மறைமலையடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மறைமலையடிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 27 மார்ச், 2020

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்: 3


இந்நல்லிசைப்புலவர் கருத்துக்கு ஒப்பவே, வரலாற்று நூற் புலமையில் நிகரற்று விளங்கிய ஆங்கில ஆசிரியரான பிரமீன் என்பவரும் “வேண்டப்படாத பிரஞ்சு இலத்தீன் மொழிச்சொற்கள் உரைநடையை உயிர்வுபடுத்துகின்றன வென்று பிழையாக கதப்படுகின்றனவே யல்லாமல், உண்மையில் அவை பொருட்குழப்பத்தையே மேலுக்கு மேல் உண்டு பண்ணுகின்றன; ஆதலால், அவற்றுக்கு மாறாகப் பொருட்டெளிவுள்ள வெளிப்படையான ஆங்கிலச் சொற்களையே ஒவ்வொரு பக்கத்திலும் வைத்து எழுதுவது எளிதெனக் கண்டிருக்கின்றேன். பதினான்கு அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன் யான் எழுதியதை விட இப்போது யான் தெளிவான தூய ஆங்கில நடை எழுதக்கூடுமென யான் கண்டுகொண்டமை எனக்கு எவ்வாற்றானும் வெட்கமாயில்லை; நடையெழுதப் பழகும் இளைஞரைத் தேற்றல் வேண்டி இவ் வுண்மையைச் சொல்வது நல்லதென எண்ணுகின்றேன். நடையெழுதக் துவங்குவோர் தாம் உயர்நடை யெழுதுவதாக எண்ணிக்கொண்டு எழுதுவதில் மயக்கம் உடையராகின்றார்கள். உண்மையான ஆற்றலுக்கும், எல்லாவற்றையும் விட உண்மையான தெளிவுக்கும், நம் மூதாதைகள் வழங்கிய பழைய ஆங்கில மொழியை ஒப்பது பிறிதில்லை என்னும் உண்மை முற்றும் உணரப்படுதற்கு பல ஆண்டுகளின் பழக்கம் இன்றியமையாதது வேண்டப்படும்“.
(Quoted in Meikle John’s The Art of Writing Enlighs, ப, 128), என்ற ஆங்கிலமொழியைத் தூயதாய் வழங்குதலின் மேன்மையை வற்புறுத்தி பேசியிருக்கின்றார்.
ஆங்கிலமக்களுக்கு நாகரிகமுந் தம்மைப் பாதுகாத்துக கொள்ளத்தக்க நிலையும் வாயாதிருந்த பழையநாளில், ஐரோப்பாவின் வடமேற்கு மூலையிற் றோன்றிய சுடர், ஆங்கிலர், சாகிசர் முதற் பலமொழி பேசும் பல்வகை நாட்டாரும் பிரித்தானிய தீவின்கண் வந்து புகுந்து, அங்கு இருந்த பிரித்தானியரைப் போரில் வென்று அவர்தம்மை தத்தம் ஆளுகைக்குள் அடக்கி அரசுபுரிந்து வந்தனர். அவர்கட்கு பின்னரும் பல்வகை மக்களும் அடுத்தடுத்து படையெடுத்து வந்து ஆங்கிலரைத் தங்கள் கீழ் வைத்து ஆண்டு அவரொடு கலந்தமையாலேதான், கெல்டிக், காந்திநேவியம், இலத்தீன், நார்மன், பிரஞ்சு, கிரேக்கு முதலான பற்பல மொழிச்சொற்களும் ஆங்கிலத்தில் ஒன்றன்பின் ஒன்றாய்க் கலந்து அதனைப் பெருக்கச் செய்தன. முதன்முதற் சூடர் வந்தகாலத்து, அதன்கண் இரண்டாயிரஞ் சொற்களுக்குமேல் இல்லையென்று அம்மொழிவல்ல இலக்கண ஆசிரியர்கள் வரைந்திருக்கின்றனர். இங்ஙனம் முதலில் மிகக் குறைந்தநிலையி லிருந்து பின்னர்க் காலந்தோறும் பலமொழிக் கலப்பினாற் பெருகிய ஆங்கிலமொழி, அப் பிறமொழிச் சொற்களின் உதவியின்றி முற்றும் நடைபெறுதல் இயலாதென்பதனை ஆங்கிலம் நன்கு உணர்ந்தார் எவரும் விளக்கமாய் அறிந்திருப்பவும், ஒருவர் அவ்வுண்மையை மறைத்து, அது தனித்து இயங்கமாட்டாதது என்று எனவுந் தனித்து இயங்கவல்ல அதனை அவ்வாறு இயக்குதல் பயன்றராது எனக் கண்டே அதனைப் பல மொழிச் சொற்களோடுங் கலப்பித்து வழங்குகின்றார் எனவுங் கூறியது பெரிதும் பிழைபாடுடைத்தாம் என்க.
இனி, முற்றுந் தனித்து இயங்கமாட்டாக் குறைபாடுடைய ஆங்கில மொழியையே இயன்றமட்டுந் தூய்தாய் வழங்குதலிற் கண்ணுங்கருத்தும் வைக்கவேணடுமென்று அம்மொழிக்குரிய ஆங்கில நன்மக்கள் ஓயாது வற்புறுத்து வருகவராயிற், பண்டைக்காலந்தொட்டே நாகரிக வாழ்க்கையிற் சிறந்தாராய்த், தாம் ஒருவர்கீழ் அடங்கி வழாது, பிறமொழி பேசுவாரையுந் தங்கீழ் அடக்கைவைத்துத், தமது செந்தமிழ்மொழியையே நீண்டகாலம் வரையில் தூய்தாய் வழங்கி வளர்த்து வாழ்ந்துவந்த தமிழ்மக்களின் கால் வழியில் வந்தோரான நாம் நமது அருமைச் செந்தமிழ் மொழியைத் தூய்தாய் வழங்குதலில் எவ்வளவு கண்ணும் கருத்தும் வைக்க வேண்டும்! அதற்காக நாட் எவ்வளவு எடுக்க வேண்டும்! அங்ஙனமிருக்க அதனைக் குறைபாடுடைய ஆங்கிலத்தோடு ஒப்பிட்டு, அதன் தூய்மையைக் கெடுத்து வடமொழி முதலான மற்றை மொழிச்சொற்களை அதன்கட் கொண்டுவந்து புகுத்தல் அதற்கு ஓர் ஆக்கமேயாம் என்று கூறுவார் உரை இப்போது அவர் அடைந்திருக்கும் அடிமைத்தனத்தைக் காட்டுகின்ற தன்றோ?
பண்டைநாளில் ஆரியப் பார்ப்பனருந் தமிழர்க்கு அடங்கியிருந்து தமிழைவளர்த்தனர்; இப்போது அப்பார்ப்பனர் பல்வகைச் சூழ்ச்சிகளால் தமிழர்க்கு மேம்பட்டார்போற் றம்மைத்தாமே உயர்த்துக்கொண்டு, தமிழரைக் தங்கீழ் அடக்கி அடிமைகளாக்குதற் பொருட்டு மிகமுயன்றும் அதுமுற்றுங் கை கூடாமையின்  தமிழர்க்குரிய தமிழையாவது ஆரியம் முதலான பிறமொழிச் சொற்கள் சேர்த்துக் கெடுத்து வைத்தால் தங்கருத்து நிரம்புமென்றுன்னி அதனைப் பெரிதும் மாசுபடுத்தி வருகின்றார். அப்பார்ப்பனர் வலையில் சிக்கிய தமிழ்ப்புலவர் சிலரும் அச்சூழ்ச்சியை பகுத்துணர்ந்து பாராது ‘குலத்தைக் கெடுக்கவந்த கோடாரிக்காம்பு‘ போல், அவ்வாரிய பார்ப்பனரினும் பார்க்கத் தாமே தம் தனித்தமிழ் மொழியைச் சிதைத்தொழிக்க மடிகட்டி நிற்கின்றனர்! ஐயகோ! பண்டுதொட்ங்கி புனிதமாய் ஓங்கிநிற்கும் நம் தனித்தமிழ்த் தாயைப், பிறமொழிச்சொற்களென்னுங் கோடாரியினுள் நுழைந்து கொண்டு, இத் தமிழ்ப்புதல்வர் வெட்டிச் சாய்க்க முயல்வது தான் கலிகாலக் கொடுமை! இத்தீவினைச் செயலைப்புரியும் இவர்தம்மைத் தடுத்து, எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க முன்நிற்கும் எம்போல்வராது நல்வினைச்செயல் ஒருகாலுங் கலிகாலக் கொடுமையாகாதென்று உணர்மின் நடுநிலையுடையீர்!
தமிழ்க்கடல் மறைமலையடிகள்
தனித்தமிழ் மாட்சி

சனி, 13 ஜனவரி, 2018

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 2

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள்

2


இனித், தமிழ்வளர்ச்சிக்கு மாறான மாறுதல் என்னென்றால், தூய தமிழ்சொற்கள் இருப்பவும் அவற்றை விடுத்து அயன்மொழிச்சொற்களை அதன்கட் கொண்டு வந்து புகுத்தலேயாம். ஓர் உடம்பின் உள்ளும் புறம்பும் உள்ள உறுப்புகள் எல்லாவற்றின் தொகுதியே அவ்வுடம்பாதல்போல, ஒரு மொழியில் உள்ள அதன் எல்லாச் சொற்களின் தொகுதியே அம்மொழியாகும். கூனுங் குறளும் ஊமுஞ் செவிடுஞ் சிதடும் உறுப்பறையுமாய்ச் சில உடம்புகள் இயற்கையிலே பழுதுபட்டிருத்தல் போலவும், அங்ஙனம் பழுதுபட்ட உடம்புகள் அக்குறைபாட்டை நீக்கிக்கொள்ளும்பொருட்டுக் கோலுங் குறடும் எழுத்தும் போலி கை கால்களுஞ் செயற்கையாகச் செய்து அமைத்துக்கொள்ளுதல் போலவும்இயற்கையிலேயே குறைபாடு உடைய ஆங்கிலம் மலையாளம் கன்னடம் தெலுங்கு வங்காளி இந்தி முதலான மொழிகளே மற்றை மொழிச் சொற்களின் உதவியைப் பெரிதும் வேண்டிநிற்கின்றன. மற்று எல்லா நிறைவும் உடைய தமிழ்மொழிக்கோ அங்ஙனம் பிறமொழிச் சொற்களின் உதவி சிறிதும் வேண்டப்படுவதில்லை.
மக்கள் இம்மை மறுமை பற்றி அறிய வேண்டுவனவெல்லாம் முற்றும் எடுத்துக்கூறுந் தொல்காப்பியம்‘ ‘திருக்குறள்‘ என்னும் நூல்கள் இரண்டுந் தூய தனித்தமிழ்ச் சொற்களால் ஆக்கப்பட்டிருத்தலே யாம் கூறும் இவ் வுண்மைக்குச் சான்றாம். இங்ஙனந் தன் இயற்கைச் சொற்களால் அமைந்ததாகிய தமிழிற் பிறமொழிச் சொற்களைப் புகுத்துதல் எதுபோலிருக்கின்ற தென்றால்உள்ள உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டுவேறு மண்ணாலும் மரத்தாலும் செயற்கையாக அவ்வுறுப்புகள்போற் செய்து அவற்றை அதன்கண ஒட்ட வைத்துப் பார்த்தலுக்கே ஒப்பாயிருக்கின்றது. மயிர் குஞ்சி கூந்தல் முதலிய தமிழ்ச்சொற்களை விடுத்து ரோமம்‘ ‘சிகை‘ என்னும் வடசொற்களையும், உடம்பு தலை சென்னி முகம் முதலியவற்றை நீக்கிச் ‘சரீரம்‘ ‘சிரசு‘ ‘வதனம்‘ என்பவற்றையுங், கண் காது செவி மூக்கு என்பவற்றுக்கு நயனம்‘ ‘கர்ணம்‘ ‘நாசி என்பவற்றையும், மிடறு கழுத்து என்பவற்றுக்கு மாறாகக் ‘கண்டம்‘ என்னுஞ் சொல்லையுந் தோள் கை முதலியன இருக்கப் ‘புஜம்‘ ‘கரம்‘ என்பவற்றையும், வயிறு அகடு இருக்க ‘உதரம்‘ ‘குஷி‘ என்பவற்றையும், கால் அடி என்னுஞ்சொற்களுக்குப் ‘பதம்‘ ‘பாதம்‘ என்பவற்றையுங், கொண்டுவந்து நுழைத்தல், அவ்வத் தமிழ்ற் சொற்களாகிய உறுப்புகளை வெட்டியெறிந்துவிட்டு, அவை போன்ற ஏனை மொழிச்சொற்களைக் கொணர்ந்து அத்தமிழ் உடம்பின்கண் ஒட்டவிடுதலையே போல்கின்றதன்றோ? பொருள்களை ‘வஸ்துகள்‘ என்று சொல்வது எற்றுக்கு? ஒளியைப் ‘பிரகாச‘ மென்றும், ஓசையைச் ‘சப்தம்‘ என்றுஞ் சுவையை ‘ருசி‘ என்றும், மணத்தை ‘வாசநை‘ என்றுந், திதித்திப்பு இனிப்பை ‘மதுரம்‘ என்றுந். தண்ணீர் சோறு உணவு என்பவற்றை ‘ஜலம்‘ ‘அந்நம்‘ ‘ஆகாரம்‘ என்றும், ஆடையை ‘வஸ்திரம்‘ என்றுங், கட்டாயம் என்பதை ‘அவஸ்யம்‘ எனறுந், தாய் தந்தை மகன் மகள் உறவினரை ‘மாதா‘ ‘பிதா‘ ‘புத்ரன்‘ ‘புத்ரி‘ ‘பந்துக்கள்‘எனறுந், துன்பம் கேடு குடும்பம் என்பவைகளைக் கஷ்டம்‘ ‘நஷ்டம்‘ ‘சம்ஸாரம்‘எனறுந், தலைமுழுக்கு வழிபாடு இளைப்பு தூக்கம் முதலியவைகளை ஸ்நாநம்‘ ‘பூஜை‘ ‘ஆயாசம்‘ ‘நித்திரை‘ என்றும், நினைத்தல் எண்ணல் சொல்லுதல் என்பவற்றை ஞாபகம்‘ ‘பாவநை‘ ‘வசனித்தல்எனறுந், தூய தமிழ்ச்சொற்களை ஒழித்து வடமொழிச் சொற்களைக் கொண்டுவந்து புகுத்தித் தனித்தமிழ்ச் சொற்களை வழங்காமல் தொலைப்பதுதானா நமது அருமைச் செந்தமிழ்மொழியை வளர்த்தல்? அறிவுடையீர் கூறுமின்கள்!
இன்னும் இங்ஙனமே எத்தனையோ ஆயிரஞ் சொற்களை வடமொழி முதலான பிறமொழிகளினின்றுங் கொண்டு வந்து, அவற்றைத் தமிழிற் புகுத்தி, அதன் தூய தனிச் சொற்கள் ஒவ்வொன்றாக வழக்கு வீழ்ந்து போகுமாறு செய்வதுதானா தமிழையும் பிறமொழிகளையுங் கற்றவர் அதற்குச் செய்யும் உதவி? தான் பிடித்ததை எப்படியாவது நிலைநாட்டிவிட வேண்டுமென்று முன்வந்து தமிழ் மொழியைத் தொலைக்க வழிதேடுவதுதானா தமிழ்கற்று அதனாற் பிழைப்பவர் அதற்குச் செய்யும் நன்மை? தமிழையும் பிறமொழியையுங் கற்க்கற்கத் தமிழ்மொழிச் சொற்கள் இவை அயல்மொழிச் சொற்கள் இவையென்று நன்குணர்ந்து தமிழில் ஏனையவற்றைக் கலவாமற்பேசுதல் எழுதுதலும், தமிழில் முன்னமே வழக்குவீழ்ந்த சொற்களையுந் திரும்ப எடுத்து வழங்கவிடுதலும் அல்லவோ கற்றவர் அம்மொழியைப் பாதுகாத்து வளர்த்தற்குச் செய்யும் நன்முறையாகும்!
ஆங்கிலத்தில் வல்ல நல்லிசைப் புலவர்களான சேக்சுபியர், மில்டன், செல்லி? தென்னிசன் முதலியோர் தம்மால் ஆனமட்டும் முயன்று அயல்மொழிச்சொற்கள் விரவாத தூய ஆங்கிலநடையிற் பல்லாயிரம் இனிய பாக்கள் பாடியிருப்பதாக அவர்களை ஆங்கில நன்மக்கள் எவ்வளவு புகழ்ந்து பேசுகின்றார்கள்! பிற்காலத்திருந்த தென்னிசன் தமதுகாலத்தில் வழங்காது மறைந்த தூய ஆங்கிலச் சொற்களையும் மீண்டும் எடுத்து வழங்கி அவற்றை வழங்கவிட்டமைக்காகஅவர் சுற்ற்றவுடைய ஆங்கில நன்மக்களால் எவ்வளவு பாராட்டப்படுகின்றார்! சான்சன், கிப்பன் என்னும் உரைநூற் புலவர்கள் மற்றைத் துறைகளிற் சிறந்தவர்களாயிருந்தும், அவர்கள் இலத்தீன், கிரீக்கு முதலான அயன்மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துத், தம் உரை நூல்களில் விரவைத் தெழுதினமைக்காக அவர்களை அந் நனமக்கள் இன்னுங் குறைத்துப் பேசுதல் ஆங்கிலநூலுரை வரலாறு கற்பார் எவரும் நன்கு உணர்வரன்றோ?
ஆங்கிலமொழியில் இலக்கண நூற் புலவராய் விளங்கிய மிக்கிள்சான் என்னும் ஆசிரியர், “பழைய நாளில் ஆங்கிலமக்கள் நாகரிகம் அற்றவராய் இருந்தமையானே பலமொழிபேசும் பல்வகைநாட்டாரும் அவரமேற் படையெடுத்து வந்து அவர்தம் நாடு நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு அவரொடு நெடுக்க கலந்துவந்தனர்“ எனவும், “அதனாற் பலமொழிச் சொற்களும் வெற்றியாளராய் நிலைபெற்ற அப் பலர் வாயிலாக நீக்கமுடியாதவாறு ஆங்கிலமொழியிற் கலந்து நிலைபெறலாயின“ எனவும் “ மொழிக்கலப்பின் வரலாற்றை எடுத்துக் காட்டியபின், “பதினெட்டாம் நூற்றாண்டில், இலத்தீன் மொழிச்சொற்களை மிக்க் கலந்தெழுதும் நடை புது வழக்கமாய் வந்துவிட்டது. ‘உரோம் அரசியலின் இறக்கமுஞ் சிதைவும்‘ என்ற நூலை