வன்னியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வன்னியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 ஜூலை, 2009

பாமக மீண்டும் ஜாதிச் சங்கமானது ஏன்?: கருணாநிதி கேள்வி



சென்னை, ஜூலை 9: "அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு, மீண்டும் ஜாதிச் சங்கமாக ஏன் கூனிக் குறுக வேண்டும்'' என்று பாமகவுக்கு முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பாக, பேரவையில் பாமக தலைவர் ஜி. கே. மணி புதன்கிழமை பேசியதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் டி.சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மறுப்புத் தெரிவித்துப் பேசினர். இந்த நிலையில், அவர்களது பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பேரவையில் வியாழக்கிழமை வற்புறுத்தினார் ஜி.கே.மணி. இதற்கு, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி அளித்த விளக்கம்: ""பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிலும் குறிப்பாக வன்னியர்களுக்கு திமுக ஆட்சி துரோகம் செய்கிறது என்பது போல ஒரு கற்பனை குற்றச்சாட்டை பாமகவினர் புதன்கிழமை செய்திருந்தார்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற முக்கிய பொறுப்புகளில் வன்னியர்கள் அதிகமாக இல்லை என்ற தகவலை பாமக தலைவர் ஜி.கே.மணி சுட்டிக்காட்டியிருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். என்பது மத்திய தேர்வாணைய கழகத்தால் தேர்வு நடத்தி அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும். அதற்கும் தமிழக அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. உயர் நீதிமன்றத்தில் யாரும் நீதிபதிகளாக வன்னியர்கள் இல்லை என்றால், அது தமிழக அரசின் குற்றமா? அல்ல. யார் யார் வன்னியர்கள்? தற்போது, மாவட்ட ஆட்சியர்கள் 31 பேரில், இரண்டு இடங்களில் தான் வன்னியர்கள் இருப்பதாக ஜி.கே.மணி கூறுகிறார். அதிலே, ஜெயராமன் என்பவருக்கு இரண்டாவது முறையாக மாவட்ட ஆட்சித் தலைவராக வாய்ப்பு தரப்பட்டுள்ளது. காவல் துறை எஸ்.பி.யாக மூன்று மாவட்டங்களில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் பொறுப்பில் இருக்கிறார்கள். பாமக என்பது இன்றைக்கு ஒரு அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சி. முதலில் அது ஜாதி சங்கமாகத் தோன்றி இன்று ஒரு அரசியல் கட்சியாக வளர்ந்து உருவெடுத்து இருக்கிறது. அப்போது, அரசியல் கட்சிகள் என்றால் அவர்களுக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஓட்டுப் பொறுக்கிகள் என்பதுதான் இங்கேயுள்ள (பேரவை) உறுப்பினர்கள், எனக்கும் சேர்த்து கொடுத்த பட்டம். அன்றைக்கு அப்படி ஆரம்பித்தவர்கள், ஜாதி சங்கமாக ஆரம்பித்தவர்கள் அரசியல் கட்சியாக வளர்ந்து வியாபித்திருக்கிறார்கள். எனக்குள்ள வருத்தம், அரசியல் கட்சியாக வியாபித்த பிறகு மீண்டும் ஜாதிச் சங்கமாக ஏன் கூனிக் குறுக வேண்டும்? வன்னியர்கள் எத்தனை பேர்? 1985-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஏற்கெனவே உள்ள வன்னியர் உள்ளிட்ட 109 சாதிவாரியான மக்கள் தொகை அறிவிக்கப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களில் உள்ள அந்த 109 ஜாதிகளுடைய மக்கள் தொகை 1 கோடியே 23 லட்சத்து 34 ஆயிரத்து 987 ஆகும். அதில், வன்னியர் 65 லட்சத்து 4 ஆயிரத்து 987 பேர். அவசரம், ஆத்திரம்... இன்றைக்கு சமூக நீதி பற்றி பேசுகிறோம். ஆனால், அந்த சமூக நீதியின் காவலர் வி.பி.சிங்குக்கு தமிழகத்தில் பாமக சார்பில் தரப்பட்ட மரியாதை என்ன தெரியுமா? "வன்னியப் பெண்கள் யாரும் அவரது முகத்தில் விழிக்கக் கூடாது' என்பதாகும். சமூக நீதிக் காவலருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கௌரவம் இது. ஆகவே, அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு சில செயல்களில் ஈடுபடுகின்ற காரணத்தால்தான் இன்றைய விளைவுகளை அனுபவிக்க நேரிட்டிருக்கிறது'' என்றார் முதல்வர் கருணாநிதி.
கருத்துக்கள்

கலைஞர் தெரிவிப்பது போல் அரசியல் கட்சியான பாமக சாதிச்சங்கமாகக் குறுக்கிக் கொள்வது சரியல்ல. தேவையெனில் அவர் தனியாக வன்னியர் நலப்பேரவை அல்லது வேறு பெயரில் சாதி அமைப்பு ஒன்றை நடத்திக் கொள்ளட்டும். இல்லையேல் அரசியலில் காணாமல் போகும் நிலை ஏற்படும். திமுக குடும்பச் சங்கமாகப் போனபின்பு தான் சாதிச் சங்கமாக மாற்றினால் என்ன என்று எண்ணலாம். வினை விதைத்தவர் வினை அறுப்பர். ஆதலின் அதனை ஒப்பிட்டுப் பார்க்காமல் உண்மையிலேயே உலகத் தமிழர்கள் மீதும் தமிழ் மொழி, கலை,பண்பாடு மீதும் பற்று இருப்பின் இனியேனும் இடட்டும் முற்றுப்புள்ளி வன்னியர் வெறிக்கு.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
7/10/2009 2:45:00 AM

முதலில் திரு. மு. கருணாநிதி அவர்கள் எந்த அடிப்படையில் தனது குடும்பத்தினரை அரசியல் உயர் அந்தஸ்தில் அமர்த்தினார் என்பது தமிழக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியது அவசியம். சாதி அடிப்படையிலா? சமுதாய அடிப்படையிலா? உறவின் அடிப்படையிலா? எட்டப்பனிள் மறு உருவே... காக்கை வன்னியனின் திரு உருவே... உனது பெயர் என்றும் எங்கள் வரலாற்றின் கறையாகத் தொடரும்... வாழ்க உன் துரோகம்... வளர்க உன் குடுமபம்...!

By Chandran
7/10/2009 1:09:00 AM

You are purruki and other MLA also porrukki. So, Tamil nadu Assembly is Porrukikal Assembly.

By vallivan
7/10/2009 12:59:00 AM

திங்கள், 29 ஜூன், 2009

தனி இட ஒதுக்கீடு வழங்க வன்னியர் சங்கங்கள் கோரிக்கை



சென்னை, ஜூன் 28: தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வன்னியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அதன் நிர்வாகத் தலைவர் சி.என்.ராமமூர்த்தி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் மத்தியில் 2 சதவீதமும், மாநிலத்தில் 20 சதவீதமும் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது நீண்ட காலக் கோரிக்கை. பல்வேறு தொடர் போராட்டத்துக்குப் பின் வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளைச் சேர்ந்த மக்களுக்கு 20 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டது.


எனினும் இதுவரை வன்னியர்களுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை. எனவே, வன்னியர்களுக்கு தாற்காலிகமாக 15 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். தலித்துகள், கொங்கு வேளாளாளர், முக்குலத்தோர், நாடார், யாதவர்கள் உள்ளிட்ட பெரும்பான்மையான சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் சமூக நீதியை நிலை நாட்ட, ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழகத்தில் இன்னமும் 69 சதவீத ஒதுக்கீடுக்குப் பதிலாக 50 சதவீத ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. இது குறித்து முழுமையான வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்.
வன்னிய சமுதாய முன்னோர்கள் தங்களது சந்ததியினர் நலனுக்காக ரூ.1 லட்சம் கோடிக்கும் மேல் சொத்துகளை விட்டுச் சென்றுள்ளனர். இச் சொத்துகளை மீட்டு, ஒருங்கிணைத்து "வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம்' அமைக்கப்பட வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் நிர்வாகிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, விரைவில் போராட்டம் நடத்தவும் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் ராமமூர்த்தி.


கருத்துக்கள்

சாதிச் சங்கங்களைத் தடைசெய்தால்தான் நாடு உருப்படும். வன்னியராக எண்ணி அன்னியப்பட்டுப் போகாமல் தமிழராக எண்ணி தமிழ் நாட்டுமக்களுக்கு உழைத்தால் நீங்களும் உயருவீர்கள்! நாடும் உயரும்! சாதிச் சங்கங்கள் இல்லாக் காலமே நாட்டின் பொற்காலம். 'சாதி இருக்கின்றது என்பானும் இருக்கின்றானே' என்னும் பாவேந்தர் பாரதிதாசன் கவலை தீரும் நாளே நமக்கெல்லாம் பொன்னாள்! அதற்கு முதற்படியாகச் சாதிச் சங்கங்களைத் தடை செய்வீ்ர்!


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/29/2009 3:58:00 AM

வெள்ளி, 26 ஜூன், 2009

வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு தேவை: ராமதாஸ்
தினமணி


வேலூர், ஜூன் 25: வன்னியர் சமுதாயத்தினருக்குத் தனி இட ஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழலில் உள்ளோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.வேலூர் அருகே வியாழக்கிழமை, திருமண விழா ஒன்றில் அவர் பேசியது:1987-ம் ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு, வன்னியர் சமுதாயம் உள்பட 107 சமுதாயங்களைச் சேர்த்து, 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இதில் 10 சதவீதம் கூட வன்னியர்களுக்குக் கிடைக்கவில்லை. எனவே, வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.
கருத்துக்கள்

திரு இராமதாசு அவர்களே! உங்களின் பல நல்ல எண்ணங்கள் நீங்கள் சாதிச்சாக்கடையில் உழல்வதால் மதிப்பிழந்து போகின்றன. நல்ல மனிதனாக எண்ணிச் செயல்பட்டு அனைவரையும் மக்களாகவே எண்ண வழிகாட்டுங்கள். அல்லது பா.ம.கட்சியைக் கலைத்து விட்டு, வன்னியருக்கான சாதி அமைப்பை மட்டும் நடத்துங்கள். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் வன்னியர் செல்வாக்கு பெறுவதால் ஏற்படும் கசப்புணர்வே இந்தத் தேர்தலில் தோல்வியைத் தந்தது மட்டுமல்லாமல் தோல்வி கண்டு அனைவரையும் மகிழ்ச்சி யடையச் செய்தது. உங்கள் பின்னால் உலகத் தமிழர்கள் அணி வகுத்துவர ஆயத்தமாக இருக்கும் பொழுது வன்னியருக்கு மட்டும் குரல் கொடுப்பானேன்? உங்கள் 'தமிழ் ஓசை' இதழை வன்னியர்கள் வாங்கியிருந்தால் அதன் பக்கங்கள் குறையவும் விற்பனை சுருங்கவும் ஆன நிலைமை ஏற்பட்டிருக்குமா? தமிழ் அன்பர்கள்தாமே வாங்கி 'ஆதரவு' தருகின்றனர். அவர்களை இழக்காதீர்கள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/26/2009 5:40:00 AM