(தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’? தொடர்ச்சி)
வடவர் வருகையும் தமிழ்நாடும் 2
நம்முடைய ஈழத் தமிழர்கள் 10 இலக்கம் பேர் மேலை நாடுகளில் போய் வாழ்கிறார்கள், உழைத்துப் பிழைக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டுச் செல்லவில்லை. இனக் கொலையினால் விரட்டப்பட்டுச் சென்றார்கள்; மீண்டு செல்ல வாய்ப்பு இருந்தால் மீளத்தான் விரும்புவார்கள். யாருக்கும் அகதியாக, வழியற்றவராக, ஏதிலியாக வாழப் பிடிக்காது. இன்றைக்குப் பொருளியல் காரணங்களுக்காக, வறுமையின் காரணமாக அகதிகளாக விரட்டப்பட்டு இடம்பெயர்ந்து செல்பவர்களுடைய கூட்டம் உலகெங்கும் அதிகமாக இருக்கிறது. இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பொருளியல் சூழல், பொருளியல் நெருக்கடி. தாராளியம் லிபரலிசம் என்றெல்லாம் சொல்கிறார்கள் (LPG – Liberalization, Privatization and Globalization). எதை ‘லிபரலைசு’ செய்திருக்கிறார்கள்? எதைத் தாராளம் ஆக்கி யிருக்கிறார்கள்? பெருமுதலாளிகள் சுரண்டுவதைத் தாராளமாக்கி இருக்கிறார்கள். அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் நர வேட்டை நடத்துவதற்கான கதவுகளை திறந்து விட்டிருக்கிறார்கள்.
அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்திய நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டுகிறது என்றால்? உடனே அது இந்த நாட்டின் மீதான தாக்குதல் என்கிறார் அதானி. அமெரிக்க நிறுவனத்திடம் நீதானே போய்ப் பங்குகளை விற்றாய்? பங்குகளை வாங்கியவன் மோசடிகளை வெளிப்படுத்தினால், அப்போது அது நாட்டின் மீதான தாக்குதல் ஆகிறது. இந்தியாவிற்கு வெளியே நான் பங்குகளை விற்க மாட்டேன் என்று முடிவு எடுக்க முடியுமா உன்னால்? உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெறுவதற்கு உனக்கு யார் தேவைப்படுகிறார்கள்? உலகெங்கும் சென்று சுரண்ட வேண்டி இருக்கிறது. ஆத்திரேலியாவில் நிறுவனம் இருக்கிறது, வங்கதேசத்தில் நிறுவனம் இருக்கிறது பல்வேறு தொழில்களில் முதலீடு செய்கிறார்கள். இதுதான் தாராளமயம், இதுதான் தாராளியம்.
இந்தப் புதுத் தாராளியம்தான் 1990களில் தொடங்கி இந்திய அரசினுடைய கொள்கையாக இருக்கிறது. இப்போது இது தீவிரமடைந்திருக்கிறது முதலீட்டை ஒரு வினாடிச் செய்தியில், கணினியில் ஒரு சொடுக்கின் மூலமாக பல்லாயிரம் அயிரைப் பேரடி(கிலோமீட்டரு)க்கு அப்பால் பெயர்த்து விடலாம். இண்டன்பெருக்கு சார்ட்டுசு(Hindenberg shorts)” என்று சொல்வார்கள், ஒரு குறுகிய காலத்திற்கு பங்குகளை வாங்கி விற்கிற நிறுவனம், அதற்காக அமெரிக்காவிலிருந்து இரண்டு பேர் புறப்பட்டு மும்பைக்கு வந்து வாங்க வேண்டியதில்லை. திரும்பி மும்பை சந்தையில் அவர்கள் விற்பதற்காக இங்கு வர வேண்டிய தேவை இல்லை. இருந்த இடத்தில் குளிர்ப்பதனம் செய்த அறைக்குள் உட்கார்ந்தபடி பல கோடிகள் பரிமாறப்படுகின்றன. இது மூலமுதலுக்கு இருக்கிற வாய்ப்பு. இதே வாய்ப்பு மறுமுனையில் இருக்கிற தொழிலாளிக்கு இருக்கிறதா என்றால் இல்லை.
அவனுடைய உழைப்பு அமெரிக்காவிற்குப் போக வேண்டும் என்றால் அந்த உழைப்பாளியே அமெரிக்காவிற்குப் போக வேண்டும் மும்பையில் போய் உழைப்பை செலுத்த வேண்டும் என்றால் மும்பைக்கு நீங்களே புறப்பட்டுச் செல்ல வேண்டும். அதனுடைய விளைவு என்ன? சுரண்டுகிற முதலீடு எங்கு வேண்டுமானாலும் பறந்து பறந்து செல்கிறது சுரண்டப்படுகிறவன் வெயில் மழையில் நடந்து நடந்துதான் போக முடியும். அப்படியிருந்தும் போகிறார்கள் என்றால் என்ன காரணம்?
