மனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 7 ஜூலை, 2025

113.மனுவிலும் கீதையிலும் குறைகள் இருந்தாலும் பின்பற்ற வேண்டாவா? ++ 114.கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

 




(சனாதனம் – பொய்யும் மெய்யும் 112 தொடர்ச்சி)

  1. மனுவிலும் கீதையிலும் குறைகள் இருந்தாலும் பின்பற்ற வேண்டாவா? –
    o மனுவிலும் கீதையிலும் சிற்சில குறைகள் இருக்கலாம். ஆனால் , அவை அறநூல்களாயிற்றே. படித்துப் பின்பற்ற வேண்டாவா என்கின்றனரே!
    இவற்றில் சில குறைகள் இல்லை. நூற்கள் முழுமையுமே குறைகளால் நிறைந்தவைதான். இவை குறித்து அறிஞர் அயோத்திதாசர் பின்வருமாறு கூறுகிறார்.
    “மனுவும் கீதையும் பொதுவான அறநூல்கள் அல்ல; ஒரு குலத்துக்கொரு நீதி கூறும் நெறியற்ற நூல்கள்; பெண்களை இழிவு படுத்தும் நூல்கள்; மக்களைப் பிறப்பிலேயே உயர்ந்தோராகவும் தாழ்ந்தோராகவும் வகைப்படுத்தும் இழிந்த நூல்கள்; மிக உயர்ந்த நூல்களாகப் பொய்யுரைகள் கொண்டு புனைந்துரைக்கப்பட்ட நூல்கள்”
    கீதை கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது.
    காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக நாதுராம் கோட்சேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவர், “கீதை காட்டும் இந்து தருமப்படி காந்தியைக் கொலை செய்தது நியாயமே” என்று கூறினார்.
    அண்மையில், பெண்கள் கற்பழிப்பு வழக்கில் சிக்கிய சாமியார் ஒருவர், “பகவான் கிருட்டிணன் பல பெண்களுடன் உறவு கொண்டான். அவர் வழியில் நானும் பலருடன் உறவு கொண்டேன். இதில் தவறு இல்லை” என்று வாதிட்டார்.
  2. கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறதா?
    ஆம். கீதை கலப்பு மணத்தை எதிர்க்கிறது. பெண்கள் கற்பிழப்பதால் கலப்பு மணம் ஏற்பட்டுக் குலம் அழிகிறது என்கிறது.
    குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதருமங்கள் அழிகின்றன. தரும நாசத்தால் குலம் முழுவதையும் அதருமம் சூழ்கிறது.( கீதை 1.40)
    அதருமம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். மாதர் கற்பிழக்கும்போது வருணக் கலப்பு உண்டாகிறது.(கீதை 1.41)
    கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறார்கள்(கீதை 1.42)
    குல நாசகர்கள் செய்யும் வருணக் கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள சாதி தருமங்களும் குல தருமங்களும் நிலை குலைக்கப் படும்.(கீதை 1.43)
    குலதர்மத்தை இழந்தவர் நரகத்தில் நெடிது வசிக்கின்றனர் என்று கேட்டிருக்கிறோம்.(1.44)
    (இவ்வெண்கள் சிலவற்றில் முன்பின்னாக மாறியுள்ளன. ஆனால், கருத்துகளில் மாற்றமில்லை.)
    இவற்றின் மூலம் பெண்கள் பிற வருணத்தவருடன் தொடர்பு கொள்வதால் குல அழிவு ஏற்பட்டுக் குலதருமங்கள் அழிகின்றன என்பது தெரிவிக்கப்படுகின்றது.
    கலப்புமணத்தைக் கண்டிக்கும் கீதை பெண்களே இக்கொடிய பாவத்திற்குக் காரணம் என்று சொல்லி அவர்களைக் குற்றவாளியாக்குகிறது.
  3. (தொடரும்)
    இலக்குவனார் திருவள்ளுவன்
    சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 162-164