எழுதிய கிப்பன் என்பவரும், அந் நூற்றாண்டிற் சிறந்த ஆங்கிலச் சொற்பொருள் எழுதிய சான்சன் என்பவரும் இலத்தீன் மொழிச்சொற்களை நிரம்பவும் மிகுதியாய் எடுத்துக் கையாண்டனர், கிப்பன் நூற்றுக்கு முப்பது சொல் விழுக்காடும், சான்சன் இருபதெட்டு விழுக்காடுமாக அயன் மொழிச் சொற்களை விரவவிட்டனர். ஆனால், உள்ளுர் நிகழ்ச்சிகளைப்பற்றிக் கலப்பில்லாமல் எழுதிய புலவர்களிடத்தும் அவர்கள் இயற்றிய நூல்களிடத்தும் நாம் வரும்போது, இலத்தீன் மொழிச்சொற்கள் மிக மிகக் குறைவாக இருத்தலைக் காண்கின்றோம். சான் முனிவரது நூலின் மொழி பெயர்ப்பில், நூற்றுக்கு நான்கு இலத்தீன் சொற்களே காணப்படுகின்றன; அதில் இன்னும் பலவிடங்களில் இலத்தீன் மொழிச்சொற்கள் ஒன்று கூட இல்லாத பாக்கள் பலவற்றை நிரைநிரையாய் எடுத்துக்காட்டலாம்“ என்று கூறிப் பின்னும் “பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் இச் சொற்களைத் தொகுதியாய்க் கொண்டு வந்து நுழைக்கும் நோக்கம் வலுப்பட்டது. அங்ஙனமே அவை உரிய இடங்கள் முன்னமே நிரப்பப்பட்டமையுந், தாம் வேலை செய்தற்கு வாய்த்த பொழுதுகள் முன்னறிந்து நிறுத்தப்பட்டமையுங் கண்டவுடனே அவை வந்தபடியே திரும்பிவிடலாயின. அதுமுதல் அவை பின்னர்க் கேட்கப்படவே இல்லை. குருமுதல்வரான செரிமிடெய்லர் Sportiveness என்னும் ஆங்கிலமொழிக்கு மாறாக ludibundness என்னும் இலத்தீன் மொழியையும், mental blindness என்பதற்கு மாறாக clancular என்னுஞ் சொல்லையும், cruelty என்பதற்கு மாறாக ferity என்னுஞ் சொல்லையும், lady’s maid என்பதற்கு வேறாக paranymph என்னுஞ் சொல்லையுங் கொணர்நது வழங்கினார். ஏளனஞ் செய்யத்தக்க அளவாக இத்தகையநடை பெருகி வரவே, இத் தன்மையவான சொற்களை வழங்குதலில் உண்மையான பயன் இல்லையென்பது ஆங்கிலமக்களின் நல்லறிவுக்குப் புலப்படலாயிற்று; புலப்படவே அவை அமைதியுடன் கைவிடப்பட்டன. ஆங்கிலங் கற்கும் இந்துவோ பெருந் தொகையான இலத்தீன் சொற்களைப் பயன்படுத்துதற்கு எப்போதும் பெருவிருப்புடையனாய் இருக்கின்றான்.“ என்று எழுதி, அதன்பின் ஓர் இந்து மாணவன் ஆங்கிலத்தில் ஆக்கிய ஒரு நாலடிச் செய்யுளை எடுத்துக்காட்டி “ஆங்கில மகன் எவனும் அவ்வளவு மிகுதியான இலத்தீன் மொழிகளைச் சேர்த்து ஒருநடை எழுதமாட்டான்“ என்று அதன பிழைகளை எடுத்துக் கூறிச், “சொற்களைச் செவ்வையாக வழங்கும் முறை இன்னதென்று உணரவும் அறியவும் வேண்டும அயலான் ஒருவன் அச் சொற்கள் வழங்கும் நாடுகளிற் போய்ச் சிலகாலம் அங்கே தங்கியிருக்கவேண்டும்“ என்றும், “நன்கு கற்றவர்கள் அயன்மொழிச் சொற்கள் விரவிய இத்தகைய ஆங்கில நடையைத் தங்களாற் கூடிய மட்டும் விலக்குகின்றார்கள்“ என்றுங். “கோல்ட்சிமித்து, இயேன், ஸ்ஃச்டீபன்சன் முதலானோரை ஒத்த புலவர்களின் நூல்களைப் பயின்று அவற்றின் சுவையை நுகரும் எந்த இளைஞனும் உரியகாலத்தே நல்ல தூய ஆங்கிலநடை எழுதுந் திறத்தைத் தானே திண்ணமாய்ப் பெறுவன்“ என்றும் முடித்துக் கூறுகின்றனர்; (Prof. J.M.D. Meikle John’s The Art of Writing English. ப. 121 132).
(தொடரும்)
தமிழ்க்கடல் மறைமலையடிகள்
தனித்தமிழ் மாட்சி

