rameswaram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rameswaram லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 ஜூன், 2012

தமிழ்நாடு இந்தியாவில்தான் உள்ளதா? இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்

இலங்கைக் கடற்படை மீண்டும் அட்டூழியம்:  இராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு



ராமேசுவரம், ஜூன் 17: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீன்பிடிக்க விடாமல் விரட்டியதாக கரை திரும்பிய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை புகார் தெரிவித்தனர்.  ராமேசுவரத்தில் இருந்து ஜூன் 16-ம் தேதி, சுமார் 800 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப்படகுகள், மீன்வளம் நிறைந்த இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. அப்போது, சூறாவளி காற்றினால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. இதனைப் பொருட்படுத்தாமல் இலங்கை கடற்படையினர் அங்கு ரோந்து வந்தனராம். பின்னர், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியுள்ளனர். இதனால், மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிக்க முடியாமல் வேகமாக கரை திரும்பினர். இதனால், தங்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.  வலைகள் சேதம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் மன்னார், நெடுந்தீவு, இரணத்தீவு பகுதியின் கடலோரத்தில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால், அப்பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்க கூண்டு வலைகளை கடலுக்குள் வைத்திருப்பார்கள்.  இங்கு ஜூன் 16-ம் தேதி சில ராமேசுவரம் விசைப்படகுகள் மீன்பிடித்ததில், இலங்கை மீனவர்கள் கடலுக்குள் வைத்திருந்த கூண்டு வலைகளை சேதப்படுத்தி உள்ளனராம். இதனால், இலங்கை மீனவர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கூண்டு வலை சேதத்தால், இலங்கை மீனவர்கள் கோபமடைந்து உள்ளனர். இதனால், இருநாட்டு மீனவர்களின் உறவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கூண்டு வலைகளைச் சேதப்படுத்திய ராமேசுவரம் மீனவர்கள் யார் என்பது குறித்து, தமிழக உளவுப் பிரிவு போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 12 ஏப்ரல், 2010

இராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்



ராமேசுவரம்,ஏப்.11: நடுக்கடலில் மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்கியதில், இருவர் காயமடைந்து ராமேசுவரம் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பெற்றனர்.ராமேசுவரத்தில் இருந்து ஏப்ரல் 10-ம் தேதி சுமார் 120 விசைப்படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. இப் படகுகள் இந்திய, இலங்கை கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு போர் கப்பலில் ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனராம்.பின்னர் உச்சிப்புளியைச் சேர்ந்த கே.டி.முனியசாமி என்பவரின் விசைப்படகை மடக்கிப் பிடித்தனர். இதில் இருந்த மீனவர்கள் சுப்பிரமணியன் (45), தங்கச்சாமி (50), மணி(47), முனியசாமி (40) ஆகிய 4 பேரையும் கம்பு, கயிறால் சரமாரியாகத் தாக்கினராம்.இதில் மீனவர்கள் சுப்பிரமணியன், தங்கச்சாமி இருவருக்கு கை, முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இனிமேல் இப் பகுதியில் மீன் பிடிக்க வரக் கூடாது என எச்சரிக்கை செய்து விரட்டியனுப்பினராம். பின்னர் மீன் பிடிக்க முடியாமல் வெறும் படகுடன் ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்பியுள்ளனர். இதில் தாக்கப்பட்ட இரு மீனவர்களும் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மீனவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

இராமேசுவரம் இந்தியாவில்தான் இருக்கிறதா என்னும் கேள்வி இன்று அனைவரிடமும் எழுந்துள்ளது. நாளை இந்த வினா தமிழ்நாடு இந்தியாவில்தான் இருக்கின்றதா என மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை. இந்தியக் கண்டத்தின் ஒற்றுமை கருதி உலகின் மூத்த இனமான, இக்கண்டம் முழுவதும் ஒரு காலத்தில் பரவியிருந்த இனமான, இலங்கையின் தாயக இனமான, தமிழ் இனத்தை மதிக்கக் கூடிய , போற்றக்கூடிய , காக்கக் கூடிய, நிறுவி ஆரியச் சார்பு ஆட்சியை அகற்ற வேண்டும். இராமேசுவரத்தை இலங்கையுடன் இணைத்துச் சிங்கள நாடாக மாற்ற வழி வகுக்கும் காங்கிரசு ஆட்சியையும் மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தும் வரலாறு தெரியா வஞ்சக அதிகாரிகளையும் அகற்றினால் அன்றி நமக்கு விடிவு இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/12/2010 2:33:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

வெள்ளி, 26 மார்ச், 2010

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல்



ராமேசுவரம், மார்ச் 25: நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி இறால் மீன்களைப் பறித்துச் சென்றதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் வியாழக்கிழமை கூறியதாவது:ராமேசுவரத்தில் இருந்து மார்ச் 24-ம் தேதி சுமார் 650 விசைப்படகுகள் மீன்பிடிக்கச் சென்றன. இப்படகுகள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 2 போர்க் கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை மடக்கிப் பிடித்தனர். பின்னர் ராமேசுவரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்த மீனவர்களை கம்பு, கயிறால் சரமாரியாகத் தாக்கினர். இதில் மீனவர்கள் வலிதாங்க முடியாமல் துடித்தனர். பின்னர் படகுகளில் இருந்த இறால் மீன்களைப் பறித்துச் சென்றனர். இனிமேல் எங்கள் கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என துப்பாக்கியைக் காட்டி மிரட்டி எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, வெறும் படகுகளுடன் கரை திரும்பினோம். இதனால் எங்களுக்கு ரூ.1 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்

இராமேசுவரம் மீனவர்கள் தமிழர் ஆக இருக்கலாம்; ஆனால் இந்தியரல்லர். எனவே, அவர்கள் எந்த நாட்டு உதவியுடனும் தமக்கெனத் தனியரசை அமைத்துக் கொள்ளலாம் இன்பதுதான் இந்திய அரசு கொள்கையோ என எண்ண வேண்டியுள்ளது. இந்தியக் கண்டத்து ஒற்றுமை கருதியும் வலிவு கருதியும் தன்மானம் கருதியும் உயிர்ப்பலிகளைத் தடுப்பது கருதியும் நம் நாட்டு நலன்களைக் காக்காத அரசுகளைத் தூக்கி எறிய மக்கள் முன்வருவார்களாக! (என்ன செய்வது? இப்படிப்பட்ட எண்ணம் வந்தாலும் தேர்தல் நேரத்தில் மயக்கத்தில் ஒன்றும் தெரிவதில்லையோ!)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/26/2010 3:43:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *