tamizh eezham on exile லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamizh eezham on exile லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஜூன், 2013

சிறிலங்காவைப் புறக்கணிப்போம் கருத்தமர்வு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் SAY NO TO SRI LANKA: சிறிலங்காவைப் புறக்கணிப்போம்  கருத்தமர்வு !

  நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் SAY NO TO SRI LANKA செயல்மையம் சிறீலங்காவைப் புறக்கணிப்பு தொடர்பிலான வேலைத்திட்டத்தை ஒன்றுபட்டு முன்னெடுப்பதற்கான கருத்தமர்வொன்றினை லண்டனில் ஏற்பாடு செய்துள்ளது.
வர்த்கம் பொருளாதாரம் அரசியல் விளையாட்டு என பல்வேறு தளங்களில் சிறிலாங்கா புறக்கணிப்பு தொடர்பிலான வழிப்பினையும் செயற்திட்டங்களையும் ஏற்படுத்தும் பொருட்டு தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்கள் எங்கும் மையம் பணிகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
இதனொரு அங்கமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை(14.06.2013) லண்டனில் அமைந்துள்ள Civic Centre, Station Road, Harrow, Middlesex, HA1 2DT.. எனும் இடத்தில் கருத்தரங்கொன்று இடம்பெறுகின்றது.
மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிறீலங்காவைப் புறக்கணிக்கும் பலவகை வேலைத் திட்டங்களை ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் அமைப்புக்கள், மற்றும் இவ் வேலைத் திட்டத்தை செய்ய ஆர்வம் உள்ள ஏனைய அமைப்புக்கள் என்பவற்றை உள்வாங்கி நடைபெறவுள்ள இந்த முக்கிய கலந்துரைடாடலில் புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளரையும் வந்து கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து புதிய உத்வேகத்துடன் இவ் வேலைதிட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுக்க உங்கள் அனைவரது ஒத்துழைப்பும் வேண்டி நிற்பதாக செயல்மையம் தெரிவித்துள்ளது.
இக்கருத்தமர்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடகஅறிக்கையில் தமிழீழத் தாயக நிலப்பரப்புக்களில் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி துரித கதியில் சிங்கள மயமாக்கலை சிறீலங்கா பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்துவரும் இவ்வேளையில் சிறீலங்காவை பொருளாதாரரீதியில் பிந்தள்ளி பலமிழக்கச் செய்வதன் மூலமும் அவற்றை தடுத்துநிறுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உலகப்பரப்பெங்கும் வாழும் தமிழ் அமைப்புக்கள் மட்டுமன்றி அனைத்து தமிழர்களும் ஆத்மரீதியாக இவ்வேலைத்திட்டத்தினை கூட்டாகவோ அன்றி தனித்தனியாகவோ முன்னெடுப்பதன் மூலம் குறுகிய காலத்துக்குள் சர்வதேச அரங்கில் சிறீலங்காவுக்கெதிரான பல மாற்றங்களை ஏற்படுத்தி அதன் விளைவாக சிறீலங்கா அரசிற்கு பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தமுடியும் எனுவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் கருத்தமர்வு தொடர்பிலான மேலதிக விபரங்களை
07877204123 / 07869133073 / 07929349302 எனும் தொலைபேசியூடாக பெற்றுக் கொள்ள முடியும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் SAY NO TO SRI LANKA செயல்மையம் சிறீலங்காவைப் புறக்கணிப்பு தொடர்பிலான குறும் பரப்புரை படங்களுக்கான போட்டியொன்றினை ஏலவே அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

சனி, 2 ஜனவரி, 2010

புதிய தசாப்தம் பிறக்கிறது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிக்கை

01 January, 2010 by admin


புதிய தசாப்தம் பிறக்கிறது! தமிழர் உரிமைப்போர் புதிய வடிவம் எடுக்கிறது!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாகிறது!!! புதியதொரு வருடமும் புதியதொரு தசாப்தமும் 2010 இல் பிறக்கின்றன.
கடந்த தசாப்தங்களில் சிறிலங்கா அரசின் இனஅழிப்பு யுத்தத்தினால் ஏற்பட்ட,வார்த்தைகளால் வடிக்க முடியாத இழப்புக்களையும் துயரையும் கடந்து உலகமெங்கும் வாழும் தமிழ்மக்கள் புதியதொரு தசாப்தத்தில் காலடி வைக்கின்றனர்.

2000 ஆம் ஆண்டில் கடந்த தசாப்தம் ஆரம்பித்த போது தமிழ் மக்கள் அதை சமாதானம் குறித்த நம்பிக்கையுடன் தான் எதிர்கொண்டனர். தமிழ் மக்களின் நியாயத்துடன்கூடிய சமாதானம் குறித்த நம்பிக்கை அடுத்த சில ஆண்டுகளிலேயே கருகிப் போனது. 2009 ஆம் ஆண்டில் தமிழர் தேசத்தின் வரலாற்றில் ஒருபோதும் எதிர்கொள்ளாத அளவு கொடூரங்களை சிங்கள அரசின் கொடிய கரங்களால் நாம் எதிர்கொண்டோம்.