செவ்வாய், 24 ஜூன், 2025

92 ?. ஒருவேளை முன்பு சனாதனத்தில் பாகுபாடு இருந்திருக்கலாம். இப்பொழுது இல்லை என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 89-91 தொடர்ச்சி)

  •  
  • இது மிகவும் தவறான கருத்து என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இருப்பினும் ஒன்றைக் கூறுகிறேன்.
  • கணவர்மனைவியை அடிப்பதில் தவறில்லை(மனுதர்மம்) என்பது சனாதனம். இதனை வெளிப்படுத்தும் தீர்ப்பு ஒன்றைப் பாருங்கள்.
  • “என் கணவர் அடித்துத் துன்புறுத்துவதால், அவரிடம் இருந்து மணவிலக்கு வழங்க வேண்டும்” எனக் கோரி, பெண் ஒருவர் தொடுத்த வழக்கில், கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி பக்தவத்சலா, “குடும்பத்தை நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் கணவர், மனைவியை அடிப்பதில் தவறில்லை. இது போன்ற விசயங்களைக், குழந்தைகளின் நலன் கருதிப், பெண்கள் சகித்துக் கொள்ள வேண்டும்’ எனத்  தெரிவித்தார் (ஆகட்டு/செட்டம்பர் 2022).

“எதிரிகளுக்குச் சுரத்தைக் கொடு” என்பது வேதம். “நாத்திகனுக்கு மருத்துவம் பார்க்கக் கூடாது” என்றவர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதி (தெய்வத்தின் குரல், தொகுதி 3, பக்கம் 148).

  • ஆரியநூல்கள் பிராமணர்க்கு முதன்மையும் தலைமையும் கொடுக்கின்றன என்பதை அவற்றைப் படிப்போர் அறிவர்.  ஆனால் இவற்றை மறைத்து விட்டு, இவை ஒழுக்கமானவர்களைத்தான் போற்றுவதாகப் பொய்யுரை தருகின்றனர். வருண வேறுபாடுகளையும் ஒழுக்கத்தின் அடிப்படையில்தான் பிராமணன் ஆகின்றான், பிறப்பினால் அல்ல எனப் பொய்யான விளக்கம் தருகின்றனர். ஒழுக்கம்தான் அடிப்படை என்றால் தலையில், முகத்தில், தோளில், காலில் பிறப்பதாகக் கூறி அவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது ஏன்? இவ்வாறு பொய்யான விளக்கங்கள் அளித்து ஆரிய நச்சுரைகளை நல்லுரைகளாகக் காட்டுவோருக்கும் அத்தகைய நூல்களை வெளியிடுவோருக்கும், அத்தகைய விளக்கவுரைகளுக்கு ஏற்பாடு செய்யும் அமைப்பாளர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். அத்தகையோருக்குச் சான்றாக கட உபநிடதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில் சிலவற்றைப் பார்ப்போம்.

“தூயவன் ஒருவன் விருந்தினனாக வரும்போது நெருப்பு போலவே நுழைகிறான்”  என்பது ஒரு மொழி பெயர்ப்பு வரி.  ஆனால், மூலநூலாகிய சமற்கிருதத்தில் தூயவன் என்று இல்லை. பிராமணன் என்றுதான் குறிக்கப்பெற்றுள்ளது. ஆங்கில மொழி பெயர்ப்பிலும் அவ்வாறுதான் உள்ளது.

 இதன் மற்றொரு பாடல் “யாருடைய வீட்டில் தூயவன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அற்பப் புத்தி உடையவனான அவனது அஃதாவது  வீட்டு உரிமையாளனது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் அழிகின்றன. தான் செய்த புண்ணியங்களின் பலன், இனிய பேச்சின் பலன், யாகங்கள் வழிபாடு போன்றவற்றின் பலன், நற்பணிகளின் பலன் அனைத்தையும் அவன் இழக்கிறான். அவனது பிள்ளைச்செல்வம் கால்நடைச் செல்வம் அனைத்தும் அழிகின்றன” என்று மொழி பெயர்ப்பில் தரப்படுகிறது.

 இதற்கு விளக்கமாக, “தூயவன் ஒருவன் வீட்டிற்கு வந்தால் அவனை விருந்தோம்ப வேண்டியது – உபசரிக்க வேண்டியது கடமை என்பதை இந்த மந்திரம் உணர்த்துகிறது. உபசரிக்கா விட்டால் எல்லாச் செல்வமும் அழியும். அதே வேளையில் உபசரித்து அவர்களின் மனம் கனிந்த ஆசிகளைப் பெற்றால் செல்வம் அனைத்தும் சேரும் என்பது உணர்த்தப்படுகிறது” என உள்ளது.

மேலோட்டமாகப் பார்த்தால் தூயவர்களைத்தானே போற்றுகின்றது. இதில் என்ன தவறு. உயர்ந்த கருத்தாக உள்ளதே என எண்ணத் தோன்றும்.

ஆனால் கட உபநிடதம் என்னும் மூலச் சமற்கிருத நூலில் “பிராமணர்களைப்(ப்ராக்மணோபேணாவிட்டால் பிள்ளைச் செல்வம்கால்நடைச் செல்வம் அழியும்அவன் செய்த எல்லா நற்செயல்களின் பயன்களும் இல்லாமல் போகும்” என்றுதான் கூறுகிறது.

மற்றொரு பாடலிலும் பிராமணன் என்னும் சொல் வழிபாட்டிற்குரியவன் என்றும்  தூயபாலன் என்றும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு எல்லா இடங்களிலும் பிராமணன் என மூல நூலில் உள்ள இடங்களில் எல்லாம் திரித்துக் கூறப்பட்ட மொழிபெயர்ப்புகளையே நாம் காணலாம். இவற்றின் அடிப்படையில் அந்நூற்கருத்துகளைப் போற்றும் அறியாதவர்களையும் காணலாம்.

பிராமணர்களை உயர்த்திக் கூறும் சாதிப் பாகுபாட்டு நூல் எங்ஙனம் போற்றுதற்கு உரியது ஆகும்? என்பதை நாம் உணரவேண்டும். மூல நூலில் பிராமணன் என உள்ளதை வேண்டுமென்றே தமிழில் தூயவன் எனக் குறிப்பிட்ட அநீதியைத் தட்டிக் கேட்பார் யாருமில்லையா? அதே நேரம், தூயவர்களைப் போற்றல்போலும், மறுபுறம் பிராமணர்கள் தூயவர்கள் என மறைமுகமாக வலியுறுத்துவதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மொழிபெயர்ப்பின் மூலம் தவறான கருத்தைப் பரப்பும் அழிமதியர்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு வரும் பிராமணனை நல்லவனாகக் கூறிப் போற்ற வேண்டும் எனச் சொல்வதன் மூலம் பிறர் நல்லவர் அல்லர் எனக் கூறுகின்றது. இதன் மூலம் பிராமணர்க்கு அடிமையாக இருக்க மூளைச்சலவை செய்கிறது கட உபநிடதம்.

பிராமணனுக்குத் தகுதி யில்லாத பொருள்களை, பசுக்களை, பிறவற்றைத் தானமாகக் கொடுப்பவன் மகிழ்ச்சி இல்லாத உலகங்களை அடைவான் என்றும் கடஉபநிடதம் கூறுகிறது. தானம் கொடுப்பதாக இருந்தால் யாவர்க்காயினும் தரமான தகுந்தவற்றையே கொடுக்க வேண்டும் என்றால் நல்ல கருத்தாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பிராமணனுக்குத் தகுதி யில்லாத பொருள்களை வழங்கினால் நல்லுலகம் கிடையாது. நரக உலகம்தான் செல்வான் என்பது பிராமணர்களுக்கு மட்டும் சிறப்பு அளிக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது அல்லவா?

இவை எல்லாம் காலக்கடவுளான எமன், நசிகேதன் என்னும் சிறுவனுக்குக் கூறுவதாக உள்ளன. ஆகக் கடவுளே பிராமணனைப் போற்றச் சொல்கிறார் என்றால் நாம் அதைக் கேட்க வேண்டும் என்றுதானே அப்பாவி மக்கள் எண்ணுவர்.

புத்தி விழிப்படைய காயத்திரி மந்திர வழிபாடு முதலியவற்றைச் செய்யுமாறு கடஉபநிடதம் கூறுகிறது.

காயத்திரி மந்திரத்தைப் பிராமணர்கள்தான் சொல்ல வேண்டும் என்கிறது வேதம்.  இல்லை இல்லை. ஒழுக்கமானவர்கள் யாரும் காயத்திரி மந்திரம் கூறலாம் என இக்கால நஞ்சு நெஞ்சுடையோர் பொய் விளக்கம் தருவர். ஆனால் வேதத்தில் அவ்வாறு இல்லை. நம்மை ஏமாற்றுதற்காக இவர்கள் தரும் தவறான விளக்கம் இதுவே. பிராமணர்கள்தான் காயத்திரி மந்திரம் சொல்ல முடியும் என்றால் அவர்கள் மட்டும்தான் அறிவுக்கூர்மை அடைய முடியும். பிறர் அவரை அண்டி அவர் மூலமாக  அவர் தரும் அளவுஅறிவு பெறவேண்டும் என்றாகிறது.அறிவு வளர்ச்சிக்கும் சாதியை அளவுகோலாகக் கூறும் ஒரு நூலை நாம் செவ்விலக்கியம் என்று சொல்ல முடியுமா? அவ்வாறு சொன்னால் அது மனித நேயத்திற்கு எதிரானதாக  அமையாதா? எண்ணிப்பாருங்கள்.

“யாகங்களைச் செய்பவனுக்கு ஆண்களை மயக்குகின்ற தேவலோகப் பெண்களைத் தருகிறேன்” என ஒரு பாடலில் உள்ளது. பல பெண்களைத் தருவதாகக் கூறுவதிலிருந்தே இது கற்பொழுக்கத்திற்கு எதிரான நூல் எனலாம். இத்தகைய உடநிடதங்களை நாம் எப்படிப் போற்ற முடியும்? .(இலக்குவனார் திருவள்ளுவன் உரையில் ஒரு பகுதிசமற்கிருதம் செம்மொழியல்ல: கட உபநிடதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை)

  • (தொடரும்)

திங்கள், 23 ஜூன், 2025

89. மனுவில் மொழி பெயர்ப்பாளர்கள் செய்த சதியா? 90. உதயநிதி சொன்னது கடுந்தண்டனைக்குரிய குற்றமா? 91 சனாதனவாதிகள் உதயநிதியின் தலைக்கு விலை பேசுவது ஏன்?- இலக்குவனார் திருவள்ளுவன்



((சனாதனம் – பொய்யும் மெய்யும் 87-88 தொடர்ச்சி)

  •  

மனு நூலை முதலில் கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதியர் சர்.வில்லியம் சோன்சு என்பார் 1794இல் சமசுகிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழில் திருலோக சீதாராம் மொழி பெயர்த்துள்ளார். திருலோக சீதாராம் என்றால் திருவையாறு (உ)லோகநாதய்யர் சீதாராமன். இவர் எழுத்தாளர், இதழாளர், மொழி பெயர்ப்பாளர், பன்முக ஆளுமை மிக்கவர். பிராமணரான இவர் எப்படித் தம் வருணத்தாருக்கு எதிராகத் தவறாக மொழி பெயர்ப்பார்? எனவே, மனுவில் உள்ள அறமற்ற செய்திகளை உள்ளபடியே வில்லியம் சோன்சும் திருலோக சீதாராமும் மொழி பெயர்த்துள்ளனர். 

ஆனால், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு மனு கூறும் அறமற்ற செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததும் சிலர் பிராமணன் என வரும் இடங்களில் அவ்வாறு குறிப்பிடாமல் மறைத்து மொழி பெயர்த்துள்ளனர். இது போல் பொருத்தமற்ற முறையில் இடைச்செருகலாக நல்ல செய்திகளைச் சேர்த்துள்ளனர். இந்த நல்ல செய்திகளை எடுத்துக் கூறி மனுவைச் சிறந்த நூலாக உருவகப்படுத்துகின்றனர். இதன் மூலம் மனுவின் கயமைத்தனத்தை மறைத்து விடுகின்றனர். களங்கங்கள் மறைக்கப்படும் மனுவின் பொய்யான தோற்றம் கண்டு மயங்கக் கூடாது.

  • தொற்று நோயை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால்  தொற்று நோயாளியை ஒழிக்க வேண்டும் என்று பொருளல்ல. சான்றாகத் தொழுநோயை ஒழிக்க வற்புறுத்தினால் தொழு நோயாளிகளை ஒழிக்கச் சொல்வதாகப் பொருளல்ல. இந்த இடத்தில் ஒன்றை நான் நினைவுகூர்கிறேன்.  குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு நாள் என அரசே கொண்டாடியது. அவ்வாறு குறிப்பிட்டால் குழந்தைத் தொழிலாளர்களையே ஒழிப்பதாகப் பொருள். நாம் அவர்களை ஒழிக்கச் சொல்லவில்லை. குழந்தைத் தொழிலாளர்களைப் பணிக்குப் பயன்படுத்துவதைத்தான் நிறுத்தச் சொல்கிறோம்.  எனவே, குழந்தைத்தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் எனக் குறிக்க வேண்டினேன். அதனை ஏற்றுக் கொண்டு அவ்வாறே இப்போது குறிக்கிறார்கள்.

தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி தாலின், இந்த மாநாட்டின் தலைப்பைச்  ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருப்பதைப் பாராட்டிப் பேசினார். “  சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, முடக்குச்சுரம்(dengue – டெங்கு காய்ச்சல்), முறைக்காய்ச்சல்(மலேரியா – malaria), மகுடை நோய்(corona – கொரோனா) இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டிற்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுகள்.” என்று பேசியுள்ளார்.

  • உதயநிதி, கொசு நோய் முதலானவற்றை ஒழிப்பு போல் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறினால் சனாதனவாதிகளை ஒழிக்கச் சொல்வதாகப் பொருளல்ல. அவர்களைத் திருத்தி நல்வழி கொணர்வதுதான் நோக்கம். எனவே, சனாதன முறையை ஒழிக்க வேண்டும் என்றே பொருள். இதைத் திசை திருப்பிக் குளிர் காய்வது தவறாகும்.
  • த.மு.எ.சங்கத்தினர் சனாதன ஒழிப்பு மாநாடு எனக் குறித்த பின்தான் அதனை வழி மொழிந்துள்ளார். எனவே, இதனை முதலில் கூறியவர் அவர் அல்லர். சனாதன ஒழிப்பு மாநாடு எனப் பல்வகை விளம்பரங்களையும் செய்திகளையும் படிக்கும் பொழுது வராத கோபம் உதயநிதி பேசியதும் வருகின்றது என்றால் அதற்குக் காரணம் அரசியலன்றி வேறல்ல.  
  • உதயநிதி இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார். உலகத்தரத்தில் விளையாட்டைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் உலகப்போட்டிகளில் பங்கேற்கும் வண்ணம் இருபால் இளைஞர்களையும் ஆயத்தப்படுத்திக் கொண்டு வருகிறார். எனவே, தேர்தல் அச்சத்தாலும் வேறு சொல்ல வழி தெரியாமலும் இதனைக் கையில் எடுத்துக் கொண்டு திரித்துக் கூறி வருகிறார்கள். சனாதனத்திற்கு எதிர்ப்பு காலங்காலமாக இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இப்பொழுது சனாதனம் இடம் பெற்றுள்ள நூல்களுக்கும் எதிர்ப்பு வருவதால் பேரச்சம் கொண்டு பொய்மையை முரசறைந்து வருகிறார்கள். ‘இந்தியா’ கூட்டணி குறித்தும் அச்சம் வந்துள்ளதாலும் தேர்தல் நெருங்குவதாலும் சனாதன எதிர்ப்பாளர்களை எதிர்ப்பதில் கருத்து செலுத்தி வருகிறார்கள். குறைந்து வரும் தங்களின் சாதி ஆதிக்கம் மேலும் குறைந்து இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சத்தினாலும் சனாதனத்தைத் தாங்கிப் பிடிக்கிறார்கள். தலைக்கு விலை பேசுவது வன்முறையைத் தூண்டிக் கொலைசெய்யச் சொல்வது. அவ்வாறு பேசியவர் மீது ஒன்றிய அரசோ பேசியவர் வாழும் மாநிலத்தின் அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் குற்றச் செயலே.
  • (தொடரும்)
  • இலக்குவனார் திருவள்ளுவன்

வியாழன், 19 ஜூன், 2025

83. சனாதன் என்றால் புனிதம் என்பது சரியா? 84.சனாதனத்திற்கு ஆதரவாகப் பலரும் எழுதுவது சரியா? – இலக்குவனார் திருவள்ளுவன்



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 82 தொடர்ச்சி)

சனாதன் (சனாதனம்) என்ற சமற்கிருதச் சொல்லின் பொருள், மதத்தை விட்டுவிட்டுப் பொருள் தேடினால் புனிதமான, பழங்கால, மறையாத, நீண்டு நிலைக்கும், என்றைக்கும் பொருத்தமான என்ற துணைச்சொல் என்று விளக்கம் தருகிறார்களே!

சனாதனம் என்பது இந்து மதத்தில் மட்டும் இருக்கும் பொழுது சனாதன இசுலாம் என்றெல்லாம் சொல்வது பிற சமயத்தவரையும் இழிவு படுத்துவதாகும்.

அனைவரையும் பாகுபடுத்தாத இழிவுபடுத்தாத தூய உள்ளத்திற்கு எதிரான சனாதனத்தைத் தூய என்ற அடைமொழிப் பொருளாகக் கூறுவதும் கொடுமைதான்.

உண்மையான பொருளுக்கு அதன் தீமை உணர்ந்து எதிர்ப்பு வருகையில் இல்லாத நல்ல பொருள்கள் இருக்கின்றன எனக் கற்பிதம் செய்து மக்களை ஏமாற்றுவது ஆரியர் வழக்கம். அதற்கிணங்கவே இப்போதும் தூய்மையான என்பதுபோன்ற பொருள்களைத் தந்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இத்தகைய பொய் விளக்கத்தில் அறிவுள்ள மக்கள் நம்ப மாட்டார்கள். சனாதனுக்கு எதிரான திருக்குறளையும் பிற சமயங்களையும் சனாதனமாகத் திரித்துக் கூறி மக்களை ஏய்க்கப் பார்க்கிறார்கள். எனவே, இத்தகைய விளக்கங்களை யெல்லாம் பொருட்படுத்தாமல் தூர எறிய வேண்டும்.

வானவில் க.இரவி, செயக்குமார், சீனிவாசன் பி.ஆர்.மகாதேவன், அரவிந்தன் நீலகண்டன், பிரம்மரிசியார், கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், சோபனா இரவி, இளங்கோ பிச்சாண்டி, கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன், எல்.முருகன், வ.மு.முரளி, காம்கேர் கே.புவனேசுவரி, தருமபூபதி ஆறுமுகம், இராமகிருட்டிணன், சிவசங்கரன், பத்துமன், கோதை சோதிலட்சுமி, செங்கோட்டை சிரீராம், பி.ஆர்.மகாதேவன், ஆர்.என்.இரவி, சத்துகுரு சக்கி வாசுதேவு, மரபின்மைந்தன் முத்தையா, கோவை இராதாகிருட்டிணன், கே.சி.சவர்லால், நந்தலாலா, பி.ஏ.கிருட்டிணன், சடாயு, பா.இந்துவன், திருநின்றவூர் இரவிகுமார், ச.சண்முகநாதன், கோ.ஆலாசியம், ப.கனகசபாபதி, வேதா சிரீதர், பால.கௌதமன், வித்தியா சுப்பிரமணியம், பட்டுக்கோட்டை பிரபாகர், இரா.சத்தியப்பிரியன், கிருட்டிண.முத்துசாமி, சி.எசு.பாலாசி, செ.செகன், எசு.எசு.மகாதேவன், அ.பொ.இருங்கோவேள், இராசசங்கர் விசுவநாதன், சுவாமி விமூர்த்தானந்தர், கோ.சேசா, என்.ஆர்.சத்தியமூர்த்தி, எசு.ஆர்.சேகர், நீதிபதி சேசசாயி, சந்தீபு ஆத்துவர்யூ, இராம் மாதவு, நிர்மலா சீதாராமன், வ.ச.சிரீகாந்து, குரு.சிவகுமார் ஆர்.இராசசேகரன், வைரவேல் சுப்பையா, மாதா அமிர்தானந்தமயி, தேவி, ஏகநாத்து இரானடே, டேவிட்டு ஃபிராலே சுவாமி சின்மயானந்தர்,சுவாமி அபேதானந்தர், இராமகிருட்டிணர்,  சாய்பாபா முதலிய பலரும் சனாதனத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளனர். அனைத்திலும் அடிப்படையாக உள்ளமை இங்கே நாம் பார்த்துள்ள தொன்மை, சமத்துவம் முதலியவற்றிற்கான விளக்கங்கள்தாம். அவற்றை மீண்டும் தெரிவிப்பின் கூறியது கூறலாகும் என்பதால் இங்கே எடுத்துரைக்கவில்லை. இவர்களுள் சிலர் மழுப்பலாக எழுதியுள்ளனர். இருப்பினும் சனாதனம் என்பது தீங்கானது என்பதும் அதற்கான விளக்கங்கள் தவறானவை என்பதுமே உண்மை.

(தொடரும்)

சனி, 14 ஜூன், 2025

பெண்களையும் சூத்திரர்களையும் உயர்த்திக் கூறுவது சனாதனம் எனப் பொய் சொல்வதா? 78. சனாதனத்தைப் பின்பற்றுவது தான் மனு என்று தொல்.திருமாவளவன் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்

 

76.   பெண்களை உயர்வாகக் கூறுவதும் 77.             14 June 2025      கரமுதல



(சனாதனம் – பொய்யும் மெய்யும் 73-75 தொடர்ச்சி)

பெண்களை எந்த அளவிற்கு இழிவு படுத்த முடியுமோ அந்த அளவிற்கு இழிவுபடுத்துவதே சனாதனம்பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதருமம் சித்தரிக்கிறது.

பெண்களுக்குத் தனி அடையாளங்களையோ தன்விருப்பிலான (சுயேச்சையான) செயல்பாடுகளையோ மனு தருமம் மறுதலிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.

பெண்கள் பாவப் பிறப்புறுப்பில் பிறந்தவர்கள் என்கிறது கீதை.

பெண், இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம் விருப்பப்படி இருக்கக் கூடாதவர் (மனு 9.3.) என்றும்

எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன் விருப்பப்படி எச்செயலும் இயற்றலாகாது. (மனு. 5.) என்றும் மனு சொல்கிறது.

 கணவன் ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக (துராசாரமுள்ளவனாக) இருந்தாலும் அன்னியப் பெண்மனு பித்தனாக (வேறு பெண்களோடு பாலுறவு வைத்துக் கொள்ள துடிப்பவனாக) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனைத் தெய்வத்தைப் போல் வணங்க வேண்டும்.” (மனு 5.154)

நளாயினி அரசனின் மகள். எனினும் பெருநோய் வந்த தனது கணவன் மௌத்துகலிய முனிவரை  அவர் விருப்பத்திற்காகத் தேவதாசியிடம் சேர்க்கக் கூடையில் வைத்து எடுத்துச் சென்றாள்.  மனுவைப் பின்பற்றினால் இப்படித்தான் நேரும்.

பிராமணர்களை மட்டுமே உயர்த்திக் கூறும் சனாதனம் பிராமணப் பெண்களைக்கூட இழிவாகத்தான் கூறுகிறது.

பெண்களை உயர்வுபடுத்தாவிட்டால்கூடப் பரவாயில்லைபெரிதும் இழிவு படுத்துவதாகத்தானே சனாதனம் இருக்கிறது. இதனைத்தான் பெண்களை உயர்வு படுத்துவதாகச் சனாதனவாதிகள் கூறுகிறார்களா? நல்ல வேடிக்கை.

சூத்திரன் அடிமையாக இருப்பதற்கே பிறந்தவன் என்று சொல்வதுதான் உயர்த்துவதா? சூத்திரர்களைக் கொல்லுவது பாவமல்ல என்கிறது மனுதர்மம். இவ்வாறு சூத்திரர்கள் உயிரைப் பறிக்கச் சொல்வதுதான் உயர்த்திக் கூறுவதா? “சூத்திரனுக்குச் சோறு போட்டால் நரகம். எவன் சிரார்த்தஞ்செய்து மிகுந்த அன்னம்(உணவு) முதலியவற்றைச் சூத்திரனுக்குப் போடுகிறானோ அந்த மூடன் காலச் சூத்திரமென்னும் நரகத்தில் தலைகீழாக விழுகிறான். (மனு , 3.249)” என்று சூத்திரனுக்கு மிஞ்சிய சோற்றைப் போட்டால்கூடப் பாவம், நரகுலகு செல்வான் என்பதுதான் உயர்த்துவதா?

போரில் வெற்றி பெற்றுக், கொண்டு வரப்பட்டவன், பத்தியினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், எனத் தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.(மனு  8.415) எனச் சூத்திரனை அடிமையாகவும் தொன்று தொட்டு வேலை செய்யப்பிறந்தவன் என்று சொல்வதும்தான் உயர்த்திக் கூறுவதா?

சூத்திரன் அதிகம் பொருள் சம்பாதிக்கக் கூடாது: சூத்திரன் பொருள் சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற்குத் தேவையானதை(உபயோகமானதை)விட மிகவும் அதிகப் பொருளைச் சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் தன்னாலுபசரிக்கத் தக்க பிராமணாளையே இம்சை செய்ய வேண்டிவரும் (அத்தியாயம் 10  : சுலோகம் 129). – இவ்வாறு சூத்திரன் உழைப்பதற்குக்கூடத் தடைவிதிக்கும் சனாதனம்தான் சூத்திரனை உயர்த்துகிறதா?

இந்நூலில் பல இடங்களில் சூத்திர்கள் என்று வகைப்படுத்தப்பட்டவர்கள் பற்றிய சனானதனக் கருத்துகள் உள்ளன. அவற்றைப் பாருங்கள். அப்பொழுதுதான் சனாதனம் மக்களில் ஒரு பிரிவினருக்குச் சூத்திரன் என்று பெயர் சூட்டி இழிவு படுத்துவதைப் புரிந்து கொள்ளளலாம்.

  • பிறப்பின் அடிப்படையில் மக்களிடம் உயர்வு, தாழ்வு பார்ப்பது தான் சனாதானம். இது வேறு எந்த மதத்திலும் கிடையாது. தீட்டு கொள்கை வேறு எந்த மதத்திலும் கிடையாது. இந்தப் பாகுபாடுகளை எதிர்ப்பது தான் விசிகவின் கொள்கை. சனாதனத்தைப் பின்பற்றுவது தான் மனு. – இவ்வாறு தொல்.திருமாவளவன் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே!
  • திருமாவளவன் மட்டுமல்லர். சனாதனம் குறித்து ஆராயும் நடுநிலையாளர்கள் யாவரும் இவ்வாறுதானே கூறுகிறார்கள். இந்த உண்மைக்கு எதிராக எதுவும் கூற இயலாததால் அவர் மீது எரிச்சலைக் கக்குகின்றனர். இதனை எதிர்ப்பவர்கள் சனாதனத்தை விரும்பி மக்களிடையே உயர்வு தாழ்வு கற்பித்துப் பயனடைய விரும்புகிறார்கள் என்றுதானே பொருள்.
  • (தொடரும்)