(தோழர் தியாகு எழுதுகிறார் 205 : வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 1/2 – தொடர்ச்சி)
வேண்டும் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் 2/2
இரண்டு, காவல்துறை , ஆய்தப் படைகளைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகள் என்று உறுதியாகத் தெரிந்தாலும் ஆட்சித் தலைமையில் இருப்பவர்கள் அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றவே முற்படுகின்றார்கள். காவல்துறையின் மனவுறுதியை (morale of the police) பாதுகாப்பது என்று காரணமும் சொல்லப்படுகிறது.
மூன்று, புலனாய்வின் தேவை அல்லது உடனுக்குடன் நீதி செய்தல் என்ற பெயரில் காவல்துறையின் சித்திரவதையை நியாயப்படுத்தும் மனநிலை பொதுச் சமூகத்தில் காணப்படுகிறது.
இந்த ஒவ்வொரு சூழலையும் அறிவார்ந்து பகுத்தாய்வோமானால், சித்திரவதையை நியாயப்படுத்தச் சொல்லப்படும் காரணங்கள் ஒவ்வொன்றும் சொத்தை என்பதைத் தெளிவாகக் காணலாம். இந்தச் சூழலை மாற்றுவதற்கும் கூட சித்திரவதைக் குற்றங்கள் தண்டிக்கப்பட்டாக வேண்டும். குற்றமெனினும் தண்டிக்கப்படா நிலை (impunity) சித்திரவதைக் குற்றங்கள் பெருகவே வழிவகுக்கும். அது சமூகத்தை மாந்த நீக்கம் (dehumanize) செய்து விடும்.
எனவேதான் சித்திரவதைக்கு எதிரான தனிச் சட்டம் தேவைப்படுகிறது. ப.சா., ப.ப.(எசுசி, எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இல்லா விட்டால் பல வழக்குகளில் குற்றவாளிகளைத் தண்டிக்கவே முடியாமற்போகும். இப்போதும் கூட ஆணவக் குற்றங்களுக்கு எதிரான தனிச் சட்டம் தேவைப்படுகிறது. இதே போலத்தான் சித்திரவதைக் குற்றங்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் தனிச் சட்டம் தேவைப்படுகிறது.
இப்படித் தனிச் சட்டம் இயற்றும் அதிகாரம் இந்திய அரசமைப்பின் படி தமிழ்நாட்டுக்கு உண்டா என்றால் உண்டு. சட்டம் ஒழுங்கு, காவல் துறை எல்லாமே மாநில அதிகாரப் பட்டியலில்தான் உள்ளன. தமிழ்நாடு அரசு சித்திரவதைக் குற்றங்களைத் தடுக்கத் தனிச் சட்டம் இயற்றுமானால், இந்தக் குற்றங்கள் நிகழ்ந்து வருவதை அறிந்தேற்பதாக அமையும். இரண்டாவதாக இந்தக் குற்றங்களைத் தண்டிக்கும் விருப்பமும் மனத்திட்பமும் அரசுக்கிருப்பதை அறிவிப்பதாக அமையும்.
நம் முதலமைச்சர் நெருக்கடிநிலைக் காலத்தில் சிறைக்கொடுமைகளைப் பட்டறிந்தவர். அவரே சொல்லியிருக்கிறார். நானும் கம்பிக்குள் வெளிச்சங்களில் எழுதியிருக்கிறேன். அமைச்சர் மனோ தங்கராசும் காவல் நிலையத்திலும் சிறையிலும் பட்டறிவு பெற்றவர்தான். என்னைப் பற்றிச் சொல்லவே வேண்டா.
காவல் சித்திரவதை தொடர்பான தமிழக அரசின் கொள்கை என்ன? என்பது தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு பிறப்பித்துள்ள 41 கட்டளைகளில் தெளிவாக வெளிப்படுகிறது. ஆளும் அரசின் இசைவில்லாமல் காவல்துறையின் தலைமை அதிகாரி தாமாக இந்தக் கட்டளைகளைப் பிறப்பித்திருக்க முடியாது. காவல் சித்திரவதை கூடவே கூடாது என்ற அரசுக் கொள்கையைத்தான் சட்டமாக்குங்கள் எனக் கோருகிறோம். இல்லையேல் இந்தக் கட்டளைகள் நிலைத்தன்மை பெற முடியாது போகும்.
இப்போதே என்ன நடக்கிறது பாருங்கள். இகாப.(ஐபிஎசு) அதிகாரி பல்பீர்சிங்கு தன்னிடம் சிக்கியவர்களின் பல்லுடைத்திருக்கிறார். விதைக் கொட்டைகளை நசுக்கியிருக்கிறார். அவரை நியாயப்படுத்த இகாப (ஐபிஎசு) அதிகாரிகள் சங்கமே வரிந்து கட்டுகிறது. இகாப (ஐபிஎசு) படித்தது இதற்குத்தானா? இந்த அதிகாரிகளின் கையில் மனித உயிரும் உடலும் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்?
பல்பீர் சிங்குக்கு மனநோய் என்று சமாதானம் சொல்கின்றார்கள். மனநோய் என்றால் தன் மேலதிகாரிகளின் பல்லை உடைத்தாரா? தன் குடும்பத்தாரிடம் அதைச் செய்தாரா? அவரை ஏன் அரசு இவ்வளவு மென்மையாக நடத்த வேண்டும்? செய்தி உறுதியாகத் தெரிந்தவுடன் முறைப்பாடு பதிந்து முதல் தகவல் அறிக்கை கொடுத்து, தளைப்படுத்தி சிறைக்கு அனுப்பியிருக்க வேண்டாவா? எவ்வளவோ அழுத்தம் கொடுக்கப்பட்டு, சட்டப் பேரவையில் பேசப்பட்டு, முதலமைச்சர் உறுதி கொடுத்து, பாதிப்புற்றவர்கள் உண்மையை வெளிப்படையாகச் சொன்ன பிறகுதான், நாம் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிறகுதான் முதல் தகவல் அறிக்கை அளிக்கப்படுகிறது. அதிலும் ஒரு வழக்கு ப.சா.,ப.ப.(எசுசி, எசுடி) வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படியானது. ஆனால் பல்பீர் சிங்கு இது வரை கைது செய்யப்படவில்லை. இகாப (ஐபிஎசு) அதிகாரி ஒருவர் மீது இந்த அளவு நடவடிக்கை எடுத்திருப்பதே பெரிது என்கிறார்கள். இகாப (ஐபிஎசு) அதிகாரி என்றால் தளைப்படுத்திச் சிறைக்கு அனுப்ப மாட்டீர்களா? மற்றவர்களுக்கு ஒரு சட்டம், அவருக்குத் தனியாக ஒரு சட்டமா? இதுதான் சட்டத்தின் ஆட்சியா?
சித்திரவதைக் குற்றம் புரிந்தவர் யாராயினும் அவருக்கு எந்தச் சலுகையும் காட்டாத படி சித்திரவதைத் தடுப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அந்தச் சட்டத்தைக் கண்டிப்பாகச் செயலாக்கவும் வேண்டும். ஒருவரைக் கைது செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஒரு காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் கடைப்பிடிக்க வில்லை, அந்தக் கைதி ஐயத்துக்குரிய முறையில் உயிரிழக்கிறார் என்றால், அந்த அதிகாரிகள் மீது கொலைக் குற்றம் கற்பிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிந்து புலனாய்வு தொடங்க வேண்டும். குற்றத்துக்கு முதனிலை அடிப்படை இருக்குமானால் அவர்களைச் சிறைப்படுத்த வேண்டும்.
சித்திரவதையைத் தங்கள் பிறப்புரிமையாகக் கருதிக் கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து இந்த மனநிலையைக் கெல்லியெறிய இதுதான் வழி. அவர்களைத் திருத்த வேண்டும் என்கிறார்கள். அவர்களை மட்டுமல்ல, எல்லாக் குற்றவாளிகளையும் திருத்தத்தான் வேண்டும். அதற்காகத்தான் தண்டனை தேவைப்படுகிறது. தண்டனை அவர்களை வருந்தச் செய்து திருந்தச் செய்யும். எக்குற்றம் புரிந்திடினும் தண்டிக்கப்படா நிலை (IMPUNITY) காவல்துறைக் குற்றவாளிகளைத் திருத்த உதவாது.
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் காவல்துறையினருக்குக் கல்வி புகட்டத்தான் முயல்கிறது. கண்காணிப்புப் படக்கருவிகள் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தமிழில் சுருக்கமாக மொழிபெயர்த்து ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் கொடுக்கிறோம். இந்தத் தீர்ப்பு செயலாக்கப்படுகிறதா? கண்காணிப்புப் படக் கருவிகள் உரியவாறு பொருத்தப்பட்டு இயங்கும் நிலையில் உள்ளனவா? என்று சரிபார்த்து அரசுக்கு அறிக்கையளிக்கிறோம். ஆனால் பல காவல்நிலையங்களில் எங்களை உள்ளே விடவே மறுக்கிறார்கள்.
