(தோழர் தியாகு எழுதுகிறார் 191 : கோயில்கள் கொள்ளைக் கூடாரங்களாக மாற விடோம்!- தொடர்ச்சி)
அன்பர் நலங்கிள்ளி எழுதுகிறார்.
தாழி 221 கண்டேன்.
இந்து அறநிலைத் துறையா? இந்துத்துவ சேவைத் துறையா? என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை கண்டேன்.
அனைவருக்கும் தெளிவை ஏற்படுத்தும் கட்டுரை.
இது குறித்து என் கருத்தையும் பதிவிட விரும்புகிறேன்.
மதச் சார்பின்மை என்பது எல்லா மதத்தையும் சமமாக நடத்துவதில்லை, எல்லா மதத்திலிருந்தும் விலகியிருத்தல்.
அமைச்சர்கள் மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது, மத விழாக்களில் கலந்து கொள்வது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் தொங்கும் கடவுளர் படங்களை அகற்ற வேண்டும். அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் உள்ள கோயில்களை அகற்ற வேண்டும். பள்ளிகளில் மத போதனை கூடவே கூடாது. சொல்லப் போனால், மத அமைப்புகள் பள்ளிகளை நடத்தக் கூடாது. அனைத்துப் பள்ளிகளையும் மதச் சார்பற்ற வகையில் அரசே ஏற்று நடத்த வேண்டும்.
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவின் இந்து மதச் சார்பு பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள்.
உடனே எனக்கு ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. முதலமைச்சர் மு. க. தாலினின் மனைவி துருக்கா தாலின் சுமங்கலிகளை வைத்துக் குத்து விளக்கு பூசை நடத்தினார். அதில் சேகர் பாபுவும் கலந்து கொண்டு சிறப்பித்தார். பெண்களை இழிவுபடுத்தும் பூசையை துருக்கா தாலின் நடத்தி விட்டுப் போகட்டும், அங்கு அமைச்சருக்கு என்ன வேலை?
துருக்கா தாலின் அவரது கணவருக்காக இறை வழிபாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லைதான். ஆனால் அவரது வழிபாட்டு முறை பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிப்பதாக உள்ளது. கோயில்களில் யாகம் வளர்ப்பது, புரோகிதர்களை கெளரவிப்பது என மாமி வேடம் போடுகிறார்.
Durga Stalin’s Pooja Room Tour என்ற பெயரில் ஒரு வலையொளி. அந்தக் காணொளியில் துருக்கா தாலின் அவர்கள் தன் வழிபாட்டு முறைகளை விளக்குகிறார். அனுமார் படம் ஒன்றைக் காட்டி, இதுதான் உண்மையான அனுமார் என்கிறார். சரி, இதெல்லாம் அவரது தனிப்பட்ட சமய வாழ்வியல். ஆனால் இந்தப் பூசையறைக் காட்சிகள் மு.க.தாலின் இசைவின்றி வெளிவந்திருக்குமா? அப்படியானால் நாங்கள் இந்து மதத்துக்கு நெருக்கமானவர்கள் எனத் திமுக காட்டிக் கொள்ள விரும்புகிறதா?
இது மட்டுமல்ல, சங்கப் பரிவாரம் நடத்தும் வினாயக சதுர்த்தி ஊர்வலங்களைத் திமுக தலைவர்களும் அமைச்சர்களும் நடத்துகின்றனர்.
அமைச்சர் அன்பில் மகேசு பொய்யாமொழி புரோகிதர்கள் உட்கார்ந்திருக்கும் சாமிப் பல்லக்கைத் தூக்கிச் செல்கிறார்.
சங்கப் பரிவாரததுக்கு அஞ்சி இப்படிப்பட்ட அரசியலைத் திமுக நடத்தினால், நாம் பாசகவுக்கே வாக்களித்து விடலாமே என்ற முடிவுக்கே மக்கள் வந்து விடுவார்கள்.
விழித்துக் கொள்ளுமா திமுக தலைமை?
00000
அன்பர் பொன். சந்திரன் எழுதுகிறார்:
சமய விடுமையின் பால் (மத சுதந்திரம்) ஒரு விடுதலை இயக்கத்தின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதில் உங்கள் நிலைப்பாட்டோடு முழுமையாக உடன்படுகிறேன். உங்களால் இதை ஆங்கிலத்தில் தர முடியுமானால் நாடெங்கும் கொண்டுசேர்த்து அனைத்து விடுதலைக் குழுக்களின் கவனத்தையும் ஈர்க்கலாம் என்பது என் முன்மொழிவு. கருதிப்பார்க்க வேண்டுகிறேன்.
தாழி:
அன்பர் கோவை பொன். சந்திரன் சொன்ன படியே செய்வோம்.
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 223
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக