வியாழன், 13 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 69 : தமிழீழத் தோழமையில் ஒற்றுமை குலைவதன் காரணம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 68 தொடர்ச்சி)

தமிழீழத் தோழமையில்

ஒற்றுமை குலைவதன் காரணம்

இனிய அன்பர்களே!

தமிழீழத் தோழமையைப் பொறுத்த வரை, திராவிடத்தைத் தமிழ்த் தேசியத்தால் வெல்வதோ தமிழ்த் தேசியத்தைத் திராவிடத்தால் வெல்வதோ நம் நோக்கமில்லை. தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமைக்குக் கேடில்லாமல் இந்த இரு கருத்தியல் நிலைப்பாடுகளுக்குமிடையே விவாதித்துக் கொள்வதிலும் தவறில்லை. ஆனால் அவரவர் நிலைப்பாடுகளில் நிற்க வேண்டிய நேரத்தில் நின்றபடி தேவையான போது தமிழீழ மக்களின் நலனை மையப்படுத்தி ஒருங்கிணைந்து போராட முடியும். இது கடந்த காலத்தில் முடிந்தது, நிகழ்காலத்தில் முடிகிறது, எதிர்காலத்திலும் முடியும்.

முள்ளிவாய்க்காலுக்கு முன் இந்த ஒருங்கிணைப்பு எவ்வாறு செயல்பட்டது என்பதை நேற்று எடுத்துக் காட்டினேன். இன்றும் இந்த ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்கும் சான்றாக ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டமைப்பின் மூன்று ஒருங்கிணைப்பாளர்கள் யார் தெரியுமா?

1.   கொளத்தூர் மணி; 2. பெ. மணியரசன்; 3. கோவை இராமகிருட்டிணன்.

இவர்களில் கொளத்தூர் மணி தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். எமதியக்கம் உள்ளிட்ட பலதிறப்பட்ட அமைப்புகள் இந்த ஒருங்கிணைப்பில் இடம்பெற்றுத் தமிழீழத் தோழமையில் கொள்கைவழி ஒற்றுமை காத்து வருகிறோம். இப்போதுள்ள சூழலில் எழுப்ப வேண்டிய கோரிக்கைகள் என்ன? இந்திய அரசிடம் கோர வேண்டியவை என்ன? தமிழக அரசிடம் கோர வேண்டியவை என்ன? ஐநா உள்ளிட்ட பன்னாட்டரங்கில் கோர வேண்டியவை என்ன? இலங்கை நெருக்கடி பற்றிய பார்வை என்ன? தாயகத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன? உலகத் தமிழர்கள் செய்ய வேண்டியது என்ன?

இந்த வினாக்களுக்கெல்லாம் விடை காண்பதில் எங்களுக்குள் எந்தப் பிணக்கும் இல்லை. ஒற்றுமை என்பது நேற்றைய கதை மட்டுமல்ல, இன்றைய நடப்பும் இதுதான். இந்த ஒற்றுமைக்கும் ஒருங்கிணைப்புக்கும் திராவிடம் – எதிர் – தமிழ்த் தேசியம் என்ற முரண்பாடு எவ்விதத்தும் தடை இல்லை.

நாங்கள் ஈழம் மட்டுமே எல்லாம் என்று அரசியல் செய்து கொண்டிருப்பவர்கள் அல்ல. தமிழ்நாட்டு அரசியலிலும் இந்திய அரசியலிலும் எங்களுக்கென்று தனித் தனி நிலைப்பாடுகள் உண்டு. அவை ஒன்றுபட்ட நிலைப்பாடுகளாகவோ ஒத்த நிலைப்பாடுகளாகவோ கூட இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. 

அன்பர்கள் சிபியும் சத்தியசீலனும் இரு கருத்தியல் போக்குகளின் பேராளர்களாக இருந்து முன்வைக்கும் நிலைப்பாடுகள் குறித்து உரையாடும் முன்பு இந்தக் களத்தில் என்ன நடக்கிறது என்பது தாழி அன்பர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் இன்று வரைக்குமான தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமை வரலாற்றை எடுத்துச் சொன்னேன்.

வரலாறு என்றால் வந்த வழி என்று பொருள். வந்த வழியை அறிந்து கொள்ளாமல் போகும் வழியைத் தீர்மானிக்க முடியாது. நமக்கான போகும் வழி என்ன? ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வழிகாட்டுகிறது.  சென்ற 16.04.2022 சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்களை முன்வைக்கிறேன். இந்த மாநாட்டில் நான் நோக்கவுரை ஆற்றினேன். என் உரையை முழுமையாக வரவேற்றுப் பேசியவர் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன். இந்தத் தீர்மானங்களைப் படியுங்கள். இவற்றின் உட்கருத்தில் திராவிட – தமிழ்த் தேசிய முரண்பாடு ஏதும் தெரிகிறதா? பெரியார் ஆதரவும் எதிர்ப்பும் தெரிகிறதா?

ஈழத் தமிழர்க்கு விடியல் – தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு

                        தீர்மானங்கள்

தமிழின அழிப்பிற்கு நீதி காண்பதற்கும் தமிழீழத் தாயகத்தில் பாதுகாப்பான வாழ்க்கை அமைவதற்கும் பின்வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தமிழர் வேணவாவை வெளிப்படுத்தும் வகையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் இம்மாநாட்டில் பின்வரும் தீர்மானங்கள் இயற்றப்படுகின்றன.  

1.     ஈழத் தமிழர்களுக்கு எதிராக  இனவழிப்புக் குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் செய்த கோத்தபய இராசபக்குசே, மகிந்த இராபக்குசே உள்ளிட்ட சிங்கள ஆட்சித் தலைமைகள், சரத்து பொன்சேகா, சவேந்திர சில்வா, கமல் குணரத்தினா, சகத்து செயசூரியா உள்ளிட்டபடைத் தலைமைகளை,  2002ஆம் ஆண்டு சூலை முதலாம் நாளுக்கு முன்னர்ப் புரிந்த குற்றங்களையும் உள்ளடக்கக் கூடியதான இலங்கை தொடர்பான அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்று சிறப்பாக அமைக்கப்பட்டோ, அன்றேல் குறைந்தது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, கூண்டிலேற்ற  வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

2.     2014ஆம் ஆண்டு வட மாகாண சபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படியும், 2021ஆம் ஆண்டு சனவரியில் தமிழ்த் தலைவர்களும் குடிமைச் சமூகச் சார்பாளர்களும் சேர்ந்து ஐ.நா. உறுப்பரசுகளுக்கு அனுப்பிய மடலின் படியும் 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தின் படியும்  ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் செய்யப்பட்ட மேற்சொன்ன பன்னாட்டுச் சட்டமீறல்கள் தொடர்பில் எவ்வித உள்நாட்டுப் பொறுப்புக் கூறலுக்கும் சிறிலங்கா அரசு வழிசெய்யாத நிலையிலும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையில்  இயற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்துக் கொண்டிருக்கும் நிலையிலும் இனியும் காலந்தாழ்த்தாமல் பன்னாட்டுப் புலனாய்வுக்கு வழிசெய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

3. இலங்கை அரசு ஐ. நா. பேரவையில் உறுப்பு வகிக்கத் தொடங்கிய 1955 ஆம் ஆண்டு திசம்பர் 14ஆம் நாளுக்கு முன்னதாகவே, இன அழிப்பைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான அனைத்துலக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது. இதனால், இந்த ஒப்பந்தத்தின் சட்ட ஆளுகைக்கு அந்த நாடு 1951 ஆம் ஆண்டு சனவரி 12 ஆம் நாள் தொடக்கம் உட்பட்டிருக்கிறது. அந்த நாளில் இருந்து இலங்கையின் ஆட்சி மற்றும் படைத் தலைமைகள் மட்டுமல்ல அந்த நாட்டிற்கு பொறுப்பான அரசும், ஈழத்தமிழர்கள், மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் எதிராகப் புரிந்த இன அழிப்புக் குற்றத்தை பன்னாட்டு நீதிப் புலனாய்வுக்கு தவறாது உட்படுத்திட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

4.     ஐரோப்பிய வல்லரசிய ஆளுகைக்கு முன்னிருந்த  இறைமையை மீட்டுக்கொள்ளும் உரிமையின் பாற்பட்டும், பெரும்பான்மைத் தமிழீழ மக்களின் மக்களாணை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பாற்பட்டும், அளப்பரிய ஈகங்களுடன் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் விளைவாக மெய்ந்நிலை அரசொன்றை நடத்தியவர்கள் என்ற வகையிலான இறைமையின் பாற்பட்டும், இனவழிப்புக்கு உள்ளாகியிருக்கும் ஈழத் தமிழர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதி என்ற பன்னாட்டு நடைமுறையின்பாற்பட்டும் இறைமையை மீட்டுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும்வகையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஈழத் தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தீவின் இனச்சிக்கலுக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

5.     முள்ளிவாய்க்கால் படுகொலையோடு தமிழின அழிப்புக்கான தடைகள் அனைத்தும் அகற்றப்பட்ட நிலையில் கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழீழத்தில் தொடர்ந்து  நடைபெற்றுவரும் கட்டமைப்பு வகைப்பட்ட இனவழிப்பை (Structural Genocide) தடுத்து நிறுத்துவதற்குப் பன்னாட்டுப் பாதுகாப்பு பொறியமைவு (International Protective Mechanism) ஒன்றை ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகத்தில் ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

6.     மாந்தவுரிமைகளுக்கான ஐநா. உயராணையர் மிசேல் பசலே 2021 சனவரியில் கொடுத்த பரிந்துரைகளான – போர்க் குற்றங்களுக்கான சான்றுகளைப் பாதுகாத்தல், சிறிலங்காவில் பன்னாட்டுக் குற்றங்கள் செய்தவர்கள் மீது ஐ.நா. உறுப்பரசுகள் எல்லைகடந்த மேலுரிமைக் கோட்பாடுகளின்படி (Universal Jurisdiction) அந்தந்த நாட்டு நீதிமன்றங்களிலும்  அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தல், பயணத் தடை விதித்தல், சொத்துகளை முடக்குதல்   ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

7.     தமிழர் தாயகப் பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் இலங்கையின் வடக்கு-கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள சிங்களப் பெரும்படை உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

8.     போரின் முடிவில் சிங்களப் படையினரிடம் கையளிக்கப்பட்டோர் உள்ளிட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட 19,000 த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலுக்கு வழிசெய்ய பன்னாட்டுப் பொறுப்புக்கூறல் பொறியமைவு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

9.     போர்க் கைதிகள் உள்ளிட்ட  தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப் பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

10.    தொல்லியல் பணிகள், மகாவலி வளர்ச்சித் திட்டம், வனத்துறை, வன விலங்குகள் துறை, சுற்றுலாத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றின் ஊடாக தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதும் தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதற்கான சான்றுகளை அழிப்பதும் தமிழ்ச் சிற்றூர்களின் எல்லைகளை மாற்றியமைப்பதும் மக்களின இயைபை (demographic composition) மாற்றிக் கொண்டிருப்பதும்  உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

11.    தமிழர்களின் வரலாற்று மரபுவழித் தாயகம் என்பதை ஏற்று வடக்குகிழக்கு மாகாணங்களை இணைத்து  குடியியல் ஆட்சியை அங்கு நிறுவும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.

12.    இலங்கையின் வடக்கும் கிழக்கும் ஈழத் தமிழர்களின் மரபுவழி தாயகம் என்பதை இந்திய அரசு திட்டவட்டமாக அறிந்தேற்க வேண்டும். தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கொள்கைகளுக்கு முரணான தீர்வு எதையும் இந்திய அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ தமிழர்கள் மீது திணிக்கக் கூடாது என இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

13.    தமிழீழ மக்களின் அரசியல் வேணவாக்களைத் துச்சமாக மதித்தும் சிங்கள-பெளத்த பேரினவாதம் தமிழின அழிப்பு என்ற கட்டத்தை அடைந்துவிட்டதை பொருட்படுத்தாமலும் இந்திய அரசு 13 ஆம் சட்டத்திருத்தத்தை ஓர் அரசியல் தீர்வென்று தமிழீழ மக்கள் மீது திணிப்பதற்கு செய்துவரும் முயற்சிகளை தமிழ்நாட்டு மக்கள் சார்பில் இம்மாநாடு உறுதியாக மறுதலிக்கிறது.

14.    இந்திய அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில்  ஐ.நா.உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் முயற்சிகள் எடுக்குமாறு இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

15.    தமிழ்நாடு அரசு மேற்சொன்ன கோரிக்கைகளை ஏற்கும்படி இந்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்றும்,  உலக நாடுகளிடமும் ஐ.நா உறுப்பரசுகளிடமும் ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டுவதற்கு ஆவன செய்யவேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

16.    தமிழீழத் தாயகத்திலும் தமிழ்நாட்டிலும் புலம்பெயர் தமிழ் உலகத்திலும் தமிழ் மக்களும் அவர்தம் அமைப்புகளும் தலைமைகளும் மேற்சொன்ன கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றுபட்டுநின்று உறுதியோடு போராட வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

சிறப்புத் தீர்மானம்:

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியால் பெரும் அவலத்திற்கு உள்ளாகியுள்ள ஈழத் தமிழர்கள், தமிழ் முசுலிம்கள், மலையகத் தமிழர்கள், சிங்களர்கள் “கோட்டபய வீட்டுக்குப் போ” எனக் கிளர்ந்தெழுந்து நடத்திவரும் போராட்டத்தை இம்மாநாடு வாழ்த்துகிறது. அதேநேரத்தில் , இப்போராட்டம் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதாக முடிந்து போய்விடக் கூடாது. பொருளியல் நெருக்கடிக்கு வித்திட்ட சிங்கள-பெளத்தப் பேரினவாத ஒடுக்குமுறை அரசியலுக்கு முடிவுகட்டி, தேசிய இன சிக்கலுக்குக் குடியாட்சியத் தீர்வு காண்பதில்தான் இலங்கை தீவடங்கலாக உள்ள மக்களினங்களின் இருப்பும் நல்வாழ்வும் எதிர்காலமும் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொண்டு அனைத்து தரப்பாரும் அதை நோக்கி பாடுபட வேண்டும் என இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

இனிய அன்பர்களே!

இந்தத் தீர்மானங்கள் வெறும் சம்பிரதாயம் இல்லை. நீதிக்கான போராட்டமாக இன்று வடிவெடுத்துள்ள ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு மெய்யாகவே துணை நிற்கும் வழி. இதில் யாருக்கு மாறுபாடு இருந்தாலும் விவாதிக்கலாம்.

… (தொடரும்)

தோழர் தியாகு 

தரவு : தாழி மடல் 42

புதன், 12 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 68 : தமிழீழத் தோழமை

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 67 தொடர்ச்சி)

தமிழீழத் தோழமையின் கொள்கைவழி ஒற்றுமை

தமிழ்நாட்டில் தமிழீழத் தோழமை இயக்கம் சற்றே நலிவுற்ற நிலையில் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதற்கான முகன்மைக் காரணங்களில் ஒன்று: தமிழ்த் தேசியம் – எதிர் – திராவிடம் எனும் கருத்தியல் பிணக்காகும். இது பல நேரம் கருத்தியல் விவாதம் என்ற எல்லையைக் கடந்து கசப்பான சொற்போராகவும் மாறிவிடக் காண்கிறோம். தமிழக அரசியல் ஆற்றல்கள் தமிழக, இந்திய அரசியல் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழத் தோழமைக் கொள்கையில் ஒன்றுபட்டுப் போராடுவது நமக்கொன்றும் புதிதன்று.

1990ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் திலீபன் மன்றம் நிறுவிய போது “ஈழத் தமிழர் துயர்துடைக்க இயன்றதைச் செய்வோம் வாருங்கள்!” என்ற செயல் முழக்கத்தோடு, தமிழ்நாட்டு ஈழ ஆதரவு ஆற்றல்கள் முன்னெடுக்க வேண்டிய கொள்கை முழக்கங்களையும் முன்மொழிந்தோம்:

1)   தமிழீழ விடுதலை ஒரு வரலாற்றுத் தேவை!

2)   இராசிவு – செயவர்த்தனா உடன்படிக்கை ஈழத் தமிழர் நலனுக்குப் பகை!

3)   தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளை ஆதரிப்போம்!

1991 செட்டம்பர் 15ஆம் நாள் திலீபன் மன்ற அறிமுகக் கூட்டத்தில் இந்த முழக்கங்களை விளக்கிப் பேசினேன். உடனே மா.பொ.க.(சிபிஎம்) கட்சியிலிருந்து என்னை நீக்கினர். செப்டம்பர் 26ஆம் நாள் மயிலை பொட்டி சிறிராமுலு அரங்கில் திலீபன் மன்றம் ஒரு தொடக்கக் கூட்டம் வாயிலாக நிறுவப்பட்டது. பேராசிரியர் சரசுவதி தலமையிலான அன்னையர் முன்னணியுடன் இணைந்து திலீபன் மன்றம் பல முன்முயற்சிகளை மேற்கொண்டது.

பிறகு (1991 இறுதி அல்லது 92 தொடக்கத்தில்) தமிழர் தேசிய இயக்கத் தலைவர் திரு பழ. நெடுமாறன் மயிலை கற்பகம் விடுதியில் ஈழ ஆதரவுக் கலந்தாய்வுக் கூட்டம் கூட்டினார். தமிழீழ ஆதரவு இயக்கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று திலீபன் மன்றம் சார்பில் நான் முன்மொழிந்தேன். கோவை இராமகிருட்டிணன், அருள்மொழி ஆகியோர் என்னை வலுவாக வழிமொழிந்தனர். நெடுமாறனை அமைப்பாளராகக் கொண்டு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அடிப்படையாக மூன்று கொள்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1)   தமிழீழ மக்கள் மீதான தேசிய ஒடுக்குமுறைக்குத் தீர்வு தனித் தமிழீழமே!

2)   தமிழீழ விடுதலைப் போரில் விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறோம்!

3)   தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் விடுலைப் புலிகளையும் ஆதரிப்பதால் மைய மாநில அரசுகள் எவ்வித அடக்குமுறையை ஏவினாலும் பின்வாங்க மாட்டோம்!

இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் அமைப்புகள் மட்டுமே ஒருங்கிணைப்புக் குழுவில் சேரலாம். இவ்வடிப்படையில் நாற்பதுக்கு மேற்பட்ட குழுக்கள், இயக்கங்கள், கட்சிகள் ஒருங்கிணைந்தன. 1991-92 முதல் 2008 வரை சற்றொப்ப இருபதாண்டுக் காலம் இந்த ஒருங்கிணைப்புக் குழுவின் தொடர்ச்சியான செயற்பாடுகள் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைத் தோழமை நெருப்பு அணையவிடாமல் காத்தன. நெடுமாறன் அவர்களின் தலைமைக்கு இதில் ஒரு முகன்மைப் பங்கு உண்டு என்பதை அறிந்தேற்கிறேன்.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் தமிழீழ விடுதலைக்கு நேர்த் தொடர்பில்லாத செய்திகளை நுழைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். எனக்கு நினைவுள்ளது: ஒரு மா-இலெ குழுவைச் சேர்ந்த தோழர்கள் இந்திய விரிவாதிக்க எதிர்ப்பை நான்காவது கொள்கையாகச் சேர்க்க வேண்டும் என்று கூறிய போது நான் அதை ஏற்க மறுத்தேன். ஈழம் தவிர மற்ற வகையில் இந்தியத் தேசியத்தை எதிராகக் கருதாதவர்களும் கோட்பாட்டளவில் ஈழத் தோழமையில் இணைய இடமுண்டு என்று நான் நிலையெடுத்தேன். மொத்தமாகவே இந்திய விரிவாதிக்கத்தை எதிர்ப்பதில் எனக்கு உடன்பாடுண்டு என்றாலும் ஒருங்கிணைப்புக் குழுவின் மீது அந்நிலைபாட்டைத் திணிக்க இயலாது என்றேன். அப்படித் திணிப்பது போராடும் தமிழீழ மக்களின் நலனை மையப்படுத்திச் சிந்திக்காமையைக் குறிக்கும் என்றேன். இத்தனைக்கும் இந்தியப் படையெடுப்புக்கு எதிராகப் புலிகள் வீரப் போர் புரிந்து கொண்டிருந்த காலம் அது.

ஒருங்கிணைப்புக் குழுவில் திராவிடக் கொள்கை, தமிழ்த் தேசியம், பொதுமை, இடதுசாரி என்று எல்லாச் சார்பாளர்களும் இருந்தனர். ஆனால் அந்த அடிப்படையில் எந்தப் பிணக்கும் தோன்றியதில்லை. ஒற்றுமைக்கு எந்த அச்சுறுத்தலும் எழுந்ததில்லை. குறிப்பாகச் சொன்னால், தமிழீழத் தோழமையில் திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற மோதல் வந்ததே இல்லை. தெருக்களில் சேர்ந்து முழங்கி சேர்ந்து நடந்தோம்.  சிறைகளில் சேர்ந்து அடைந்தோம். திராவிடம், தமிழ்த் தேசியம் என்ற விவாதங்கள் அப்போதும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் ஈழ ஆதரவு இயக்கத்தின் ஒற்றுமை அதனால் கெட்டதில்லை.

2008 பிற்பகுதியில் ஈழப் போர் தீவிரமடையும் வரை தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு உயிரோட்டமாக இயங்கி வந்தது. அந்த ஆண்டு அட்டோபரில் இனவழிப்புப் போருக்கு எதிராக இந்தியப் பொதுவுடைமைக்கட்சி  போராட  முன்வந்த போது  நாங்கள் அதனை மனமுவந்து வரவேற்றோம். அந்தப் பட்டினிப் போராட்டத்தில் நானும் வாழ்த்திப் பேசினேன்.

திமுக கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் “இனவழிப்புப் போரை நிறுத்தக் கோரியும், இந்தியா இலங்கைக்கு ஆய்தம் கொடுப்பதை எதிர்த்தும், போரை இந்தியா நிறுத்தத் தவறினால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதென்றும்“ தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி இயக்கமும் நடத்தப்பட்டது.

ஆனால் இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி நேரில் வந்து சோனியா காந்தி சார்பில் வேண்டுகோள் வைத்த போது கலைஞர் வேறு எந்தக் கட்சித் தலைவரையும் கலந்து கொள்ளாமலே தற்போக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் கோரிக்கைகளையும் எச்சரிக்கையையும் கை விட்டார்.

ஆனால் போருக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்களின் அனைத்துப் பிரிவினரும் கிளர்ந்தெழுந்தனர். மதிமுக, பாமக, இ.பொ.க. விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் நெடுமாறனை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இலங்கைத் தமிழர் ;பாதுகாப்பு இயக்கம் பிறந்தது. இ.பொ.க. தலைமைக்கு ஒவ்வாது என்பதால் ஈழம் என்ற பெயர் தவிர்க்கப்பட்டதாம்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் அமைந்தவுடன், கிட்டத்தட்ட இருபதாண்டுக் காலம் உயிரோட்டமாக இயங்கி வந்த தமிழீழ விடுதலை ஆதர்வாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் இயக்கம் முடிந்தது.

ஆனாலும் போர் எதிர்ப்பு இயக்கத்தில் ஒற்றுமையின் தேவை கருதி நாங்களும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எடுத்த முயற்சிகளில் விலகி நிற்காமல் செயலளவில் பங்கேற்றோம். திமுக ஒருபுறம் போரை எதிர்த்துப் பேசிக்கொண்டிருந்த போதே, திமுக ஆட்சி, போர் எதிர்ப்பு இயக்கங்களுக்கு எதிராகக் காவல் துறையின் அடக்குமுறையை ஏவியது.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் இந்திய அரசைத் தனிமைப்படுத்தும் படித் தீவிர மக்கள் இயக்கங்கள் நடத்த முற்படாத போது தோழர்கள் பெ.மணியரசன், கொளத்தூர் மணி, நான் மூவரும் கூடிப்பேசி, தமிழர் ஒருங்கிணைப்பு என்ற கூட்டியக்கத்தை நிறுவி, சென்னை வருமான வரி அலுவலக  முற்றுகை, சிங்கள அரசுக்கு இந்தியா படைக்கலன்கள் அனுப்பப் பயன்படுத்திய தஞ்சாவுர் வான் தளத்துக்கு எதிரான முற்றுகை ஆகிய போராட்டங்களை நடத்தினோம். அந்த நேரம் வெளிவந்த தமிழர் கண்ணோட்டம், புரட்சிப் பெரியார் முழக்கம், சமூகநீதித் தமிழ்த் தேசம் இதழ்களில் இந்தச் செய்திகள் விரிவாக இடம் பெற்றன.

போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் 2009 பொதுத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்க இயக்கம் நடத்தும் முடிவு தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில்தான் எடுக்கப்பட்டது.

நடந்த ஒவ்வொன்றையும் பட்டியலிடுவது ஈண்டு என் நோக்கமன்று. நான் வலியுறுத்த விரும்புகிற ஒரே ஒரு செய்தி: தமிழீழ ஆதரவு இயக்கத்தை திராவிடம் – எதிர் – தமிழ்த் தேசியம் என்ற பூசலால் பிளவுபடுத்தத் தேவையில்லை, நாங்கள் அப்படிப் பிளவுபடுத்தவும் இல்லை என்பதே.

இனவழிப்புப் போருக்கு ஈடுசெய் நீதி கோரும் போராட்டத்தில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் ஒற்றுமையைக் கட்ட வேண்டிய கடமையை மறந்து தன்னல அரசியல் நோக்கங்களுக்காக தமிழீழத் தோழமையைச் சிதைக்கும் வேலையை யார் செய்தாலும் புறந்தள்ளும் தெளிவு நமக்கு  வேண்டும். அப்படிச் சிதைப்பது யார்? தொடர்ந்து பேசுவோம்.

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 41

செவ்வாய், 11 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 67 : ‘மண்டல்’ தீர்ப்பின் சாரம்

 




 (தோழர் தியாகு எழுதுகிறார் 66 தொடர்ச்சி)

‘மண்டல்’ தீர்ப்பின் சாரம்

[பொ.ந.பி. (EWS) இடஒதுக்கீடு பற்றிய நீதியர் இரவீந்திர பட்டு(Ravindra Bhat) தீர்ப்பின் ஒரு பத்தியைத் தாழி 37ஆம் மடலிலும் இன்னொரு பத்தியை 38ஆம் மடலிலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட்டிருந்தேன். மண்டல் தீர்ப்பு என்று பெயர் பெற்ற இந்திரா சாகுனி(Indra Sawhney) தீர்ப்பின் முகன்மைக் கூறுகளை இரவீந்திர பட்டு தமது தீர்ப்புரையில் சுருக்கித் தொகுத்துக் கொடுத்துள்ளார். சட்ட அறிவிலும் தமிழாக்கப் பயிற்சியிலும் அக்கறையுள்ள அன்பர்களுக்குப் பயன்படும் என்ற நோக்கில் அந்தத் தொகுப்பை இதோ படைக்கிறேன்:- 

இட ஒதுக்கீடுகள் குறித்து மிகவும் ஆணித்தரமான தீர்ப்பு என்றால், அது இந்திரா சாகுனி – எதிர் – இந்திய ஒன்றியம் எனும் வழக்கில் ஒன்பது நீதியர் ஆயம் வழங்கிய தீர்ப்புதான். நடுவணரசுப் பதவிகள் பணிகள் தொடர்பில் ஏனைய பிற்பட்ட வகுப்புகளுக்கு ஆதரவாக 27% ஒதுக்கீட்டைக் கொண்டுவந்த அலுவலகக் குறிப்பாணை செல்லுமா என்று நீதிமன்றம் கருதிப்பார்க்கவும் இந்த வழக்கு வாய்ப்பாயிற்று. ஆனால் தீர்ப்பு ஒருமனதானதாக அமையவில்லை. ஆறு கருத்துரைகள் வழங்கப்பெற்றன. அவற்றின் ஆகப் பொதுவான சுருக்கம் இதோ:

(1) 16(4) உறுப்புக்குள் குடிமக்களில் பிற்பட்ட வகுப்புகள் என்ற குறிப்பு  சமூக, கல்வி வழிப் பிற்பட்ட நிலையைக் குறிப்பதாகும்;

(2) 16(4) உறுப்பு என்பது 16(1) உறுப்பின் முகப்பும் அதன் ஒரு பகுதியும் ஆகுமே தவிர அதற்கான விதிவிலக்கன்று;

(3) சாதி மட்டுமே சமூக வழியிலும் கல்வி வழியிலுமான பிற்பட்ட நிலையை முடிவு செய்வதற்கான தீர்மானிக்கும் காரணி அன்று. சாதி என்பது இந்தியாவில் ஒரு சமூக வகுப்பாக பல நேரம் இருக்கக் கூடும்;

(4) வகுப்புகள் அல்லது குழுக்களின் பிற்பட்ட நிலையைத் தீர்மானிக்க பொருளியல் அளவை மட்டும் என்பது ஏற்புடையதன்று. 15(4), 16(4) உறுப்புகளை மதிப்பதாயின் சமூக வழியிலும் கல்வி வழியிலுமான பிற்பட்டமையே பிற்பட்ட நிலையைக் காட்டும் குறிமுட்கள் ஆகும்;

(5) பிற்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த குடிமக்களில் மிகவும் நலிந்த குழுக்கள் பயனடையும் பொருட்டு அவ்வகுப்புகளை உள்வகைப்படுத்தல் ஏற்புடையதே;

(6) 16(4)   உறுப்பின் கீழ் பதவியுயர்வுகளில் இடஒதுக்கீட்டுக்கு வாய்ப்பில்லை. 

(7)  ஏனைய பிற்பட்ட வகுப்புகளில் “பசையடுக்கினர்” அல்லது கூடுதல் வசதியுள்ள பிரிவுகளை அரசு இனங்கண்டால்தான், ஆகப் பெரிதும் வாய்ப்பிழந்த பிரிவுகள் விடுபட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்ய இயலும்..இந்தப் பசையடுக்கு வகையினங்கள் இடஒதுக்கீட்டுக்கு உரிமை கோர முடியாது.

[The most authoritative decision on the point of reservations was the nine- Judge ruling in Indra Sawhney v. Union of India7. The court also had the occasion to consider the validity of an office memorandum which introduced a 27% quota in favour of other backward classes in relation to Central Government posts and services. The verdict was not a unanimous one. There were six opinions. The broadest summary of those opinions:

(1)            the reference to backward classes of citizens within Article 16(4) refers to social and educational backwardness;

(2)          Article 16(4) is a facet and part of Article 16(1), and not an exception to the latter. The judgment of Jeevan Reddy, J explains the ruling in N.M. Thomas on this point approvingly at paragraph 713 (SCC p. 672-674);

(3)        Caste alone cannot be the determining factor to decide social and educational backwardness and that a caste can be and can often be a social class in India;

(4)         The economic criterion alone for determining backwardness of classes or groups is impermissible, because the indicators are social and educational backwardness having regard to the express terms of Articles 15(4) and 16(4);

(5)           There can be sub-classification amongst backward classes of citizens for the purpose of ensuring that most vulnerable groups benefit;

(6)         There can be no reservations in promotions under Article 16(4); and

The creamy layer or more affluent sections of other backward classes had to be identified by the state to ensure that the most deprived sections were not kept out. Such categories could not claim the benefit of reservation. ]

++

சொல்லடிப்போம் வாருங்கள்!

அன்பர் சிபி எழுதுகிறார்: PDF – portable Document Format. கையடக்க ஆவண வடிவம் என்று மொழிபெயர்க்கலாம். எளிமை கருதி கையடக்க ஆவணம் என்று வழங்கலாம்.  

நன்றி சிபி!

++

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 40

திங்கள், 10 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 66 : மகிழன் வேண்டுகோள்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 65 தொடர்ச்சி)

தோழர் மகிழன் வேண்டுகோள்: கைகொடுத்துக் காலத்தைத் தூக்கி விடுவோம், வாருங்கள்!

இனிய அன்பர்களே! வணக்கம்.

இது தாழி மடல் – 40. நமக்கு ஒரு நாளிதழ் வேண்டும் என்று சொல்லி அதன் முன்னோடியாகத்தான் தோழர் தியாகு இம்முயற்சியைத் தொடங்கினார். அவரது உழைப்பாலும் உங்களின் ஒத்துழைப்பாலும் தாழி தொடர்ந்து மலர்கிறது. எவ்வளவு இடர்ப்படினும் நாள் தவறாமல் தாழி மடல் உங்கள் கைக்கு வரும் என்பதில் ஐயம் வேண்டா. தாழி மடலின் முகன்மை எழுத்துகளை அச்சிலேற்றி நூல்வடிவாக்க வேண்டும் என்ற முன்மொழிவும் உள்ளது.

இதே போல்தான் ஈராண்டுக்கு மேலாக “தமிழ்நாடு இனி” இணைய வழி அரசியல் வகுப்பு தொடர்ந்து அறிவன் தோறும் நடந்து வருகிறது. இது வரை 108 வகுப்புகள் முடிந்துள்ளன. வகுப்புகளைக் காணொலிகளாக்கி தமிழ்த் தேசம் வலையொளியில் தொடர்ந்து தரவேற்றி வருகிறோம். இது போதாது. வகுப்புப் பதிவுகளை நூல்வடிவாக்கி ஆவணப்படுத்தினால்தான் இக்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் நிலைப்பயன் அடைய முடியும் என்பதை உணர்ந்துள்ளோம். வகுப்புக் காணொலிகளை வரிவடிவாக்கும் பெரும்பணியைத் தமிழ்த் தேசம் நூலகத்தில் தோழர் தியாகுவின் மேற்பார்வையில் தோழர் கதிர் இரவு பகலாகச் செய்து கொண்டிருக்கிறார். அலுவலகப் பணிகள் என் பொறுப்பில்!

தமிழ்த் தேசம் நூலகம், இளைஞர் அரண், பொதுமை செய் படிப்பு வட்டம், பல்வேறு கூட்டியக்கங்கள் என்று எல்லாத் தோழர்களுக்கும் வேலை உள்ளது. இயக்கப் பணியில் ஓய்வும் இல்லை. சோர்வும் இல்லை. அறிவும் உழைப்பும் ஈகமும்தான் இயக்கத்துக்கு அடிப்படைகள் என்று கற்றுக் கொண்டுள்ளோம். 

அயர்ந்தால் நாடு பறிபோய் விடும் அச்சுறுத்தலை நன்குணர்ந்த நண்பர்களின் தன்னளிப்பு மிக்க உதவியையும் நன்றியுடன் குறிப்பிட விரும்புகிறேன்.

அன்பர்களே!

(நம் பணிகளுக்கெல்லாம் உயிர்நாடியான நூல் வெளியீட்டு முயற்சியில் சுணக்கம் இருப்பதை உணர்ந்துள்ளோம். தோழர் சமந்தா எழுதிய “சூழலியல் அடிப்படைகள்” எழுதப்பட்டுப் பக்க வடிவமைப்பும் செய்யப்பட்டு நெடுங்காலமாக அச்சுக்குக் காத்துள்ளது. தோழர் தியாகு எழுதிய “ஈழம் மெய்ப்படும்” “தேசியத்தின் உரையாடல்” இன்னும் பல நூல்களும் அதே நிலையில்தான் உள்ளன. மார்க்குசியம் அனா ஆவன்னா, மார்க்குசின் தூரிகை உள்ளிட்ட பழைய நூல்களும் மீளச்சு செய்யப்பட வேண்டும்.

இந்த நிலையில்தான் சென்னைப் புத்தகக் கண்காட்சி வருகிற சனவரி 6ஆம் நாள் தொடங்குகிறது என்ற செய்தி வந்துள்ளது. அதற்குள்ளாகச் சில நூல்களாவது அணியமானால் நன்று. இந்தப் பணிகளில் உங்கள் துணை நாடுகின்றோம். கேட்டெழுதுதல், தட்டச்சிடல், மெய்ப்பு திருத்தம் இந்தப் பணிகளில் என்ன முடியுமோ செய்யுங்கள்.

நூல்வெளியீட்டுக் குழுவில் இடம் பெற்று எங்களுக்கு வழிகாட்ட முன்வந்தாலும் மகிழ்வோம். ) எல்லாவற்றுக்கும் பொருளுதவியும் வேண்டும். பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை. புத்தக உலகமும் இல்லை. உதவுங்கள்! தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் நாங்கள் முன்னெடுத்துள்ள இந்த முயற்சிகள் நம் மக்களின் எதிர்கால விடியலுக்கு அடித்தளமிடும் என்று உறுதியாக நம்புகிறோம். அந்த அடித்தளத்தில் ஆளுக்கொரு கல்லாக இருந்தால் அந்தப் பெருமை போதும் என மனங்கொள்கிறோம். கைகொடுத்துக் காலத்தைத் தூக்கி விடுவோம், வாருங்கள்!

நாளை ஆட்சியைப் பிடிப்போம், புரட்சியை வென்று காட்டுவோம் என்று உங்களிடம் வெற்று வாக்குறுதிகள் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ்ச் சமூகத்தின் வருங்காலத்திற்கென ஓர் அடிப்படையை கருத்தளவிலும் அமைப்பளவிலும் கட்டியெழுப்ப உழைப்போம் என உறுதி அளிக்கிறோம். ஆகவே நண்பர்களே, உங்கள் ஆதரவை நாடி நிற்கிறோம்! ஒல்லும் வகையெல்லாம் உதவிடுங்கள்! காலத்தால் செய்த நன்றி…..

 மகிழன் [9025870613] 

அமைப்புச் செயலாளர்,

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்                    

பொருளுதவிக்கான சேமிப்புக் கணக்கு:

கணக்குடையவர் பெயர் : மைக்கேல் இராசு / Micheal Raj

கணக்கு எண் / Account Number : 0933101041559

இ.நி.அ.குறியீடு / IFSC code: CNRB0000933

கனவரா வங்கி , சைதாப்பேட்டை /  CANARA BANK, SAIDAPETகூகுள் செலுத்தி எண் / Gpay number: 9025870613

 (தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 40

ஞாயிறு, 9 ஏப்ரல், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 65

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 64 தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார் 65

இனிய அன்பர்களே!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் தோழர் ச. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நேற்று திறந்த மடல் எழுதினேன்.

அவர் உடனே விடையனுப்பினார்:

“உயர்சாதியினருக்கான 10 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டை அண்ணல் அம்பேத்துகருக்குச் செய்த துரோகம் என்றுதான் நான் கருதுகிறேன். நான் சார்ந்திருக்கும் தமு எகச இது குறித்து விரிவான அறிக்கை அப்போதே வெளியிட்டிருக்கிறோம் தோழரே. தங்கள் மடலுக்கு நன்றி.“

அவருக்கு நான் நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். தமுஎகச அறிக்கையை அனுப்பும் படியும் கேட்டுக் கொண்டேன். “தேடி அனுப்புகிறேன் தோழர்” என்று விடையிறுத்துள்ளார்.  

தோழர் ச. தமிழ்ச்செல்வனை மனமுவந்து பாராட்டுகிறேன். அவரது குடியாட்சியப் பண்புக்காகவும், பொநபி (இ டபிள்யூ எசு) இட ஒதுக்கீடு பற்றிய உறுதியான நிலைப்பாட்டுக்காகவும் பாராட்டுகிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தையும் பாராட்டுகிறேன்.

தாழி அன்பர்களே! நீங்களும் தோழர் தமிழ்ச்செல்வனையும் தமுஎகச அமைப்பையும் பாராட்டுவீர்கள் என நம்புகிறேன். குடியாட்சியப் பண்பாடு வளர நாமும் பாடாற்றுவோம்!   

திருச்சிராப்பள்ளியிலிருந்து வழக்குரைஞர் தோழர் கென்னடி எழுதுகிறார்:

அன்புள்ள தோழருக்கு வணக்கம் தங்களது மடல் தொடர்ந்து சீரான முன்வைப்புகளோடு அன்றாட நிகழ்வுகளை அரசியல் முக்கியமான செய்திகளையும் பார்ப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் உதவுகிறது இந்த முன்முயற்சி தொடர வேண்டும் அதற்கான எனது வாழ்த்துக்கள். நன்றி!

சிறப்பு முகாம் ஏதிலியர்க்காக நடத்தி வரும் சட்டப் போராட்டம் பற்றி நீங்களும் எழுதுங்க கென்னடி!  

அன்பர் மணி வில்லன் (பெயரே இதுதானா?) எழுதுகிறார்:

வணக்கம். தாழி மடல் தொடர்ந்து கிடைக்கிறது.  நன்றி.

அன்பர் மா. சத்தியசீலன் எழுதுகிறார்:

வணக்கம். தங்களின் ‘ஈழம் மெய்ப்படும்‘ நூலிற்காகக் காத்திருக்கிறேன்!

அத்துடன் ‘மூலமுதல்’ நூலின் தற்போதைய நிலை – எந்தக் கட்டத்தில் உள்ளது என்பதை அறியவும் ஆவலாய் உள்ளேன்.

தங்களின் முந்தைய ‘ மூலதனம்‘ நூலின் அனைத்துப் பாகங்களும் என்னிடம் உள்ளன; ஆனால் அவற்றைப் படித்துப் புரிந்து கொள்வதில் எனக்குச் சிரமமாக உள்ளது. அந்நூலின் கருத்துகளை எளிமைப்படுத்தி என்னைப் போன்றோர் புரிந்து கொள்ளும் வகையில் சிறுசிறு கட்டுரைகளாக தங்களால் வெளியிட இயலுமா! அறிய விழைகிறேன், நன்றி; வணக்கம்!

1/ ஈழம் மெய்ப்படும் மின்படி இன்றே உங்களுக்கு அனுப்பப்படும்.

2/ மூலமுதல் தூய தமிழாக்கப் பணி பாதியில் நிற்கிறது. தனித்து நான் மட்டுமாக அதைச் செய்வது கடினம். பெருந்தொற்றுக் காலத்தில் யாரையும் உடன் வைத்துக் கொண்டு செய்ய இயலவில்லை. நானும் பொள்ளாச்சி போய் விட்டேன். பெருந்தொற்றுக் காலம் பெரும்பாலும் முடிந்த பின் தோழர் கார்த்திகேயபிரபுவின் உதவி கிடைத்தது. பொதுமையறிக்கை (பொ க கொ அ) தூய தமிழாக்கம் முடித்து விட்டு மூலமுதலை எடுக்கத் திட்டமிட்டு, அந்தப் பணியை அவர் துணையோடு தொடங்கினேன். சென்னை வந்த பிறகும் கொஞ்சம் செய்தோம். அதுவும் பாதியில் நிற்கிறது. விரைவில் அதை முடித்து, மூலமுதலுக்கும் திரும்ப முடியும் என்று எதிர்பார்க்கிறேன். தாழியில் அவ்வப்போது நிலவரம் பகிர்வேன்.

3/மூலமுதலில் முதல் அதிகாரம் மட்டும்தான் சற்றே கடினம். முயன்று படித்து அதைக் கடந்து விட்டால் பிறகு எல்லாம் எளிது. நான் ஏற்கெனவே மூலமுதல் வகுப்புகள் நடத்தியுள்ளேன். தமிழ்த் தேசம் ஏட்டில் “என்ன?” என்ற தலைப்பில் ஒரு தொடரே எழுதினேன். உங்கள் குறிப்பான ஐயப்பாடுகள் (அய்யப்பாடுகள் என்று எழுதுவீர்கள் அல்லவா?) இருப்பின் எழுதுங்கள். தெரிந்த வரை ஐயந்தெளிய உதவுவேன். இல்லையேல் பொறுங்கள், மூலமுதல் வரட்டும், அதற்கொரு ‘நண்பன்’ (கோனார் நோட்சு போல?) போட்டு விடுவோம்.

அன்பர் சிபி எழுதுகிறார்:

தோழர் சத்தியசீலனுக்கு! நலமா தோழர்? தங்களின் கடிதத்தைப் படித்தேன். மாற்றுக் கருத்தைக் கூற பிரபாகரனைத் துணைக்கு அழைக்க வேண்டா என்பதில் எவ்வித ஏரணமும் இல்லை. ஏனென்றால் சீமான் பிரபாகரனைத் துணைக்கு வைத்துக் கொண்டு எங்கேயும் ஈ.வெ. இரா. மீதோ திராவிடக் கருத்துகள் மீதோ இடித்தாய்வு வைக்கவில்லை. 2009 இனப் படுகொலையின் போது ஆண்ட கட்சியின் மீதே தொடக்கத்தில் அவர் இடித்தாய்வு வைக்கிறார். பின் அக்கட்சியின் அதன் திராவிடம் என்ற கருத்தியல் மேல் திறனாய்வு செய்து அது தமிழர்களுக்கெதிரான பிறமொழியாளர்களின் ஆதிக்கம் என்று முடிவு செய்து ஈவெஇராவை விமர்சிக்கிறார். அவரின் விமர்சனம் தமிழினப் படுகொலையின் மீது திமுக செயல்கள் தொடங்கி திராவிடமென்ற கருத்தியலை இடித்தாய்வு செய்வதாக உள்ளது. இதிலெதிலும் அவர் பிரபாகரனைத் துணைக்கு அழைக்கவும் இல்லை; காட்டவும் இல்லை. பிரபாகரன் மீது ஆதரவு தெரிவிப்பவர் ஈவெஇராவையோ திராவிடத்தையோ இடித்தாய்ந்தால் பிரபாகரனை ஐயுறுவோம் என்பது சிறுபிள்ளைத்தனம். சீமான் பேசும் திராவிட எதிர்ப்பு என்பது பாதிக்கப்பட்டவனின் வன்முறை போன்றது, அது எதிர்வினையே தவிர வினை இல்லை. அதற்கெதிராக பிரபாகரனை ஐயுறுவது அதிகாரத்தின் வன்முறைக்கீடானது, அது வினை ஆகும். இனப்படுகொலையில் பங்கு என்று வினையால் வந்த எதிர்வினையே சீமானின் இடித்தாய்வு.. நன்றி. சிபி. 

சிபி, சற்றுப் பொறுங்கள், நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய விளக்கங்கள் மீதமுள்ளன. இதற்கிடையில் எனது “ஈழம் மெய்ப்படும்” மின்படியை உங்களுக்கும் அனுப்புகிறேன் (பிடிஎஃப்-க்கு நீங்களே தமிழ் சொல்லுங்களேன்.) பெரியார் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியுள்ளது என்பதை நான் மறக்கவில்லை. முதலில் பெரியார்-எதிர்-பிராபகரன் என்ற பூசலுக்கப்பால், அதை விட்டு வெளியே வந்து, ஈழப் போரில் திமுக பங்கு பற்றி விருப்பு வெறுப்பின்றி உரையாட ஒரு முதிர்ச்சி தேவைப்படுகிறது, நீங்களும் சத்தியசீலனும் இரு கருத்தியல் நிலைப்பாடுகளின் சார்பாளர்கள் (பிரதிநிதிகள்) என்ற முறையில் நான் எழுதுவது உங்கள் இருவருக்காக மட்டுமல்ல. உங்களைப் போலவே ஆதரவு – எதிர்ப்பு நிலைப்பாடுகள் எடுத்துள்ள எத்தனையோ திராவிட, தமிழ்த் தேசிய  ஆர்வலர்களுக்காகவும்தான். தொடர்ந்து உரையாடுவோம்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உயிர் பறித்த பீமா கொரேகான் பொய் வழக்கு

பீகொ-16: அமெரிக்காவிலுள்ள இணையத் தடயவியல் நிறுவனம் ஒன்று பீமா கொரேகான் வழக்கில் அருள்தந்தை ஃச்டான் சுவாமி இணைக்கப்பட்டது பற்றிப் புதிய உண்மைகளைக் கண்டறிந்துள்ளது. பொய் வழக்கில் அவரைச் சிக்க வைப்பதற்கான ஆவணச் சான்றுகள் 2017க்கும் 2019க்கும் இடையில் அவரது கணிணியில் ‘ஊன்றப்பட்டன’ என்று இந்நிறுவனத்தின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை எடுத்துக்காட்டி மா.பொ.க.(சிபிஎம்) கட்சியின் அரசியல் தலைமைக் குழு மோதி ஆட்சியில் தேசியப் புலனாய்வு முகமையின் செயல்பாடுகளைக் கண்டித்துள்ளது. பிணை மறுக்கப்பட்டு, சிறும வசதிகள் மறுக்கப்பட்டு, சிறைக் காவலில் அவர் உயிரிழந்தார், இது படுகொலையே என்று மா.பொ.க.சிபிஎம் அறிக்கை சொல்கிறது.    

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

தோழர் தியாகு

தரவு : தாழி மடல் 39