செவ்வாய், 13 டிசம்பர், 2022

தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும்!- இரா. திருமாவளவன்

 அகரமுதல




தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும்

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு

(அதிகாரம்:மெய்யுணர்தல், குறள் எண்:351)

பொய்யானவற்றை மெய் என்று நம்புவது மயக்கந் தருவது; அறியாமையுடையது; பேதைமையானதாகும். வாழும் வாழ்க்கையில் அறிவைப் பயன்படுத்தி எஃது உண்மை எது பொய் என்பதை அடையாளங்கண்டு உண்மையை உணர வேண்டும்.

உண்மையை உணர்கின்ற பொழுது நமக்குள் படிந்திருக்கின்ற மருள் என்னும் மயக்கத்தை நாம் நீக்க முடியும். அவ்வாறு மருள் என்னும் மயக்கத்தை நீக்கினால் நம் பிறப்பு மாண்புள்ள பிறப்பாக, பொருள் நிறைந்த பிறப்பாக அமையும்.. இல்லையென்றால் நம் பிறப்பு மாண்பில்லாததாகி விடும்.

மக்களில் சிலர் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களாக இல்லை; பொய்ப்பொருளை உண்மையென்று நம்புகின்றனர். இத்தகு நம்பிக்கைகள் அவர்களை மூடர்களாக்கி விடுகின்றன.

ஆறறி வதுவே அவற்றொடு  மனனே

என்கிறது தொல்காப்பியம். எது சரி, எது பிழை, எது மெய் , எது பொய் என்பதை ஆறாம் அறிவாகிய பகுத்தறிவால் ஆராய்ந்து அறிய வேண்டும். இவ்வாறு ஆராய்வது மெய்ப்பொருளைக் கண்டறிய உதவும்; இவ்வாறு மெய்ப்பொருளைக் கண்டறிந்து தெளிவடைந்தவர்களே மெய்யறிஞர்கள் எனப்படுகின்றனர். அவர்கள் பெற்றுள்ள உணர்வு மெய்யுணர்வு எனப்படும்.

நம்முள் மருள் என்னும் மயக்கம் தோன்றுவதற்கும் நீங்காமல் இருப்பதற்கும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் முதலான அறக்கேடுகள் ஒரு வகையில் கரணியமாக அமைந்து விடுகின்றன.

அறியாமை இயல்பாக இருப்பதே; அந்த அறியாமை அறிவின் விரிவால் விலக வேண்டும். ஆனால் தொடர்ந்து அறிவில் தெளிவில்லாதவர்களாகவும் அறியாமையை உடைமையாகக் கொண்டவர்களாகவும் மாந்தர் இருப்பாராயின் அவர்கள் மெய்யுணர்வாளராக இருக்கவியலாது. இதனால்தான் பலர் மூடத்தனங்களில் மூழ்கி உண்மையை அறிய முடியாமல் தங்கள் வாழ்நாளைக் கடக்கின்றனர். மூடத்தனங்கள் மாந்தரை மிக மிக இழிவானவர்களாக்கி விடுகின்றன.

கயிற்றையும் பாம்பையும் பார்த்து கயிற்றைப் பாம்பு எனக் கருதுவதும் கழுதையையும் குதிரையையும் பார்த்து கழுதையைக் குதிரை என்பதும் எடுத்துக்காட்டுக்குரியவை. அதே போல் மக்களில் உலக நலனுக்கும் மக்கள் நலனுக்கும் எதிர்ப்பான முரணான நூல்களைப் பின்பற்றிச் செல்வதும் மாந்த வாழ்வுக்கும் நலத்திற்கும் ஒற்றுமைக்கும் எதிர்ப்பான நெறிகளைப் பின்பற்றுவதும் பொய்யின் பாற்படும் மருட்சியை உருவாக்குவதாகும். 

மாந்த மாண்பை உணர்த்தி மாந்த நேயத்தைப் பேணுவது தமிழ்மறையாம் திருக்குறள் மெய்ப்பொருள் உணர்த்தும் உண்மை நூலின் அடையாளமாகும். மாந்தருக்குள் பாகுபாட்டை விளைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என மாந்தப் பண்புக்கு எதிரிடையான இழிவுகளை ஊட்டும் மனுமிருதி பொய்ப்பொருள் உணர்த்தும் பொய்மை நூலின் அடையாளமாகும்.

புடை பரப்பி வீற்றிருக்கும் இயற்கை நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனப் பூதப்பொருள்களாக இயைந்து கிடக்கின்றது. இவ்வியற்கை கூறுகள் இயைந்து, இயங்கிக் கொண்டிருப்பதுதான் இயற்கை அமைப்பு  முறை. அந்த இயக்கத்தையும் அதன் பேராற்றளையும் மாந்த மனத்துள் உணர்கின்றோம். இதனை உணர உணர மாந்தன் மிக மிகச் சிறிய நுண்ணிய அற்ப உயிரியாகி விடுகின்றான். நான், நீ என்று செருக்கியும் தருக்கியும் திரியும் ஆணவப் போக்கிலிருந்து அகன்று அடங்கி ஒடுங்கி தன்னடக்கம் பெறுகின்றான்.

மரத்தால் செய்யப்பட்ட யானையைப் பார்த்து யானை என்பதும் மரத்தைப் பார்த்து மரம் என்பதும் இவை ஒன்றுக்குள் ஒன்று இயைந்திருப்பதை அறியாததாகும். பரந்திருக்கும் இயற்கைக்குள் மூலக்கூறுகள்  ஐம்பூதங்களாகவும் அவ்வைம்பூதங்கள் யாவும் பரம்பொருளாகவும் கிடப்பதை ஆய்ந்துப் பார்த்தால் உணரலாம். இவற்றுள் இயங்கும் இயக்கம் ஒன்றே. அதனை ஆராய்வதும் அறிவதும் அறிவியலாகவும் மெய்யறிவியலாகவும் கிடக்கின்றது. எனவே இந்தப் பேராற்றலை ஆராயாமல் அறியாமல் வெறும் கலையுரைத்த கற்பனைகளுக்குள் ஆழ்ந்திருப்பது தெளிவைத் தராது. எனவே மெய்ப்பொருளை அறிய முற்படுவோம்; பிறப்பினைப் பொருளுடையதாக்குவோம்.

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு

(அதிகாரம்:மெய்யுணர்தல் குறள் எண்:351)

சொல் விளக்கம் :

பொருளல்லவற்றை = மெய்ப்பொருள் அல்லாதவற்றை / உண்மை அல்லாதவற்றை

பொருளென்றுணரும் = உண்மையெனக் கருதும்

மருளானாம் = அறியாமை உடையதாம் / மயக்கம்  உடையதாம்

மாணாப் பிறப்பு = மாண் ஆகாத பிறப்பு ; மாண்பும் உயர் அறிவுச் சிறப்பு இல்லாத வாழ்வு

கருத்து :

உண்மையை உணராமல் பொய்மையை நம்பிச் சீரழிவது மாண்புடைய வாழ்வாகாது.

இரா. திருமாவளவன் மலேசியா

வெள்ளி, 9 டிசம்பர், 2022

என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு

 அகரமுதல






என் வீரத்தாய் பூபதி அம்மாள் – மைக்கேல் (இ)யூபருட்டு

என் அம்மா பூபதி அம்மாள்(92), குழந்தைப் பருவத்தில் இருந்தே கடுமையான அறைகூவல்களை  எதிர்கொண்டார்.  தன் பாதையிலிருந்து புறங்காட்டவே இல்லை.  மக்களுக்குத் தொண்டாற்றவே செவிலியர் படிப்பைத் தேர்ந்தெடுத்து,  செவிலியர்  கல்வியில் சிறந்து விளங்கினார்.

பிரித்தானியர் காலத்தில் ஆயுதப்படையில் சேர்ந்தார்; நாயகன்(catain) நிலைக்கு உயர்ந்தார். கிளாசுகோ, மெடிசின் ஆட்டு(கனடா, Medicine Hat, Canada),  இலங்கை போன்ற பல்வேறு வெளிநாட்டு நகரங்களில் அவரது பணி இருந்தது.

தாயகம், தமிழ்ப் பண்பாடு, தமிழ் மொழி மீதான அவரது பற்றும் ஈடுபாடும் மிகவும் உயர்ந்தது. என் தாய் கத்தோலிக்கரான மைக்கேல் என்பவரை மணந்தார். அவரும் படைவீரரே. இருவரின் ஒரே மகன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. இதனால் எனக்குக் கட்டுப்பாடும் தமிழ் உணர்வும் காலூன்றின. அந்த நாட்களில், படைப்பெண்ணிற்குத் திருமணம் நடந்தால், அவள் ஆயுதப்படைத்துறையிலிருந்து விலக வேண்டும். அதன்படி என் தாயாரும் படைத்துறையிலிருந்து விலகினார். இருப்பினும் செவிலியராக மக்கள் பணியாற்றினார்.

என் இளம் பருவத்தில் தமிழ்மொழி மீது அவர் கொண்டிருந்த வலிமையான ஒட்டுறவைக் கண்டேன். இதுவே, பின்னர் என் உள்ளத்தில் தமிழ்ப்பற்றை விதைக்கக் காரணமாக இருந்தது. வைகறை 4.00 மணிக்கெல்லாம் இறைப்பாடல்களில் சில பகுதிகளை மனனம் செய்யச் செய்தார்.

அவர் ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பெருமளவு உதவினார். அவர் எப்பொழுதும் பெண்களையும் நலிந்தவர்களையும் மதிக்கக் கற்றுக் கொடுத்தார்.

என்னிடம்  நல்ல குணங்கள் இருந்தால் அவை என் தாயிடமிருந்து எனக்கு வந்தவையே. அவர் 1988 இல் மறைந்தாலும், அவரது நினைவுகள் என்றும் நீடித்தவையாகவும் அன்றலர்ந்தன போலவும்  நிலைத்து நிற்கின்றன.

 மைக்கேல் (இ)யூபருட்டு





புதன், 7 டிசம்பர், 2022

களப்பிரர் காலம் இருண்ட காலமா? – முனைவர் ஆ.பத்மாவதி: இணைய வழிக் கூட்டம் 10/12/22

 அகரமுதல

     07 December 2022      No Comment



“தொன்மை! தொடக்கம் ! தொடர்ச்சி!” குழுவின்

இணையவழிக் கூட்டம்

தமிழ் மொழி மற்றும் தமிழரின் சிறப்பு தொன்மையில் இருப்பதோடு அதன் தொடர்ச்சியிலும் இருக்கிறது. உலகின் தொன்மையான பல நாகரிகங்கள் தன் தொடர்ச்சியை இழந்து அழிந்து போனதைப் பார்க்கிறோம். சங்கக் காலம் தொடங்கி, தற்காலம் வரை உள்ள தமிழர் வரலாற்றில் களப்பிரர் காலத்தை மட்டும் ஏன் இருண்டகாலம் என்று சிலர் கூறுகிறார்கள்?

தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள தொல்லியல் அறிஞர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இன்று வரை கிடைக்க பெற்றுள்ள தொல்லியல் ஆதாரங்கள் கொண்டு களப்பிரர் காலத்தின் இருளைப் போக்க ஒளி பாய்ச்ச உள்ளார்.

களப்பிரர் என்போர் யார்?
அவர்கள் காலத்தில் மக்கள் நிலை என்ன?
அவர்கள் காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்ன?
களப்பிரர் ஆட்சியின் தோற்றமும் மறைவும் எப்படி நிகழ்ந்திருக்கலாம்?

போன்ற பல கேள்விகளுக்கு விடையைத் தெரிந்து கொள்ள வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் “தொன்மை! தொடக்கம்! தொடர்ச்சி!” குழுவின் இணையவழிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வெளியிட்டுள்ள அவரது “புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு” என்ற புத்தகம் தமிழ் ஆய்வாளர்களிடையே ஆர்வத்தையும் , விவாதத்தையும் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு: களப்பிரர் காலம் இருண்ட காலமா?

கூட்ட இணைப்பு / Zoom Link: http://www.tinyurl.com/tttfetna

அணுக்கி எண் /Zoom Meeting ID: 859 8002 6724

கார்த்திகை 24, 2053 / திசம்பர் 10, சனிக்கிழமை (12/10/2022) 10:30 காலை (அமெரிக்கக் கிழக்கு நேரம்)

கார்த்திகை 24, 2053 / திசம்பர் 10, சனிக்கிழமை (12/10/2022) 9:00 இரவு (இந்திய நேரம்)

அன்புடை நெஞ்சம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

வியாழன், 1 டிசம்பர், 2022

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 28, 29 & 30: இணைய அரங்கம்

 அகரமுதல

     01 December 2022      No Comment

தமிழே விழி !                                                        தமிழா விழி!



செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாம் தலை.(திருவள்ளுவர், திருக்குறள் 411)

தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 28, 29 & 30: இணைய அரங்கம்

நிகழ்ச்சி நாள்: கார்த்திகை 18, 2053 ஞாயிறு 04.12.2022  காலை 10.00

“தமிழும் நானும்” – உரையாளர்கள்:

முனைவர் வீ.சந்திரன்,

மேனாள்  சட்டத்தமிழ் இயக்குநர்

திருவாட்டி ஒ.பா.சாந்தி நடராசன்,

சட்ட மொழிபெயர்ப்பாளர்   

முனைவர் மு.முத்துவேலு,

உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணையம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                           

வரவேற்புரை: தமிழாசிரியர் (உ)ரூபி

லைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரை: தோழர் தியாகு

நன்றியுரை: மாணவர் கு.பாலாசி

பதிவு இணைப்பு:  தோழர் மகிழன்



புதன், 30 நவம்பர், 2022

ஆரியமா, திராவிடமா? – சுப.வீரபாண்டியன், அ.அருள்மொழி

 அகரமுதல



கார்த்திகை 14, 2053  / 30-11-2022 புதன்கிழமை மாலை 6.30 மணி


ஆரியமா, திராவிடமா?
விளக்கப் பொதுக்கூட்டம் 

சின்னமலை, சைதாப்பேட்டை, சென்னை

விளக்க உரை

தோழர் சுப.வீரபாண்டியன், பொதுச்செயலாளர்

வழக்குரைஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர்

 திராவிட இயக்கத்

தமிழர் பேரவை




திங்கள், 28 நவம்பர், 2022

தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21.அ.): மாவீரர்களின் பெயரால்…

 அகரமுதல





தியாகு எழுதுகிறேன்….தாழி மடல் (21. அ.):

மாவீரர்களின் பெயரால்

ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்படுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த வீர வித்துகளை நினைவு கூர்கின்றார்கள்.

2009 மே முள்ளிவாய்க்கால் பெரும்படுகொலைக்கு முன் 1989 முதல் 2008 முடிய ஒவ்வோராண்டும் தலைவர் பிரபாகரன் மாவீரர் நாள் உரை நிகழ்த்துவது வழக்கமாக இருந்தது. இந்த உரைகள் ஒவ்வொன்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று ஆவணமாகும். ஏற்றவற்றங்கள் நிறைந்த விடுதலைப் போராட்டப் பாதையில் ஒவ்வொன்றும் ஒரு கைவிளக்காக ஒளியூட்டும். இப்போதும் மாவீரர் நாளை வெற்றுச் சடங்காக இல்லாமல் போராட்டத்தைத் தொடர மீள்சூளுரை ஏற்கும் நாளாகக் கொள்வோம் என்றால், நடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து பட்டறிவுகளைத் தொகுத்து எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும்.

சென்ற ஆண்டு மாவீரர்களை நாம் நினைவுகூர்ந்து இந்த ஆண்டு பற்பல வழிகளில் அவர்களைப் போற்றும் வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் தாயகத்திலும் பன்னாட்டுலகிலும் அரங்கேறியுள்ள பொருத்தப்பாடு கொண்ட வரலாற்று நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்துக் கொள்ளும் கடமை நமக்குண்டு.

இனநாயகம் கோலோச்சும் இலங்கைத் தீவில் சிங்கள அரசியலில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றங்களைக் கணக்கில் கொண்டு ஈழ மக்கள் உரிமைப் போராட்டத்தில் அவற்றின் தாக்கம் என்ன என்பதைக் காய்தல் உவத்தலின்றி மதிப்பாய்வு செய்ய வேண்டும். அரியணையில் ஆள்மாற்றம், ஆட்சி மாற்றம் என்பதல்ல நாம் சுட்ட விரும்புவது. இந்த மாற்றங்களுக்கு வழிகோலிய மக்கள் போராட்டங்களையே மனத்திற்கொண்டுள்ளோம்.

இனவழிப்புச் செய்து போர்க்கள வெற்றிகளை அடித்தளமாக்கி, சிங்களப் பேரினவாத அலை விளிம்பேறி ஆட்சியைப் பிடித்த அதே இராசபட்சர்கள் தம் மக்களிடமிருந்தே ஓடவும் ஒளியவும் ஒருநாள் வரும் என்று அவர்களும் அஞ்சியிருக்க மாட்டார்கள்.  நாமும் எண்ணியது இல்லை. தமிழர்களின் நீதிப் போராட்டத்தின் பார்வையில்  ‘போராட்ட’ (‘அறகலய’) எழுச்சியின் முதன்மை விளைவு சிங்கள அரசியல் சமூகத்தில் ஏற்பட்ட உடைப்புதான்.  பேரினவாத ஆளும் கும்பலின் சமூக அடித்தளமான சிங்கள வெகுமக்களே அந்தக் கும்பலை ஓட ஓட விரட்டியடித்ததை மறக்கவியலாது. போராட்ட’ (‘அறகலய’) நேராகத் தமிழ் மக்களின் கோரிக்கைகளை எழுப்பத் தவறியது என்பதை நாம் மறக்கவில்லை. இந்தக் கோரிக்கைகளை அந்த மக்களிடம் கொண்டு சேர்க்கும் கடமை நமக்கும் உள்ளது என்று மட்டும் சுட்டிக் காட்ட வேண்டும்.

தமிழ் மக்களின் நீண்ட நெடிய நீதிப் போராட்டத்துக்கும் சிங்கள மக்களின் அண்மைய தன்னெழுச்சிக்கும் மொழியாப் புரிந்துணர்வு ஒன்றுண்டு என்பதை வரலாற்று மாணவர்கள் உய்த்துணர்வார்கள். தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் போரே பன்னாட்டு அரங்கில் சிங்களத்தை அரசியல் வழியில் தனிமைப்படுத்தும் சூழலைத் தோற்றுவித்தது என்பதோடு, தாங்கவொண்ணாத படைச் செலவால் இலங்கைப் பொருளியலையும் நொடிக்கச் செய்தது. இந்த வரலாற்று ஏரணத்தைத் தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் உள்வாங்கினார்களா? இனியாவது உள்வாங்கி நீதிக்கான போராட்டத்தில் உரியவாறு கணக்கில் கொள்வார்களா?

இனி என்ன நடந்தாலும் சரி, குறிப்பிடத்தக்க அளவில் சிங்கள இளைஞர்களிடம் துளிர்த்துள்ள குடியாட்சிய உணர்வும் இனவாத எதிர்ப்பும் இலங்கைத் தீவிலடங்கிய இரு தேசங்களின் போராட்டத்திலும் ஒரு நிலைத்த காரணியாகப் பங்கு வகிக்கும். நீதிக்கான போராட்டத்தை முடுக்கி விரைவாக்கும் காரணிகளில் ஒன்றாக விளங்கும்.

இரண்டாவதாக, இந்த நாளில் குழப்பம் நீங்க வேண்டிய ஒன்று இந்திய வல்லரசின் வகிபாகம் பற்றியதாகும். இனவழிப்பில் சிங்களப் பேரினவாதத்துக்கு உடந்தையாகச் செயல்புரிந்த இந்தியா தமிழர்களின் நீதிக்கான போரட்டத்திலும் இனக் கொலையாளிகளைக் காக்கும் கவசமாகச் செயல்பட்டு வருகிறது.  ஐநா மனிதவுரிமைப் பேரவையில் மேலைநாடுகள் முன்மொழிந்த அரைகுறைத் தீர்மானத்தைக் கூட ஆதரிக்க மறுத்து வாக்கெடுப்பிலிருந்து விலகிக் கொள்கிறது. ஈனக் குரலில் 13ஆம் திருத்தம் பற்றி முனகித் தன் கடமையை முடித்துக் கொள்கிறது.

ஐநா அறிக்கைகளில் குவிந்து கிடக்கும் சான்றுகள், மனித வுரிமைகளுக்கான உயராணையர்கள் அறிக்கையிடும் மெய்ம்மைகள், புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிப்படுத்தி வரும் கோரிக்கைகள், ஆற்றல்மிகு பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புகள் வெளிச்சமிடும் செய்திகள் – இவற்றில் எதுவும் இந்திய வல்லரசின் கண்ணிற்படுவதில்லை. காதில் கேட்பதில்லை. கண்ணை மூடிக் கொண்டு சிங்களம் காக்கக் காக்க கவச மந்திரம் படித்துக் கொண்டிருக்கிறது.

அடியோடு ஒதுங்கியிருந்தாலும் தாழ்வில்லை என்னும் படியாகத் தமிழீழ அரசியலை ஆட்டிப்படைக்கக் குறுக்கிட்டுக் கொண்டிருப்பதுதான் இந்தியா செய்து வரும் ஆகப்பெரும் கேடு. வரலாற்றின் குப்பைத்தொட்டிக்குப் போய்விட்ட பதின்மூன்றாம் திருத்தத்தை மீட்டு வந்து அதனைத் தமிழர்களின் கோரிக்கையாக மாற்றிக் காட்ட அது அருவருக்கத்தக்க தந்திரங்களைக் கையாண்டது.  இந்திய வல்லரசின் எடுப்பார் கைப் பிள்ளைகளாக மாற ஒப்புக் கொண்ட தாயகத் தலைவர்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்குரியவர்கள்.

சிங்களப் பேரினவாதத்துக்கு ஏற்பட்ட பொருளியல் நெருக்கடி அரசியல் நெருக்கடியாக முற்றிய நிலையில், சிங்களத் தலைவர்களுக்குள் மூண்ட அதிகாரப் போட்டியில் தமிழ் அரசியல் தலைவர்கள் சொந்த புத்தி கொண்டு ஒரு முடிவெடுக்கக் கூட விடவில்லை மோதி அரசு. இதனால் தமிழ்த் தலைவர்களில் சிலர் இனக் கோட்டின் இரு பக்கமும் மதிப்பிழந்து நிற்க நேரிட்டது. “எங்கள் முடிவை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்” என்று பணிவுடன் தெரிவித்திருந்தால் உங்களுக்காக நாங்கள் பெருமைப்பட்டிருப்போம்.

2021 சனவரியில் ஐநா மனிதவுரிமைப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு நீங்கள் எழுதிய கூட்டு மடல், பொத்துவில் – பொலிகண்டி பேரணி போன்றவை நீதிக்கான போராட்டத்தில் முகன்மையான நடைபடிகள். இந்த வழியை விட்டு விலகிப் போய், இந்தியாவின் கோலுக்கேற்ப ஆடவும், இரணிலோ அழகப்பெருமாவோ யாரேனும் ஒருவரை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஆதரிக்கவும் வேண்டிய தேவை என்ன? எங்களுக்கு இதில் ஒரு தேர்வு வாய்ப்பே இல்லை என்று சொல்லியிருக்கலாமே? “இரணில் ஆதரவு கேட்டார், கொடுத்தேன்” என்று ஒரு தலைவர் சொன்னது போல் நகைப்புக்கிடமானது எதுவும் இல்லை.

தமிழீழத்தின் உள்ளார்ந்த இறைமையைக் கொழும்புவிடம் விட்டுக் கொடுக்க மறுத்தே வட்டுக்கோட்டையில் தீர்மானம் எடுத்துப் போராடத் தொடங்கினோம். அதனை தில்லியிடமும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை நம் மாவீரர்கள் தம் செங்குருதியால் ஈழமண்ணில் எழுதி வைத்தார்கள்.

மாவீரர்களின் பெயரால் இறைஞ்சுகின்றோம்: தாயகத் தமிழ்த் தலைவர்களே! சரியோ தவறோ நீங்களாக ஒரு முடிவெடுத்து நில்லுங்கள். அதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோருங்கள். தமிழ்நாடும் உங்கள் பக்கம் நிற்கும். 

  • தோழர் தியாகு

ஞாயிறு, 27 நவம்பர், 2022

மாவீரர்களுக்கு வீர வணக்கம்!

 

அகரமுதல


மாவீரர்களுக்கு வீர வணக்கம்!



மாவீரர்களுக்கு

வீர வணக்கம்!

தாயகக் கனவிற்காகத் தம்முயிர் நீத்தவர்களைத்

தாய் மண்போற்றுபவர்கள் மறக்கக் கூடாது.

மாவீரர்கள் மடிந்தாலும் அவர்களின் கனவுகளுக்கு

உயிர்ப்பு கொடுக்க வேண்டியவர்கள் என்பதை

உணர்ந்து உயர் கடமையாற்றத் தவறக்கூடாது.

நேற்றைக்கு அழிக்கப்பட்ட கனவுகளை மறக்காமல்

நாளை நனவாக்க இன்றைக்கு உழைக்காமல் இருக்கக் கூடாது.

மாவீரர் நாளில்  உலகெங்கும் மொழி இன நாட்டு

விடுதலைக்காகப் போராடியவர்களுக்கும்

தமிழீழ மாவீரர்களுக்கும் வீர வணக்கம்.

 அகரமுதல – மின்னிதழ்