காலுடுவெல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காலுடுவெல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 215 : காலுடுவெல் கலைவண்ணம்

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 214 : வான்தொடு உயரங்கள் தொடர்ச்சி)

தோழர் தியாகு எழுதுகிறார்
காலுடுவெல் கலைவண்ணம்


அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இராபருட்டு காலுடுவெல் முதலில் திருத்தொண்டராக 1838இல் சென்னைக்கு அனுப்பப்பட்டு, 1841இல் இடையன்குடி வருவதற்கு முன்பே அப்பகுதியில் கெரிக்கு, சத்தியநாதன் ஆகியவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். கிறித்துவத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு சிறு கூட்டமும் உருவாகியிருந்தது. இவர்கள் வழிபாடு செய்வதற்காக ஒரு சிறிய ஆலயமும் கட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கிறித்தவர்களை முறையாக வழிநடத்த முழுநேரத் திருத்தொண்டர்கள் இல்லை. எனவே அவர்கள் முழுமையாகக் கிறித்துவத்தில் ஊன்றி நிற்கவில்லை. காலுடுவெல் பணி தொடங்கும் பொழுது இடையன்குடியைச் சுற்றி வறுமையில் வாடிய இருபது குக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கிறித்துவத்தில் இருந்தனர். அங்கிருந்த சிறிய ஆலயம் புயலால் சிதைந்து சேதமுற்றுக் கிடந்தது.

இடையன்குடி இடையர்கள் வதியும் குடியிருப்பாக இருந்து, வறட்சியாலும் பஞ்சத்தாலும் அவர்கள் குடிபெயர்ந்து சென்ற பின் பெயர் மாறாமலே நாடார்குடி ஆயிற்று. இடையன்குடி என்ற பெயர் முன்பே இருப்பினும் அந்த ஊரைத் திட்டமிட்டு ஒழுங்குற அமைத்தவர் காலுடுவெல்தாம். அவர் விரும்பியிருந்தால் அதன் பெயரை மாற்றியிருக்கலாம்.

மற்றவர்களால் தொல்லைக்கு ஆளான கிறித்தவ மக்களைத் தண்பொருநை (தாமிரவருணி) ஆற்றின் வடபுறத்தில் 150 காணி(ஏக்கர்) நிலம் வாங்கி அமைதியான இடத்தில் குடியமரச் செய்து, அந்த ஊருக்கு சாயர்புரம் என்று பெயரிட்டனர். இப்படி அமைக்கப்பட்டதுதான் சமாதானபுரமும்.

நெல்லை மாவட்டத்தில் பணியாற்றிய ஐரோப்பியக் கிறித்துவத் திருத்தொண்டர்கள் இரேணியசு, சி.யு. போப்பு, மாகாசியசு போன்றவர்கள் சாயர்புரம், சமாதானபுரம், ஞானஒளிபுரம், மெய்ஞ்ஞானபுரம், நாசரேத்து, அடைக்கலப்பட்டணம் என்றெல்லாம் விவிலியப் பெயர் சூட்டியிருந்த போதிலும், காலுடுவெல் அவ்வழியைக் கடைப்பிடிக்கவில்லை. இடையன்குடி அவரது சொந்த ஊரான Shepherdyard-ஐ நினைவூட்டியதுதான் காரணமா? உறுதியாகத் தெரியவில்லை.

இப்படியும் இருக்கலாமோ? என்று நான் ஒரு காரணம் சொன்னேன்: இடையர் என்ற பெயர் ஆயர் அல்லது மேய்ப்பரைக் குறிப்பதால், ஆண்டவரை மேய்ப்பராகவும் மக்களை ஆட்டுமந்தையாகவும் உருவகப்படுத்தும் கிறித்துவப் படிமவியலுக்கு இந்தப் பெயர் பொருத்தம் என்று காலுடுவெல் கருதியிருக்கக் கூடும். இஃது ஓர் ஊகம்தான்.

காலுடுவெல் தபுளினில் ஓவியம் படித்தவர்; அழகுணர்ச்சி மிக்கவர். இடையன்குடி ஊரையும் திரித்துவ ஆலயத்தையும் அவர் அமைத்த விதத்தில் இந்த அழகுணர்ச்சிக்கு முகன்மைப் பங்கிருந்தது. காலுடுவெல்லின் மனிதநேயத்துக்குச் சான்றாகக் கடும் பஞ்சத்தின் போது கோயில் கட்டுவதற்கான பணத்தை எடுத்து அவர் பஞ்சத்தில் தத்தளித்த மக்களுக்கு உதவிகள் வழங்கியதை அருள்திரு கிப்புசன் சுட்டிக்காட்டினார்.

