செவ்வாய், 5 ஜூலை, 2022
திங்கள், 4 ஜூலை, 2022
பரமக்குடிச் சிறுவனுக்கு முனைவர் பட்டம்

பள்ளிக்கூடச் சிறுவனுக்கு முனைவர் பட்டம்
பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் பாராட்டு
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிர வைசிய பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் த. சந்தோசு கண்ணா.
இந்த மாணவருக்கு அண்மையில் மதுரையில் நடந்த விழாவில் பன்னாட்டுத் தமிழ்ப் பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இளம் அகவையில் மகிழுந்துபற்றிய பல செய்திகளை மிகவும் துல்லியமாகக் கூறி வருவதால் முனைவர் வழங்கப்பட்டது. இவர் ஏற்கெனவே ஆசிய ஆவண ஏடு(Asia Book of Record), இந்திய ஆவண ஏடு(India Book of Record), உலக ஆவண உதவி(Assist World of Records),சென் கழகத்தின்(The SEN Academy) தி பாராட்டுச் சான்றிதழ் முதலான பல்வேறு சான்றிதழ்களைப் பெற்றவர்.
மாணவர் சந்தோசு கண்ணாவுக்கு ஆயிரவைசிய சபை-கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் பெருந்தலைவருமான இராசி என். போசு அறிவுறுத்தலின்படி தாளாளர் பி. இராசேசு கண்ணா, பொருளாளர் பி. பிரசன்னா முதலானோர் மேலும் பல பட்டங்களைப் பெற வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
அப்போது பள்ளிக்கூட முதல்வர் செயபிரமிளா, துணை முதல்வர் பவானி, மேலாளர் சதீசு முதலானோர் உடன் இருந்தனர்.
மாணவரின் தந்தை தண்டாயுதபாணி காமன்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.
இதன் மூலம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இளம் அகவையில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் என்ற பெருமையை த. சந்தோசு கண்ணா பெறுகிறார்.
முனைவர் பட்டம் பெற்ற சந்தோசு கண்ணாவிற்குப் பள்ளி ஆசிரியர்கள், உடன் பயிலும் மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் எனப் பலதரப்பட்ட மக்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வாழ்த்துகளைத் தெரிவிக்க :
+91 94423 20020
தரவு: முதுவை இதாயத்து, துபாய்
00971 50 51 96 433
muduvaihidayath@admin



வியாழன், 30 ஜூன், 2022
‘புலம்பெயர் மணற்துகள்கள்’ கவிதை நூல் வெளியீட்டு விழா – சார்சா
சார்சாவில்
மலையாள எழுத்தாளர் இசுமாயில் மேலடி
ஆங்கிலத்தில் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட
‘புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற கவிதை நூல்
வெளியீட்டு விழா
நாள் : ஆனி 16, 2053 03 / சூலை 2022 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9.30 மணி முதல் 12 மணி வரை
இடம் : சார்சா அரண்மனை(பேலசு)உறைவகம், சார்சா
தலைமை:
முகிப்புல் உலமா அல்காசு ஏ. முகம்மது மஃகரூபுப்
பங்குதாரர், சங்கீதா உணவகம், துபாய்
முன்னிலை:
முனைவர் ஆ. முகம்மது முகைதீன்
நிறுவனத் தலைவர், கல்லிடைக்குறிச்சி தேசியக் கல்வி அறக்கட்டளை, துபாய்
நூல் வெளியிட்டுச் சிறப்புரை:
முனைவர் பேரா. பீ. மு. மன்சூர்
முன்னாள் துணை முதல்வர்,
சமால் முகம்மது கல்லூரி
திருச்சி
வாழ்த்துரை :
இளையான்குடி அபுதாகிர்
மேலாண்மை இயக்குநர், அல் (இ)ரீம் குழுமம், துபாய்
சசி. எசு. குமார்
எழுத்தாளர், நாடக, குறும்பட இயக்குநர், துபாய்
வழுத்தூர் சா. முகையதீன் பாட்சா, துபாய்
மௌலவி சுபையிர் அஃகில் முகம்மது
ஊடகவியலாளர், செம்மொழி பண்பலை, இலங்கை
கவிஞர் மதுக்கூர் இதாயத்துல்லா
இராசல் கைமா
இலக்கிய ஆர்வலர்கள்
ஏற்புரை :
திரு. இசுமாயில் மேலடி, நூலாசிரியர், துபாய்
தொடர்புக்கு :
முதுவை இதாயத்து
+971 50 51 96 433
மற்றொரு மொழி புகுத்தப்படுவதை எதிர்க்கிறேன்!- பெரியார் ஈ.வெ.இராமசாமி
மற்றொரு மொழி புகுத்தப்படுவதை எதிர்க்கிறேன்!
“ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும். மொழிப்பற்று இராதவரிடத்து தேசப்பற்று இராதென்பது நிச்சயம். தேசம் என்பது மொழியை அடிப்படையாகக் கோண்டு இயங்குவது. ஆதலால் தமிழர்களுக்குத் தாய் மொழிப்பற்றுப் பெருக வேண்டும் என்பது எனது பிரார்த்தனை.”
“தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்லுகிறேன். வங்காளிக்கு வங்கமொழியில் பற்றுண்டு; மராட்டியனுக்கு மராட்டிய மொழியில் பற்றுண்டு; ஆந்திரனுக்கு ஆந்திர மொழியில் பற்றுண்டு; ஆனால், தமிழனுக்குத் தமிழில் பற்றில்லை. தாய்மொழியில் பற்றுச் செலுத்தாதவரையில் தமிழர்கள் முன்னேற்றமடையமாட்டார்கள்.”
“நான் தமிழினிடத்தில் அன்பு வைத்திருக்கிறேன் என்றால் அதன் மூலம் நான் எதிர்பார்க்கும் நன்மையையும் அது மாறி நேர்ந்தால் அதனால் இழப்பு ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழினிடத்து அன்பு செலுத்துகிறேன்.”
“மற்றொரு மொழி நமது நாட்டில் புகுத்தப்படுவதைப் பார்த்து அதனால், நமக்கு ஏற்படும் இழப்பை அறிந்து சகிக்கமுடியாமல்தான் எதிர்க்கிறேனே யொழியப் புதியது என்றோ, வேறு நாட்டினது என்றோ நான் எதிர்க்கவில்லை.”
“மக்களுடைய வாழ்க்கைக்குப் பயன்படக்கூடியதும் அறிவையும் திறமையையும் தைரியத்தையும் உண்டாக்கக் கூடியதும் ஆகிய சிறந்த கலைகளையெல்லாம் தமிழில் எழுதிப் பரவச் செய்வதன் மூலம், மக்களுடைய அறிவையும், தமிழ் மொழியையும் செம்மை செய்வதே தமிழ் உணர்ச்சியாகும்.”
– தந்தை பெரியார் ஈ.வெ.இராமசாமி
புதன், 29 ஜூன், 2022
தமிழில் முழுத் தேர்ச்சிக்கு வழிகள் – இலக்குவனார் திருவள்ளுவன் & இருவர் : குமுதம் ‘ரிப்போர்ட்டர்’
தமிழில் தேர்ச்சி பெற மாட்டேன் போடா!…10 ஆம் வகுப்பு தேர்வு பகீர்
– கணேசுகுமார்
“இந்தி தெரியாது போடான்னு சொல்லிப் போராடினீங்களே? இப்போ தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் பேர் ஃபெயிலாமே” என பா.ச.க., மூத்த தலைவர் எச்.ராசா போட்ட சுட்டுரைப் (twitter) பதிவுதான் தமிழ் ஆர்வலர்களுக்குக் கடும் அதிர்ச்சி!
இந்த ஆண்டு திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா தமிழில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்து அரிய சாதனை படைத்திருக்கிறார். இதனைப் பலரும் பாராட்டியும் கொண்டாடியும் மகிழ்கின்றனர். இந்த நேரத்தில்தான் 9.12 நூறாயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்புத் (SSLC) தேர்வில் 47 ஆயிரம் மாணாக்கர், மாணாக்கியர் தமிழ்ப் பாடத்தில் தோல்வியைத் தழுவியிருக்கும் தகவல் வெளிவந்துள்ளது. அது மட்டுமில்லை, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தமிழில் ஒரு மதிப்பெண் மட்டுமே எடுத்துத் தோல்வி அடைந்திருக்கிறார் என்பது பேரதிர்ச்சி!
இது குறித்து ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன், “இது சங்கடமான செய்திதான். ஆனால், இதை அரசியல் நோக்கத்தில் பா.ச.க-வினர் குறை கூறுவது சரியில்லை. உத்திரப்பிரதேசத்தில் ஒவ்வோர் ஆண்டும் பத்தாம் வகுப்புத் (SSLC) தேர்வு எழுதுபவர்களில் 20 விழுக்காட்டுக்கும் மேலான மாணவர்கள் இந்தி மொழியில் தோல்வி அடைகிறார்களே? அதற்கு என்ன விடை வைத்திருக்கிறார்கள்?
தமிழகத்தில் நடந்து முடிந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் தமிழில் 94.84 விழுக்காடு பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் கணக்கில் 90.89 விழுக்காடு, அறிவியலில் 93.67 விழுக்காடு, சமுக அறிவியலில் 91.86 விழுக்காடு பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் தமிழ் மொழிப்பாடத்தில் தேர்ச்சி விகிதம் அதிகம்தான். ஆனாலும் நாம் முழுத் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஏற்பட்ட தவறுகளைச் சரி செய்யப் பிற மொழிப்பாடங்களில் ஒரு தாள் இருந்தாலும் தமிழில் இரு தாள் நடைமுறையை எதிர்காலத்தில் நடைமுறைக்கு அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும். அதே போல் தமிழ் வழியில் படிப்பவர்கள் பிற பாடங்களைப் பிழையுடன் எழுதினால் மதிப்பெண் குறைக்க வேண்டும். அப்பொழுதுதான் பிழையில்லாமல் எழுதுவதில் மாணாக்க, மாணாக்கியர் கவனம் செலுத்துவர். அது மட்டுமின்றி மருத்துவம் முதலான தொழிற்கல்விக்கான அடிப்படை மதிப்பெண்களில் தமிழில் பெற்ற மதிப்பெண்ணில் பத்து விழுக்காடு சேர்க்கப்படும் என அறிவித்தால் அனைவரும் தமிழை ஆர்வத்துடன் படிக்க முன்வருவார்கள்.
அதே போல் தமிழாசிரியர்களுக்குக் குறுங்கால மீள் பயிற்சி அளிக்க வேண்டும். தமிழாசிரியர்கள் பலருக்கே பிழையின்றி எழுதத் தெரியவில்லை. தமிழில் போதிய அறிவும் இல்லை. எனவே மீள்பயிற்சி மூலம் ஆசிரியர்களின் தகுதியை உயர்த்தவும் மாணவர்களின் தேர்ச்சியை நூறு விழுக்காடு வரை எட்டவும் முடியும்” என்றார் ஆற்றாமையுடன்.
தாய்மொழி கற்பதில் குறைபாடு குறித்து மனநல மருத்துவர் எம்.திருநாவுக்கரசு, “பொதுவாக மொழிப்பாடத்தில் ஆசிரியர்கள் சலுகை காட்ட மாட்டார்கள். ஆண்டாண்டுக் காலமாக மொழிப்பாடத்தில் நூற்றுக்கு நூறு (centum) கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாகத்தான் மொழிப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை ஆசிரியர்கள் வழங்குகிறார்கள். தமிழ் மொழியில் நூறு மதிப்பெண் வாங்க முடியாது என்பதால்தான் நிறையப் பேர் இந்தி, பிரெஞ்சு போன்ற மொழிப்பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
உலகம் முழுக்கத் தாய் மொழிப் பாடத்துக்கு முதன்மை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் அறிவியல் பாடத்துக்குக் கொடுக்கப்படும் முதன்மையை மொழிப் பாடத்துக்குக் கொடுப்பதில்லை. அது மட்டுமில்லை, நுழைவுத்தேர்வு என ஒன்று வந்த பிறகு அனைத்துப் பாடங்களுக்குமான தேவை குறைந்து விட்டது.
மொழிப்பாடம் குமுகத்தையும் (சமுகத்தையும்) குமுக (சமுக) உறவுகளையும் மேம்படுத்தும். மொழிப்பாடம் என்பது அறம் சார்ந்தது. அறம் நன்றாக இருந்தால்தான் மனநலம் நன்றாக இருக்கும். அப்பொழுதுதான் குமுகாய நலன் நன்றாக இருக்கும். இதை உணர்ந்துதான் இப்போது ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை அரசு செயல்படுத்த முன்வந்திருக்கிறது. அறிவியல் எந்த வகையிலும் மனிதநேயத்தைச் சொல்லிக் கொடுக்காது. எனவே மாணவர்களும் பெற்றோர்களும் மொழிக்கான ஆர்வத்தை அதிகப்படுத்த வேண்டும்.
மேலும், மொழிப்பாடங்களைச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் தேர்வில் அரசு கவனம் செலுத்துவதும் முக்கியம். ஏனென்றால், மொழிப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்தாம் கற்பிக்கும் தகுதி படைத்தவர் என்ற கோட்பாட்டை உலக நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்தாம் மொழிப் படிப்பைத் தேர்வு செய்து ஆசிரியராகும் சூழல் நிலவுகிறது.
இப்பொழுது தமிழில் 47 ஆயிரம் பேர் தோல்வி அடைந்ததற்கும் உளவியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழில் 70 மதிப்பெண் வாங்கினால்தான் நுழைவுத்தேர்வில் பங்கேற்க முடியும் எனச் சொல்லிப் பாருங்கள்! அனைவரும் கட்டாயம் தேர்ச்சி அடைந்து விடுவார்கள். தமிழ் மொழி என்றாலே ஓர் இளக்காரம் நிலவுகிறது. எப்படியும் நமக்கு ஆசிரியர்கள் தேர்ச்சி வழங்கி விடுவார்கள் என்ற நினைப்பில்தான் மாணாக்கர் குமுகாயம் இருக்கிறது. இந்த மனப்பான்மையைத் தவிர்க்கவும் தடுக்கவும் வேண்டும்” என்றார்.
தமிழ் ஆசிரியை சுகுணா, “மொழிப்பாடங்களுக்கு நாங்கள் முதன்மை கொடுக்கிறோம். ஆனால் ‘தமிழ் படித்து என்ன ஆகப் போகிறது’ என்ற மனநிலை மாணவர்கள் மத்தியில் இருப்பதை மறுக்க முடியாது. இதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வருகிறோம். மொழி அழிந்தால் பண்பாடு மட்டுமில்லை ஓர் இனமே அழிந்து விடும் என்பதை இளைய தலைமுறை உணர வேண்டும்! அதே போல் பிற மொழிப்பாடங்களில் ஒரு தாள் இருந்தாலும் தமிழில் இரு தாள் நடைமுறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதனால் மாணவர்களுக்குத் தமிழ்த் தேர்வு முறையை எளிமைப்படுத்த முடியும்” என்றார்.
இது குறித்துத் தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசிடம் விளக்கம் கேட்டதும், “தமிழ் மொழியில் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகப் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் உயர வேண்டும் என்பதே அரசின் இலக்கு. அதற்கான நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கி இருக்கிறது. தகுதி வாய்ந்த அதிகாரிகளிடம் தொடர்ந்து ஆலோசனை கேட்டு வருகிறோம். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட குறைகள் சரி செய்யப்படும். கல்வித்தரம் மேம்படுத்தப்படும்” என்றார் உறுதியாக.
தமிழுக்குச் சோதனை நீங்கட்டும்!
- குமுதம் ரிப்போர்ட்டர், மலர் 22, இதழ் 27 நாள் 01.07.2022, பக்கங்கள் 20-21
– தரவு: ஞானம்
தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம் – சூலை 03,2022
தமிழ்க்காப்புக்கழகம்
ஆளுமையர் உரை 7,8 & 9 : இணைய அரங்கம்
ஆனி 19, 2053 ஞாயிறு , சூலை 03, 2022, காலை 10.00
“இயக்கமும் நானும்”
முனைவர் இல.அம்பலவாணன்
நிறுவன இயக்குநர், மக்கள் மேம்பாட்டு வினையகம்
தலைமையிடம் : திருச்சிராப்பள்ளி
பேராசிரியர் முனைவர் ந.மணிமேகலை
இயக்குநர், மகளிரியல் துறைத் தலைவர்
பாரதிதாசன் பல்கலைக்கழகம்
தோழர் ப. பரிமளா
தலைவர், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் மன்றம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு :
https://us02web.zoom.us/j/8641368094?
pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை: தமிழாசிரியை உரூபி
தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்
தொகுப்புரை: தோழர் தியாகு
நன்றியுரை: திரு.ப.சிவக்குமார்