திங்கள், 1 ஜனவரி, 2018

தனித்தமிழ் மாட்சி – மறைமலையடிகள் 1

தனித்தமிழ் மாட்சி
1
பண்டைக்காலந் தொட்டு இன்றுகாறும் நடைபெறும் மொழி தமிழ் ஒன்றே ஆகும். பண்படுத்தப்பட்ட பழைய மொழிகளில் தன்னைத் தவிர மற்றையவெல்லாம் இறந்து போகவுந், தான்மட்டும் இறவாமல் நடைபெற்றுப், பன்னூறாயிரம் மக்களுக்குப் பெரிது பயன்பட்டு வரும் பெருஞ்சிறப்பு வாய்ந்த தமிழ்மொழியைக் கல்லாதவர் எல்லாந் தூயதாய் வழங்கியவர், அதனைக் கற்று அதனாற் பேரும் புகழும் பொருளும் அடைந்துவருஞ் சிற்சிலர் மட்டுந் தமக்கு எல்லா நலங்களையுந் தந்து தாயினுந் தம்மைப் பாதுகாத்துவரும் அதனை நிலைகுலைத்து அழித்தற்குக் கங்கணங்கட்டி நிற்கின்றார்கள். இவர்களின் இக்கொடுஞ் செயல் தன்னைப் பெற்ற தாயைக் கொல்லுங் கொடுஞ்செயலினுங் கொடியதாக இருக்கின்றது.
இன்னுந் தமிழிற் பிறமொழிச் சொற்களை ஏற்றி அதனை மாசுபடுத்தி யழிப்பதுதான் அதனை வளர்ப்பதாகும் என்று எழுதுவோர், தூய தனித்தமிழ் எழுதுவாரைக் ‘குறுகிய மனநிலை’ ‘அறியாமை’, ‘பேதமை’ யுடையரென இகழ்ந்து பேசிவிடுகின்றனர். கொள்கையளவில் ஒருவரோடு ஒருவர் மற்ற்றொருவர் மாறுபட்டிருப்பது பற்றி, அவர் மற்றவரைக் ‘குறுகிய மனநிலையுடையவர்’ எனவும், ‘அறியாமை’, ‘பேதமை’ மிக்கவர் எனவும் இகழ்ந்து பேசுதல் அறிவுடையோர்க்கு முறையாகாது என்பதை மட்டும் வற்புறுத்துகின்றோம். தாங்கொண்ட கொள்கையே உண்மையானது என்று ஒவ்வொருவருந் துணிந்துரைத்தல் ஆகாது. மக்கள் எல்லாருஞ் சிற்றறிவுஞ் சிறுதொழிலும் உடையர். ஒருவர் ஒருகாலத்து அறிவெனக் கொண்டது பிறிதொரு காலத்து அறியாமையாக மாறுதலும் உடைத்து. இதனைத் தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனாரும் “அறிதோ றறியாமை கண்டற்றால்” என நன்கு தெருட்டியிருக்கின்றனர். இத்தகைய நிலையில் உள்ள மக்கள் ஒருவரை யொருவர் “அறியாமையுடையர்” என்று இகழ்ந்து பேசுவதினுந் தகாத்து யாது உளது! தாந்தாம் உண்மை யெனக் கண்டவற்றைத் தக்க சான்றுகள் கொண்டு விளக்கிப்போதலே அறிவுடையார்க்குக் கடனாவதாம்; தமக்கு மாறான கொள்கை யுடையாரை இகழ்ந்து பேசுதல் அவர் தமக்குச் சிறிதும் முறையன்றாம். அது நிற்க.
இனி, நமது செந்தமிழ்மொழியில் ஆரியம் ஆங்கிலம் முதலான பிறமொழிச் சொற்களைக் கலவாமல. நம்மாற் கூடியவரையில் முயன்று அதனைத் தூயதாக வழங்கல் வேண்டும். ஆனால். ஒருசாரர், உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் மாறுந் தன்மையவாகலின், அவற்றுள் ஒன்றாகிய மொழியும் மாறுதல் அடைதல் இயற்கையேயாம் என்றும், அதனால் நன்றேயாமென்றும் வரைந்திருக்கின்றனர். இனி ‘மாறுதல’ என்னுஞ் சொல்லால் உணர்த்தப்படும் பொருள் என்னை? ஒன்று தன் றன்மை திரிந்து மற்றொடு கலக்கப்பெற்றுத் தன்நிலை குலைதலா? அல்லது தன்னிலைக்கு ஏற்றவாறு பிறவற்றின் உதவியால் தானே வரவர வளர்ந்து திரிபுறுதலா? எனின் இம்மூன்றும் அம்மாறுதல் என்னுஞ் சொல்லுக்குப் பொருளேயாம்.
முதலிற் சொன்ன பொருளின் படி, தவளையினத்திற் சேர்ந்த சில சிற்றுயிர்களும் பட்டுப்பூச்சி முதலியனவும் முதலில் ஒருவகை யுருவத்திலிருந்து, பிறகு அவ்வுருவு முழுதுந் திரிந்து தவளையாகவும் பட்டுப் பூச்சி முதலியனவாகவும் மாறுகின்றன; இரண்டாவது சொன்ன பொருளின்படி, மக்கள் முதலான எத்தகைய உயிர்களுந் தம்முடம்பின் இயல்புக்கு ஏலாத நோய்ப் புழுக்களோடும் பாம்பின் நஞ்சையொத்த நச்சுப் பொருள்களோடுங் கலக்கப் பெறுமானால் தம்முடம்பின் நிலை குறைந்து மாறி விரைவில் அழிந்துபோகின்றன; இனி, மூன்றாவது சொன்ன பொருளின்படி, உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுந் தத்தம் நிலைக்கு ஒத்த பொருள்களின் சேர்க்கையால் தமது நிலை கெடாமலே வளர்ந்து திரிபெய்தி வருகின்றன. மக்கள் தமக்கேற்ற உணவுகளை உட்கொண்டும். இசைவான இடங்களிற் குடியிருந்தும், வரவரத் தம்முடம்பும் உணர்வும் மாறிமாறி வளர்ந்து வருகின்றனர் மக்கள் அல்லாத மற்றை உயிர்களில் நிலையியற் பொருள்களாகிய புல் மரஞ் செடி கொடி முதலியனவும், இயங்கியற் பொருள்களிற் புழு முதல் யாடு மாடு முதலான எல்லா வுயிர்களுந் தத்தமக்கேற்ற உணவுப் கொருள்களை உட்கொண்டு த்த்தமக்கு இசைவான இடங்களிலிருந்து நாடோறும் மாறுதல எய்தி வளர்ந்து வருகின்றன. இம் மூவகைப் பட்ட மாறுதல்களில் எத்தகைய மாறுதலை எல்லா உயிர்களும் விரும்புகின்றன வென்று உற்றுநோக்கின், தம் இயல்புக்கு ஒத்தவற்றின் சேர்க்கையால் தமது தன்மைகெடாமல் வரவரப் பெருக்கமுற்று மாறிமாறி வளர்ந்து வருதலையே அவையெல்லாம் அல்லும் பகலும் விழைந்து வருகின்றனவென்பது எல்லார்க்கும் புலனாம், தமக்கு ஏலாத பொருள்களோடு கலந்து தமது நிலைகுலைந்து மாறி மாய்தலை எவ்வகைப்பட்ட உயிரும் விரும்புவ தில்லை; தமக்கு இடர்தரும் இடத்தையேனும் பொருளையேனுங் கண்டால் அவற்றை அகன்றுபோய்ப் பிழைக்கும் முயற்சியைப் புழு முதல் மக்கள் ஈறான எல்லா உயிர்களும் மிகவும் பரபரப்பொடு நிரம்பக் கருத்தாய்ச் செய்தல் எவரும் உணர்ந்த்தேயாம். இடம் விட்டுப் பெயராத புல்மரம் முதலியனவுங் கூடத் தத்தமக்கேற்ற உணவுகளை உட்கொள்ளும் வரையில் உயிரோ டிருத்தலும், அங்ஙனம் அமையாக்கால் அவை பட்டுப்போதலும் எல்லாருட் அறிவர்.
ஆகவே உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் மாறுதல் அடைதலாகிய பொது நிகழ்ச்சியைப்பார்த்து, அப்பொதுவகையான மாறுதலுள் எத்தகைய மாறுதல் மக்களால் வேண்டப்படுவது என்பதனை உணர்ந்துபாராமல், தம் நிலைகுலைந்து மாறுதலாகிய வேண்டாத தொன்றைக் கடைபியைய் பிடித்துக் கொண்டு, அதன்பை நமது அருமைச் செந்தமிழ்மொழியுந் தனது தூயநிலை குலைந்து மாறுதல் அடையவேண்டுமென்று உரைப்பது அறிவுடையோரால் ஏற்றுக்கோடற்பாலதாமோ? எல்லாப்பொருள்களும் எல்லா உலகமும் ஒரு காலத்து மாறி மாய்தல் உண்மையேயாயினும், அம் மாறுதலும் அதனால் வரும் அழிவும் இப்போதே வந்துவிடல் வேண்டுமென்று எவரேனும் விரும்புவரா? அங்ஙனம் எவரேனும் விரும்புவராயின் அவரை அறிவு திரிபெய்திய வெறியர் என்றே உலகங் கொள்ளுமல்லது, மற்று அவரை அஃது உயர்த்துக் கூறுமோ? ஆண்டில் முதிர்ந்திருவர்களுந் கூடத் தமது உடம்பின் நலம் பழுதுபதாதவாறு அறிவான முறைகளைக் கையாண்டு மேலும்மேலும் அதனை நலமுறைவைத்து வாழ்நாளைப் பெருக்கதற்கன்றோ முயல்கின்றனர்? நலமுடனிருந்து வாழ்நாளைப் பெருகச் செய்பவரக்ளுக்கு அறிவு வளர்ச்சியும் அதனாற் பேரின்ப்ப் பேறும் வாய்த்தலால், உடம்பை விரைவில் நிலைகுலையச் செய்பவர்பகளுக்கு அறிவும் இன்பமும் வாயா.
இது போலவே, நமது செந்தமிழ்மொழியாகிய ஒலியுடம்பும் பழுதுபடாமற் செவ்வையாகப் பாதுகாக்கப் படுமானால் அஃது இன்னும் பலநூறாயிரம் ஆண்டு உயிரோடு உலவித், தன்னைப் போற்றி வழங்கும் மக்களுக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும், சிலருடம்பு தமக்கு அரிய பல நலங்களையும் நன்கு பயக்கும். சிலருடம்பு தமக்கு இயற்கையிலேயுள்ள குறைபாட்டானுந், தம்மையுடையவர்களால் நன்கு பேணப்படாமையானும் விரைவில் அழிந்துபோதல் போலச், சமற்கிருதம், இலத்தீன், கிரீக்கு, ஈபுரு முதலான பழைய மொழிகளுந் தமக்கு இயல்பாகவுள்ள குறைபாட்டானுந் தம்மை வழங்கியியோர் நாகரிகம அற்றவராய் இருந்தமையானும் வழங்குதல் அற்றன. நமது செந்தமிழ்மொழியோ தன்னை வழங்கிவரும் நாகரிக நன்மக்களின் அறவுமுயற்சியாற் பெரிது போற்றப்பட்டு வருதலானுந் தனது இளமைத் தன்மை குன்றாது இன்னும் உலவி வருகின்றது. சிலர் இளமையிலேயே மூத்துப் போதலையும் வேறு சிலர முதுமையிலும் அது தோன்றாமற் புத்திளமையோடுங் கட்டழகோடும் விளங்குதலையும் நீங்கள் பார்த்த்தில்லையா? பாதுகாப்பினால் இளமையும் வாழ்நாளும் இவ்வாறு நீண்டுவருவதல் போலவே, நமது தனித்தமிழையுந் தூயதாக வைத்துப் பாதுகாப்போமாயின் அது மக்கள் உள்ள்ளவும் இறவாது நடைபெறுதல் திண்ணமன்றோ? எனவே, தமிழ்மொழியின் வளவிய வளர்ச்சிக்கு ஏதுவாகிய மாறுதலே எல்லாரும் விரும்பத்தக்கதா மன்றி, அதுகுன்றி மாய்தற்கு ஏதுவான மாறுதல் அறிவுடையார் எவரானும் எக்காலத்தும் விரும்பற்பாலதன்று.
(தொடரும்)
தமிழ்க்கடல் மறைமலையடிகள்
தனித்தமிழ் மாட்சி

திங்கள், 23 ஜனவரி, 2012

Thani thamizh vizhaa - Pudthuvai thamizh kazhakam: தனித்தமிழ் விழா- புதுவைத் தமிழ்க்கழகம்

தனித்தமிழ் விழா- புதுவைத் தமிழ்க்கழகம்

பதிவு செய்த நாள் : 23/01/2012


தனித்தமிழ்இயக்கம் ஆண்டுதோறும் சுறவ(தை)த் திங்களில் தனித்தமிழ் விழாவை நடத்தி வருகிறது. இவ்வாண்டு 2043 சுறவம்(தை) 6ஆம் நாள் (20.1.2012) வெள்ளியன்று அவ்விழாவை முன்னாள் ஆணையர் தியாகராசன் தலைமையில் புதுவைத் தமிழ்க்கழக(சங்க)த்தில் நடத்தியது. கலைமாமணி மணிக்கண்ணன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட ஆசிரியை தமிழிசைவாணி வரவேற்றுப் பேசினார். தனித்தமிழ் இயக்கத்தின் 13 வகையான செயற்பாடுகளை அவர்தம் உரையில் எடுத்துக் கூறினார்.
தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளாரின் படத்தைப் பாவலர் இலக்கியன் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து நடைபெற்ற பாட்டரங்கில் வில்லியனூர் பழனி வடமொழியை நீக்கு என்னும் தலைப்பிலும் பாவலர்தமிழியக்கன் தனித்தமிழ்ப்பெயரிடு என்னும்தலைப்பிலும் பாவலர் மு.பாலசுப்பிரமணியன் பெயர்ப்பலகைத் தமிழாக்கு என்னும் தலைப்பிலும் பாவலர் அசோகா சுப்பிரமணியன் தனித்தமிழ் இதழ்படி என்னும் தலைப்பிலும் பாவலர் தமிழ் உலகன் ஆங்கிலத்தைப்போக்கு என்னும் தலைப்பிலும் பாடல்கள் வழங்கினர்.
 
உரையரங்கில் முனைவர் மறைமலை இலக்குவனார், இலக்குவனாரின் தனித்தமிழ்ப்பணி குறித்தும் முனைவர் அ.அறிவுநம்பி பாவாணரின் திருக்குறள் ஆய்வுகள் குறித்தும்
முனைவர் க.தமிழமல்லன் மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கம் என்பது குறித்தும் உரைகளை நிகழ்த்தினர். க.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
தனித்தமிழ் விழாவில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. புயலாலும் மழையாலும் தீங்கடைந்த புதுச்சேரியை விரைந்து சீரமைத்து உதவித்தொகை வழங்கிய புதுச்சேரி முதல்வர் ந.அரங்கசாமியைத் தனித்தமிழியக்கம் பாராட்டுகிறது.
2. முப்பது ஆண்டுகளுக்குமேல் வலியுறுத்தப்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறை ஒன்றைப் புதுச்சேரி அரசு உடனே அமைக்க வேண்டும்.
3. கலை,பண்பாட்டுத்துறை அளித்து வரும் சிறந்த நூல்களுக்கான பரிசுகளையும் தமிழ்மாமணி கலைமாமணி விருதுகளையும் ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் திருவள்ளுவர் திருநாளில் விழா நடத்தி வழங்குமாறு தனித்தமிழ் இயக்கம் புதுச்சேரி முதல்வரைக் கேட்டுக்கொள்கிறது. மூன்றாண்டுகளாக வழங்கப்படாத அவற்றை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஆவன செய்ய வேண்டும்.
4. காரைக்கால் புதுச்சேரிக் கிளை நூலகங்களுக்கு ஆண்டுதோறும் வழக்கம்போல் புதுச்சேரி எழுத்தாளர்களின் நூல்களில் 144 படிகள் வாங்கும் முறையைத் தவறாமல் செயற்படுத்த வேண்டும். வாங்கும் நூல்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் வாங்காமல் தவிர்ப்பதும் மிகவும் வருந்தத் தக்கது.

5. வரும் ஆண்டுகளில் வாங்கும் நூல்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
நிரப்பப் படாத நூலகர் பணியிடங்களை நிரப்ப ஆவன செய்ய வேண்டும்.
6. புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் இயல்பாக இயங்குவதற்கான இடத்தை உடனடியாக வழங்க வேண்டும். விரைவில் அதற்காகத் தனி வளாகம் கட்ட ஆவன செய்ய வேண்டும்.
7. புதுச்சேரிப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு வங்கக் கடலில் – குமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையைப்போல், சிலைஅமைத்துப் படகுப் போக்குவரத்து நடத்திப் புதுச்சேரியை நாகரிகமான இலக்கியச் சுற்றுலா இடமாக்கி வருவாயைப் பெருக்க ஆவன செய்யுமாறு புதுச்சேரி அரசைத் தனித்தமிழ் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.