சித்திரவதைத் தடுப்புச் சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சித்திரவதைத் தடுப்புச் சட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 206 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 2/2

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 205 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2 – தொடர்ச்சி)

வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 2/2

இரண்டு, காவல்துறை , ஆய்தப் படைகளைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் என்று உறுதியாகத் தெரிந்தாலும் ஆட்சித் தலைமையில் இருப்பவர்கள் அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றவே முற்படுகின்றார்கள். காவல்துறையின் மனவுறுதியை (morale of the police) பாதுகாப்பது என்று காரணமும் சொல்லப்படுகிறது.

 மூன்று, புலனாய்வின் தேவை அல்லது உடனுக்குடன் நீதி செய்தல் என்ற பெயரில் காவல்துறையின் சித்திரவதையை நியாயப்படுத்தும் மனநிலை பொதுச் சமூகத்தில் காணப்படுகிறது.

 இந்த ஒவ்வொரு சூழலையும் அறிவார்ந்து பகுத்தாய்வோமானால், சித்திரவதையை நியாயப்படுத்தச் சொல்லப்படும் காரணங்கள் ஒவ்வொன்றும் சொத்தை என்பதைத் தெளிவாகக் காணலாம். இந்தச் சூழலை மாற்றுவதற்கும் கூட சித்திரவதைக் குற்றங்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும். குற்றமெனினும்  தண்டிக்கப்படா நிலை (impunity) சித்திரவதைக் குற்றங்கள் பெருகவே வழிவகுக்கும். அது சமூகத்தை மாந்த நீக்கம் (dehumanize) செய்து விடும். 

 எனவேதான் சித்திரவதைக்கு எதிரான தனிச் சட்டம் தேவைப்படுகிறது. ப.சா., ப.ப.(எசுசி, எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இல்லா விட்டால் பல வழக்குகளில் குற்றவாளிகளைத் தண்டிக்கவே முடியாமற்போகும். இப்போதும் கூட ஆணவக் குற்றங்களுக்கு எதிரான தனிச் சட்டம் தேவைப்படுகிறது. இதே போலத்தான் சித்திரவதைக் குற்றங்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச் சட்டம் தேவைப்படுகிறது.

 இப்படித் தனிச் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய அரசமைப்பின் படி தமிழ்நாட்டுக்கு உண்டா என்றால் உண்டு. சட்டம் ஒழுங்கு, காவல் துறை எல்லாமே மாநில அதிகாரப் பட்டியலில்தான் உள்ளன. தமிழ்நாடு அரசு சித்திரவதைக் குற்றங்களைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றுமானால், இந்தக் குற்றங்கள் நிகழ்ந்து வருவதை அறிந்தேற்பதாக அமையும். இரண்டாவதாக இந்தக் குற்றங்களைத் தண்டிக்கும் விருப்பமும் மனத்திட்பமும் அரசுக்கிருப்பதை அறிவிப்பதாக அமையும்.

 நம் முதலமைச்சர் நெருக்கடிநிலைக் காலத்தில் சிறைக்கொடுமைகளைப்  பட்டறிந்தவர். அவரே சொல்லியிருக்கிறார். நானும் கம்பிக்குள் வெளிச்சங்களில் எழுதியிருக்கிறேன். அமைச்சர் மனோ தங்கராசும் காவல் நிலையத்திலும் சிறையிலும் பட்டறிவு பெற்றவர்தான். என்னைப் பற்றிச் சொல்லவே வேண்டா.

காவல் சித்திரவதை தொடர்பான தமிழக அரசின் கொள்கை என்ன? என்பது தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பிறப்பித்துள்ள 41 கட்டளைகளில் தெளிவாக வெளிப்படுகிறது. ஆளும் அரசின் இசைவில்லாமல் காவல்துறையின் தலைமை அதிகாரி தாமாக இந்தக் கட்டளைகளைப் பிறப்பித்திருக்க முடியாது. காவல் சித்திரவதை கூடவே கூடாது என்ற அரசுக் கொள்கையைத்தான் சட்டமாக்குங்கள் எனக் கோருகிறோம். இல்லையேல் இந்தக் கட்டளைகள் நிலைத்தன்மை பெற முடியாது போகும்.

 இப்போதே என்ன நடக்கிறது பாருங்கள். இகாப.(ஐபிஎசு) அதிகாரி பல்பீர்சிங்கு தன்னிடம் சிக்கியவர்களின் பல்லுடைத்திருக்கிறார். விதைக் கொட்டைகளை நசுக்கியிருக்கிறார். அவரை நியாயப்படுத்த இகாப (ஐபிஎசு) அதிகாரிகள் சங்கமே வரிந்து கட்டுகிறது. இகாப (ஐபிஎசு) படித்தது இதற்குத்தானா? இந்த அதிகாரிகளின் கையில் மனித உயிரும் உடலும் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்?

பல்பீர் சிங்குக்கு மனநோய் என்று சமாதானம் சொல்கின்றார்கள். மனநோய் என்றால் தன் மேலதிகாரிகளின் பல்லை உடைத்தாரா? தன் குடும்பத்தாரிடம் அதைச் செய்தாரா? அவரை ஏன் அரசு இவ்வளவு மென்மையாக நடத்த வேண்டும்? செய்தி உறுதியாகத் தெரிந்தவுடன் முறைப்பாடு பதிந்து முதல் தகவல் அறிக்கை கொடுத்து, தளைப்படுத்தி சிறைக்கு அனுப்பியிருக்க வேண்டாவா? எவ்வளவோ அழுத்தம் கொடுக்கப்பட்டு, சட்டப் பேரவையில் பேசப்பட்டு, முதலமைச்சர் உறுதி கொடுத்து, பாதிப்புற்றவர்கள் உண்மையை வெளிப்படையாகச் சொன்ன பிறகுதான், நாம் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிறகுதான் முதல் தகவல் அறிக்கை அளிக்கப்படுகிறது. அதிலும் ஒரு வழக்கு ப.சா.,ப.ப.(எசுசி, எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படியானது. ஆனால் பல்பீர் சிங்கு இது வரை கைது செய்யப்படவில்லை. இகாப (ஐபிஎசு) அதிகாரி ஒருவர் மீது இந்த அளவு நடவடிக்கை எடுத்திருப்பதே பெரிது என்கிறார்கள். இகாப (ஐபிஎசு) அதிகாரி என்றால் தளைப்படுத்திச் சிறைக்கு அனுப்ப மாட்டீர்களா? மற்றவர்களுக்கு ஒரு சட்டம், அவருக்குத் தனியாக  ஒரு சட்டமா? இதுதான் சட்டத்தின் ஆட்சியா?

சித்திரவதைக் குற்றம் புரிந்தவர் யாராயினும் அவருக்கு எந்தச் சலுகையும் காட்டாத படி சித்திரவதைத் தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தைக் கண்டிப்பாகச் செயலாக்கவும் வேண்டும். ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஒரு காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்க வில்லை, அந்தக் கைதி ஐயத்துக்குரிய முறையில் உயிரிழக்கிறார் என்றால், அந்த அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் கற்பிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிந்து புலனாய்வு தொடங்க வேண்டும். குற்றத்துக்கு முதனிலை அடிப்படை இருக்குமானால் அவர்களைச் சிறைப்படுத்த வேண்டும்.

சித்திரவதையைத் தங்கள் பிறப்புரிமையாகக் கருதிக் கொண்டிருக்கும் காவல்துறை  அதிகாரிகளிடமிருந்து இந்த மனநிலையைக் கெல்லியெறிய இதுதான் வழி. அவர்களைத் திருத்த வேண்டும் என்கிறார்கள். அவர்களை மட்டுமல்ல, எல்லாக் குற்றவாளிகளையும் திருத்தத்தான் வேண்டும். அதற்காகத்தான் தண்டனை தேவைப்படுகிறது. தண்டனை அவர்களை வருந்தச் செய்து திருந்தச் செய்யும். எக்குற்றம் புரிந்திடினும் தண்டிக்கப்படா நிலை (IMPUNITY) காவல்துறைக் குற்றவாளிகளைத் திருத்த உதவாது.

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் காவல்துறையினருக்குக் கல்வி புகட்டத்தான் முயல்கிறது. கண்காணிப்புப் படக்கருவிகள் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தமிழில் சுருக்கமாக மொழிபெயர்த்து ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் கொடுக்கிறோம். இந்தத் தீர்ப்பு செயலாக்கப்படுகிறதா? கண்காணிப்புப் படக் கருவிகள் உரியவாறு பொருத்தப்பட்டு இயங்கும் நிலையில் உள்ளனவா? என்று சரிபார்த்து அரசுக்கு அறிக்கையளிக்கிறோம். ஆனால் பல காவல்நிலையங்களில் எங்களை உள்ளே விடவே மறுக்கிறார்கள்.

 சாத்தன்குளம் பென்னிக்குசு செயராசு நினைவுநாளில் அவர்கள் வதைக்கபப்ட்ட அதே காவல் நிலையத்துக்கு நானே ஒருசில தோழர்களோடு நேரில் சென்றேன். அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் எங்களை உள்ளே விடவே மறுத்து விட்டார். துணைக் கண்காணிப்பளர் தன் அலுவலகத்துக்குள் எங்களை அழைத்துப் போய் பேசினார். அங்கே கண்காணிப்புப் படக்கருவி எதுவும் இல்லை எனக் கண்டோம்.

 சாத்தான்குளத்திலேயே இதுதான் நிலைமை. தமிழ்நாடெங்கும் எப்படி? என்று விரைவில் ஆய்வறிக்கை தருகிறோம். முதலமைச்சர் கையிலேயே தர விரும்புகிறோம்.

 சென்ற ஏப்பிரல் 14ஆம் நாள் பெரியகுளத்தில் அம்பேத்துகர் பிறந்த நாளில் நடந்தது என்ன? பல முறை சொல்லியிருக்கிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் காவல் நிலையத்தை மக்கள் தாக்கினர்களா? அந்தக் காவல் நிலையத்தில் வைத்து முருகன் அடித்துத் துவைக்கப்பட்டாரா? முருகன் மார்பில் பச்சை குத்தியிருந்த அம்பேத்துகர் உருவம் தாக்கப்பட்டதா? தாக்கியவர்கள் யார்? அந்தக் காவல் நிலையத்தில் கண்காணிப்புப் படக் கருவி இருந்து இந்தக் காட்சிகள் பதிவாகி இருந்தால் இந்த வினாக்களுக்கு விடைகள் கிடைத்திருக்கும்.

 புளியங்குடி தங்கசாமி எப்படிச் செத்தார்? எங்கே செத்தார்? காவல் நிலையத்திலா? நடுவண் சிறையிலா? தங்கசாமியைக் கைது செய்த போது புளியங்குடி காவல் நிலைய அதிகாரி உரிய வழிமுறைகளைக் கையாண்டாரா? அந்தக் காவல் நிலையத்தில் கண்காணிப்புப் படக் கருவி இருக்கிறதா? அதில் என்ன பதிவாகியுள்ளது? தென்காசி மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான மேற்பர்வைக் குழுவின் சார்பில் இதைச் சரிபார்த்தாரா? உள்துறைச் செயலர் மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவின் சார்பில் இதற்காக மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

 மாவட்ட ஆட்சியர் என்ன செய்தார் தெரியுமா? சடலத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று இறந்த தங்கசாமியின் தாயாரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். செய்யட்டும், சடலம் என்றால் அடக்கம் செய்ய வேண்டும்தான். ஆனால் உயிருள்ள மனிதன் எப்படிச் சடலமானான்? அது பற்றியும் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கடமைப்பட்டவர் இல்லையா? காவல் அதிகாரிகள் சொல்வதை அப்படியே நம்பிக் கொண்டு அவர்களைக் காப்பாற்றுவதுதான் மாவட்ட ஆட்சியரின் வேலையா?

 சித்திரவதைகளால் துயருற்றவர்களுக்கு ஆதரவு வழங்கும் இந்நாளில் காவல் சித்திரவதைகள் இல்லாத தமிழ்நாடு படைக்க உறுதியேற்போம்! அரசிடமிருந்தும் இந்த உறுதியை எதிர்பார்க்கிறோம். இந்த உறுதியின் அடையாளமாகத் தமிழ்நாடு காவல் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் (TAMILNADU PREVENTION OF CUSTODIAL TORTURE ACT, 2023) இயற்ற வேண்டுகிறோம்.

[நான் பேசி முடித்த பின் பேசிய அமைச்சர் மனோ தங்கராசு என் பேச்சைக் குறிப்பிட்டு, சித்திரவதைக்கு எதிரான சட்டம் இயற்றும் கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துரைப்பதாக உறுதியளித்தார்.]

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 233

சனி, 9 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 205 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2

      09 September 2023      அகரமுதல



(தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்! – தொடர்ச்சி)

வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2

நேற்று 26/06 காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் சித்திரவதை எதிர்ப்புப் பரப்புரையைப் பசுமைவழிச் சாலையில் இடம் பெற்றுள்ள மாநில மனிதவுரிமை ஆணையத்திலிருந்தே தொடங்கியது மிகப் பொருத்தமாக அமைந்தது.

மாநில மனிதவுரிமை ஆணையத்தின் தலைவர் நீதியர் எசு. பாசுகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராசு, மாநில மனிதவுரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், நீதியர் இராச இளங்கோ, அசீதா, பிரிட்டோ, சீலு பிரான்சிசு, சுதா இராமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர் வரலட்சுமி, முனைவர் குழந்தை, முனைவர் பாலமுருகன், ஆசீர், கூட்டியகத்தின் செயலாளர் தோழர் மீ.த. பாண்டியன் ஆகியோர் பேசினர்.

வீரத் தமிழ்தேசியத் தமிழர் தமக்கு ஏற்பட்ட சித்திரவதைப் பட்டறிவையும் அதற்கு நீதி பெறுவதற்கான போரட்டத்தையும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தின் சார்பில் நான் நோக்கவுரை ஆற்றினேன். எனது உரையின் முகன்மைக் கூறுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

சூன் 26 வரலாற்றில் முத்திரை பதித்த நாள்.

1945ஆம் ஆண்டு இதே நாளில்தான், இரண்டாம் உலகப் போர் முடிவதற்கு முன்பே, அமெரிக்க நகரமான சான் பிரான்சிசுகோவில் 50 நாடுகள் ஐநா பட்டயத்தில் [UNITED NATIONS CHARTER] ஒப்பமிட்டன. இதுதான் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிறப்பைக் குறித்தது. இன்றைய நிலையில் ஐநா உறுப்பரசுகள் பாலத்தீனம் உட்பட 194.

இந்தியா சார்பில் ஐநா பட்டயத்தில் ஒப்மிட்டவர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார். [ஐநாவுக்கே போனாலும் முதலியார் முதலியாராகவே போயிருக்கிறார்! முன்னொட்டு ‘சர்’ வெள்ளைக்காரன் கொடுத்த பட்டம். பின்னொட்டு ‘முதலியார்’ இந்துச் சமூகம் வழங்கிய பட்டம்.]    

1987ஆம் ஆண்டு இதே நாளில்தான் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தம் செயலுக்கு வந்தது. முன்னதாக, சித்திரவதை மற்றும் கொடிய, மனிதத் தன்மையற்ற, இழிவான நடத்துமுறை அல்லது தண்டனைக்கு எதிரான ஒப்பந்தம் (CONVENTION AGAINST TORTURE AND CRUEL, INHUMAN, DEGRADING TREATMENT OR PUNISHMENT)  வரையப் பெற்று 1984 திசம்பர் 10ஆம் நாள் ஐநா பொதுப் பேரவையில் இயற்றப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அரசுகள் ஒப்பமிட வேண்டும். ஒப்பமிட்டால் போதாது, ஏற்புறுதி செய்ய [RATIFY] வேண்டும்.

இருபது நாடுகள் ஏற்புறுதி செய்த பின் 1987 சூன் 16ஆம் நாள்தான் இந்த ஒப்பந்தம் செயலுக்கு வந்தது. அரசுகள் சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தை இயற்றுவதற்கு வாக்களித்தாலும், அதனை நடைமுறைப்படுத்த விரும்பாமையைத்தான் இது காட்டுகிறது. அரசதிகாரத்துக்குச் சித்திரவதை தேவை என்று வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும் இதுதான் அவற்றின் உள்ளக்கிடக்கை.

1987ஆம் ஆண்டு இந்த நாளில் செயலுக்கு வந்து விட்ட சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில், பத்தாண்டு கழித்து 1997ஆம் ஆண்டுதான் இந்தியா ஒப்பமிட்டது. ஆனால் இன்று வரை ஏற்புறுதி செய்யவில்லை. ஏற்புறுதி செய்வதானால் இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்பந்தத்தை முன்வைத்து இயற்ற வேண்டும். இயற்றினால்தான் அது சட்ட வலிமை பெறும். இது தொடர்பான ஐநா குழுவுக்கு இந்தியா பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் உருவாகும்.

 சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தில் ஒப்பமிட்ட இந்திய அரசு அதனை ஏற்புறுதி செய்யவில்லை என்பது இந்தியாவில் மனிதவுரிமை அமைப்புகளின் கடுமையான இடித்துரைக்கு இலக்கானதோடு பன்னாட்டு அரங்கில் இந்தியாவுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தி வந்த நிலையில், 2010ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. அவ்வளவுதான், வேறு ஒன்றும் நடக்கவில்லை.

 பன்னாட்டு அரங்கில், காட்டாக உலகளாவிய காலமுறை மீளாய்வில் (UPR) இது பற்றிய கேள்விகளுக்கெல்லாம் இந்தியத் தரப்பின் விடை “பரிசீலனையில் உள்ளது” என்பதே.  சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டுச் சட்டத்தை முறையாக மதித்து ஏற்றுக் கொண்டுள்ள 173 நாடுகளில் இந்தியா ஒன்றில்லை என்பது வெட்கக்கேடானது. இந்த நிலையில் இந்தியா ஆகப் பெரும் குடியாட்சியமாம்! சனநாயகமாம்! நம்புங்கள்!