சாத்தன்குளம் பென்னிக்குசு செயராசு நினைவுநாளில் அவர்கள் வதைக்கபப்ட்ட அதே காவல் நிலையத்துக்கு நானே ஒருசில தோழர்களோடு நேரில் சென்றேன். அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் எங்களை உள்ளே விடவே மறுத்து விட்டார். துணைக் கண்காணிப்பளர் தன் அலுவலகத்துக்குள் எங்களை அழைத்துப் போய் பேசினார். அங்கே கண்காணிப்புப் படக்கருவி எதுவும் இல்லை எனக் கண்டோம்.
சாத்தான்குளத்திலேயே இதுதான் நிலைமை. தமிழ்நாடெங்கும் எப்படி? என்று விரைவில் ஆய்வறிக்கை தருகிறோம். முதலமைச்சர் கையிலேயே தர விரும்புகிறோம்.
சென்ற ஏப்பிரல் 14ஆம் நாள் பெரியகுளத்தில் அம்பேத்துகர் பிறந்த நாளில் நடந்தது என்ன? பல முறை சொல்லியிருக்கிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் காவல் நிலையத்தை மக்கள் தாக்கினர்களா? அந்தக் காவல் நிலையத்தில் வைத்து முருகன் அடித்துத் துவைக்கப்பட்டாரா? முருகன் மார்பில் பச்சை குத்தியிருந்த அம்பேத்துகர் உருவம் தாக்கப்பட்டதா? தாக்கியவர்கள் யார்? அந்தக் காவல் நிலையத்தில் கண்காணிப்புப் படக் கருவி இருந்து இந்தக் காட்சிகள் பதிவாகி இருந்தால் இந்த வினாக்களுக்கு விடைகள் கிடைத்திருக்கும்.
புளியங்குடி தங்கசாமி எப்படிச் செத்தார்? எங்கே செத்தார்? காவல் நிலையத்திலா? நடுவண் சிறையிலா? தங்கசாமியைக் கைது செய்த போது புளியங்குடி காவல் நிலைய அதிகாரி உரிய வழிமுறைகளைக் கையாண்டாரா? அந்தக் காவல் நிலையத்தில் கண்காணிப்புப் படக் கருவி இருக்கிறதா? அதில் என்ன பதிவாகியுள்ளது? தென்காசி மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவிலான மேற்பர்வைக் குழுவின் சார்பில் இதைச் சரிபார்த்தாரா? உள்துறைச் செயலர் மாநில அளவிலான மேற்பார்வைக் குழுவின் சார்பில் இதற்காக மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
மாவட்ட ஆட்சியர் என்ன செய்தார் தெரியுமா? சடலத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று இறந்த தங்கசாமியின் தாயாரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தார். செய்யட்டும், சடலம் என்றால் அடக்கம் செய்ய வேண்டும்தான். ஆனால் உயிருள்ள மனிதன் எப்படிச் சடலமானான்? அது பற்றியும் விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் கடமைப்பட்டவர் இல்லையா? காவல் அதிகாரிகள் சொல்வதை அப்படியே நம்பிக் கொண்டு அவர்களைக் காப்பாற்றுவதுதான் மாவட்ட ஆட்சியரின் வேலையா?
சித்திரவதைகளால் துயருற்றவர்களுக்கு ஆதரவு வழங்கும் இந்நாளில் காவல் சித்திரவதைகள் இல்லாத தமிழ்நாடு படைக்க உறுதியேற்போம்! அரசிடமிருந்தும் இந்த உறுதியை எதிர்பார்க்கிறோம். இந்த உறுதியின் அடையாளமாகத் தமிழ்நாடு காவல் சித்திரவதைத் தடுப்புச் சட்டம் (TAMILNADU PREVENTION OF CUSTODIAL TORTURE ACT, 2023) இயற்ற வேண்டுகிறோம்.
[நான் பேசி முடித்த பின் பேசிய அமைச்சர் மனோ தங்கராசு என் பேச்சைக் குறிப்பிட்டு, சித்திரவதைக்கு எதிரான சட்டம் இயற்றும் கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துரைப்பதாக உறுதியளித்தார்.]
(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 233
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக