வடவர் வருகையும் தமிழ்நாடும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வடவர் வருகையும் தமிழ்நாடும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 13 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4 தொடர்ச்சி)

வடவர் வருகையும் தமிழ்நாடும்  5

 தமிழ்நாட்டில் நிருவாகத் தலைவர், அவர்தான் ஆளுநர், ஆளுநர் இரவி! தமிழரல்ல என்பதே முதல் தகுதி! உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக இப்போது ஒரு தமிழர் இருக்கிறார். ஆனால் நிரந்தரமாக ஒரு நீதிபதி வந்தால் தமிழராக இருக்கக் கூடாது என்பது நிபந்தனை. முகமது இசுமாயில் காலத்திற்குப் பிறகு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எல்லாருமே தமிழர் அல்லாதவர்கள்தான் ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும். நீங்கள் கண்ணிற்குத் தெரிகிற ஏழை எளியவர்களை மட்டும் வைத்துக் கொண்டு நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. கண்ணுக்குத் தெரியாத மேட்டுக்குடி வடநாட்டார் இவர்கள் எல்லாரும் வெளியில் வருவதே இல்லை மகிழுந்தில் கூடக் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு போகிறார்கள் மேலங்கி முழு ஆடையோடு(கோட்டு சூட்டோடு) இருக்கிறார்கள். அவர்களுக்கு நம் மக்களிடத்தில் வந்து பேச வேண்டிய தேவையே இல்லை. தமிழ் தெரிந்து கொள்ள வேண்டியதே இல்லை.  

நாங்கள் சிறையில் இருந்த போது சிறைத்துறை தலைவராக ஃகோண்டா(Honda) என்று ஒருவர் இருந்தார். இப்போதும் என்ன சட்டம் என்றால் சிறைத் துறையின் தலைமை அதிகாரி இ.கா.ப. ஆக இருக்க வேண்டும். இந்த இ.கா.ப.  என்பவர் பெரும்பாலும் வடநாட்டுக்காரராக இருப்பார். சிறையில் குறை கேட்க வருவார்கள். அரிசியில் கல் கலக்கிறார்கள்; மோரில் தண்ணீர் கலக்கிறார்கள்; விடுதலை செய்யவில்லை என்றெல்லாம் குறை சொன்னால் என்ன சொல்கிறார்கள் என்று உடன் வருகிற கண்காணிப்பாளரைக் கேட்பார்கள். அவர் மொழிபெயர்த்துத் தலைமை அதிகாரிக்குச் சொல்வார். எல்லாம் சொல்லியதற்குப் பிறகு இந்த ஃகோண்டா சொல்வார் “அச்சா அச்சா” என்று. அவ்வளவுதான், சென்று விடுவார் இந்த அச்சாவிற்கு என்ன மிச்சம், அந்தப் பச்சா இவர் போன பிறகு அடி வாங்குவார்.

 குறை  தீர்ப்பது இருக்கட்டும், குறை கேட்பதற்காகவாவது ஒரு மொழி வேண்டாமா? தமிழ்நாட்டில் தமிழ் தெரியாதவர் ஏதோ ஊழியராக மட்டும்  அல்ல, உயர் அதிகாரியாகக் கூட இருக்கக் கூடாது. எந்தப் பொறுப்பிலும் இருக்கக் கூடாது. நீதிபதியாக இருக்கக் கூடாது. இதைக் கேட்பதில் என்ன குறை?

உச்ச நீதிமன்றத்தில் ஓய்வு பெற்று விட்டு இன்று மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார் இரஞ்சன் கோகாய். அவர் அன்றைக்கு நீதிபதியாக உட்கார்ந்திருக்கிறார். உபியில் இருந்து ஒரு மாவட்ட நீதிபதி அவர் முன்பு வாதிட்டார். அவருக்கு ஆங்கிலம் சரியாக வராது. “இது உச்ச நீதிமன்றம்  என்று தெரியுமா தெரியாதா? எதற்காக நீங்கள் இந்தியில் பேசுகிறீர்கள்?”  “எனக்குச் சரளமாக ஆங்கிலம் வராது” என்று சொல்லிப் பார்த்தார்.  

அதெல்லாம் கிடையாது உச்ச நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்று சொன்னார் கோகோய்.

ஏன்? என்ன அவசியம் இருக்கிறது?

இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேசுவதற்குச் சட்டப்பேரவையில் தீர்மானம் போடுகிறார்கள். ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எழுதுகிறார். ஒன்றும் நடைபெறவில்லை. மோதி மட்டும் ஊரூராகச் சென்று திருக்குறள் படித்துக் கொண்டிருக்கிறார். நிதி அமைச்சர் ஔவையார் பாட்டெல்லாம் படிக்கிறார்கள். எங்களுக்கு உள்ளூரில் ஒன்றும் நடைபெறவில்லை. இப்படி நிறைய பட்டியலிட்டுச் சொல்லிக் கொண்டே போகலாம் தமிழ்நாட்டின் இறைமை என்பதற்கு ஏதாவது பொருள் இருக்குமானால் அது தெளிவாகத் தமிழ்நாட்டின் வேலைவாய்ப்பை,  தமிழ்நாட்டின் செல்வங்களைத் தமிழ்நாட்டின் இயற்கைச் சுற்றுச் சூழலைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சட்டங்கள் இல்லாமல் செய்ய முடியாது.  

இதே அதானி எங்கே பார்த்தாலும் ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். தரவு மையம் (Data Center) என்று சொல்லி இங்கே வந்து தமிழ்நாட்டு அரசோடு பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில் ஒப்பந்தம் போடுகிறார். துறைமுக ஒப்பந்தம், விமான நிலைய ஒப்பந்தம், இன்னும் பற்பல ஒப்பந்தங்கள்! நாங்கள் கேட்கிறோம்: தமிழ்நாடு அரசு இந்த ஒப்பந்தங்களை எல்லாம் நீக்கம் செய்ய வேண்டும், கிழித்தெறிய வேண்டும். தோழமைக் கட்சிகள் இந்தக் கோரிக்கையை வைக்க வேண்டும். அதானிக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? நாடாளுமன்றத்தில் அதானியை எதிர்த்து அருமையாகப்  பேசுகிறீர்கள்! கடுமையாகப் பேசுகிறீர்கள்! உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதானியுடன் இருக்கும் ஒப்பந்தங்களைக் கிழித்தெறிய வேண்டும். தமிழ்நாடு அரசிற்கு இந்த உரிமை இருக்கிறது.

உபி மாநில அரசினர் நீக்கி விட்டார்கள், தெரியுமா? மின்சாரத்தை அளக்கத் திறன்மானி(Smart meter)  ஒப்பந்தம் போட்டு இருந்தார்கள். யோகி ஆதித்தியநாத்து அதை நீக்கி விட்டார். உன்னோடு ஒப்பந்தம் கிடையாது என்று சொல்லி விட்டார்கள். 

 இப்போது நாம் தமிழ்நாட்டு மக்களுடைய தன்மானம், தமிழ்நாட்டு மக்களுடைய தன்னாட்சி, தமிழ்நாட்டு மக்களுடைய தன்னுரிமை  என்ற அடிப்படையில் அடிப்படைச் சட்டங்களுக்கான கோரிக்கைகள் முன்வைக்க வேண்டும். அந்தக் கோரிக்கைகளின் அடிப்படையில் போராட வேண்டும். அது இல்லாமல் நாமாக இந்தச் சிக்கலை மேலெழுந்த வாரியாக, வடவர் வருகை என்று மட்டும் பார்த்துத் தீர்த்து விட முடியாது. வடவர் வருகை என்பது அவர்களை அடித்தளமாக கொண்டு ஓர் ஆதிக்கம், ஒரு விரிவாதிக்கம் செயல்படுவதைக் குறிக்கும். அது ஓர் ஆட்சியின் வன்பரவல். அதனை எதிர்த்துப் போராடுவதில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உங்கள் அனைவரோடும் இணைந்து நிற்கும்.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்

திங்கள், 12 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4

      12 June 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3 தொடர்ச்சி)

வடவர் வருகையும் தமிழ்நாடும் 4

 நான் சொல்வது போல் தமிழ்நாட்டிற்கு ஒரு குடியுரிமை இருந்தால், இந்தியக் குடியுரிமை இல்லை என்றாலும்  நாம் தமிழ்நாட்டுக் குடியுரிமை வழங்க முடியும். இப்போது தமிழ்நாட்டில் ஏதிலியர்களாக இருக்கிறார்களே, அவர்கள் எல்லாரும் குடிமக்களா? அவர்கள் ஏதிலிகள் கூட இல்லை. ஏனென்றால் எதிலிகள் தொடர்பான அனைத்துலகச் சட்டத்தில் இந்தியா கையொப்பம் இடவில்லை. ஏதிலிகள் என்பதைக் கூட  அங்கீகரிக்கவில்லை. அகதிகள் பற்றிய உலகச் சட்டம் எதுவுமே அவர்களுக்கு பொருந்தாது! (உ)ரோகிங்கியா முசுலிம்களுக்குப் பொருந்தாது! திபெத்தியர்களுக்குப் பொருந்தாது! 

அதனால் முதலாவதாக நாம் ஓர் அடிப்படை தீர்வு முன்வைப்போம். என்னவென்றால், தமிழ்நாட்டில்  வடவரோ மற்றவர்களோ  படையெடுப்போ வருகையோ நுழைவோ எதை ஆனாலும், இங்கு தோழர் ஒருவர் கேட்டார். கட்டுப்படுத்துவதா தடுப்பதா என்று. கட்டுப்படுத்துவோம், ஒழுங்கு படுத்துவோம். ஏனென்றால் நமக்கு இந்தத் தேவை உலகமுழுவதும் இருக்கிறது அந்த ஒழுங்குபடுத்துவதற்கு அடிப்படைத் தேவை தமிழ்நாட்டுக் குடியுரிமை வேண்டும். வேறு எவருக்கோ இரட்டைக் குடியுரிமை என்று பேசுகிறீர்கள் அல்லவா? நாங்கள் கேட்கிறோம் எங்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும். இந்தியக் குடியுரிமையோடு தமிழ்நாட்டுக் குடியுரிமையும் வேண்டும்.

தமிழ்நாட்டில் ஓர் அமைச்சர் இருந்தார். அவர் பெயர் என்ன? தமிழ்க்குடிமகன். அவரே தமிழ்க் குடிமகன் இல்லை. அவருக்குத் தமிழ்நாட்டுக் குடியுரிமை  யார் எங்கு கொடுத்தது? பெயர் மட்டும்தான் தமிழ்க் குடிமகன்! அமித்துசா சொன்னார்: தமிழ்நாட்டிற்கு அதிகாரிகள் எல்லாரையும் அனுப்பி யாரெல்லாம் இந்த நாட்டில் குடிமக்கள் என்று தீர்மானிக்கப் போகிறோம், நாங்கள் பட்டியல் எடுத்துக் கொண்டு வருகிறோம் என்று சொன்னார் –  நான் திருப்பிக் கேட்டேன், நீங்கள் வாருங்கள், வருகிற போது நீங்கள் இந்த நாட்டிற்குச் சொந்தமானவர் என்பதற்கான சான்றைக் கொண்டுவாருங்கள். நீங்கள் யார் எங்களைக் கேட்பதற்கு? என்னை எப்போது நான் உன்னிடம் ஒப்படைத்துக் கொண்டேன். இந்த நாட்டை வைத்துக் கொள், எடுத்துக் கொள் என்று எவராவது கொடுத்தார்களா? காசுமீர் விடயத்தில் நீ சொல்கிறாய், மன்னர் எங்களிடம் ஒப்படைத்தார் என்று. இங்கே யார் ஒப்படைத்தது?  யாரும் ஒப்படைக்கவில்லை. நீயாக எடுத்துக் கொண்டாய். இப்போது எங்களை நீ அதிகாரம் செய்கிறாய், அதனால் இந்தச் செய்தி ஓர் அடிப்படைத் தேவை.

 இன்னும் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தத் தொடர்வண்டி நிலையத்தில் வந்து இறங்குபவர்கள், பானி பூரி விற்பவர்கள், வெற்றிலை பாக்கு போட்டு எச்சில் துப்புபவர்கள் இவர்கள்தான் வடநாட்டவர்கள் என்று நினைக்காதீர்கள். தமிழ்நாடு அரசு 41 பொதுத்துறை நிறுவனங்கள் வைத்திருக்கிறது. எல்லாம் பெரிய பெரிய நிறுவனங்கள், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் டிட்கோ, தமிழ்நாடு மின்னணுவியல் கழகம் எல்காட், தமிழ்நாடு இரப்பர் கழகம் என்று ஒவ்வொன்றாக இருக்கிறது இந்த ஒவ்வொரு கழகத்திலும் யார் அதிகாரிகள் என்று தெரியுமா? அதில் எத்தனை பேர் தமிழர்? எத்தனை பேர் வெளிமாநிலத்தவர்? என்று எண்ணிப் பார்க்க வேண்டாமா? 

ஓர் உதாரணம் சொல்கிறேன் எல்காட்டு என்று ஓர் அமைப்பு தெருவெல்லாம் வண்ண விளம்பரம் போடுகிறார்கள். அதனுடைய பெயர் உமாசின் (UMAGIN). அது என்ன என்று உங்களால் கற்பனை செய்யக் கூட முடியாது செட்டம்பர் மாதத்தில் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய முதலீட்டாளர்கள் அனைவரையும் சென்னையில் திரட்ட போகிறார்கள். அதற்குப் பெயர்தான்  உமாசின். இதை நடத்தப் போவது எல்காட் மின்னணுவியல் கழகம். அதில் இயக்குநர் வாரியம் இருக்கிறது அதில் ஏழு பேர். அவர்கள் எல்லாரும் இ.ஆ.ப. ஆக இருக்கக் கூடிய அதிகாரவர்க்க முதலாளிகள். பெரும் சம்பளம் மட்டுமல்ல, இலாபத்திலும் பங்கு பெறுபவர்கள். பிறகு அதில் என்னென்ன உண்டோ சம்பளம் கிம்பளம், எப்படி எல்லாம் தேட்டை போடலாமோ அப்படி எல்லாம் போடுவார்கள்.

 அரசாங்கம் மாறுகிற போது அமைச்சர்கள் மாறுவார்கள். காவல் துறையில் கூட சில உயர் அதிகாரிகள் மாறுவார்கள் ஆனால் இந்த நிறுவனங்களில் யாரும் மாற மாட்டார்கள். அவர்களேதான் உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இந்த எல்காட் நிறுவனத்தில் ஏழு இயக்குநர்கள் இருக்கிறார்கள். டாக்டர் மீரசு மிட்டல், இ.ஆ.ப.,  அசய்  யாதவு இ.ஆ.ப., பங்கசுகுமார் பன்சால், இ.ஆ.ப., ஆனந்து விசேந்திர பாண்டியா, அல் சுந்தர் தயாளன், திருமதி சரண். ஒரு சில பெயர்கள் தமிழ் போன்று இருக்கலாம். எனக்கும் அந்த சந்தேகம் உண்டு ஆனால் சந்தேகமே இல்லாத வடநாட்டவர்கள்தான் தலைமை. அந்த முக்கியப் பதவிகள் வடநாட்டார் கையில். இவர்கள் எல்லோரும் யார்? எந்த ஊர்? எந்த வகுப்பு? பிற்படுத்தப்பட்ட வகுப்பா? தாழ்த்தப்பட்ட வகுப்பா? எந்த மாவட்டம்? பெயரிலேயே தெரிகிறது, இவர்களில் எவருக்கும் தமிழும் தெரியாது. இவர்கள் நிரந்தரமாக இங்கு ஆட்சி புரிகிறார்கள். ஒரு பெரிய நிறுவனம் நிறையத் தொழில்களுக்கு முதலீடு செய்திருக்கிறது கோடிக்கணக்கான உரூபாய் இலாபமீட்டி கொடுக்கிறது – டிட்கோ. இதே நீரசு  மிட்டல், அட்சய யாதவு, பிரபாகரன் நாயர், பிரவீன் சுரிசா, தேசிகன் அருள்ராசு இது போன்று ஏழு எட்டுப் பேர். நான் சொல்லிய 41 நிறுவனத்திற்கும் இயக்குநர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் பாதிக்குக்  குறையாமல் வடநாட்டு அதிகாரிகள் இருப்பார்கள் 

ஏன் இ.ஆ.ப., – Indian Administrative Service – இ.வெ.ப. – Indian Foreign Service – இ.கா.ப. – Indian Police Service?  நாம் என்ன  கேட்க வேண்டும்? எதற்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் நாம் நடத்துகிற தொழில்களுக்கு இஆப? தஆப வரட்டும் – Tamilnadu Administrative Service வேண்டும், Tamilnadu Police Service வேண்டும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுடன் உறவுகளுக்கு எங்களுக்கு Tamilnadu Foreign Service வேண்டும். இந்தக் கோரிக்கையே இல்லை என்றால் பிறகு எதற்குத் தன்னாட்சி? கூடுதல் அதிகாரம்? இதற்கெல்லாம் என்ன பொருள் இருக்கிறது? இந்தக் கோரிக்கைகளை நாம் எழுப்ப வேண்டும். மன்றங்களிலும் எழுப்ப வேண்டும், மக்கள் மத்தியிலும் எழுப்ப வேண்டும் இந்தக் கோரிக்கைகளை எழுப்பாமல் ஒன்றும் செய்ய முடியாது.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்

ஞாயிறு, 11 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 3




(தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2 தொடர்ச்சி)

வடவர் வருகையும் தமிழ்நாடும் 3

 மிகச் சுருக்கமாக நான் ஒன்று சொல்கிறேன். நண்பர்களே, இந்தியாவிற்கு வருவதற்கு கடவுச்சீட்டு,  நுழைவுச்சீட்டு இருப்பது போல, இந்தியாவை விட்டு வேறொரு நாட்டிற்குச் செல்வதற்குக் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு தேவைப்படுவது போல, தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் கடவுச்சீட்டு,  நுழைவுச்சீட்டு தேவை என்கிற சட்டம் வந்தால் இந்தச் சிக்கல் தீரும்.  

நாம்  தெருச் சண்டைகள் போட்டு இவர்களை  விரட்ட முடியாது.  அது சரியான நடைமுறையல்ல.  இன்றைக்கு என்ன செய்கிறார்கள்? சாதிச் சண்டைகள், சமயச்  சண்டைகளை ஊக்கப்படுத்திக் குளிர் காயக் கூடிய கூட்டம் வடமாநிலத் தொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டுத்  தொழிலாளர்களுக்கும் மோதல், தெருவிலே சண்டை, கல்வீச்சு என்ற செய்திகளை உற்சாகத்தோடு பரப்புகிறார்கள். இப்படி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினால்  தாங்கள் சுலபமாக உள்ளே நுழைந்து விடலாம் என்பது அவர்களின் கனவு. நாம் இதற்கு மாற்றான சட்டங்களைக் கூற வேண்டும்.

 ஏன்?  நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது; நடைபெற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். உங்களுக்கும் எனக்கும் பிடிக்கின்றதோ பிடிக்கவில்லையோ நரேந்திர மோதிதான் பிரதமராக இருக்கிறார். எதனால்?  சட்டம் அப்படித்தான் சொல்கிறது.  எடப்பாடி பழனிச்சாமிக்கும் தாலின்தான் முதலமைச்சராக இருக்கிறார்.  ஏன்?  சட்டம் அப்படித்தான் சொல்கிறது.  எடப்பாடி பழனிச்சாமியைப் பிடிக்கவில்லை  என்றாலும் அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். ஏன்?  சட்டம் அப்படித்தான் சொல்கிறது. ஈரோட்டில் திருமகன் ஈவேரா மறைந்தவுடனேயே வேறொருவரை அந்தக் கட்சி அழைத்து நீதான் எம்எல்ஏ என்று அறிவிக்க முடியவில்லை. தேர்தல் நடைபெறுகிறது. ஏன்?  சட்டம் அப்படித்தான் சொல்கிறது. ஆகச், சட்டத்தின் ஆட்சி என்பதை நாம் உணர்ந்தோமானால் இது ஒரு தனிஆளுடைய சிக்கல் அல்ல, இது ஒரு தனியாள் முடிவு செய்கிற விடயம் அல்ல – நமக்குப் பாதுகாப்பான சட்டங்கள் வேண்டும்.

 இப்போது ஒரு சட்டம் இருக்கிறது, அரசமைப்புச் சட்டம். அதில் சில பாதுகாப்புகள் இருக்கின்றன. அந்தப் பாதுகாப்புகள் நமக்குப் போதவில்லை. அந்தச் சட்டத்தை வரைகிற காலத்தில் அண்ணல் அம்பேத்துகர் அவர்கள் சொன்னார்கள், நான் ஏன் இந்த வேலையில் உட்கார்ந்து இருக்கிறேன் என்றால்  சட்டப்படியான சில காப்புக் கூறுகளை (legal safeguards)  ஏற்படுத்த வேண்டும்; இட ஒதுக்கீட்டிற்கான காப்புக் கூறுகளை ஏற்படுத்த வேண்டும். அதுபோல நாம் இன்றைக்கு முன்வைக்கிற கோரிக்கை  தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு  முன்னுரிமை வேண்டும். இதுதான் நம் கோரிக்கையினுடைய சாரம். நாம் முற்றுரிமை கேட்கவில்லை, முன்னுரிமைதான் கேட்கிறோம் அவரவர் நாட்டில் அவரவர் முன்னுரிமை கேட்கட்டும். அதுதான் உலகமெங்கும் கேட்கிறார்கள். நாம் ஒன்றும் உலகத்தில் இல்லாத ஒரு கோரிக்கையை வைக்கவில்லை. ஆனால் இந்த முன்னுரிமையை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கான காப்புக் கூறுகள் இந்த அரசமைப்புச் சட்டத்தில் இல்லை.

என்ன  இல்லை என்று  சொல்கிறேன்? ஏன் சொல்கிறேன்? அமெரிக்காவில் 50 மாநிலங்கள் உள்ளன, சரியான முறையில் சொல்ல வேண்டும் என்றால் 50 நாடுகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள் (UNITED STATES OF AMERICA).  இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு கொடி உண்டு, கீதம் உண்டு, தனித்தனிச் சட்டம் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு பேரவை, ஒவ்வொன்றுக்கும் ஒரு ஆளுநர், ஒவ்வொன்றுக்குமான நிருவாகமெல்லாம் இருக்கிறது. தனித் தண்டனைச் சட்டம் கூட இருக்கிறது இவையெல்லாம் இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஓர் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது. இதுதான் வேண்டும் அமெரிக்கக் கூட்டாட்சி அரசமைப்பு ஒருபுறம், அந்தந்த மாநிலம் அல்லது நாட்டுக்கான அரசமைப்பு மறுபுறம். அதை யாரும் வேண்டா என்று சொல்லவில்லை இருக்கிறது அதற்கு இந்தியாவில் ஓர் அரசமைப்புச் சட்டம் இருக்கிறது –  நாங்கள் சொல்கிறோம், அந்த அரசமைப்புச் சட்டம் இருக்கட்டும், எங்கள் மக்கள் இந்தியாவில் இருக்க விரும்புகிற வரை இருக்கட்டும், விரும்பவில்லை என்றால் அப்போது வேண்டா. ஆனால் அது இருக்கும் போதே எங்களுக்கு தமிழ்நாட்டின் குடியுரிமை வேண்டும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்று ஒன்று கொண்டுவந்தார்கள். அரசமைப்புச் சட்டத்தில் அதற்கு ஒரு தனி பிரிவு வைத்திருக்கிறார்கள். அந்தக் குடியுரிமைச் சட்டப்படி இந்த ஏதிலியர்களுக்குக் குடியுரிமை இல்லை அவர்கள் ஒரு திருத்தம் கொண்டு வந்து என்ன செய்தார்கள் என்றால், பாக்கித்தான் ஆபுகானித்தான் வங்கதேசத்தில் இருந்து வந்திருந்தார்கள் என்றால் சட்டவிரோதமாக வந்திருந்தால் கூட அவர்கள் இந்துவாக, கிறித்தவர்களாக, சீக்கியர்களாக, பார்சிகளாக இருந்தால் அவர்களுக்கு எல்லாம் ஒரு சலுகை கொடுத்து சேர்த்துக் கொள்வார்கள்.

இவையெல்லாம் இருந்தால் என்று சொல்லி விட்டு எதைச் சொல்லவில்லை என்றால் முசுலிமாக இருந்தால் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று சொல்லவில்லை. ஆனால் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

 அந்த நாடுகள் எல்லாம் முசுலிம் நாடுகள். அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் பெரும்பாலும் யாராக இருப்பார்கள் முசுலிம்களாக இருப்பார்கள் அவர்களைச் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்றார்கள்

 சரி, முசுலிமல்லாதவர்களைத்தான் சேர்த்துக் கொள்வோம் என்று ஒரு சட்டத் திருத்தம் கொண்டுவருகிறீர்கள், இலங்கையில் இருந்து வந்துள்ள தமிழர்கள் பெரும்பாலும் இந்துக்கள். அதற்கு அடுத்தபடி கிறித்தவர்கள். அவர்களுக்குப்  பொருந்துமா என்றால் இல்லை இல்லை. அவர்களுக்குப் பொருந்தாது இது அங்கே மட்டும் சிறப்புத் திருத்தம் என்றார்கள்.

அப்போது நாம் என்ன கேட்டோம்? எங்களுடைய ஈழத்  தமிழர்களுக்குக் குடியுரிமை வேண்டும். ஏதிலியர்களாக 50 வருடங்களாக இருக்கிறார்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள் அவர்களுக்குக் குடியுரிமை கொடு என்று கேட்டோம், கொடுக்கவில்லை.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்

சனி, 10 ஜூன், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’? தொடர்ச்சி)

வடவர் வருகையும் தமிழ்நாடும் 2

 நம்முடைய ஈழத் தமிழர்கள் 10 இலக்கம் பேர் மேலை நாடுகளில் போய் வாழ்கிறார்கள், உழைத்துப் பிழைக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டுச் செல்லவில்லை. இனக் கொலையினால் விரட்டப்பட்டுச் சென்றார்கள்;  மீண்டு செல்ல வாய்ப்பு இருந்தால் மீளத்தான் விரும்புவார்கள். யாருக்கும் அகதியாக, வழியற்றவராக, ஏதிலியாக வாழப் பிடிக்காது. இன்றைக்குப் பொருளியல் காரணங்களுக்காக, வறுமையின் காரணமாக அகதிகளாக விரட்டப்பட்டு இடம்பெயர்ந்து செல்பவர்களுடைய கூட்டம்  உலகெங்கும் அதிகமாக இருக்கிறது.  இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பொருளியல் சூழல், பொருளியல் நெருக்கடி. தாராளியம் லிபரலிசம்  என்றெல்லாம் சொல்கிறார்கள்   (LPG – Liberalization, Privatization and Globalization). எதை ‘லிபரலைசு’ செய்திருக்கிறார்கள்? எதைத்  தாராளம் ஆக்கி யிருக்கிறார்கள்?  பெருமுதலாளிகள் சுரண்டுவதைத் தாராளமாக்கி இருக்கிறார்கள்.  அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும்  நர வேட்டை நடத்துவதற்கான கதவுகளை திறந்து விட்டிருக்கிறார்கள். 

அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்திய நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டுகிறது என்றால்? உடனே அது இந்த நாட்டின் மீதான தாக்குதல் என்கிறார் அதானி.   அமெரிக்க நிறுவனத்திடம் நீதானே போய்ப் பங்குகளை விற்றாய்? பங்குகளை வாங்கியவன் மோசடிகளை வெளிப்படுத்தினால், அப்போது அது நாட்டின் மீதான தாக்குதல் ஆகிறது. இந்தியாவிற்கு வெளியே நான் பங்குகளை விற்க மாட்டேன் என்று முடிவு எடுக்க முடியுமா உன்னால்? உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெறுவதற்கு உனக்கு யார் தேவைப்படுகிறார்கள்?  உலகெங்கும் சென்று சுரண்ட வேண்டி இருக்கிறது. ஆத்திரேலியாவில் நிறுவனம் இருக்கிறது, வங்கதேசத்தில் நிறுவனம் இருக்கிறது பல்வேறு தொழில்களில் முதலீடு செய்கிறார்கள். இதுதான் தாராளமயம், இதுதான் தாராளியம்.

இந்தப் புதுத் தாராளியம்தான் 1990களில் தொடங்கி இந்திய அரசினுடைய கொள்கையாக இருக்கிறது. இப்போது இது தீவிரமடைந்திருக்கிறது முதலீட்டை ஒரு வினாடிச் செய்தியில், கணினியில் ஒரு சொடுக்கின் மூலமாக பல்லாயிரம் அயிரைப் பேரடி(கிலோமீட்டரு)க்கு அப்பால் பெயர்த்து விடலாம். இண்டன்பெருக்கு சார்ட்டுசு(Hindenberg shorts)” என்று சொல்வார்கள், ஒரு குறுகிய காலத்திற்கு பங்குகளை வாங்கி விற்கிற நிறுவனம், அதற்காக அமெரிக்காவிலிருந்து இரண்டு பேர் புறப்பட்டு மும்பைக்கு வந்து வாங்க வேண்டியதில்லை. திரும்பி மும்பை சந்தையில் அவர்கள் விற்பதற்காக இங்கு வர வேண்டிய தேவை இல்லை. இருந்த இடத்தில் குளிர்ப்பதனம் செய்த அறைக்குள் உட்கார்ந்தபடி பல கோடிகள் பரிமாறப்படுகின்றன. இது மூலமுதலுக்கு இருக்கிற வாய்ப்பு. இதே வாய்ப்பு மறுமுனையில் இருக்கிற தொழிலாளிக்கு இருக்கிறதா என்றால் இல்லை.

 அவனுடைய உழைப்பு அமெரிக்காவிற்குப் போக வேண்டும் என்றால் அந்த உழைப்பாளியே அமெரிக்காவிற்குப் போக வேண்டும் மும்பையில் போய் உழைப்பை செலுத்த வேண்டும் என்றால் மும்பைக்கு நீங்களே புறப்பட்டுச் செல்ல வேண்டும். அதனுடைய விளைவு என்ன?  சுரண்டுகிற முதலீடு எங்கு வேண்டுமானாலும் பறந்து பறந்து செல்கிறது சுரண்டப்படுகிறவன் வெயில்  மழையில் நடந்து நடந்துதான்  போக முடியும்.  அப்படியிருந்தும் போகிறார்கள் என்றால் என்ன காரணம்?  

சார்கண்டிலே பழங்குடி மக்களுக்காகப் போராடி இந்த அரசினால் பொய் வழக்குப் போடப்பட்டு சிறையிலேயே நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட இசுடேன் சுவாமி எழுதுகிறார். இந்தத்  தமிழ்நாட்டிலே பிறந்தவர்.  அவர் பழங்குடியின மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக சார்கண்டு போகிறார்.  நான் தமிழ்நாட்டில் இருந்த காலத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள்  என்று படிக்கிற போது அந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தியதே இல்லை. ஆனால் அந்த  சார்கண்டு பழங்குடி மக்களை பார்த்த போது அதனுடைய பொருள் புரிந்து, எனக்கு வலித்தது என்று அவர் சொல்கிறார்.  ஆக யாரும் விரும்பித் தேர்ந்தெடுத்து வரவில்லை. வறுமையால் துரத்தப்பட்டு வருகிறார்கள். இங்கே இருக்கின்ற வாய்ப்புகள் கூட அவர்களுக்கு இல்லை, அதனுடைய விளைவு என்ன? அரசாங்கம் அக்னிபத்து என்கிற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து பட்டாளத்தில் கிடைக்கிற வேலைவாய்ப்பையும் சுருக்கிய போது அதற்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கிடைக்கிற ஒரே ஒரு வேலைவாய்ப்பு அதுதான்.  

 இந்தச் சூழ்நிலையில், இப்படி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம், அவரவர் தாயகம் என்பது எப்படி வேண்டுமானாலும் தொலையட்டும் என்பதல்ல நாம் சொல்ல வருவது. இதைத் தடுப்பதற்கு என்ன வழி என்பதை நன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதானியினுடைய முதல் மும்பையிலே இருந்து கொண்டு அமெரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் போவதற்குச் சட்டம் தடையற்ற வாய்ப்பை வழங்குகிறது அவர்களுக்கு ஒரு தடையும் இல்லை. 1990க்கு முன்பு முதலீட்டை வெளியேற்றுவதற்கு, இலாபத்தை எடுத்துப் போவதற்கெல்லாம் சில கட்டுப்பாடுகள் இருந்தன.  அதேபோல் அயல் நாட்டு முதலீடு செய்வதற்கும் சில வரம்புகள் இருந்தன – இந்த விழுக்காட்டிற்கு மேல் போகக்கூடாது என்று. இன்றைக்கு அதெல்லாம் ஒன்றுமே இல்லை. எந்தப்  பெரிய மீன்களும் சிறிய மீன்களை விழுங்கலாம், முடிந்தால் சிறிய மீன் திருப்பி பெரிய மீனை விழுங்கிக் கொள் என்று சவால் விடுகிறது.   

காட்டுச் சட்டம் நாட்டுச் சட்டம் ஆகி விட்டது. ஆனால் தொழிலாளிக்கு அப்படி இல்லை. ஏன் வட மாநிலத் தொழிலாளி தமிழ்நாட்டிற்கு வருகிறார். சிங்கப்பூருக்குப் போகலாமே! வேலைவாய்ப்பு இருக்கிறதா என்று மலேசியாவில் போய்த் தேடலாமே! இல்லை, அந்த அரசுகள் எங்கே கடவுச்சீட்டு? எங்கே நுழைவுச்சீட்டு என்று கேட்கின்றன.  நீங்கள் கடவுச்சீட்டு இல்லாமல் எங்கள் நாட்டைத் திறந்து விட்டுள்ளோம் என்று சொல்வதற்கு ஒரு நாடும் இல்லை. கனடா அரசு தாராளமாக நடந்து கொள்கிறது, தமிழர்களுக்கெல்லாம் இடம் கொடுத்து இருக்கிறது நீங்கள் கனடாவிற்குப் போய் பிழைக்கலாமா என்று முயன்றால் நீங்கள் அனுமதி கேட்கிற விண்ணப்பத்தில் அந்த நாட்டில் இல்லாத ஓர் உழைப்புத் திறன் உனக்கு இருக்கிறதா என்று திருப்பிக் கேட்கிறது. அது இல்லை என்றால் நீங்கள் போக முடியாது.

(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்