புதன், 24 ஜனவரி, 2018

மறைமலை நகரில் பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா


தை 13, 2049  வெள்ளி  26.01.2018

மாலை 5.00 முதல்

பொங்கல் புத்தாண்டுப் பெருவிழா

சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் விழா

புலவர் புஞ்சனையரசன் அரங்கம்

திருவள்ளுவர் மன்றம்

மறைமலைநகர்

சிறப்புரை:  பேரா.க.அருணன்

தமிழிசை நடனம்
திருக்குறள் ஓதல்
பாராட்டுகள்
பரிசு வழங்கல்

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

வைரமுத்துவும் ஆண்டாளும் – குவியாடி ,இ.எ.தமிழ்

அனலும் புனலும் :


தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும்

தேவதாசி என்பது அக்காலத்தில் தவறில்லைதான். இக்காலத்தில் தவறுதான். ஆனால் வைரமுத்துவின் அன்னையை – வேசி என்று சொல்லும் எச்சு.ராசா மீது எந்தக் கண்டனமும் பாயவில்லை!
ஒரு சொல் என்பது எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது, எந்தக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொருத்தே பொருளைத்தரும். யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொருத்தும் பொருள் மாறுபடும்.
தாசி என்பது வேலைக்காரியைக் குறிக்கும். எனவே, இறைவனுக்கு – இறைவன் கோயிலில் வேலை செய்யும் பெண் தாசி எனப்பட்டாள்.
தாசன் என்பது வேலைக்காரனைக்குறித்தாலும் அடியேன் தாசன் என்னும் பொழுது பணிவைக் குறிக்கிறது; அன்பைக் குறிக்கிறது.
அதே நேரம், தாசி என்பது சில பல வழக்கங்களால் அல்லது நடைமுறைகளால் பரத்தையைக் குறிப்பதுபோல் தாசன் என்பது பரத்தனைக் குறிக்கவில்லை. ஒரு வேளை ஆண்களின் கூடா ஒழுக்கம் ஆணாதிக்க மன்பதையில் ஏற்கப்பட்டதால் இருக்கலாம்.
ஆனால், ஒரு பெண்ணை இன்னாருடைய தாசி எனக் குறிப்பிட்டு “அவரின் வேலையாள்” என்றுதான் கூறினேன் என்றால் ஏற்க முடியுமா?
ஆனால் தணிக்கையாளர் குருமூர்த்தி ‘ஆண்மையற்றவர்’ என்னும் பொருள்பட ‘impotent’ என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுவிட்டுக் கண்டனங்கள் வந்ததும் மழுப்புகிறார்.
நாட்டின் உயரிய முதன்மைப்பொறுப்பிலும் அதற்கடுத்த துணைப்பொறுப்பிலும் உள்ள முதல்வரையும் துணை முதல்வரையும் ஆண்மையற்றவர் என்று சொன்னதற்கு நடவடிக்கை எடுக்காததன் காரணம்இவரைப் பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பாக்க் கருதுவதுதான்.
அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டினால் வழக்கு போடும் அரசு, இழிவு படுத்தும் வகையில் பேசியவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால்மாற்றுக்கட்சியினரும் பொதுமக்களும்தான் கண்டிக்கின்றனர்.
ஆனால் குருமூர்த்தி இதற்குச் சிறிதும் வருத்தம் தெவிக்காமல் “அவர்கள் எப்படி என்பதுபற்றி எனக்கு அவசியம் இல்லை” என்றும் “அவர்கள் மனத்தில் வேறு பொருள் வந்தால் தான் பொறுப்பல்ல” என்றும் திமிராகக் கூறுவதன் மூலம் உட்பொருளாக மேலும் இழிவு படுத்துகிறார். பாசகவின் சார்பில் ஆட்சியை இயக்குபவர் இவர் என்றுதான் பேசப்படுகின்றது. அரசியல் தரகர் என்று கூறப்படுவது குறித்துப் பெருமைப்படுபவர்கள் உள்ளனர். எனவே, தன்னைப் பற்றிய இச்செய்திகளுக்கு மகிழும் இவர், பெயரளவிற்குக்கூட வருத்தம் தெரிவிக்க முன்வரவில்லை. ஆணவத்தின் உச்சியில் இருப்பவர்கள் ஒருநாள் கீழிறங்கித்தான் ஆக வேண்டும் என்பதை உணரவில்லை.
அதே நேரம் தான் சொன்னது தவறாகப் புரிந்து கொண்டதாக்க் குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்துள்ள வைரமுத்துவிற்கு எதிராகப் போராடுவதன் மூலம் தத்தம் உண்மை முகங்களைப் போலிப் போராட்டத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
வைரமுத்து ஆண்டாள் குறித்து எழுதியும் பேசியும் இறையன்பர்கள் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். அவர் கூறிய செய்திகளில் பல பிழைகள் உள்ளன. அவர் குறிப்பிட்டுள்ள சுபாசு சந்திர மாலிக்கு தொகுத்த நூலில் 3 இடங்களில் ஆண்டாள் பற்றிய குறிப்பு இருந்தாலும் அவர் குறிப்பிட்ட வகையில் இல்லை. இறைப்பணியாற்றும் மகளிரைத் தேவரடிமை என்றும் தேவதாசி என்றும் கூறியது ஒரு காலம். பின்செயல்பாட்டு மாற்றங்களால் பொதுமகளிரைக் குறிக்கத் தொடங்கிவிட்டது இச் சொல்.
“வைரமுத்துவிற்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்” என்று நினைப்பவர்கள்கூட, அவருக்கு எதிரான கண்டனக் கணைகளை வரவேற்கவில்லை. ஏனெனில், பாசக இதனைப் பயன்படுத்தி மத வெறியைத் தூண்டி நாட்டை நாசப்படுத்துவதையோ ஆதாயம் அடையப் பார்ப்பதையோ அவர்கள் விரும்பவில்லை.
‘தமிழை ஆண்டாள்’ என்னும் தலைப்பும் ஆண்டாளுக்காக விழா எடுத்ததும், இவர்களின் நோக்கம் ஆண்டாளைச் சிறப்பிப்பதே என்று புரிகிறது. எனினும் தவறான மேற்கோளுக்குவைரமுத்துவும் கட்டுரை வெளியிட்ட தினமணியும் வருத்தம் தெரிவித்த பின்னரும் எதிர்ப்பவர்கள்வருத்தமே தெரிவிக்காமல் இருப்பவர்பற்றி ஒன்றும் சொல்லவில்லை.
தேவதாசி என்பது அக்காலத்தில் தவறில்லைதான். இக்காலத்தில் தவறுதான். ஆனால், இக்காலத்தில் ஒரு தாயை – வைரமுத்துவின் அன்னையை – வேசி என்று சொல்லும் எச்சு.ராசா மீது எந்தக் கண்டனமும் பாயவில்லை!
விளம்பி நாகனார் என்னும் புலவர் நான்மணிக்கடிகை என்னும் நூலில் (பாடல்71) அறிவில்லாதவர்கள் பிறரை நிந்தித்தே காலத்தைக் கழித்து மகிழ்ச்சியடைவதாகக் கூறுகின்றார். அத்தகைய மகிழ்ச்சியில் திளைக்கும் அற்ப மனம் கொண்டோர் உள்ளனர். அவர்களின் உரைகளில் மயங்கிய இறையன்பர்களும் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்கின்றனர். தமிழ்நாட்டில்கால் ஊன்றவே வழியில்லையே எனக் கவலைப்பட்ட பாசக இதனை வாய்ப்பாகக் கொண்டு வெற்றிப்பாதையில் உலவப் போவதாகக் கனவு காண்கின்றது.
 வைரமுத்துவிற்கு எதிரான கருத்தாக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும், இதன் தொடர்ச்சியாக நடுநிலைதவறியோர் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்போரும் பாசகவை ஆதரிப்பதாக எண்ணுவது அறியாமையிலும் அறியாமை!
ஏறத்தாழ ஒரே நேரத்தில் தெரிவிக்கப்பட்ட இரு கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்போரை மிரட்டுவதும் வருத்தம் தெரிவிக்காமல் ஆணவத்தில் இருப்பவரைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மக்களால் புரிந்து கொள்ளப்பட்டு வருகிறது.
வைரமுத்துவை எதிர்ப்போர் எச்சு.ராசாவின் இழி சொற்களுக்கு அவரை மன்னிப்பு கேட்கச்சொல்ல வேண்டும்!
குருமூர்த்தியின் பண்பற்ற சொற்களுக்கு அவரையும் மன்னிப்பு கேட்க வலியுறுத்த வேண்டும்!
இல்லையேல் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்கச்செய்ய வேண்டும்!
ஒரு கண்ணில் வெண்ணெய், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு என்பது முறையில்லையல்லவா? எனவே, பண்பற்ற முறையில் சொல்வோர் அனைவருக்கு எதிராகவும் கிளர்ந்தெழுங்கள்! வருந்துவோரைத் திருந்த விடுங்கள்!
குவியாடி
..தமிழ் : நாள் 18.01.2018

தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! – தமிழ்நாடன், நக்கீரன்

தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! 

