சொல்கிறார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சொல்கிறார்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 மார்ச், 2013

படகு ஓட்டிச் சாதிக்கலாம்!


படகு ஓட்டி ச் சாதிக்கலாம்!
படகு போட்டியில் ஆசிய அளவில், 5ம் இடத்தில் இருக்கும், தமிழக மாணவி, தருனிகா: நான், சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறேன். 6ம் வகுப்பு வரை, கூடைப்பந்து விளையாட்டில் தான், கவனம் செலுத்தினேன். தனி நபர் விளையாட்டில், கவனம் செலுத்தினால் மட்டுமே, திறமைகளை வெளிகாட்டி சாதிக்க முடியும் என, தாத்தா அறிவுறுத்தினார்.அதனால், "மெட்ராஸ் போட் கிளப்'பில், படகு ஓட்டும் பயிற்சிக்காக, அப்பா சேர்த்தார். தண்ணீரை பார்த்ததும் பயப்படாமல், என்னால் சாதிக்க முடியும் என, தன்னம்பிக்கையோடு பயிற்சி எடுத்தேன். சாதாரண, "போட்'டிலயே பயிற்சி எடுத்தேன். ஆழம் அதிகமான ஆறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் தான், படகுப் போட்டி நடத்துவர்.

இதனால், படகு கவிழ்ந்தால் தப்பிக்க, பயிற்சியின் போதே, நீச்சல் அடிக்கவும் கற்றேன். தினமும், ஐந்து மணி நேரம் பயிற்சி செய்கிறேன். படகை விரைவாக செலுத்த, துடுப்பை வேகமாக இயக்கணும். அதற்கு, கைகளுக்கு அதிக பலம் தேவை. படகு பயிற்சியை விட, கைகளை வலுவாக்கும் பயிற்சியே, மிகவும் கடினமாக இருந்தது.தற்போது, 18 வயதிற்குட்பட்டோருக்கான, ஒற்றையர் பிரிவில் விளையாடுகிறேன். படகை வேகமாக ஓட்ட, தனி ஆளாக, 2 கி.மீ., தூரம் வரை, படகின் துடுப்பை, கையால் வேகமாக இயக்குவது கஷ்டம். இரும்பு மற்றும் கார்பனால் ஆன பைபரால், துடுப்பு செய்யப்படுகிறது. படகின் நீளம், 25 அடியாக இருந்தாலும் அகலம், 1 அடி என்பது அமர்ந்து ஓட்ட எளிதல்ல. போட்டியின் போது பலத்த காற்றோடு மழை வந்தால், துணிச்சல் இருந்தால் தான் படகை ஓட்ட முடியும்.தேசிய அளவில், 2 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கமும்; கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த போட்டியில், இந்தியா சார்பில் தங்கமும் வாங்கி சாதித்தேன். சீனாவில் நடந்த ஆசிய போட்டியில், 5ம் இடம் பெற்றாலும், வரும் உஸ்பெகிஸ்தான் போட்டியில் நிச்சயம் வெல்வேன்.கேரளா, ஒடிசா போன்று தமிழக அரசும், இலவசமாக படகு ஓட்ட பயிற்சி அளித்தால், ஆர்வமுள்ள பல திறமையான வீரர்கள் கிடைப்பர்.

தேங்காய் நார் உதவியுடன் விவசாயம்!