 2002ஆம் ஆண்டு “சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்துக்கு விருப்புசார் வகைமுறை” [Optional Protocol to the Convention against Torture] இயற்றப்பட்டது. சித்திரவதை மற்றும் கொடிய, மனிதத் தன்மையற்ற, அல்லது இழிவான நடத்துமுறையைத் தடுக்கும் நோக்கம் கொண்ட இந்த ஒப்பந்தத்தின் படிக், காவல் கூடங்களைப் பன்னாட்டு மேலாய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். இது தவிர உள்நாட்டளவிலும் தற்சார்பான தடுப்புப் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும். இது வரை 91 அரசுகள் மட்டும் இந்த வகைமுறையை ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்தியா பற்றிச் சொல்லவே வேண்டா. இறையாண்மை என்னாவது? சித்திரவதை இல்லை என்றால் இந்திய இறையாண்மையைக் காக்க முடியாது என்பதுதான் அரசின் முடிவா? எனக் கேட்க வேண்டியுள்ளது.

சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டுச் சட்டம் இந்தியாவில் செயல்வடிவம் பெறாத நிலையில், இந்திய நாட்டுக்கென்று சித்திரவதைக்கு எதிரான சட்டம் ஏதும் இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ்நாடு காவல் சித்திரதைத் தடுப்புச் சட்டம் [TAMILNADU PREVENTION OF TORTURE ACT] இயற்ற வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் வலியுறுத்துகின்றோம். இந்த ஆண்டே, இந்தத் திங்களே இப்படி ஒரு சட்டம் இயற்றினால் சிறப்பாக இருக்கும் என்பது மட்டுமல்ல, அதற்கான அவசரத் தேவையும் தமிழ்நாட்டில் உள்ளது. 

1987ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தம் செயல்வடிவம் பெற்ற இந்த நாளைத்தான் “சித்திரவதையினால் துயருற்றவர்களுக்கு ஆதரவு தரும் பன்னாட்டு நாளாக”க் கடைப்பிடிக்கிறோம்.

சரி, சித்திரவதைக்கு எதிரான பன்னாட்டு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த இந்தியா மறுக்கிறது. இதற்கென்று தேசியச் சட்டமும் இல்லை, மாநிலச் சட்டமும் இல்லை. அப்படியானால் இப்போது நம் காவல் நிலையங்களில் நடக்கும் சித்திரவதை சட்டப்படியானதா? இல்லை. 1955ஆம் ஆண்டில் அது  வரை நடைமுறையில் இருந்த கசையடிச் சட்டம் ஒழிக்கப்பட்டு விட்டது. அத்தோடு எவ்வகையான உடல்-ஒறுப்புத் தண்டனைக்கும் [corporal punishment] சட்டத்தில் இடமில்லாது போயிற்று. நான் காவல்துறை அதிகாரியைத் தாக்கினால் குற்றம். அவர் என்னைத் தாக்கினாலும் குற்றம். இரண்டும் ஒரே அளவிலான, ஒரே தன்மையிலான குற்றங்கள்தாம். இரண்டுக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தில் ஒரே பிரிவு அல்லது பிரிவுகள்தாம்! பென்னிக்குசு- செயராசு கொலைக்காகச் சிறையில் இருக்கும் காவல்துறையினர் பத்துப் பேரும் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் புரிந்த குற்றத்துக்காகத்தான் சிறையில் அடைபட்டுள்ளனர் என்பதை மறவாதீர்கள்.

சித்திரவதைக் குற்றம் புரிந்தவர்களை இப்போதுள்ள சட்டங்களின் படியே தண்டிக்க முடியும். ஆனால் அது அவ்வளவு இயல்பாகவோ எளிதாகவோ நடப்பதில்லை.

 ஒன்று, இந்தக் குற்றவாளிகள் தொடர்ந்து அதிகாரத்தில் நீடிக்கின்றார்கள். சித்திரவதை அச்சுறுத்தலைக் கொண்டே பாதிக்கப்பட்டவர்களின் வாயை அடைக்க அவர்களுக்கு வாய்ப்புள்ளது. அதே போல் சான்றுகளை அழிக்கவும், சான்று சொல்லக் கூடியவர்களை ஆசை காட்டியோ அச்சுறுத்தியோ வழிக்குக் கொண்டுவரவும் வாய்ப்புள்ளது.          

 (தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 233