‘ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர். பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர். அவரைப்பற்றிப் பேசும் தகுதி மதவெறியர்களுக்கு இல்லை’என்கிறார்கள் தமிழ்க் கவிஞர்கள்.
கவிஞர் வைரமுத்துவை மையமாக வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் தீப்பந்தம்… இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு பக்கம் பதற்றப் பரபரப்பைப் பற்றவைக்க… இன்னொரு பக்கம் வைரமுத்து மீது வழக்குகள் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன.
இஃது இலக்கியவாதிகள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இவ்வளவு பதற்றப் பரபரப்பிற்கும் காரணம், வைரமுத்துவை வைத்து பா.ச.க. தேசிய பொதுச்செயலாளரான  எச்சு.இராசா உரசிப்போட்ட தீக்குச்சிதான்.
தினமணி நாளிதழ், இராம்கோ குழுமம் ஆகியன சார்பில் இராசபாளையம் திருமலை திருப்பதி தேவத்தான மண்டபத்தில்  நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில்… ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில், ஆண்டாளுக்கு தனது கவித்துவத் தமிழால் ஆராதனை செய்த வைரமுத்து, அந்த ஆய்வுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுபாசுசந்திர மாலிக்குஎன்பவர் வெளியிட்ட ஒரு தகவலையும் குறிப்பிட்டார். ஆய்வுரையில் பல கோணங்களிலான கருத்துகள் இடம்பெறுவது மரபு.
  அதற்கு முன்பும் பின்பும் ஆண்டாளின் தமிழ் குறித்துத் தனக்கே உரிய பாவனையோடு வைரமுத்து சிறப்பாக எடுத்துரைத்ததை, ஆன்மிகவாதிகளும் பொதுமக்களும் கைதட்டிச் சுவைத்தனர். ஆனால், அந்த ஆய்வுக்குறிப்பை மட்டும் உருவி எடுத்துக்கொண்ட  எச்சு.இராசா 8-ஆம் நாளன்று சூளைமேட்டில் நடந்த பா.ச.க. கூட்டத்தில்… “ஆண்டாளை வைரமுத்து கொச்சைப்படுத்திவிட்டார்” என்று கூறி, பத்திரிகைகளில் எழுதமுடியாத அளவிற்கு மிகவும் கீழ்த்தரமாக வைரமுத்துவைக் குறிப்பிட்டார். அவரது அத்துமீறிய பேச்சு முகநூல், பகிரி(Whats-app),சுட்டுரை(twitter),  படக்குழல்(you-tube)யு-டியூப் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக நெருப்பாய்ப் பரவ… வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின.
இது தமிழ்க் கவிஞர்களையும், தமிழறிஞர்களையும், தமிழ் உணர்வுள்ள அரசியல் கட்சியினரையும் கொதிப்படைய வைத்திருக்கிறது.
இத்தனைக்கும் வைரமுத்து சுட்டுரையில் ‘’ஆண்டாள் விவகாரத்தில் எவரையும் புண்படுத்துவது நோக்கமன்று. புண்பட்டிருந்தால் வருந்துகிறேன். ஆண்டாள் பற்றிய என் கருத்துகள் எல்லாம் அவரின் பெருமைகளைப் பேசுகின்றன. ஆண்டாள் குறித்து அமெரிக்காவின் இண்டியானா பல்கலை ஆய்வு நூலில் கூறிய வரியை மேற்கோள் காட்டினேன். பல்கலையின் கருத்து எனது கருத்து அல்ல. ஆளுமைகளை மேம்படுத்துவதே இலக்கியத்தின் நோக்கமேயன்றி சிறுமைப்படுத்துவதல்ல” என்று தன்னிலை விளக்கத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தார். தினமணியும் வருத்தம் தெரிவித்திருந்தது. ஆனாலும் வைரமுத்துவுக்கு எதிரான குறைகாண் தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.
வைரமுத்து குறிவைத்துத் தாக்கப்படுவதைப் பார்த்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.தாலின் “சிலர் தங்களின் தன்னலனுக்காகவும், விளம்பர வெளிச்சத்திற்காகவும் அமைதி தவழும் தமிழகத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்திலும், தரம்தாழ்ந்த வகையிலும் தமிழ்மண்ணின் கவிஞர் வைரமுத்து மீது தாக்குதல் தொடுப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்களாட்சியில் கருத்துக்கு மாற்றுக்கருத்து மட்டும் இருக்கமுடியுமே தவிர, அநாகரிகத்திற்கும் வரம்புமீறலுக்கும் நிச்சயம் தமிழகத்தில் இடமில்லை” என்று எச்சரித்தார். இதேபோல், கனிமொழி, வைகோ, சுப.வீ., சீமான், வ.கௌதமன், தமிழன் பிரசன்னா, நடிகர் விவேக்கு, மன்சூர் அலிகான் எனப் பலரும் எச்சு.இராசாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
  இராசாவுக்கு மறுஅடி கொடுத்த இயக்குநர் பாரதிராசாவோ, “நீ பேசியது அநாகரிகத்தின் உச்சம். உன்னைப் போன்ற மனிதர்களால்தான் இந்தியா துண்டாடப்படப்போகிறது என்ற அச்சம் எனக்கு வருகிறது. நாங்கள் ஆயுதங்களை மறந்துவிட்டோமே ஒழிய, தன்மானத்தையும், வீரத்தையும், விவேகத்தையும் இழக்கவில்லை. எச்சரிக்கை… மறுபடியும் எங்களை ஆயுதம் ஏந்தும் குற்றத்திற்கு ஆளாக்கிவிடாதே” என்றெல்லாம் காட்டம் காட்டியிருக்கிறார்.
 திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ”கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய அந்த ஆய்வு வெளியாகி 40 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனைக் காலம் அமைதியாக இருந்துவிட்டு, கவிஞருக்கு எதிராக போராட்டம் நடத்துவது அமைதிப் பூங்காவான தமிழகத்தைக் கலவரக் காடாக்கும் முயற்சி எனக் கண்டித்தார்.
 நம்மிடம் பேசிய தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன், ”இறைவனை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்துப் பாடுவதும் அதற்கேற்ப ஆடுவதும் இலக்கிய உத்தி. கண்ணன் என் காதலன் எனப் பாடிய பாரதி, பெண் அல்லர். இதைப்போன்று ஆடவர் பாடிய புலவர் பெயர் தெரியாமல் இறைவன் உள்ளத்தை ஆண்டவள் என்ற பெயரில் ஆண்டாள் என அழைக்கப்பட்டிருக்கலாம்’என ஆண்டாள் பெண்தானா என்கிற ஐயத்தை இராசாசியைப் போலவே எழுப்புவதோடு… ‘அவள் பெண்ணாகவே இருந்தாலும் அக்காலத்தில் தேவதாசி என்பது இறைப்பணி ஆற்றும் அன்பர்களைக் குறிப்பதே. ஒரு தவற்றை எதிர்க்க மற்றொரு தவற்றைக் கையாள்வது தவறாகும். பா.ச.க. இந்துத்துவ வெறியோடு இதனைப் பெரும் கலவரமாக மாற்ற முயல்வது, ஆண்டாளைப் பற்றிய தவறான விவாதத்திற்கே வழிவகுக்கும். எனவே, வன்முறைப் பேச்சுகளைக் கட்டவிழ்த்துவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்கிறார் அழுத்தமாக.
கவிஞர் செயபாசுகரனோ, “ஆண்டாள் மிகப்பெரிய ஆளுமை. இறை இலக்கியத்துக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய கொடை. அவரை உயர்த்திப் பேசிய கவிஞர் வைரமுத்துவிடமிருந்து, அவரறியாமல் உதிர்ந்த ஒரு கடுகுக்காக, அவரை ஆயிரம் தேங்காய்களால் தாக்குவது எந்த வகையில் நியாயம். ஆண்டாளின் தமிழைப் படிக்காத, ஆண்டாளை இதுநாள்வரை முன்னெடுக்காத, ஆண்டாளைப் பற்றி எந்த அவையிலும் இதுவரை விரிவுரை நிகழ்த்தாதவர்கள், ஆண்டாளுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாதவர்கள் இப்போது ஆண்டளுக்காக வரிந்துகட்டுவது வேடிக்கை.  ஆண்டாளுக்காகக் குரல் கொடுப்பதுபோல், மதவெறி நெருப்பைப் பற்றவைக்கப் பார்க்கிறார்கள். இதை ஒருபோதும் ஏற்கமுடியாது’என்கிறார் எரிச்சலாக.
மார்க்சிய இலக்கிய ஆய்வாளரான கோவை ஞானியோ  “ஏற்கெனவே கவியரசர் வைரமுத்துவும் தினமணி ஆசிரியர் வைத்தியநாதனும் வருத்தம் தெரிவித்ததோடு, இந்தச் சிக்கல் முடிவுக்கு வந்திருக்கவேண்டும். ஒரு நாகரிகச் சமுதாயம் இப்படித்தான் செயல்படமுடியும். இதற்கு மாறாக, இன்னும் ஒருமுறை வருத்தம் தெரிவிக்கவேண்டும் என்பது என்ன முறை என்று தெரியவில்லை. இதுகுறித்துத் திராவிட இயக்கத்தார் மட்டுமல்ல தமிழ் ஆய்வாளர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும். மதவெறியர்கள் கொலைகாரர்கள் ஆயிற்றே என்று அஞ்ச வேண்டியதில்லை” என்கிறார் நிமிர்வோடு.
முதுபெரும் கவிஞரும் முனைவருமான ஆலந்தூர் மோகனரங்கன்நம்மிடம், “ஆண்டாளைச் சிறப்பித்து  கவிஞர் வைரமுத்து பேசிய பேச்சை, சாமர்த்தியமாக அவருக்கு எதிராகத் திசைதிருப்புவது சரியா? ஆண்டாளை உயர்த்தியதற்குத் தண்டனை அவமானமா? வைரமுத்து ஆய்வுக் குறிப்பைத்தானே  சொன்னார்.  அது சரியில்லை என்றால், அந்த ஆய்வாளர் மீதுதானே கோபப்படவேண்டும். அவருக்குத்தானே விளக்கம் தரவேண்டும். அதை விட்டுவிட்டு, யாருடைய கருத்துக்கோ வைரமுத்துவைத் தாக்குவதும், மிரட்டுவதும் தொடர்புடையவர்களின் தந்திரத்தையும், மன வக்கிரத்தையும்தான் காட்டுகிறது. ஆண்டாள் சமற்கிருதக் கவிஞரல்லர். தமிழ்க் கவிஞர். அவரைப்பற்றித் தமிழ்ப் பகைவர்களும் இந்துத்துவவாதிகளும் பேசக்கூடாது. ஆண்டாள் எங்கள் தமிழ் மரபில் மலர்ந்தவர். மதவெறிக் கும்பலுக்குத் தொடர்பில்லாதவர்“ என்கிறார் தெளிவாக.
கவிஞர் சென்னிமலை தண்டபாணி நம்மிடம், “ஆண்டாள், தமிழை ஆண்டாள் என்று கவிஞர் சொன்னாலும் வேண்டாத பாம்பு ஏன் நஞ்சைக் கக்குகிறது? வெல்லும் சொல்லைக் கொல்லும் சொல் வெல்ல முடியுமா? பறவை அதன் போக்கில் பறந்து செல்கிறது. எச்சில் இலை ஏன் எரிந்து பொசுங்குகிறது” எனக் கவிதை மொழியில் சாட்டையைச் சொடுக்குகிறார்.
திராவிட இயக்கங்களைக் குறிவைத்தும் மத நல்லிணக்கத்தை உருக்குலைக்கும் நோக்கிலும் இந்துத்துவா சக்திகள், வன்முறை அரசியலைக் கையிலெடுக்கத் துடிப்பதையே… எச்சு.இராசாபற்றவைத்திருக்கும் நெருப்பு அடையாளப்படுத்துகிறது.
கவிஞர் வைரமுத்து செய்துவருவது தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் செயல். அதனை திசைதிருப்பி மதவெறியை விதைப்பது ஆபத்தானது.
– தமிழ்நாடன்

வைரமுத்துவும் ஆண்டாளும் – இரவிக்குமார், இ.எ.தமிழ்

சொன்னால் முடியும் : ஆண்டாள் சர்ச்சை

– மதவெறிக்கு மாற்று சாதிப் பெருமிதம் அல்ல

 வைரமுத்துவை ஆதரிப்பதா கண்டிப்பதா எனப் பார்க்காமல் இதனூடாக நிலைபெற முயலும் வகுப்புவாதத்தை எதிர்ப்பது எப்படி என்றே பார்க்க வேண்டும்.
மார்கழி முடிந்து தை பிறந்துவிட்டது. இன்னும் ஆண்டாள் சச்சரவு முடிவுக்கு வரவில்லை. கவிஞர் வைரமுத்து வருத்தம், விளக்கம் என வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவர் மீதான தாக்குதல்கள் நிற்கவில்லை. தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு கலவரத்தை மூட்டிவிடவேண்டும் என்று திட்டமிட்டு சிலர் இதை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
ஆண்டாளின் கவிச் சிறப்பைப் போற்றுவதாகவே கவிஞர் வைரமுத்துவின் உரை அமைந்திருக்கிறது. அவரது நோக்கம் ஆண்டாள் பாடல்கள் குறித்து ஆய்வு செய்வதல்ல, ஆண்டாளின் தமிழைப் போற்றித் துதிப்பதுதான். ஆனால் தனது உரைக்கு ஆராய்ச்சியுரை என்ற தகுதியை வழங்கும் நோக்கில் அவர் எடுத்துக்காட்டிய மேற்கோள் இப்போது அவரை வம்பில் மாட்டிவிட்டுவிட்டது.
திரைப்படப் பாடல்களில்கூட எதையும் மிகையாக வருணிப்பதே வைரமுத்துவின் பாணி. அதை ஒருவிதத்தில் பக்தி மரபின் தொடர்ச்சி என்று கூறலாம். அந்த முறை ஆராய்ச்சிக்கு உதவாது. ஆராய்ச்சி என்பது நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துவது. துதி பாடுவதற்கு அது தோதுபடாது.
போற்றிப் பாராட்டி துதி பாடுவதோடு நின்றிருந்தால் வைரமுத்துவுக்கு பாராட்டு கிடைத்திருக்கும். தான் ஒரு கவிஞன் மட்டுமல்ல ஆராய்ச்சியாளனும்கூட என்று காட்டிக்கொள்ள விரும்பியதே அவர் செய்த பிழை’.
கவிஞர் ஒருவர் ஆராய்ச்சியாளராக இருக்கக்கூடாது என்றில்லை. இருக்கலாம். அதற்கு ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும். அதற்கான உழைப்பு வேண்டும். உழைத்து எழுதிய ஓர் ஆராய்ச்சி உரையைக் கதைப்பொழிவு(கதாகலாட்சேபம்) கேட்டுப் பழகியவர்களின் முன்னால் வாசிக்க முடியாது என்ற தெளிவு வேண்டும்.
தனது உரையில், “ஆண்டாளின் ’பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?’ ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது?‘ என்ற கேள்விகளை அடுக்கி அவற்றுக்கு விடைகாண முயன்றிருக்கிறார் வைரமுத்து.
“பூமிப்பிராட்டி அம்சமான ஆண்டாள் கலியுகத்தில் 98 ஆவதான நள வருடத்தில் ஆடி மாதத்தில் சுக்கிலசதுர்த்தி செவ்வாய்க்கிழமை கூடின பூருவபல்குனி நட்சத்திரத்தில் ” திருவில்லிபுத்தூரில் திருத்துழாய்ப் பாத்தியில் பெரியாழ்வாருக்குத் தோன்றியதாக்க் குருபரம்பரா பிரபாவம் கூறுகிறது. கலியுகம் என்பது வானியல் கணக்குக்காக உருவாக்கப்பட்ட கற்பனையான கணக்கு என்பதால் அதை வைத்து ஆண்டாளின் காலத்தை கணிக்க முடியாது.
அதனால்தான், சாமிக்கண்ணு(ப் பிள்ளை), மு.இராக(வையங்கார்) முதலானோர் எழுதியவற்றின் அடிப்படையில் ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்கிறார் வைரமுத்து. அந்தக் காலக் கணிப்பும்கூட முடிந்த முடிபு அல்ல. பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி,தமிழ் இலக்கியத்தில் வைணவம் [Vaisnavisam in Tamil Literature ( IITS, 2002 )] என்ற தனது நூலில் மா.இராசமாணிக்கனாரை மேற்கோள்காட்டி ஆண்டாள் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.
சின்னமனூர் செப்பேட்டில் ‘சீவலப்பன்’ என்ற பெயர் காணப்படுகிறது. சித்தன்னவாசல் கல்வெட்டு ஒன்றில் ‘சீர்கெழு செங்கோல் சீவலப்பன்‘ என உள்ளது. பெரியாழ்வார் அந்தச் சீவலப்பனின் காலத்தைச் சேர்ந்தவர். திருப்பாவையில் வரும் வானியல் குறிப்புகளினடிப்படையில் அது கிபி 885 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது. எனவே ஆண்டாளும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்தான் என இராசமாணிக்கனார் கூறியுள்ளதை இந்திரா பார்த்தசாரதி தனது நூலில் வழிமொழிந்துள்ளார்.
மறைமாலை[The Secret Garland, (Oxford Univ Press, 2010)] என்ற ஆய்வு நூலின் ஆசிரியர் அருச்சனா வெங்கடேசனும் ஆண்டாள் வாழ்ந்த காலத்தை ஒன்பதாம் நூற்றாண்டு என்றே குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டாள் இயற்றியதாகக் கூறப்படும் பாடல்கள் கிடைத்தாலும் அவர் ஆழ்வார்களில் ஒருவராக வழிபடப்பட்டாலும் ஆண்டாள் என ஒருவர் இருந்தாரா என்ற ஐயத்தை மூதறிஞர் இராசாசி ஏன் எழுப்பினார் என்று நாம் பார்க்கவேண்டியுள்ளது. ஆண்டாள் குறித்த அறிமுகத்தையும் ஆண்டாள் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் நூலாக வழங்கியுள்ள அருச்சனா வெங்கடேசன் கூறும் செய்தி கவனத்துக்குரியது:
”13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவைணவத் தத்துவ அறிஞர் வேதாந்த தேசிகரின் காலத்தில் திருப்பாவை முதன்மையாக வைத்துக் கருதப்பட்டபோதிலும் ஆழ்வார்களின் வரிசையில் ஆண்டாளின் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறார் இந்த நூலாசிரியர்.  பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குக் கோயில் எடுப்பிக்கப்பட்டு (திருவில்லிபுத்தூர்) அது 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார் (The Secret Garland , பக்கம் 6)
அதுமட்டுமின்றி, திருவரங்கம் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழியில் நடைபெறும் அத்யயனோத்சவ விழாவின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் ஆழ்வார்களின் செப்புத் திருமேனிகள் வைக்கப்பட்டு பூசிக்கப்படும்போது அதில் ஆண்டாளின் செப்புத் திருமேனி இடம்பெறுவதில்லை என வசுதா நாராயணன் என்பவரின் நூலை மேற்கோள் காட்டி அருச்சனா வெங்கடேசன் கூறுகிறார். ஆழ்வார்களில் ஒருவராகவும் விட்ணுவின் தேவியர்களில் ஒருவராகவும் ஆண்டாள் இருப்பதால் இப்படி விடுபட்டிருக்கலாம் என்ற விளக்கத்தையும் அவர் தருகிறார். ஆண்டாளை அங்கீகரிப்பதில் வெளிப்படும் தயக்கத்துக்கு அதுமட்டும்தான் காரணமா? பக்தி மரபில் பெண்களுக்கு இருந்த இடம் என்ன என்பதோடு வைத்து இதைப் பார்க்க வேண்டுமா? என்பவை ஆய்வுக்குரிய கேள்விகள்.
ஆண்டாள் வாழ்ந்ததாகக் கருதப்படும் பக்தி இயக்கக் காலம் ஏராளமான இலக்கியங்களை மட்டுமின்றி கல்வெட்டுகளையும் நம்மிடம் தந்து சென்றிருக்கிறது. அந்தக் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை இன்னும்கூட முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. படியெடுக்கப்படாத கல்வெட்டுகளும் ஏராளம். அவற்றையெல்லாம் முழுமையாகப் படித்தால் அக் காலக்கட்ட வரலாற்றையும் அப்போது தோன்றிய இலக்கியங்களின் பொருளையும் இன்னும் தெளிவாக நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது எழுந்திருப்பதுபோன்ற விவாதங்கள் அத்தகைய முயற்சிக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்துவிடுகின்றன.
ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் பேச்சை அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்த முயல்வது ஆபத்தானது. வைரமுத்துவை ஆபாசமாக வசைபாடுவதன்மூலம் ஒரு கலவரத்தை ஏற்படுத்த பாகவைச் சேர்ந்த எச்சு.இராசா முயல்வதாகத் தெரிகிறது. அவரது பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டைக் கலவரப் பூமியாக மாற்றிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவரது தூண்டுதலின் காரணமாக இப்போது வைணவ மதத்தைச் சேர்ந்த பலர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். இது எப்போது முடியுமோ எதில்போய் முடியுமோ தெரியவில்லை.