தேங்காய் நாரை பயன்படுத்தி, குறைந்த நீரிலேயே விவசாயம் செய்யும், சுப்பிரமணி: நான், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவன். தென்னை மரங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், தேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரிப்பதை, முக்கிய தொழிலாக செய்கிறேன். மூன்று ஏக்கர் நிலத்தில், 120 தென்னை மரங்கள் வைத்து, விவசாயம் செய்கிறேன்.முதல் தரமான கயிறுகளை தயாரித்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறேன். இதனால், நார் கழிவுகள் அதிகம் தேங்கி இருக்கும். இயந்திரம் மூலம் கயிறுகள் தயாரிப்பதால், கழிவுகளாக தேங்கி இருக்கும் நார்கள் கூட, பஞ்சு போன்று மென்மையாக இருக்கும்.
ஒரு முறை, தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டு மாதங்கள் வரை, கழிவு நார்களில் நீர் தேங்கி இருந்தது. வழக்கமாக, வீடுகளில் உள்ள பூச்செடிகளுக்கு, பெரிய தேங்காய் மட்டையை பயன்படுத்துவர். இது நீரை உறிஞ்சும்; மட்க தாமதமாகும். ஆனால், கழிவு நார்கள் பஞ்சு போல் இருப்பதால், விரைவில் மட்கி விடும். பவானி சாகர் அணையிலிருந்து வரும் நீரை மட்டுமே நம்பி, இங்கு விவசாயம் நடைபெறுகிறது.
நீர் பற்றாக்குறை காலங்களில், இந்நாரை பயன்படுத்தி, குறைந்த நீரிலே விவசாயம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது. தேங்காய் மட்டைகளை அப்படியே பயன்படுத்த கூடாது. நெல்லை பயிரிடுவதற்கு முன், நிலத்தில், 1 அடி உயரத்திற்கு நன்கு மட்கிய கழிவு நாரை போட்டு, நன்கு உழுது நெல்லை பயிர் செய்தேன்.நெல்லுக்கு பாய்ச்சும் நீரை, நார்கள் உறிஞ்சி நெற்பயிருக்கு தேவையான ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் தந்ததால், குறைந்த நீரிலேயே குறுவை சாகுபடி செய்தேன். நார்கள் மட்கியதால், பயிர்களுக்கு இயற்கை உரமாகவும் பயன்பட்டது. மற்ற விவசாயிகள் நீரின்றி விவசாயம் செய்யாததால், என் திட்டம் தோல்வியடைந்து நஷ்டம் ஏற்படும் என, பயமுறுத்தினர். இருந்தாலும், திட்டத்தை செயல்படுத்தி வெற்றி கண்டேன். இம்முறை வாழை, கரும்பு, தென்னை போன்ற, நீண்ட கால மர வகைக்கும் ஏற்றது.
தொடர்புக்கு: 90959 99535.

செவ்வாய், 29 மே, 2012

என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்!


"என் வாழ்வில் மகிழ்ச்சியான நாள்!':


அன்று குழந்தைத் தொழிலாளியாக இருந்து, இன்று கல்லூரி மாணவராக உள்ள செந்தில்: சொந்த ஊர், திருச்சியிலுள்ள பெரம்பலூர். பெற்றோர், விவசாயக் கூலிகள். வீட்டில் யாருக்குமே, எழுதப் படிக்கத் தெரியாது. ஆனால், எனக்கு படிக்க வேண்டும் என்று, ஆசை அல்ல; வெறியே இருந்தது. அதற்கு முயற்சி எடுக்க வேண்டிய என் பெற்றோர், என்னை வேலைக்கு அனுப்பினர். என் 13 வயதில், யாரிடமும் சொல்லாமல், வீட்டை விட்டு பெங்களூருக்கு ஓடிப் போனேன்.
அங்கு ஒரு ஓட்டலில், வேலைக்குச் சேர்ந்தேன். தட்டு கழுவும் வேலை; அழுகையா வரும். அதன் பின், சென்னைக்கு வந்து விட்டேன். இங்கும் அதே வேலை தான். "கருணாலயா' என்ற தொண்டு நிறுவனம், என்னைக் கண்டு
பிடித்து, தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்களிடம் ஒப்படைத்தது. என் வாழ்க்கையில், மிகவும் சந்தோஷமான நாள் அது. 13 வயதில், முதன் முதலாக பள்ளியில் கால் வைத்தேன். அடிப்படைக் கல்வி கற்காமலேயே, நேரடியாக எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினேன்; தோல்வியடைந்தேன். அனைவரும் கேலி செய்தனர்.
என்னுடன், விடுதியில் தங்கியிருந்த சக்திவேல் என்ற ஆறாம் வகுப்பு மாணவன் தான், எனக்கு பாடம் சொல்லித் தருவான். படித்ததை, எழுதி எழுதிப் பார்ப்பேன். எப்படியோ கஷ்டப்பட்டு படித்து, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, தேர்ச்சி பெற்று விட்டேன். பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ., பொருளியல் படிக்கிறேன். தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தில், மாதம், 500 ரூபாய் உதவித் தொகை கிடைக்கிறது.
என் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, பகுதி நேரமாக வேலை செய்கிறேன். ஐ.பி.எஸ்., அதிகாரி ஆக வேண்டும் என்பது தான் என் குறிக்கோள்; அதற்காக கடினமாக உழைப்பேன்!