிதர்கள் உட்கார்ந்திருக்கும் சாமிப் பல்லக்கைத் தூக்கிச் செல்கிறார்.

சங்கப் பரிவாரததுக்கு அஞ்சி இப்படிப்பட்ட அரசியலைத் திமுக நடத்தினால், நாம் பாசகவுக்கே வாக்களித்து விடலாமே என்ற முடிவுக்கே மக்கள் வந்து விடுவார்கள்.

விழித்துக் கொள்ளுமா திமுக தலைமை?
00000


அன்பர் பொன். சந்திரன் எழுதுகிறார்:
சமய விடுமையின் பால் (மத சுதந்திரம்) ஒரு விடுதலை இயக்கத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் உங்கள் நிலைப்பாட்டோடு முழுமையாக உடன்படுகிறேன். உங்களால் இதை ஆங்கிலத்தில் தர முடியுமானால் நாடெங்கும் கொண்டுசேர்த்து அனைத்து விடுதலைக் குழுக்களின் கவனத்தையும் ஈர்க்கலாம் என்பது என் முன்மொழிவு. கருதிப்பார்க்க வேண்டுகிறேன்.
தாழி:
அன்பர் கோவை பொன். சந்திரன் சொன்ன படியே செய்வோம்.

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2023

பறவைகளை நேசிப்பவரா?அப்படியானால், இதைப் படியுங்கள்!

 




பறவைகளை, மக்களை நேசிப்பவரா?அப்படியானால், இதைப் படியுங்கள்!

“பறவைகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்று மட்டும் இல்லாவிட்டாலும், இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதி இல்லாமல் ஆகிவிடும். சென்னை போன்ற நகரங்களில் பறவைகள், பட்டாம்பூச்சி இனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. நமது இயல்பான வாழ்க்கையை அவை சுட்டிக்காட்டுகின்றன. நம்மை சுற்றியுள்ள பறவைகளின் மூலம், நமது வாழ்க்கையின் எதிரொளிப்புகளை கவனிக்க முடியும். அனைவருமே முடிந்த வரையில், தமது வீடுகளில் உள்ள தோட்டம், மரம், செடிகள், மேல் மாடி அல்லது கூரைகளில் வசிக்கும் பறவைகளுக்கு முடிந்த அளவு தானிய வகைகள், தண்ணீர் ஆகியவற்றை வைக்கவேண்டும். அவ்வாறு வைப்பதன் மூலம் கிடைக்கும் உணர்வை உணர்ந்து பாருங்கள்.” இவ்வாறு கூறி வருபவர் பறவை நல ஆர்வலர் மைக்கேல் இயூபருட்டு

கோடம்பாக்கம், இயக்குநர் குடியிருப்பில் உள்ள தன் வீட்டில் மூலிகைச் செடிகளை வளர்க்கிறார். சுற்றிலும் பறவைகள் தங்குவதற்கான சிறு சிறு வீடு போன்ற அமைப்பையும், வீட்டிற்கு வெளியே ஆங்காங்கே செய்து வைத்துள்ளார்.  “அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மாடங்களில்(பால்கனிகளில்) பறவைகளுக்கான உணவையும், தண்ணீரையும் வைத்து வரவேண்டும். பல காரணங்களுக்காக மனிதர்களை மனிதர்களே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதைப்போல பறவைகளையும் நாம் கவனிக்காமல் விடக்கூடாது. பறவைகளை நேசிப்பது நம்முடைய பல உளவியல் சிக்கல்களுக்குத் தீர்வாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.” என்று அவர் சொல்கிறார்.

நீங்கள் மனித நேயரா? அப்படி என்றால் மேலும் படியுங்கள்!

‘சப்னம்’ என்ற அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பின் மூலம் 25 ஆண்டுகளாகச், சென்னை,  புறநகர் பகுதி, சிற்றூர்ப் பகுதிகளில் உள்ள வறுமையில் வாடும் குழந்தைகள், இளைஞர்களுக்கான கல்வி, நல்வாழ்வு ஆகிய நிலைகளில் பல உதவிகளை மைக்கேல் இயூபருட்டு செய்து வருகிறார். படிப்பைப் பாதியில் விட்டுவிட்ட மாணவர்களுக்குக் கல்வியை மேற்கொண்டு தொடர உதவி செய்து, பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்கத் தற்தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவதோடு, இளைஞர் முன்னேற்றப் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறார்.

இவ்வாறு முதியோர், மூத்தோர், குழந்தைகள், ஊனமுற்றோர், பேரிடர் மேலாண்மை, கல்வி-கல்வியறிவு, சுற்றுச்சூழல்- இயற்கை வள மேலாண்மை, உணவு-வேளாண்மை, புதிய-புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சிற்றூர்ப்புற மேம்பாடு, வறுமை ஒழிப்பு, அறிவியல்,  தொழில்நுட்பம், விளையாட்டு, நகர்ப்புறம் ஆகிய துறைகளில் ஈடுபாடுகாட்டிச் செயற்படுகிறது. தமிழ்நாட்டில் செயற்படும் இந்த அமைப்பு,  நிலையான வளர்ச்சிக்கான மேம்பாட்டிற்காகத் தொண்டாற்றி வருகிறது.

இங்கே, குழந்தைகள் பறவைகள், ஏரிகள், பிற நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றைத் தூய்மை செய்வதில் உந்துதல் பெறுகின்றனர். இயற்கையின் அன்பு அவர்களுக்குள் பொதிந்து கிடக்கிறது. பேரழிவுகள், பேரிடர்கள், அவசரநிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குழந்தைகளுக்கு நடைமுறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வண்ணப்பூச்சுகள், வண்ணங்கள் மந்தமான நேரங்களிலும் குழந்தைகளை உற்சாகப்படுத்துகின்றன, வண்ணமயமான அட்டைகள் பல இயற்கையில் உருவாக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் கோடைக்கால முகாம்கள், கலை, கைவினை  விளையாட்டுகளில் ஈடுபடச் செய்தல், இவர்களின் உடன்பிறப்பு உணர்வைத் தட்டி எழுப்புகிறது.  இவர்களிடையே ஏற்படும் உரசல்களைத் தீர்க்கிறது. குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான ஆற்றலைத் தூண்டுகிறது. பெண் குழந்தைகள் நலன்களில் கூடுதல் கருத்து செலுத்தப்படுகிறது.

‘சப்னம்’ என்றால் என்ன பொருளாம்? முதல் துளி – அஃதாவது, வறட்சிக் காலங்களில் பெய்யும் முதல் மழையின் பெயர் அது. இமயமலைப் பகுதியில் உள்ள இலடாக்கு பழங்குடியினரின் வழக்கு மொழியில் இந்தச் சொல் இருக்கிறது என்கிறார் இயூபருட்டு.

இவ்வாறு பல நிலைகளிலும் உதவி தேவைப்படச் சூழலில் உள்ளவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து மறுவாழ்வு அளித்து வருகிறார். ஆனால், இவரின் உடல்நிலை இயல்பான வாழ்விற்கு இடையூறாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நச்சுநோய்(typhus)க்கு ஆளாகிப் பல மாதங்களாகப் படுத்த படுக்கையாகி, மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்துள்ளார்.  இப்போது ஊன்று நடையன்(walker) மூலம் மெல்ல நடக்கிறார். ஆதலின் அங்குமிங்கும் சென்று பணம் திரட்ட முடியவில்லை. நற்பணி தொடர நல்லுள்ளங்கள் உதவி தேவைப்படுகிறது.

என்ன எண்ணுகிறீர்கள்? மறுவாழ்வு தேவைப்படும் குழந்தைகள், இளம்பெண்கள், முதியோர்களுக்கு எப்படி உதவலாம் என்றா?

மைக்கேல் , சப்னம் வளங்கள் / Michael Hubert, SHABNAM RESOURCES

பழைய எண் 5, புதிய எண் 13

புத்தர் தெரு, இரங்கராசபுரம், சென்னை 600024

பேசி + 91 44 24721379 ; 9962430097

மின்வரி: mrhubert72@gmail.com

வங்கி விவரம்

இந்தியன் வங்கி, கோடம்பாக்கம் கிளை, ஆற்காட்டுச்சாலை, சென்னை 600 024

கணக்குப் பெயரும் எண்ணும் : Shabnam Resources 401673346

குறியீட்டு எண் Swift Code : ID IB IN BB MAS

மறுவாழ்வுப் பணிகளில் இணைவோருக்கு நன்றி.



மும்பையில் தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள்



மும்பையில் பாண்டுப்பு தமிழ்ச் சங்கம் சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள்

தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்பு அடுத்த மாதம்(செப்டம்பர்) 3-ந்தேதி முதல் தொடங்குகிறது. வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பாண்டுப்பு மேற்கு, காவுதேவி சாலைப் பகுதியில் உள்ள அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத்தில் நடைபெறும்.

முதல் நாள் வகுப்பை அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத் தலைவர் மாயாண்டி தொடங்கி வைக்கிறார். தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு தலைவர் ச.சி.தாசன், மன்ற செயலாளர் எட்வர்ட்டு, பொருளாளர் வில்சன் முதலான பலர் முன்னிலை வகிக்கின்றனர். வகுப்பில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சேர்ந்து தமிழ் எழுத, படிக்கக் கற்றுக்கொள்ளலாம்.

வகுப்பில் சேரும் அனைவருக்கும் தேவையான புத்தகங்களும் ஏடுகளும்  வழங்கப்படும்.


தோழர் தியாகு எழுதுகிறார் 192 : கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்

!



(தோழர் தியாகு எழுதுகிறார் 191 : இந்து அறநிலையத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா?- தொடர்ச்சி)

கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்!

இனிய அன்பர்களே!

உலகில் தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் அவர்கள் தமக்கான சமய வழிபாட்டுக் கூடங்களை அமைத்துள்ளார்கள். அவை அவர்களின் பன்மையப் பண்பாட்டின் அடையாளங்களாக விளங்கி வருகின்றன. நான் அயல்நாடுகள் செல்லும் போது நேரம் கிடைக்கும் போது அவற்றைச் சென்று பார்ப்பதுண்டு. சிலநேரம் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளே அங்கு நடப்பதும் உண்டு.

அப்படித்தான் கடந்த 1994ஆம் ஆண்டு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு மாநாட்டுக்காக அமெரிக்கா சென்றிருந்த போது என் உரைக்காக சிக்காகோ தமிழ்ச் சங்கக் கூட்டம் அங்குள்ள பாலாசி கோயிலில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து பிராமணர்கள் வரவழைக்கப்பட்டு அருச்சகர்களாகப் பணியாற்றி வரக் கண்டேன். அவர்கள் என்னைச் சாமி கும்பிட அழைத்த போது “நம்பிக்கை இல்லை” என்று சொல்லி விட்டாலும், கோயிலையும் அதன் கோபுரங்களையும் பல கோணத்தில் படம்பிடித்துக் கொண்டேன். இந்த நாட்டில் நம் கட்டடக் கலையின் சிறப்பைக் காட்டுவதாக இந்தக் கோயில் இருப்பதாகத் தமிழ் அன்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன்.

கடந்த 1998ஆம் ஆண்டும் 2000ஆம் ஆண்டும், முதலில் மாவீரர் நாள் நிகழ்வுக்காகவும், பிறகு ஒரு கல்வி மாநாட்டுக்ககவும் ஐரோப்பா சென்றிருந்தேன். அந்தப் பயணம் முழுவதிலும் என்னோடு இருந்தவர் ‘சர்வே’ எனப்படும் அன்பர் சர்வேசுவரன். மார்க்குசு பிறந்த திரையர் இல்லம், இடிக்கப்பட்ட பெருலின் சுவர் எல்லா இடத்துக்கும் அவர்தான் என்னை அழைத்துச் சென்றார்.

பாரிசு நகரத்தில் சர்வேயிடம் “கோயிலுக்குப் போகலாமா?” என்று கேட்ட போது “அண்ணா போக விரும்பினால் போகலாமே!” என்றார். ஒரு மாலை நேரம் பனிப் பொழிவிற்கிடையில் ஒரு சிவன் கோயிலில் நின்றோம். “அண்ணா, நாங்கள் யாருக்கும் சொல்ல மாட்டோம், நீங்கள் கும்பிட்டுக்கலாம்” என்று சிரித்தார். “டேய் தம்பி, அண்ணா கோயிலுக்கு வந்ததைப் படம் எடு, தமிழ்நாட்டுக்கு அனுப்போணும்” என்று பகடி செய்தார். சிறிய கோயில்தான், சுற்றிப் பார்த்தேன். இறையன்பர்கள் வழிபாடு செய்து உண்டியலில் காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

உண்டியலில் சேரும் காசு முழுவதும் தமிழர் மறுவாழ்வுக் கழகத்துக்குப் போய் விடும்” என்று சர்வே எனக்குச் சொன்னார். மக்களுக்கும் இது தெரியும் என்றார். அவர் பல முறை என்னிடம் சொன்ன ஒரு செய்தியை ஈண்டு பதிய வேண்டும். “மக்களிடம் எதைச் சொல்லிக் காசு தண்டுகிறோமோ, அந்தக் காசை அந்த நோக்கத்துக்குத்தான் பயன்படுத்த வேண்டும், வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது, இது தலைவர் கட்டளை” என்றார்.

கோயில் நிருவாகியை எனக்கு அவர் அறிமுகம் செய்த போது உண்மையிலேயே வியப்பாய் இருந்தது. அவர் ஒரு கிறித்தவர் என்பது பெயரிலேயே தெரிந்தது. “இது எப்படி?” என்று கேட்காமல் கேட்ட என் வியப்புக் குறியைப் புரிந்து கொண்டு சர்வே சொன்னார்:
“இவர் கிறித்தவர்தான், ஆனால் சிவன் கோயிலை முறையாக நிருவாகம் செய்கிறார்.”
“யார் இவரை இந்தப் பணியில் அமர்த்தியது?”
“தலைவர்தான்.”

பாரிசு நகர சிவன் கோயிலைப் பரிபாலனம் செய்ய ஒரு கிறித்தவரைத் தாயகத்திலிருந்து தலைவர் பிரபாகரன் அமர்த்துகிறார், அதை அந்தச் சைவ பக்தர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். இதுதான் குடியாட்சிய உலகியல் (சனநாயக சமயச் சார்பின்மை). ஈழத் தமிழ் மக்களின் இந்தப் பண்பு இன்னும் விரிந்த அளவில் வெளிப்பட்ட ஒன்றே! சைவர்களாகிய அவர்கள் சாமுவேல் சேம்சு வேலுப்பிள்ளை செல்வநாயகம் என்ற கிறித்தவரைத் தேசத் தந்தையாக ஏற்றுக் கொண்டவர்கள் அல்லவா?

இந்துக் கோயிலுக்கு இந்துதான் அருச்சகராக வேண்டும் என்று சொன்னால் அதில் நியாயமுண்டு. ஆனால் இந்துதான் அறங்காவலராக வேண்டும் என்ற கட்டாயமில்லை. அறங்காவலரின் பணி இறையியல் சார்ந்தது அன்று, அது உலகியல் சார்ந்தது. திராவிட இயலுக்கு இந்தப் புரிதல் இருந்தால் சேகர்பாபு போன்ற பார்ப்பனிய அடிமையை இந்தப் பணிக்குத் தேர்வு செய்ய வேண்டியிருக்காது.

அனைத்துச் சாதியினரும் அருச்சகராதல், தமிழ் வழிபாட்டு மொழி ஆகிய முகன்மையான சமூகநீதித் திட்டங்களில் சேகர்பாபு வகையறாக்களின் அலட்சியத்தால் ஏற்பட்டுள்ள சேதம் கண்கூடான ஒன்று.

இந்து அறநிலையத் துறை எதற்காகத் தொடங்கப்பெற்றது? என்பதே சேகர்பாபுவின் நடவடிக்கைகளால் குழம்பிக் கிடக்கிறது. இதுதான் வாய்ப்பென்று கோயில்களை இந்துத்துவ அரசியல் தளங்களாக மற்ற ஆர்எசுஎசு வரிந்து கட்டி வேலை செய்கிறது. இந்து அறநிலையத் துறையின் பொறுப்பில் இருக்கும் கோயில்களை இந்துக்களிடமே கொடுத்து விடு என்று எச்சு. இராசா போன்ற இந்துத்துவ வெறியர்கள் கூக்குரலிடுகின்றார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்துக் கோயில்களைப் பார்ப்பனர்களும் பார்ப்பனியர்களும் கைப்பற்றத் துடிக்கின்றார்கள். நிருவாகத்தில் சமூகநீதியை மாய்த்து சாதி ஆளுகையை நிறுவிக் கோயில்களைக் கொள்ளைக் கூடாரங்களாக மாற்றுவதே அவர்களின் நோக்கம்.

சில நாள் முன்பு (தாழி 207) குமாரபாளையம் அருகே (சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம்) கத்தேரி வட்டமலை அருள்மிகு வேலாயுதசுவாமி ஆலயம் மீட்புக் குழுவினரின் போராட்டம் பற்றி எழுதியிருந்தேன். இந்தக் கோயில் நிருவாகத்தில் இதுகாறும் அருந்ததியர், நாடார் உட்பட அனைத்துச் சாதியினரும் இடம்பெற்றிருந்தார்கள். இதை மாற்றி ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மட்டும் இடம் பெறுவதற்கான முயற்சிகள் ஊழல் அரசியல்வாதி ஒருவரின் துணையோடு நடைபெற்று வந்தன. இதைக் கண்டித்து சென்ற 10.06.2023இல் நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் நானும் தோழர் ப.பா. மோகன் முதலானோருடன் கலந்து கொண்டேன்.

ஆனால் மக்கள் கருத்துக்கு மதிப்பளிக்காமல் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த மூன்று பேரைப் பரம்பரைசாரா அறங்காவலர்களாக அமர்த்தி இந்து அறநிலையத் துறை ஆணையிட்டுள்ளது. மக்கள் கொதித்துப் போயுள்ளனர். அவர்கள் தொடர்ந்து போராட உறுதி ஏற்றுள்ளனர். தமிழ்நாட்டில் பல இடங்களில் ஒலிக்கும் வினா வட்டமலையிலும் மோதி எதிரொலிக்கிறது: இது மு.க. தாலினுக்குத் தெரியுமா?
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 222