கவிஞர் வைரமுத்துவை எதிர்ப்பவர்களின் பேச்சுகளில் மட்டுமல்ல ஆதரிப்பவர்களின் பேச்சிலும்கூட வன்முறை வாடை வீசுகிறது. ஆண்டாளின் பாடல்களை “ஆபாசக் குப்பைகளாக’ச் சித்திரித்து சமூக வலத்தளங்களில் சிலர் எழுதிய பதிவுகளைப் பார்க்க முடிந்தது. இத்தகைய வறட்டு நாத்திகப் போக்கு பகுத்தறிவுக்குப் பயன்படாது. மாறாக ஆத்திகம் செழிக்கவே உதவும். தமிழக வரலாற்றில் இதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன.
ஆண்டாள்  சொற்போரில் வன்முறைப் பேச்சு மட்டுமல்ல மதவாத சாதிவாதப் பேச்சுகளும் வெளிப்படுகின்றன. அவற்றில் தமிழ்தமிழ்நாடு என்ற பேரடையாளங்கள் மறைந்து சாதியப் பெருமிதம் தலைதூக்குவது தெளிவாகத் தெரிகிறது.
கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக உணர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பாரதிராசா. “எங்கள் வம்சாவழி எங்கள் உணர்ச்சிகளின் வடிகாலே ஆயுதங்கள்தான்” என்று அதில் பாரதிராசா குறிப்பிட்டிருந்தார். அவர் சுட்டுவதைத் தமிழின் வம்சா வழி எனக் கருதமுடியவில்லை. அது அவரும் கவிஞர் வைரமுத்துவும் சார்ந்த சாதியின் வம்சாவழியென்ற பொருளே அந்த அறிக்கையில் தொனிக்கிறது.
அண்மையில் இந்தச் சொற்போர் குறித்து டிடிவி தினகரன்ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அதில்,  ‘திருமங்கை ஆழ்வாரும், நரசிங்கமுனையராய நாயனாரும் எங்களது மூதாதையர்கள்’ என்று அவர் குறிப்பிட்டார். அதில் ’நாங்கள்’ ’எங்களது’ என அவர் குறிப்பிடுவது ஒட்டுமொத்தத் தமிழர்களையல்ல. எங்களது மூதாதையர் என அவர் சிலரை மட்டும் அடையாளப்படுத்தும்போது அது அவரது குடும்பம் அல்லது சாதி சார்ந்ததாகவே அது பொருள் தருகிறது. மதவெறிக்கு ஒருபோதும் சாதிவெறி மாற்றாகிவிட முடியாது. இரண்டுமே ஒரே தீமையின் அங்கங்கள்தான். இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
 தமிழ்ச்சூழலில் இந்தச் சொற்போர் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நால்வர் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவில் நீதித்துறை செயல்பாடுகளின்மீது வெளிப்படையாக விமரிசனங்களைமுன்வைத்துள்ளனர்; காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது எனக் கருநாடக அரசு அறிவித்துவிட்டது. இத்தகைய சிக்கல்கள்பற்றி நாம் சிந்திக்க முடியாமல் நமது கவனம் முழுவதும் இந்த ஆண்டாள் சச்சரவிலேயே பிணைத்துப்போடப்பட்டது. இந்தச் சச்சரவு தமிழ் மக்களின் இலக்கிய உணர்வை மேம்படுத்தவில்லை, மாறாக வகுப்புவாதக் கருத்துகளைத்தான் பரவலாக்கியிருக்கிறது.
கவிஞர் வைரமுத்துவின் அண்மைக்கால செயல்பாடுகள் தமிழ்நாட்டில் சமயச்சார்பற்ற கருத்துகள் பரவவேண்டும் என்ற கவலைகொண்டவராக அவரைக் காட்டவில்லை. மாறாகச், சமயக் கருத்துகளுக்குத் தாம் எதிரியல்ல எனக் காட்டுவதன்மூலம் வகுப்புவாத அமைப்புகளிடம் நற்சான்றிதழ் பெற முடியுமா எனப் பார்ப்பவராகவே அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எனவே, இந்தச் சிக்கலை, வைரமுத்துவை ஆதரிப்பதா கண்டிப்பதா எனப் பார்க்காமல் இதனூடாக நிலைபெற முயலும் வகுப்புவாதத்தை எதிர்ப்பது எப்படி என்றே பார்க்க வேண்டும். ஆண்டாள் சர்ச்சையை பக்தி இயக்க காலம் குறித்த ஆய்வாக மாற்றுவதே அதற்குச் சிறந்த வழி.
  • முனைவர் து.ரவிக்குமார்
கட்டுரையாளர்கவிஞர்மொழிபெயர்ப்பாளர்,
இலக்கிய / அரசியல் ஆய்வாளர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com