தற்போது புதிய தசாப்தத்தில் காலடி வைக்கும் இவ்வேளையில் இனிவரப்போகும் ஆண்டுகளை புதிய நம்பிக்கையோடு நாம் எதிர்கொள்வோம். 2010 இல் ஆரம்பமாகும் இப்புதிய தசாப்தத்தின்போது தமிழ் மக்கள் தமக்குரித்தான உரிமைகளை அனைத்து வகையான சனநாயக வழிமுறைகளூடாகவும் வென்றெடுக்கவென மீளவும் உயிர்த்தெழுவார்களென்பதில் ஐயமெதுவுமில்லை. சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசினை உருவாக்கும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையின்பின் நாமெல்லாம் ஒருமித்து நிற்கின்றோம்.

இதேவேளையில், இவ் அரசியல் அபிலாசைக்காக குரல் கொடுப்பதற்கோ அல்லது செயற்படுவதற்கோ தற்போது சிறீலங்காவில் எவ்வித அரசியல் வெளிகளுமேயில்லை என்பதை நாமறிவோம். அதனாற் தான், நாம் இவ் வருடம் அமைக்கத் திட்டமிட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் தமது சுயநிர்ணய உரிமையை நிறுவவும் தமக்கேயுரித்தான இறைமையை நிலைநாட்டுவதற்குமான அரசியல் வெளியை இலங்கைத்தீவில் உருவாக்க உழைக்குமென்பதையும் நாம் திடமாக நம்புகிறோம்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் 2007 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் குறிப்பிட்டவாறு - நமது தேசத்தை மீள்நிர்மாணம் செய்யும் முயற்சியில் நமது தேசத்தின் அறிவு, பொருள் மற்றும் நிதிசார் அனைத்து வளங்களையும் தேசத்தின் சேவைக்காக ஒருங்கிணைக்கும் வகையில் நம்முடன் அணிதிரளுமாறும் புதிய தசாப்தத்தில் நமது விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த எம்முடன்
கைகோர்த்து நிற்குமாறும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு நாம் அறைகூவல் விடுக்கின்றோம். உங்கள் அனைவரிதும் ஆதரவுடனும் பங்களிப்புடனும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழரினது அதிகார மையமாக வலுப்பெறும்.

அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களுடன் உரிய முறையில் தொடர்புகளைப் பேணி, யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்ட நமது மக்களது வாழ்வை மீள் நிர்மாணம் செய்ய உழைப்பதே நமது உடனடி இலக்காகும். யுத்தத்தின்போது நமது மக்கள் மீது இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனஅழிப்பு போன்றவைக்கெதிராக நீதி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் நாம் உறுதியாக நம்புகிறோம. வகைகூறும்நிலையென்பது நிலையான சமாதானத்தின் இன்றியமையாத ஒரு அம்சமாகும். அதுபோலவே அனைத்துலக சமூகத்தின் செயலறுநிலை பன்னாட்டு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குவதோடு சட்டங்களுக்கமைந்த ஆட்சி என்ற கோட்பாட்டினையும் கேலிக்குரியதாக்கிவிடும்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான மதியுரைக்குழுவின் அறிக்கையினை வெளியிட இருக்கிறோமென்பதனை இத் தருணத்தில் மகிழ்வுடன் அறியத் தருகிறோம். வெளியீட்டினைத் தொடர்ந்து ஒரு குறுகிய காலத்துக்கு இவ்வறிக்கை மக்கள் மத்தியிலான கருத்துப்பரிமாற்றங்களுக்கு உட்படுத்தப்படும்.

2007 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் அவர்கள் இந்தப் பிரபஞ்சம், மானிட முயற்சிகள, அனைத்துலக உறவுகள் எல்லாமே தர்மத்தின் சக்கரத்தில் சுழலும் காலம் என்றோ வரும் எனக் கூறியிருந்தார். கலாநிதி மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் வார்த்தைகளில் இதனைக் கூறுவதாயின் 'தர்மத்தின் அடிப்படையிலமைந்த பிரபஞ்சத்தின் அச்சு நீளமானதென்றாலும் அது நீதியின் பக்கமே வளையும்'.

தெற்காசியாவின் மாறிவரும் புவிசார் அரசியல் சூழலையும் கவனத்திற்கொண்டு தமிழீழ மக்களுக்கு நியாயம் கிடைத்திட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக சமூகத்தின் மத்தியில் முனைப்புடன் செயற்படும். புதிய ஆண்டிலும் அதற்கப்பாலும் நாம் நமது விடுதலைப் பயணத்தில் முன்னேறிச் சென்றிடுவோம் என்ற நம்பிக்கையோடு நாடு கடந்த தமிழீழ அரசாங்க முயற்சியின் இணைப்பாளர்
என்றவகையில் தமிழரனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.


இவண்,

விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்,
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு



Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 5466

செவ்வாய், 10 நவம்பர், 2009

மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு: விடுதலைப் புலிகள் விளக்கம்

08 November, 2009 by admin

புலம்பெயர் நாடுகளில் தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் ஏனைய அமைப்புக்கள் தொடர்பாகவும் உள்ள குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு இவ்வறிக்கை விடுக்கப்படுகிறது என அதிர்வு இணையத்திற்கு விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. மின்னஞ்சல் மூலமாக இவ்வறிவித்தல் கிடைக்கப்பெற்றுள்ளது.



தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

09–11–2009 ஊடக அறிக்கை

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும். காலத்திற்குக் காலம் ஆட்சிபீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது.

ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் விடயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத்தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றன. உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்லவேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத்தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் கடமையாகின்றது.


இவ்வகையில், ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும். இந்த வழிமொழிவு இன்று ஈழத்தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதற்கட்டமாகும்.

அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத்தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது.

அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.


'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'



Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 12120