மயிலை சீனி. வேங்கடசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மயிலை சீனி. வேங்கடசாமி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 21 ஜனவரி, 2017

அயல் மொழிக்காரர் துளு நாட்டில் நுழைந்து அந்த மொழியைக் கெடுக்கவில்லை – மயிலை சீனி. வேங்கடசாமி



அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017

அயல் மொழிக்காரர் துளு நாட்டில் நுழைந்து

அந்த மொழியைக் கெடுக்கவில்லை

 நெடுங்காலம் தனித்து ஒதுங்கி யிருந்தபோதிலும், இலக்கியம் படைக்காத வெறும் பேச்சு மொழியாகவும் கொச்சை மொழியாகவும் இருந்தபோதிலும், அது திராவிட மொழிகளிலிருந்து அதிகமாக மாறுபடவில்லை. இந்தியா தேசத்தின் வடமேற்கில் ஆப்கானித்  தானத்தில் அயல் மொழிகளுக்கு இடையிலே தன்னந்தனியே அகப் பட்டுக் கொண்ட ‘ப்ருஃகூயி’ என்னும் திராவிட மொழியைப் போல, வேற்று மொழிகளுக்கிடையே அகப்பட்டுக்கொள்ளாமல் துளு மொழி திராவிட இன மொழிகளின் சூழ்நிலையிலே இருந்தபடியால் அதன் மொழி அதிகமாக மாறுபடவில்லை. அயல் மொழி பேசும் மக்கள் துளு நாட்டிலே வராதபடி அதன் இயற்கைச் சூழ்நிலை இருந்தபடியாலும் அயல் மொழிக்காரர் துளு நாட்டில் நுழைந்து அந்த மொழியைக் கெடுக்கவில்லை.
மயிலை சீனி. வேங்கடசாமி:
ஆய்வுக் களஞ்சியம் 3:
பண்டைத் தமிழக வரலாறு

துளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி சிதைந்தும் திரிந்தும் துளு மொழியானது – மயிலை சீனி. வேங்கடசாமி


அகரமுதல 169, தை 02, 2048 / சனவரி15, 2017

துளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி

சிதைந்தும் திரிந்தும் துளு மொழியானது


  கன்னட நாடு, ஆந்திர நாடு, மலையாள நாடுகளைப் போலவே துளு நாடும் திராவிட நாட்டைச் சேர்ந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகளைப் போலவே துளு மொழியும் திராவிட இன மொழியாகும். அசோகப் பேரரசரின் சாசனங்களிலே கூறப்படுகிற சத்தியபுத்திர நாடு என்பது துளுநாடே என்பதை முன்னமே கூறி யுள்ளோம்.
 சங்கக் காலத்திலே துளு நாட்டில் வழங்கி வந்த மொழி தமிழ் என்பதையும் துளு நாட்டு அரசர் தமிழ்ப் புலவரை ஆதரித்ததையும் துளு நாட்டையும் துளு நன்னர்களையும் தமிழ்ப் புலவர் பாடிய செய் யுள்கள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதையும் இந்நூலில் ஆங்காங்கே எடுத்துக்காட்டினோம். சங்க காலத்துக்குப் பிறகு, துளு நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பு அற்றுப்போனபடியினாலே, பிற்காலத்திலே துளுநாட்டுத் தமிழ் தனித்து நின்றது. பிறகு. தமிழ்நாடாக இருந்த சேரநாடு, மொழி மாறுபட்டுக் கேரள நாடாகவும் மலையாள மொழியாகவும் மாறிப்போன காலத்தில், துளுநாட்டுத் தமிழுக்கும் தமிழ்நாட்டுத் தமிழ் மொழிக்கும் இருந்த தொடர்பு முழுவதும் அற்றுப் போய்விட்டது. அதனால், துளு நாட்டிலே வழங்கி வந்த தமிழ்மொழி பிற்காலத்திலே சிதைந்தும் திரிந்தும் மருவியும் உருமாறிவிட்டது. இவ்வாறு துளு மொழி தமிழினின்று அகன்று தன்னந்தனியே வளர்வதாயிற்று.
மயிலை சீனி. வேங்கடசாமி:
ஆய்வுக் களஞ்சியம் 3:
பண்டைத் தமிழக வரலாறு
 

வெள்ளி, 20 ஜனவரி, 2017

களப்பிரர்காலத்தில் பள்ளிகளும் விகாரங்களும் – மயிலை சீனி. வேங்கடசாமி





களப்பிரர்காலத்தில் பள்ளிகளும் விகாரங்களும்

  களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பௌத்தரும் சமணரும் பள்ளிகளையும் விகாரங்களையும் கட்டியிருந்தனர். அந்தக் கட்டடங்களின் உருவ அமைப்பும் இந்தக் கட்டங்களின் அமைப்பு போலவே இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சமண சமயக் கோவில்களுக்குச் சினகரம் என்று பெயர் இருந்தது (சினன் + நகரம் = சினனகரம், சினகரம்). விட்டுணுவின் கோயிலுக்கு விண்ணகரம் என்று பெயர் இருந்தது. சமண, பௌத்தக் கோவிலுக்குச் சேதியம் என்னும் பெயரும் உண்டு.
  பௌத்தப் பிக்குகள் இருந்த ஆசிரமம் அல்லது விகாரைகள் பெரிய கட்டடங்கள். அவை காஞ்சி, நாகை, உறையூர், காவிரிப் பூம்பட்டினம் முதலான நகரங்களில் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத் தில் இருந்த பௌத்த விகாரை, நெடுஞ்சுவர்களும் பெரிய வாயில்களும் உடையதாக வெண்சுதை பூசப்பெற்றுக் கயிலாயம் போன்று இருந்ததென்றும் அது கண (கண்ண) தாசன் என்னும் அமைச்சனால் (களப்பிர அரசனுடைய அமைச்சன்) கட்டப்பட்ட தென்றும் அபிதம்மா வதாரம் என்னும் பௌத்த மத நூல் கூறுகிறது. சோழநாட்டில் பூத மங்கலம் என்னும் ஊரில் இருந்த பௌத்த விகாரையைக் கட்டியவர் வேணுதாசர் (விட்டுணுதாசர்) என்று வினய வினிச்சயம் என்னும் நூல் கூறுகிறது. இவையெல்லாம் செங்கற் கட்டடங்களே.
மயிலை சீனி. வேங்கடசாமி:
ஆய்வுக் களஞ்சியம் 3:
பண்டைத் தமிழக வரலாறு