திரித்துவ ஆலயக் கட்டுமானத்தில் காலுடுவெல்லின் கைவண்ணம் குறித்து அறிய இரா.பி. சேதுப்பிள்ளையிடமே திரும்பிச் செல்லலாம்:

“அக்கோவிலின் ஒவ்வோரங்கமும் கண்ணைக் கவரும் அழகு வாய்ந்து விளங்குகின்றது. ஆயினும் சாலச்சிறந்த அக்கோவில் சாளரங்களைக் கண்டோர் அவற்றின் அழகையும் அமைப்பையும் எந்நாளும் மறவார் என்பது திண்ணம். காலுடுவெல் ஐயர் களியினால் சாளரங்கள் செய்து அவற்றில் கோலமார் கோடுகள் வரைந்து காட்டினார் என்றும் அவற்றை மாதிரியாகக் கொண்டு தச்சரும் கொல்லரும் சாளர வேலை செய்து முடித்தார் என்றும் அவ்வூர் முதியோர் கூறுகின்றார்கள்….”

இடையன்குடி ஆலயம் கோதிக்கு கட்டடக் கலை மரபு (GOTHIC ARCHIECHTURE) சார்ந்து கட்டப்பட்டது. ஜெர்மனியில் கிபி 11ஆம் நூற்றாண்டில் தோன்றி 13ஆம் நூற்றாண்டில் நன்கு வளர்ச்சி பெற்ற இக்கலைமரபில் தேவாலயங்களும், அரண்மனைகளும், மாளிகைகளும் கட்டப்பட்டன. கூர்மையான வளைவு, மெல்லிய உயரமான தூண்கள், அவற்றின் புடைப்புக் கோடுகள், தூண்கள் மேல் நாற்புறம் அமைந்த வளைவுகளின் மீதான கூரை, சித்திர வேலைப்பாடு கொண்ட சாளரங்கள்… இவையெல்லாம் இக்கலைமரபின் அடையாளங்கள்.

கட்டடக்கலை பற்றி அரிச்சுவடி கூட அறியாதவன் என்றாலும் இடையன்குடி திரித்துவ ஆலயத்தின் அழகை உணர முடிகிறது. நுழைவாயிலை நடுவில் அமைக்காமல் ஓரத்தில் அமைத்தது புதுமை எனப்படுகிறது. ஆலயத்தின் சுவரும் தரையும் கருங்கற்களால் ஆனது. வெளிப்புறக் கட்டட அமைப்பு பிரெஞ்சுக் கட்டடக் கலை சார்ந்ததாம். பலிபீடத்தின் மேற்கூரையும் சாளரங்களும் கோதிக் கலை மரபை ஒட்டியதாம். சாளரச் சித்திரங்கள் காலுடுவெல்லின் கைவண்ணமாம். கண்ணாடிகளில் வரையப்பட்டுள்ள வண்ண ஓவியங்கள் ரோமானிய, அராபியக் கலை மரபுகளின் கலவையாம்.

கோயிலின் உட்புறத்தில் கூர்மையான ஐந்து வளைவுகள் மீது மரத்தால் கூரை வேயப்பட்டுள்ளது. இது பனிப் பகுதிகளுக்குரிய அமைப்பு ஆகும். கூரை குத்துச் சாய்வாய் உள்ளது.
.
1847ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய போதிலும், பசி பஞ்சம் குறுக்கிட்டதாலும், காலுடுவெல்லின் தமிழாராய்ச்சி காரணமாகவும் 33 ஆண்டு நீண்ட காலத்தாழ்வு ஏற்பட்டு 1880ஆம் ஆண்டுதான் காலுடுவெல் நெல்லை உதவி ஆயராகப் பொறுப்பேற்ற பின் தூய திரித்துவ ஆலயம் கட்டிமுடிக்கப்பெற்று திருநிலைப்படுத்தப்பட்டது.

காலுடுவெல் கல்விப்பணி ஆற்றிய காலத்தில்தான் குடியேற்ற ஆட்சியில் அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான கல்வி நிலையங்கள் என்ற கருத்தாக்கம் வலுப்பெற்றது. குடியேற்ற அரசும் பொதுக் கல்விக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. காலுடுவெல் இடையன்குடியிலும் சுற்றுப்பட்ட ஊர்களிலும் ஒன்பது பள்ளிக்கூடங்கள் திறப்பதற்கு இந்தச் சூழல் ஏற்றதாக இருந்தது. பள்ளி மாணவர்களுக்குப் பகலுணவுத் திட்டத்தையும் அவர் அறிமுகம் செய்தார். பகலுணவுத் திட்டத்தை அறிமுகம் செய்தது யார்? என்ற போட்டியில் இனி நீங்கள் காலுடுவெல்லையும் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

காலுடுவெல்லின் துணைவியார் எலிசாவும் கல்விப் பணியில் துணைநின்றார். இடையன்குடியில் தையல் பள்ளி தொடங்கினார். பெண்களுக்கான உறைவிடப் பள்ளியும் அமைத்தார்.

காலுடுவெல் குறித்து அவரது ஒப்பாய்வு மொழியியலுக்கு அப்பாலும் சொல்ல வேண்டியவை எவ்வளவோ இருப்பினும், முடிவில் நான் பதிவு செய்ய விரும்புவது அவரது சுற்றுச் சூழல் உணர்வையே. இதற்கு இடையன்குடியில் அவர் நட்ட மரங்களே உயிர்ச் சான்று. நெல்லை மாவட்டத்தின் வறட்சிக்கும் தேரிக்காட்டின் வெப்பத்துக்கும் அவ்வப்போது வாட்டிய பஞ்சத்துக்கும் காலுடுவெல் கண்ட விடை மழைவளம் பெற மரம் வளர்க்க வேண்டும் என்பதே.

“இன்னும் சில இடம் பார்க்க வேண்டும்” என்று அருள்திரு கிப்புசன் நினைவூட்ட இறங்கு பயணம் தொடங்கிற்று. ஏறுவதை விட இறங்குவது எளிது என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்தக் கோபுரத்தின் படிக்கட்டுகளில் மாறிமாறி முன்னோக்கியும் பின்னோக்கியும் அமர்ந்தும் எழுந்தும் திரும்பியும் ஒரு வழியாகக் கீழே வந்து சேர்ந்த போது ‘அப்பாடா’ என்று இருந்தது, எனக்குத்தான்!

திட்டமிட்ட படி உவரி சென்று கடற்கரையில் உட்கார்ந்து வெளியிலிருந்தே அந்தோணியார் கோயில் பார்த்து, வழியில் கப்பல் மாதா கோயில் பார்த்து விட்டு, நெல்லை புறப்பட்டோம்.

இந்த அருமையான இடையன்குடிப் பயணத்தை எளிதும் இனிதும் ஆக்கித்தந்த அருள்திரு கிப்புசன், உடன் வந்த பீட்டர், ஓட்டுநர் பாலு அனைவருக்கும் நன்றியறிகிறேன்! நெல்லையில் இது என் விருப்பம் என்று சொன்னவுடனே பார்த்துப் பார்த்து நிறைவேற்றிய பிரிட்டோவை மட்டும் மறந்து விட்டேன், பாருங்கள்!


(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 241

செவ்வாய், 12 செப்டம்பர், 2023

தோழர்தியாகு எழுதுகிறார் 208 : இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன்

      12 September 2023      அகரமுதல



(தோழர்தியாகு எழுதுகிறார் 207 : தமிழ்மணக்கும் காலுடுவெல் இல்லம் – தொடர்ச்சி)

இடையன்குடி – காலுடுவெல்லுக்கு முன்

இராபருட்டு காலுடுவெல் குறித்தும் அவரது மொழியியல் ஆய்வு, அதன் முடிவுகள் குறித்தும் அண்மைக் காலத்தில்தான் நிறைய படித்தேன். அரசியல் வகுப்புக்காகப் படித்தமையால் சற்று ஆழ்ந்தே படித்தேன் எனலாம்.

மொழிநூல் அறிஞர் காலுடுவெல் ‘திராவிடம்’ என்ற சொல்லை ஆண்டார் என்ற ஒரே காரணத்துக்காக  உடனடி அரசியல் தேவைகளுக்காக அவரைக் கொச்சைப்படுத்தும் போக்குகள் தலைதூக்கியிருக்கும் இத்தருணத்தில் காலுடுவெல்லை முறையாக அறிந்து கொள்வதும் அறியச் செய்வதும் தேவை எனக் கருதுகிறேன்.

அவர் தமிழியல் ஆய்வாளராக மட்டும் இருந்து விடாமல், தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழ் மக்களோடு அரை நூற்றாண்டுக்கு மேல் ஊடாடிப் பணி செய்தவர் என்ற உண்மை அவரை எல்லாக் கோணங்களிலிருந்தும் பயிலும் ஆவலைத் தூண்டியது. இது அறிவுசார் ஈடுபாட்டுடன் ஓர் உணர்வுசார் நேசமும் வளரக் காரணமாயிற்று.

இராபருட்டு காலுடுவெல் செய்த ஆய்வுகளும், வாழ்ந்த வாழ்க்கையும், ஆற்றிய பணிகளும் சில விடைகள் கண்ட போதே பல வினாக்களையும் விட்டுச் சென்றன. அவர் வாழ்ந்த இடையன்குடிக்குப் புறப்படும் போதே, அந்த ஊர் பற்றிய முரண்பட்ட செய்திகளை அறிந்துதான் வைத்திருந்தேன். இடையன்குடி என்ற ஊர்ப் பெயர் பற்றிப் பலரும் இப்படிப் பலவாறு எழுதியிருக்கின்றனர்:

1)      இடையன்குடி ஆதியில் இடையர்களின் குடியிருப்பாக இருந்தது. சமயப் பரப்புப் பணிக்காக அங்கு வந்து குடியேறிய இராபருட்டு காலுடுவெல் அங்குள்ள நாடார்களைக் கிறித்துவ சமயத்துக்கு மதமாற்றி, ஊரை முழுமையாகச் சீரமைத்தார். மற்ற கிறித்துவ மத போதகர்கள் தாங்கள் உருவாக்கும் குடியிருப்புகளுக்கு விவிலியப் பெயர்கள் சூட்டுவது வழக்கம். ஆனால் காலுடுவெல் அப்படிச் செய்யாமல் இடையன்குடி என்ற பழைய பெயரையே தக்கவைத்துக் கொண்டார்.

2)      அயர்லாந்தியராகப் பிறந்து சுகாட்டுலாந்தில் வளர்ந்த காலுடுவெல்லின் சொந்த ஊர் SHEPHERDYARD. இதைத் தமிழாக்கினால் இடையன்குடி என்று வரும். இடையன்குடியைக் கால்டுவெல் தேர்ந்தெடுக்க இது ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஒரு கருத்து.

3)      முன்பு இடையன்குடி வேறு பெயரால் வழங்கியிருக்க,  காலுடுவெல்தான் சொந்த ஊர்ப் பாசத்தால் இடையன்குடி என்று பெயர் சூட்டியிருக்க வேண்டும்.

4)      இயேசு கிறித்துவை ஆயராகவும் மக்களை ஆட்டு மந்தையாகவும் கருதும் கிறித்துவ மரபையொட்டி இடையன்குடி என்ற பெயரே காலுடுவெல்லுக்குப் பொருத்தமான பெயராகத் தெரிந்திருக்கலாம்.

நான் இந்தச் செய்திமுரண்கள் பற்றி கிறித்துவ சமய போதகர்கள் சிலரிடம் வினவிய போது, அவர்களும் மாறுபட்ட கருத்துகளே சொன்னார்கள். காலுடுவெல் பற்றி எழுதப்பட்ட நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்த்தால் ஓரளவு தெளிவு பிறக்கலாம்.

இரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ‘காலுடுவெல் ஐயர் சரிதம்’ நம்பகமானது என்று அறிவுலகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அந்நூலை இப்போதுதான் தேடிப் பிடித்தேன். அழகான தமிழில் சுருக்கமாகவும் சுவைபடவும்  எழுதியுள்ளார். இடையன்குடிக்கு இராபருட்டு காலுடுவெல் வந்து சேர்ந்தது பற்றி சேதுப்பிள்ளை எழுதியிருப்பதைப் படிப்போம்.

“மேல்நாட்டு நாகரிகம் தமிழ்நாட்டிற் பரவத் தொடங்கிய காலந்தொட்டு அந்நாட்டுச் சமயங்களைத் தமிழகத்திற் பரப்பக் கருதிய ஐரோப்பிய ஆர்வலர் பலர் தமிழ்மொழி பயிலத் தலைப்பட்டார். தெள்ளிய தமிழ் நூல்களின் சுவை அறிந்து திளைத்தார் சிலர். தமிழிலமைந்த அற நூல்களின்  திறங்கண்டு வியந்து அவற்றை ஐரோப்பிய மொழிகளிற் பெயர்த்தமைத்தார் சிலர். மேலை நாட்டு மொழிநூல் முறைகளைத் துணைக்கொண்டு தமிழ் மொழியை ஆராய்ந்தார் சிலர். இம்முத்திறத்தாரும் தமிழ்மொழிக்குத் தகைசான்ற தொண்டு புரிந்துள்ளார்.”

“காலுடுவெல் ஐயர் தமிழகத்தையே தாயகமாய்க் கொண்டார்; தென்தமிழ் நாடாய பொருனை நாட்டில் ஐம்பதாண்டுகட்கு மேலாக வதிந்து அருந் தொண்டாற்றினார். ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தார்; சமய ஒழுக்கத்தைப் பேணக் கருதித் திருச்சபைகள் நிறுவினார்; தூர்ந்து கிடந்த துறைகளைத் துருவினார்; திருநெல்வேலிச் சரித்திரத்தை வரன்முறையாக எழுதி உதவினார்.”

‘பொருனை நாடும் ஏசு மதமும்’ என்ற தலைப்பில், கிறித்துவம் நெல்லைச் சீமையில்  பரவிய கதையை இரா.பி. சேதுப்பிள்ளை எடுத்துரைக்கிறார். காலுடுவெல் வருகைக்கு முன்பே ஏசு மதம் பொருனையாற்றின் இரு கரையிலும் பரவி, மெல்ல அயலூர்களிலும்  நுழையத் தொடங்கியது.

“பாளையங்கோட்டைக்கும் திருச்செந்தூருக்கும் இடைப்பட்ட நெடுநிலத்தில் பெருந்தொகையினராய் வாழும் பழங்குடிகள் நாடார் என்று அழைக்கப்படுவர். இவ்வகுப்பார் வாழும் நாட்டில் கிறித்து மதம் பரவிய பான்மை அறியத்தக்கதாகும்…”

புதிய மதத்தார்க்குப், பழைய மதத்தாரால் தீங்கு விளையும் என்றஞ்சி, கிறித்துவத்துக்கு மாறியவர்கள் தனிக் குடியிருப்பு அமைத்துக் கொள்வது வழக்கமாயிற்று.

“அக்காலத்தில் நாடார்கள் சிறந்து வாழ்ந்த ஊர்களில் இடையன்குடியும் ஒன்றாகும். ஆதியில் முல்லைநில மக்களாய இடையர் மிகுதியாகக் குடியிருந்தமையால் இடையன்குடி என்று பெயர் பெற்ற அவ்வூரில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடார் வகுப்பினரே பெருந்தொகையினராய் வாழ்ந்து வந்தார்கள். வேத விளக்கச் சங்கத்தின் சிறந்த தொண்டராகிய கெற்றிக்கு என்பார் தென்னாட்டில் கிறித்து மதம் செவ்வையாகப் பரவக் கேட்டு மனமகிழ்ந்து நாடாருறையும் நாடுபோந்து ஆயிரத்து முந்நூறு மக்களை ஞான நீராட்டுவித்தார்….”  

ஆக, இரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய “காலுடுவெல் ஐயர் சரிதம்” இடையன்குடி பற்றிய சில உறுதியான செய்திகளைத் தருகிறது. அது ஆதியில் மெய்யாகவே இடையர் குடியிருப்பாக இருந்துதான் இடையன்குடி எனப் பெயர் பெற்றது. காலப்போக்கில் நாடார்கள் அந்த ஊரில் பெரும்பான்மை ஆகி விட்டனர். இது காலுடுவெல் தந்த பெயர் என்பது உண்மையன்று. அவர் விரும்பிய பெயராக இருந்திருக்கலாம். காலுடுவெல் வருகைக்கு முன்பே நாடார் சமுதாய மக்கள் கிறித்துவம் தழுவத் தொடங்கி விட்டனர்.

அப்படியானால் காலுடுவெல் வரும் போதே இருந்த இடையன்குடி எப்படி இருந்தது? இடையன்குடியில் அவர் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

இரா.பி. சேதுப்பிள்ளை வளமார் தமிழில் வாரி வழங்கும் செய்திகள் கருத்துக்குரியவை. பருகுவோம்.     (ஏற்றமா? மறக்கவில்லை அன்பரே! திரித்துவக் கோயில் பற்றிச் சொல்லும் போது சொல்கிறேன்.) 

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 235
 
 

வெள்ளி, 8 செப்டம்பர், 2023

தோழர் தியாகு எழுதுகிறார் 204 : கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்!

 




(தோழர் தியாகு எழுதுகிறார் 203 : நெல்லையில் ஊடகச் சந்திப்பு – தொடர்ச்சி)

கொல்லன் தெருவில் ஊசி விற்றேன்!

நெல்லை வரும் போதெல்லாம் சுடலைமாடன் தெருவில் தோழர் தி.க.சி.யைப் பார்த்துப் பேசாமல் திரும்ப மாட்டேன். என்னோடு உரையாடும் அந்தக் குறுகிய நேரத்தில் தன் மகிழ்வுகளையும் மனக்குறைகளையும் கொட்டித் தீர்த்து விடுவார்.

அவரது மனநிலையை அகவை முதிர்ந்த தந்தை தன் மகன் போன்ற ஒருவரைப் பார்க்கிற உணர்வு என்று சொல்ல முடியாது. நான் நெல்லை வரும் செய்தி கிடைத்ததிலிருந்தே வழி மேல் விழி வைத்து என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பார். உண்மையில் தாயைப் பார்த்த தனயனின் மனநிலையில்தான் பேசுவார். எது பற்றி எல்லாம் நான் எழுத வேண்டும் என்று அறிவுறுத்துவார். தன் கனவுகளையெல்லாம் எனக்குச் சொல்லி அவற்றை நான் மெய்படச் செய்ய வேண்டும் என்பார். அவர் என் மீது கொண்டிருந்த அந்தப் பெருநம்பிக்கையைக் காப்பாற்ற என்ன செய்யப் போகிறேன்?

முன்பு திகசி அவர்களைப் பார்க்கும் துடிப்பு போல் இப்போது காலுடுவெல்லைப் பார்க்கும் துடிப்பு தொற்றிக் கொண்டது. காலுடுவெல் 1893ஆம் ஆண்டில் மறைந்து 130 ஆண்டுகளாகின்றன. சற்றொப்ப 54 ஆண்டுகள் அவர் வாழ்ந்த இடையங்குடியைப் பார்த்தால் என் மனத்துக்கு அவரைப் பார்த்தது போலவே இருக்கும்.

22/06 இரவு எனக்கு வசதியான அறையெல்லாம் ஏற்பாடு செய்து தங்க வைத்து விட்டுப் புறப்பட்ட பிரிட்டோ “அண்ணா, ஏதும் தேவை இருந்தால் கேளுங்கள்” என்றார். இடையன்குடிதான் வேண்டும், எப்படியாவது இடையன்குடி பார்க்காமல் நெல்லையிலிருந்து புறப்பட மாட்டேன் என்று விடையளித்தேன். அவர் இனிப்பான ஒரு செய்தி சொன்னார்:

“நாளை நீங்கள் இடையன்குடி போகலாம், உறுதியாக! ரெவரெண்ட் (அருள்திரு) கிப்சன் உங்களை அழைத்துப் போவதாகச் சொல்லியிருக்கிறார். அவர் அப்பகுதியைச் சேர்ந்த சேகரகுரு. கூடுதலாக ஒன்று: நாளை குருக்களின் கூடுகையில் நீங்கள் காலுடுவெல் பற்றிச் சுருக்கமாகப் பேச வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்தக் கூட்டம் முடிந்தவுடன் அவருடனேயே நீங்கள் இடையன்குடி போகலாம்.”

ஊடகச் சந்திப்பு முடிந்தவுடன் பீட்டருடன் ஊசிக் கோபுரத் தேவாலயத்துக்கு விரைந்தேன். அருள்திரு கிப்புசன் (வயது 48) என்னை ஆர்வத்துடன் வரவேற்று அழைத்துப் போய் அந்தக் கூடுகையில் உட்கார வைத்தார். பேராயர் பருனபாசு உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். கழுத்து முதல் பாதம் வரைக்குமான வெண்ணிற நீண்ட அங்கி (CASSOCK) உடுத்தியிருந்தார். இடுப்பைச் சுற்றி இளஞ்சிவப்பு வண்ணப் பட்டை அணிந்திருந்தார். அவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அதே வெண்ணிற அங்கியில் இடுப்பைச் சுற்றி கருப்புக் கயிறு கட்டியிருந்தனர்.

அது பெரிய வழிபாட்டுக் கூடமாக இருக்க வேண்டும். பேராயர் பேசி முடித்த பின் என்னைக் காலுடுவெல் பற்றிச் சிறிது நேரம் பேச அழைத்தார். கிப்புசன் என்னை அறிமுகம் செய்து சில வார்த்தைகள் பேசினார்.

முன்பே கிப்புசன் என்னை அரை மணி நேரம் வரை பேசச் சொல்லியிருந்தார். அவ்வளவு நேரம் பேசலாமா? என்ன பேசலாம்? நெல்லையில் கிறித்துவ சமயத்தை நிறுவிய காலுடுவெல் பற்றி கிறித்துவ அருள் தந்தைகளிடமே பேசுவது எப்படி? இப்படிப் பல தயக்கங்களோடுதான் பேசத் தொடங்கினேன்.

“உங்களிடையே காலுடுவெல் பற்றிப் பேசுவது கொல்லன் தெருவில் ஊசி விற்பதைப் போன்றது” என்று சொல்லித் தொடங்கினேன்.

நம்முடைய நாடு வெப்ப மண்டலத்தில் இருக்கிறது. இங்கு பிறந்த நமக்கு இந்த வெயில் தாங்கவில்லை. மின் விசிறி இல்லாமல் உட்கார முடியவில்லை. குளிரி(ஏசி) வசதி தேவைப்படுகிறது. குளிர் மண்டலத்தில் பிறந்த காலுடுவெல் வெப்பம் தகிக்கும் செம்மண் படர்ந்த தேரிக்காட்டில் இடையன்குடியில் ஐம்பதாண்டுக்கு மேல் வாழ்ந்துள்ள செய்தி அவரது அருப்பணிப்பைக் காட்டுகிறது. நெல்லைச் சீமையையே அவர் தமது தாய்மண்ணாக மதித்துள்ளார். இந்த மண்ணையும் மக்களையும் அவர் போல் நேசித்த அயலார் யாரும் உண்டா?

தமிழ்நாட்டில் காலுடுவெல் பாதம் படாத இடமில்லை. கால்நடையாகவே தமிழ்நாடெங்கும் சுற்றியுள்ளார். தஞ்சைப் பெரிய கோயிலும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் அவரை வியப்பில் ஆழ்த்துகின்றன. அதை விடவும் தமிழ் மக்களின் பண்புகளைக் கண்டு வியக்கிறார்.

சமயப் பரப்பலுக்காகக் காலுடுவெல்லுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்த சில திருப்பணியாளர்கள் இந்நாட்டுக்கே உரித்தான வருண-சாதியமைப்பைக் கண்டு மிரட்சியுற்றார்கள். இயேசுவின் நிகர்மைச் செய்தியை இம்மண்ணில் ஊன்றுவதற்கு சாதி போடும் தடையை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கில்லை. சாதியத்திடம் அவர்கள் சரணடைந்து விட்டார்கள். நொபிலி போன்றவர்கள் பார்ப்பனர்கள் போலவே உடுத்தி, பார்ப்பனர்களைப் போலவே நடந்து கொண்டார்கள்.

இராபருட்டு காலுடுவெல் இந்த வழியை ஏற்கவில்லை. தாம் பணியாற்ற வேண்டிய மக்களை அவர் சரியாகப் படித்தார். “திருநெல்வேலி சாணார்கள் ஒரு சித்திரம்” என்பதுதான் காலுடுவெல் எழுதிய முதல் நூல். 1849இல் ஆங்கிலத்தில் இந்நூல் வெளிவந்த போது அதைப் படிக்கும் அளவுக்குக் கல்வியறிவு பெற்ற நாடார் அல்லது சாணார் அநேகமாய் எவருமில்லை.

இன்று அதே நாடார் சமுதாயம் கல்வியில் வெகுவாக முன்னேறியிருக்கிறது, முன்னேறிய சைவ வேளாளர்களை விடவும் முன்னேறியிருக்கிறது. இதற்கு அடித்தளமிட்டவர் கால்டுவெல்தாம்.

அண்மையில் ஒரு முறை “காலுடுவெல் செய்த கலகம்” என்ற தலைப்பில் அரசியல் வகுப்பு எடுத்தேன். காலுடுவெல் மொழியியல் அல்லது மொழிநூல் துறையில் செய்த புரட்சி அறிவுலகில் பரவலாக அறியப்பட்ட ஒன்றுதான். அதற்கும் மேலே சமூகக் களத்திலும் அவர் கலகம் செய்தார்.

தம் பெயரையே எல்லிசன் என்று மாற்றிக் கொண்ட எல்லிசு தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் சமற்கிருதமாகிய வடமொழியைச் சார்ந்தவையல்ல என்று வேர்ச்சொல் ஆய்வு வழியில் மெய்ப்பித்தார். அவர் 41 அகவையில் மறைந்தார். எல்லிசின் பணியை காலுடுவெல் அறிந்தேற்கிறார்.

தமிழை முதற்பெரும் உறுப்பாகக் கொண்ட திராவிட மொழிக் குடும்பம் என்ற வரையறை கால்டுவெல் செய்ததே. திராவிட மொழிகள் தென்னிந்தியாவில் மட்டுமல்ல, மத்திய இந்தியாவிலும் வடமேற்கு இந்தியாவிலும் கூட வழக்கில் இருப்பதை அவர் மெய்ப்பித்தார். திராவிட மொழிகளைச் செப்பமுற்ற மொழிகள், செப்பமுறாத மொழிகள் (திருந்திய மொழிகள், திருந்தா மொழிகள்) என்று வகைப்படுத்திப் பட்டியலிட்டார். நீலமலைத் தோடர்கள் பேசுவதும் ஒரு திராவிட மொழிதான்.

காலுடுவெல் செய்த ஆய்வில் குறை காண்போர் உளர். அதனால் அவரது மதிப்பு குன்றி விடாது. அறிவியலில் குறைகண்டு குறைகண்டுதான் முன்னேற்றம் ஏற்படும். கலிலியோவிடம் குறைகண்டால்தான் நியூட்டன், நியூட்டனிடம் குறைகண்டால்தான் ஐன்சுடைன், அவரிடமும் குறைகண்டால்தான் இசுடீபன் ஆக்கிங்கு. மொழியியல் அல்லது மொழிநூல் எனபதும் ஓர் அறிவியல்தான்.

காலுடுவெல்லிடம் சில குறைகள் கண்ட மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அதேபோது காலுடுவெல் செய்த புரட்சியை ஏற்றுப் போற்றவும் செய்தார். தனித்தமிழியக்க வரலாறு குறித்துப் பாவாணர் சொல்வார்:

“தமிழின் தொன்மையை உலகிற்கறிவித்தவர் காலுடுவெல் பெருமகனார்; தனித்தமிழுக்கு வித்திட்டவர் பரிதிமாற்கலைஞர்; செடியாகத் தழையச் செய்தவர் நிறைதமிழ் மலையாம் மறைமலையடிகளார்! நான் மரமாக வளர்த்து வருகிறேன்.”

கால்டுவெல் செய்தது ஊடுடைப்பு (breakthrough), அடிப்படையான முன்னேற்றம், புரட்சியமான மாற்றம். இது மொழித் துறையோடு நிற்கவில்லை. காலுடுவெல்லின் மொழியியல் முடிவுகளே திராவிட இயல், தமிழியல் என்ற சமூக-அரசியல் போக்குகளுக்கும் விதையிட்டது, அல்லது உரமிட்டது. மொழி வரலாற்றில் மட்டுமல்ல, சமூக அரசியல் வரலாற்றிலும் காலுடுவெல் பதித்த முத்திரை உறுதியானது, நிலையானது.

காலுடுவெல்லின் பெரும்படைப்பு (magnum opus) A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH-INDIAN FAMILY OF LANGUAGES [திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பத்தின் ஒப்பிலக்கணம்] என்ற நூல் 1856ஆம் ஆண்டு வெளிவந்தது. 1875ஆம் ஆண்டு இதன் திருந்திய இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. முதல் பதிப்பு வெளிவந்த பின் திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து வந்த புதிய செய்திகள் திருந்திய இரண்டாம் பதிப்பை வெளியிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தின. ஆனால் மூன்றாம் பதிப்பை வெளியிட அவர் இல்லாமற்போனார். காலுடுவெல் மறைந்த பின் மூன்றாம் பதிப்பைச் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது. மூன்றாம் பதிப்பில்தான் ‘அவர்கள்’ தங்கள் வேலையைக் காட்டினார்கள்.

இரண்டாம் பதிப்புக்கும் மூன்றாம் பதிப்புக்கும் பாரிய வேறுபாடுகள் இருந்தன. காலுடுவெல் எழுதிய பல பக்கங்கள் பதிப்பாசிரியர்களால் உள்நோக்கத்தோடு நீக்கபட்டிருப்பதை இன்றைய தமிழியல் மாணவர்கள் வெளிபடுத்தியுள்ளார்கள். அது என்ன உள்நோக்கம்? சாதிய நோய் பீடித்த உள்ளங்களுக்குக் கால்டுவெல்லின் அறச் சிந்தனைகள் உவப்பாய் இல்லை. காலுடுவெல்லைக் குழுதோண்டிப் புதைத்து வரலாற்றிலிருந்து காணாமல் அடிக்கும் முயற்சிதான் அது.

கால்டுவெல்லைக் கடுமையாக வெறுத்தவர்களில் ஒருவர் தமிழ்த் தாய் வாழ்த்து எழுதிய மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை என்பதைக் கேட்க உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஆம், திருவிதாங்கூரின் அடிமைமுறையையே ஆதரித்த வேளாளச் சிந்தனைக்கு கால்டுவெல்லின் அறச் சிந்தனை கசக்கத்தானே செய்யும்?

தமிழ்மொழியை வடமொழித் தளையிலிருந்தும் தமிழ் மண்ணைச் சாதிய இருளிலிருந்தும் மீட்டெடுக்க அயாரது பாடாற்றியவர் இராபருட்டு காலுடுவெல். அவரிடமிருந்து ஆய்வுக் கலையைப் பயின்றால் போதாது. ஒடுக்குண்ட மக்களிடம் அவர் காட்டிய நேசத்தை, எதிர்ப்புக்கஞ்சாத நெஞ்சுரத்தை நாமும் வரித்துக் கொள்ள வேண்டும்.

காலுடுவெல் வாழ்ந்து பணியாற்றிய காலத்தை விடவும் இது கடினமான காலம். மணிப்பூரிலிருந்து வரும் செய்திகள் இதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன. நாட்டை இருளில் தள்ள நடக்கும் முயற்சிகளை எதிர்த்து மக்களுக்கு விழிப்பூட்டும் பெரும்பணியில் இன்றே நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம்.

உரையை முடிக்கும் போது இப்படிச் சொன்னேன்:

“பேசியது போதும் என்று நினைக்கிறேன், காலுடுவெல் வாழ்ந்த மண்ணைப் பார்க்கும் அவசரத்தில் உள்ளேன். புறப்படுகிறேன். நன்றி வணக்கம்.”

அருள்திரு சேகரகுருக்கள் பலரும் என்னைக் கைகுலுக்கிப் பாராட்டினார்கள். சிலர் “காலுடுவெல் பற்றி நீங்கள் சொன்ன செய்திகள் இது வரை நாங்கள் அறியாதவை” என்றார்கள்.” கூடுகையில் கலந்து கொண்ட சேகரகுருமார்கள் 144 பேர் என்பதைப் பிறகு அருள்திரு கிப்புசன் சொன்னார்.

பகலுணவு முடித்துக் கொண்டு அருள்திரு கிப்புசன், அன்பர் நெல்லை பீட்டர் ஆகியோருடன் இடையன்குடி நோக்கிய பயணம் தொடங்கியது. இரு நாட்களாகவே எங்களை எல்லா இடத்துக்கும் அழைத்துச் சென்று கொண்டிருந்த ஓட்டுநர் பாலுவிடம் “இனி வேறு எங்கும் போக வேண்டா, நேராக இடையன்குடிதான்” என்றேன். ஆகட்டும் என்றார். கடைசியாக 1998ஆம் ஆண்டு மரணத் தண்டனை எதிர்ப்புப் பயணத்தின் போது இந்தப் பகுதியில் – கன்னியாகுமரி, இராதாபுரம், கூடங்குளம், திருச்செந்தூர், தூத்துக்குடி – கிடைத்த பட்டறிவு பற்றிப் பேசிக் கொண்டே பயணத்தில் பறந்து கொண்டிருந்தோம். நல்ல வெளிச்சம் இருக்கும் போதே இடையன்குடி சென்றடையும் துடிப்பில் வழியில் எதற்காகவும் நில்லாது சென்றோம். (இடையன்குடிச் செய்திகள் ஒருநாள் இடைவேளைக்குப் பின் சொல்கிறேன்.)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 232