சார்கண்டிலே பழங்குடி மக்களுக்காகப் போராடி இந்த அரசினால் பொய் வழக்குப் போடப்பட்டு சிறையிலேயே நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட இசுடேன் சுவாமி எழுதுகிறார். இந்தத் தமிழ்நாட்டிலே பிறந்தவர். அவர் பழங்குடியின மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக சார்கண்டு போகிறார். நான் தமிழ்நாட்டில் இருந்த காலத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் என்று படிக்கிற போது அந்தச் செய்தியைப் பெரிதுபடுத்தியதே இல்லை. ஆனால் அந்த சார்கண்டு பழங்குடி மக்களை பார்த்த போது அதனுடைய பொருள் புரிந்து, எனக்கு வலித்தது என்று அவர் சொல்கிறார். ஆக யாரும் விரும்பித் தேர்ந்தெடுத்து வரவில்லை. வறுமையால் துரத்தப்பட்டு வருகிறார்கள். இங்கே இருக்கின்ற வாய்ப்புகள் கூட அவர்களுக்கு இல்லை, அதனுடைய விளைவு என்ன? அரசாங்கம் அக்னிபத்து என்கிற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்து பட்டாளத்தில் கிடைக்கிற வேலைவாய்ப்பையும் சுருக்கிய போது அதற்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு கிடைக்கிற ஒரே ஒரு வேலைவாய்ப்பு அதுதான்.
இந்தச் சூழ்நிலையில், இப்படி யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம், அவரவர் தாயகம் என்பது எப்படி வேண்டுமானாலும் தொலையட்டும் என்பதல்ல நாம் சொல்ல வருவது. இதைத் தடுப்பதற்கு என்ன வழி என்பதை நன்றாக நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதானியினுடைய முதல் மும்பையிலே இருந்து கொண்டு அமெரிக்காவிற்கும் ஆத்திரேலியாவிற்கும் போவதற்குச் சட்டம் தடையற்ற வாய்ப்பை வழங்குகிறது அவர்களுக்கு ஒரு தடையும் இல்லை. 1990க்கு முன்பு முதலீட்டை வெளியேற்றுவதற்கு, இலாபத்தை எடுத்துப் போவதற்கெல்லாம் சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதேபோல் அயல் நாட்டு முதலீடு செய்வதற்கும் சில வரம்புகள் இருந்தன – இந்த விழுக்காட்டிற்கு மேல் போகக்கூடாது என்று. இன்றைக்கு அதெல்லாம் ஒன்றுமே இல்லை. எந்தப் பெரிய மீன்களும் சிறிய மீன்களை விழுங்கலாம், முடிந்தால் சிறிய மீன் திருப்பி பெரிய மீனை விழுங்கிக் கொள் என்று சவால் விடுகிறது.
காட்டுச் சட்டம் நாட்டுச் சட்டம் ஆகி விட்டது. ஆனால் தொழிலாளிக்கு அப்படி இல்லை. ஏன் வட மாநிலத் தொழிலாளி தமிழ்நாட்டிற்கு வருகிறார். சிங்கப்பூருக்குப் போகலாமே! வேலைவாய்ப்பு இருக்கிறதா என்று மலேசியாவில் போய்த் தேடலாமே! இல்லை, அந்த அரசுகள் எங்கே கடவுச்சீட்டு? எங்கே நுழைவுச்சீட்டு என்று கேட்கின்றன. நீங்கள் கடவுச்சீட்டு இல்லாமல் எங்கள் நாட்டைத் திறந்து விட்டுள்ளோம் என்று சொல்வதற்கு ஒரு நாடும் இல்லை. கனடா அரசு தாராளமாக நடந்து கொள்கிறது, தமிழர்களுக்கெல்லாம் இடம் கொடுத்து இருக்கிறது நீங்கள் கனடாவிற்குப் போய் பிழைக்கலாமா என்று முயன்றால் நீங்கள் அனுமதி கேட்கிற விண்ணப்பத்தில் அந்த நாட்டில் இல்லாத ஓர் உழைப்புத் திறன் உனக்கு இருக்கிறதா என்று திருப்பிக் கேட்கிறது. அது இல்லை என்றால் நீங்கள் போக முடியாது.
(தொடரும்)
தோழர் தியாகு, தாழி மடல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக