iraa.ilankumaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
iraa.ilankumaran லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஆகஸ்ட், 2012

தமிழறிஞர்களைப் போற்றும் தொண்டு தொடரும்: பச்சமுத்து

தமிழறிஞர்களைக் கெளரவிக்கும் தமிழ்த் தொண்டு தொடரும்: வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து



 
தாம்பரம், ஆக. 24: மதுரைத் தமிழ்ச் சங்கம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்று தமிழ் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொள்வதுடன், தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கும் அறிஞர் பெருமக்களைப் பாராட்டிப் பெருமைப்படுத்தும் தமிழ்த் தொண்டும் தொடரும் என்று எசு.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் தி.ஆர்.பச்சமுத்து கூறினார்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் எசு.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ்ப் பேராயம்’ அமைப்பின் சார்பில் தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கும், தமிழறிஞர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  விழாவில், ‘புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது’ தோப்பில் முகம்மது மீரானுக்கும், ‘சி.யு.போப்பு மொழிபெயர்ப்பு விருது’ க.குப்புசாமிக்கும், ‘பெ.நா.அப்புசாமி அறிவியல் தமிழ் விருது’ முனைவர்.கோ.அன்பழகனுக்கும், ‘ஆனந்த குமாரசாமி கவின்கலை விருது’ கிறித்துவக் கல்லூரிப் பேராசிரியர் சா.பாலுசாமிக்கும், ‘முத்துத்தாண்டவர் தமிழிசை விருது’ நா.மம்மதுவுக்கும், ‘வளர்தமிழ் விருது’ க.சுந்தரபாண்டியனுக்கும் வழங்கப்பட்டன. இந்த விருதுடன் தலா உரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் தொகைப்பரிசும் வழங்கப்பட்டது.  பேராசிரியர் செ.வை.சண்முகத்திற்குப் ‘பரிதிமாற்கலைஞர் விருது’டன் தொகைப்பரிசாக உரூ.2 இலட்சமும், முதுமுனைவர் இரா.இளங்குமரனாருக்குப் ‘பச்சமுத்து பைந்தமிழ் விருது’டன் உரூ.5 லட்சம் தொகைப்பரிசும் வழங்கப்பட்டன.  ‘அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது’, ‘பாரதியார் கவிதை விருது’த் தேர்வுக்குத் தகுதியான நூல்கள் இடம்பெறாத காரணத்தினால் நடப்பு ஆண்டில் வழங்கப்படவில்லை.  உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் பேசும்போது, “காலத்திற்கு ஏற்பக் கணினித் தமிழ்க் கல்வி வழங்கும் பணியையும், தேவாரம், திருவாசகம் ஓதும் தமிழ்ச் சமயக் கல்வியையும் வழங்க முன்வந்துள்ள தமிழ்ப் பேராயத்தின் பணி பாராட்டத்தக்கது” என்றார்.  பச்சமுத்து பைந்தமிழ் விருது பெற்ற முதுமுனைவர் இரா.இளங்குமரனார் தனது ஏற்புரையில், “எசு.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து தன் பிறந்தநாளைத் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விழாவாக நடத்துவது பாராட்டத்தக்கது! எனது நூலகத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட மிகப்பழமையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் உள்ளன. தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பழமை ஆவணங்களாகத் திகழும் அவற்றைத் தமிழ்ப்பேராயம் தமிழ் வளர்ச்சிப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

‘சிலம்பொலி’ செல்லப்பன், குமரி அனந்தன், ‘கவிக்கோ’ அப்துல் இரகுமான், இந்திரா பார்த்தசாரதி, தெ.ஞானசுந்தரம், அ.மணவாளன், ‘சிற்பி’ பாலசுப்ரமணியன், எசு.ஆர்.எம் பல்கலைக்கழகத் தலைவர் இரவி பச்சமுத்து, துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ, பதிவாளர் என்.சேதுராமன் முதலானோர் பங்கேற்றனர்.

புதன், 8 பிப்ரவரி, 2012

தமிழுக்காகப் பலியாகக் கைதானார் இலக்குவனார்

"பிறர் தூக்கிச் சென்ற பிறகுதான் நம் சொத்து என்பதே தெரிகிறது'

First Published : 05 Feb 2012 03:18:31 PM IST


திருச்சி, பிப். 4: பிறர் தூக்கிச் சென்ற பிறகுதான் அது நம் சொத்து என்பதே தமிழனுக்குத் தெரிகிறது என்றார் மூத்த தமிழறிஞர் தமிழண்ணல்.  திருச்சிராப்பள்ளி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழறிஞர் மு. அருணாசலனார், முனைவர் சி. இலக்குவனார், முனைவர் மு. வரதராசனார் ஆகியோரின் நூற்றாண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:  "இலக்குவனார் எனக்கு ஆசிரியராக இருந்தவர். மு. அருணாசலனார் எனது வழிகாட்டி. இலக்குவனார் தன்னை இழந்தவர். தனக்கு வர வேண்டிய பதவிகளை இழந்தார். ஆனால், அருணாசலனார் வேறு தளத்தில் இருந்தார். தமிழறிஞன் தன்காலில் நிற்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் அவர்.  எனக்கு மூத்தவராகப் பணியாற்றி தமிழாசிரியர் பெற்ற ஊதியம் ரூ. 18. அப்போது கணிதம் உள்ளிட்ட வேறு பாட ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ. 84. பிறகு பணியில் சேர்ந்த எனக்கு மாத ஊதியம் ரூ. 84. தமிழாசிரியரா? என ஏளனமாகப் பார்ப்பார்கள். பின்னாளில்தான் இந்த நிலை மாறியது.  தமிழின் சொத்தை, நம் சொத்தை நாம் காப்பாற்றுவதில்லை. பிறர் தூக்கிச் சென்ற பிறகுதான் என்னுடையது, என்னுடையது என்று கூச்சல் போடுகிறோம். தமிழிசையும் அப்படியே.  மு. அருணாசலனாரின் இந்த நூல்களை தமிழ் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஏராளமான ஆய்வுகள் இவற்றிலிருந்து வெளிவர வேண்டும்' என்றார் தமிழண்ணல். 
விழாவில், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பேசியது:  "தேவாரம், திருவாசகத்துக்கு கோயிலில் இடம் இல்லையென்றால் அந்தக் கோ  யிலைப் பூட்டு போட்டு பூட்டு என்றவர் மு. வரதராசனார். லட்சுமணன் என்ற பெயரை இலக்குவனாக்கியது சாமி சிதம்பரனார். அதன்பிறகு, "இலக்கை நோக்கிச் செல்பவன் இலக்குவன்' என்று மறுமொழி சொன்னார் இலக்குவனார்.  பெயரின் பின்னால் "ஆர்' சேர்த்துவிட்டால் அதைத் தாண்டி சாதிப் பெயரை ஒட்ட முடியாது. அதனால்தான் இலக்குவன், இலக்குவனார் ஆனார்.  தாய்மொழி பயிற்று மொழியாக வேண்டும் என்று போராடியதற்காக, இலக்குவனாரை சிறைப்படுத்த காவல் துறை முயற்சி செய்தது. இதை உளவுத் துறையைச் சேர்ந்த எனது பழைய மாணவர் மூலம் அறிந்து கொண்டு இலக்குவனாரிடம் தெரிவித்தேன்.  தமிழுக்காக பழியைச் சுமக்கவும், பலியாகவும் தயாராக இருப்பதாக கைதானார் அவர். வேலூர் சிறையில் 105 நாள்கள் சிறையில் இருந்தார்.  குட்ட வேண்டிய இடங்களில் குனிந்து குனிந்து வாழ்ந்தோம். இப்போது பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம். எனவே, தமிழர்கள் இலக்குவனாரின் வழியைப் பின்பற்ற வேண்டும்' என்றார் இளங்குமரனார்.  
விழாவில் மு. அருணாசலனாரின் "தமிழ் இசை இலக்கண வரலாறு', "தமிழ் இசை இலக்கிய வரலாறு' ஆகிய இரு நூல்களையும் இலக்கிய விமர்சகர் வீ.ந. சோமசுந்தரம் வெளியிட, திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சர் புலவர் சி. சிவக்கொழுந்து, காவேரி மகளிர் கல்லூரிச் செயலர் கி. அரங்கராசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  பேராசிரியர் த. கனகசபை, "மு. அருணாசலனாரின் இசைக் கொடை' என்ற தலைப்பில் பேசினார். விழாவில், புலவர் தமிழகன், பாவலர் முவ. பரணர், பதிப்பாளர் உல. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  விழாவுக்கு பாவாணர் தமிழியக்கத்தின் அமைப்பாளர் முனைவர் கு. திருமாறன் தலைமை வகித்தார். திருக்குறள் அஞ்சல் வழிக் கல்வி மையத்தின் தலைவர் சு. முருகானந்தம் வரவேற்றார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலர் கவிஞர் ராஜா ரகுநாதன் நன்றி கூறினார்.