பறவைகளை, மக்களை நேசிப்பவரா?அப்படியானால், இதைப் படியுங்கள்!
“பறவைகள், தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் ஆகிய மூன்றில் ஏதேனும் ஒன்று மட்டும் இல்லாவிட்டாலும், இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்குத் தகுதி இல்லாமல் ஆகிவிடும். சென்னை போன்ற நகரங்களில் பறவைகள், பட்டாம்பூச்சி இனங்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. நமது இயல்பான வாழ்க்கையை அவை சுட்டிக்காட்டுகின்றன. நம்மை சுற்றியுள்ள பறவைகளின் மூலம், நமது வாழ்க்கையின் எதிரொளிப்புகளை கவனிக்க முடியும். அனைவருமே முடிந்த வரையில், தமது வீடுகளில் உள்ள தோட்டம், மரம், செடிகள், மேல் மாடி அல்லது கூரைகளில் வசிக்கும் பறவைகளுக்கு முடிந்த அளவு தானிய வகைகள், தண்ணீர் ஆகியவற்றை வைக்கவேண்டும். அவ்வாறு வைப்பதன் மூலம் கிடைக்கும் உணர்வை உணர்ந்து பாருங்கள்.” இவ்வாறு கூறி வருபவர் பறவை நல ஆர்வலர் மைக்கேல் இயூபருட்டு
கோடம்பாக்கம், இயக்குநர் குடியிருப்பில் உள்ள தன் வீட்டில் மூலிகைச் செடிகளை வளர்க்கிறார். சுற்றிலும் பறவைகள் தங்குவதற்கான சிறு சிறு வீடு போன்ற அமைப்பையும், வீட்டிற்கு வெளியே ஆங்காங்கே செய்து வைத்துள்ளார். “அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் மாடங்களில்(பால்கனிகளில்) பறவைகளுக்கான உணவையும், தண்ணீரையும் வைத்து வரவேண்டும். பல காரணங்களுக்காக மனிதர்களை மனிதர்களே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதைப்போல பறவைகளையும் நாம் கவனிக்காமல் விடக்கூடாது. பறவைகளை நேசிப்பது நம்முடைய பல உளவியல் சிக்கல்களுக்குத் தீர்வாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.” என்று அவர் சொல்கிறார்.
நீங்கள் மனித நேயரா? அப்படி என்றால் மேலும் படியுங்கள்!
‘சப்னம்’ என்ற அரசு பதிவு பெற்ற தன்னார்வ அமைப்பின் மூலம் 25 ஆண்டுகளாகச், சென்னை, புறநகர் பகுதி, சிற்றூர்ப் பகுதிகளில் உள்ள வறுமையில் வாடும் குழந்தைகள், இளைஞர்களுக்கான கல்வி, நல்வாழ்வு ஆகிய நிலைகளில் பல உதவிகளை மைக்கேல் இயூபருட்டு செய்து வருகிறார். படிப்பைப் பாதியில் விட்டுவிட்ட மாணவர்களுக்குக் கல்வியை மேற்கொண்டு தொடர உதவி செய்து, பொருளாதாரச் சிக்கலைச் சமாளிக்கத் தற்தொழில் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருவதோடு, இளைஞர் முன்னேற்றப் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறார்.
இவ்வாறு முதியோர், மூத்தோர், குழந்தைகள், ஊனமுற்றோர், பேரிடர் மேலாண்மை, கல்வி-கல்வியறிவு, சுற்றுச்சூழல்- இயற்கை வள மேலாண்மை, உணவு-வேளாண்மை, புதிய-புதுப்பிக்கத்தக்க ஆற்றல், சிற்றூர்ப்புற மேம்பாடு, வறுமை ஒழிப்பு, அறிவியல், தொழில்நுட்பம், விளையாட்டு, நகர்ப்புறம் ஆகிய துறைகளில் ஈடுபாடுகாட்டிச் செயற்படுகிறது. தமிழ்நாட்டில் செயற்படும் இந்த அமைப்பு, நிலையான வளர்ச்சிக்கான மேம்பாட்டிற்காகத் தொண்டாற்றி வருகிறது.
இங்கே, குழந்தைகள் பறவைகள், ஏரிகள், பிற நீர்நிலைகள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றைத் தூய்மை செய்வதில் உந்துதல் பெறுகின்றனர். இயற்கையின் அன்பு அவர்களுக்குள் பொதிந்து கிடக்கிறது. பேரழிவுகள், பேரிடர்கள், அவசரநிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது குழந்தைகளுக்கு நடைமுறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வண்ணப்பூச்சுகள், வண்ணங்கள் மந்தமான நேரங்களிலும் குழந்தைகளை உற்சாகப்படுத்துகின்றன, வண்ணமயமான அட்டைகள் பல இயற்கையில் உருவாக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் கோடைக்கால முகாம்கள், கலை, கைவினை விளையாட்டுகளில் ஈடுபடச் செய்தல், இவர்களின் உடன்பிறப்பு உணர்வைத் தட்டி எழுப்புகிறது. இவர்களிடையே ஏற்படும் உரசல்களைத் தீர்க்கிறது. குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான ஆற்றலைத் தூண்டுகிறது. பெண் குழந்தைகள் நலன்களில் கூடுதல் கருத்து செலுத்தப்படுகிறது.
‘சப்னம்’ என்றால் என்ன பொருளாம்? முதல் துளி – அஃதாவது, வறட்சிக் காலங்களில் பெய்யும் முதல் மழையின் பெயர் அது. இமயமலைப் பகுதியில் உள்ள இலடாக்கு பழங்குடியினரின் வழக்கு மொழியில் இந்தச் சொல் இருக்கிறது என்கிறார் இயூபருட்டு.
இவ்வாறு பல நிலைகளிலும் உதவி தேவைப்படச் சூழலில் உள்ளவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து மறுவாழ்வு அளித்து வருகிறார். ஆனால், இவரின் உடல்நிலை இயல்பான வாழ்விற்கு இடையூறாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் நச்சுநோய்(typhus)க்கு ஆளாகிப் பல மாதங்களாகப் படுத்த படுக்கையாகி, மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்துள்ளார். இப்போது ஊன்று நடையன்(walker) மூலம் மெல்ல நடக்கிறார். ஆதலின் அங்குமிங்கும் சென்று பணம் திரட்ட முடியவில்லை. நற்பணி தொடர நல்லுள்ளங்கள் உதவி தேவைப்படுகிறது.
என்ன எண்ணுகிறீர்கள்? மறுவாழ்வு தேவைப்படும் குழந்தைகள், இளம்பெண்கள், முதியோர்களுக்கு எப்படி உதவலாம் என்றா?
மைக்கேல் , சப்னம் வளங்கள் / Michael Hubert, SHABNAM RESOURCES
பழைய எண் 5, புதிய எண் 13
புத்தர் தெரு, இரங்கராசபுரம், சென்னை 600024
பேசி + 91 44 24721379 ; 9962430097
மின்வரி: mrhubert72@gmail.com
வங்கி விவரம்
இந்தியன் வங்கி, கோடம்பாக்கம் கிளை, ஆற்காட்டுச்சாலை, சென்னை 600 024
கணக்குப் பெயரும் எண்ணும் : Shabnam Resources 401673346
குறியீட்டு எண் Swift Code : ID IB IN BB MAS
மறுவாழ்வுப் பணிகளில் இணைவோருக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக