உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

இறைச்சி உணவு இறைவனுக்கு இசைவா?

இறைச்சி உணவு இறைவனுக்கு  இசைவா?


வள்ளலாரின் போதனைக்கு ஏற்ப, இறைச்சி உணவை த் தவிர்க்க, அரசை எதிர்த்து ச் சட்ட ப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற,இராமலட்சுமி: நான், நெல்லை, புளியங்குடியை ச் சேர்ந்தவள். திருமணமாகி, மதுரையில் வசிக்கிறேன். கணவர், வள்ளலாரை பின்பற்றுபவர். வள்ளலாரின் ஆன்மிக தத்துவங்கள் மற்றும் கருத்துகளை, தினமும் என்னிடம் பேசுவார். மனைவிக்கு, கணவன் மாத ஊதியம் தரவேண்டும் என்ற, உச்ச நீதிமன்றத்தின் பொது உத்தரவை கூடமதித்து, ஒவ்வொரு மாதமும், 5,000 சம்பளம் தரும், நல்ல பண்பாளர். இதனால், நானும் வள்ளலாரை பின்பற்றி, அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். வள்ளலாரின் கருத்துகளை மக்களிடம் எடுத்துரைக்க, "கருணை சபை சாலை' என்ற அறக்கட்டளையை ஆரம்பித்தேன். "எல்லா மதங்களும், உயிர்களிடத்தில் அன்பு செலுத்தவே போதிக்கின்றன. எனவே, பொது மக்கள் இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்' என, போதித்தேன். இதற்காக, "இறைச்சி உணவு இறைவனுக்கு சம்மதமா?' என்ற நூலை, 2011ம் ஆண்டு வெளியிட்டேன். தனி மனித உணவு பழக்கத்தில் தலையிடும் உரிமை, எனக்கு இல்லாததால், அரசின் கவனத்தை ஈர்க்க முயற்சித்தேன். ஏனெனில், 2010ம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டிற்கு வந்தவர்களின் விருந்துக்காக, ஆயிரக்கணக்கான விலங்குகள் கொல்லப்பட்டன. "மக்கள் வரி பணத்தில் செயல்படும் அரசு, அசைவ உணவுகளை வழங்குவது தவறு. இனி, சைவ உணவுகளை மட்டுமே வழங்க உத்தரவிட வேண்டும்' என, மதுரை உயர் நீதிமன்ற கிளை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். இதற்கு நீதிபதி பாராட்டினாலும், தகுந்த பலன் கிடைக்காததால், மதுரையில் உண்ணாவிரதம் இருந்தேன். என் கோரிக்கை அடங்கிய மனுவை, தற்போதைய முதல்வரின் தனிப்பிரிவிற்கு, தொடர்ந்து அனுப்பினேன். இதன் பயனாக, தமிழ் வளர்ச்சி துறையில் இருந்து, "உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது. அரசு விழாக்களில் சைவ உணவுகளே வழங்கப்படும்' என, பதில் கடிதம் கிடைத்ததால், வெற்றியடைந்த சந்தோஷத்தில் இருக்கிறேன்.

ஞாயிறு, 2 டிசம்பர், 2012

மூன்று வேளையும் வயிறார ச் சாப்பிட்டு நிறைய நாளாயிற்று'



மூன்று வேளையும் வயிறார ச் சாப்பிட்டு  நிறைய நாளாயிற்று'

உடம்பில் தெம்பு இருக்கும் வரைக்கும் உழைத்து விட்டு, இறுதி காலத்தில் பிள்ளைகளை நம்பி இருக்கும், பல பெற்றோருக்கு, காப்பகங்களே உறைவிடமாகின்றன. காலத்தின் வேகத்திற்கும், நவீனத்தின் சாயலுக்கும் பழகி விட்ட நமக்கு, கலாசார மாற்றங்கள் மட்டும் பரிசாக கிடைக்கவில்லை, மாறாக, கலாசார சீரழிவுகளும் பெரும் சுமையாக கிடைத்துள்ளன.அந்த தாக்கத்தில் உருவானவை தான் காப்பகங்கள். பெரம்பூர், மாநகராட்சி நகர்ப்புற பெற்றோருக்கான காப்பகத்தில் வசித்து வரும் சாந்தி, 68, என்பவரோடு உரையாடியதில் இருந்து...

எவ்வளவு நாளா இந்த காப்பகத்தில் இருக்கீங்க?
மூணு வருஷமாச்சு. நானும், என் கணவரும் சேர்ந்தே தங்கியுள்ளோம். ஐந்து மகன்கள் இருந்தும் ஆதரவு இல்லாததால், காப்பகத்துக்கு வந்து விட்டோம். கடைசி காலத்தில், நான் ஒரு பையன் வீட்டில், கணவர் ஒரு பையன் வீட்டில் என்று, பராமரிப்பு என்ற பெயரில், வேலையாட்களாக பணிபுரிந்தோம். மாதத்திற்கு ஒருமுறை தான், சேர்ந்து பார்க்க முடியும். அவரை விட்டு தனியாக இருக்க முடியல. வீட்டு வேலை செய்ய அவருக்கு தெரியாது. நான் வீட்டை துடைக்கலாம். அவரால் முடியுமா? அதனால் தான் வந்து விட்டோம்.

மகன்கள் என்ன வேலை செய்றாங்க?
எல்லாரும் நல்ல வேலையில தான் இருக்காங்க. சொந்த வீடு, கார் என, எல்லாம் இருக்கு. ஐந்து பேரின் திருமணத்திற்கு பின், சொத்தை பிரித்து கொடுத்தோம்.எல்லாம் பிள்ளைகளுக்கு தானே என, கபடமில்லாமல் கழுத்தில் போட்டிருந்தது முதல், கணக்கு வைத்து பிரித்து கொடுத்தேன். இன்று, காப்பகத்தில் கிடக்கிறோம்.

பேர குழந்தைகளை பார்த்து எவ்வளவு நாளாச்சு?
எனக்கு, மூன்று பேரன், ஐந்து பேத்திகள். என் பேர குழந்தைகளுக்கு தாத்தா என்றால், ரொம்ப பிடிக்கும். அவர் நிறைய கதை சொல்வார். நான் தான் சாப்பாடு ஊட்டுவேன்.எந்த குழந்தையை பார்த்தாலும், பேர குழந்தைகளின் நினைப்பு தான் வரும். நான் அவருகிட்ட சொல்றதில்ல. காலம் கடந்து போயிடுச்சு. இனி, யார் மீதும் குற்றம் சுமத்த விருப்பம் இல்ல.என் பிள்ளைகளும் பேர குழந்தைகளும் நல்லா இருக்கணும். அதை தான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்.

காப்பகங்கள் அதிகரிக்க காரணம் என்னன்னு நினைக்கிறீங்க?
அந்த காலத்துல, என் மாமியார், 75 வயசுல தான் இறந்தாங்க. அவங்க இருந்த வரைக்கும், வீட்டு பொறுப்பை எடுத்து செய்றது, பண விவகாரம் எல்லாம் அவங்க தான்.அப்போ, மூத்தவங்கள மதிச்சோம். இப்போ வயசாயிட்டா, பெத்தவங்க கூட பாரமாகிடுறாங்க. நாளைக்கு அவங்களுக்கும் வயசாகிடும்கிறது தெரியல.எங்கள மாதிரி, பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டவர்கள் இருக்கற வரைக்கும், காப்பகங்கள் இருக்கணும். இல்லாட்டி, பிளாட்பாரம் தான் வீடாகிடும்.

உங்கள் எதிர்பார்ப்பு?
வயிறு நிறைய மூணு வேளையும் சாப்பிட்டே, ரொம்ப நாளாகிடுச்சி. வயிறும் பசிக்கல. பசி அதிகமாயிட்டா, கதவுக்கு பக்கத்துல வந்து நின்னு, தெருவுல போற வர்ற குழந்தைகளை பாத்துக்கிட்டே இருப்பேன்.பேர குழந்தைகளை பார்க்கணும்னு ஆசையா இருக்கு. அவங்களோட, ஒரு நாள் முழுவதும் இருந்தா, அந்த நாளை நினைத்து... (அழுகிறார்)அப்போது, அவரது கணவர் வந்து, "புலம்பாதம்மா' என சொல்லி, அழைத்து சென்றார். அவரிடம் பேசிவிட்டு நகர்ந்த போது, மனம் கனத்தது.

புதன், 11 ஜூலை, 2012

சம ஊட்ட உணவு

 
 சொல்கிறார்கள்
நீங்க சரியா சாப்பிடுறீங்களா?

நாடி சமன்படுத்துதல் மருத்துவர், உமா வெங்கடேஷ்: நம் உடல், நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்சபூதங்களால் ஆனது. நம் நாக்கிலேயே, பஞ்சபூதங்களும் உள்ளன. திடீரென காரமாக சாப்பிடத் தோன்றினால், நம் உடம்பில், காற்றின் அங்கம் குறைவாக உள்ளதென அர்த்தம். இதே போல், காரம், துவர்ப்பு காற்றின் அங்கம்; இனிப்பு நிலத்தின் அங்கம்; ஆகாயம் - புளிப்புத் தன்மை, நீருக்கு - உப்பு, நெருப்புக்கு - கசப்பு. பஞ்சபூதங்களின் என்ன தன்மைகள், நம் உடம்பில் குறைகிறதோ, அது தேவை என்பதை, நம் நாக்கு சொல்லும்.சாப்பிடும் போது, மெதுவாக, மென்று சாப்பிட வேண்டும். வாயின் இருபுறமும், உணவை நன்றாக பரப்பி மெல்ல வேண்டும். அப்போது தான், உமிழ்நீர் நன்றாக ஊறி, உணவுடன் இரண்டறக் கலந்து, செரிமானத்தை எளிதாக்கும். தண்ணீர் குடித்து, 15 நிமிடம் கழித்துத் தான் சாப்பிட வேண்டும். சாப்பாட்டிற்குப் பின், அரை மணி நேரம் கழித்துத் தான், தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கும் போது, நன்றாக வாயில் பரப்பி, அமைதியாக ருசித்து குடிக்க வேண்டும்.எந்த ஒரு காய் சாப்பிட்டாலும், அடுத்து குறைந்தபட்சம், 11 நாட்களுக்கு அதை ஒதுக்க வேண்டும். ஒரே காய்கறியை தொடர்ந்து சாப்பிட்டால், ஒரே விதமான சத்து தான் உடலுக்கு கிடைக்கும். இன்று, உணவில் துவரம் பருப்பு சேர்த்தால், நாளை பாசிப் பருப்பு சேர்க்க வேண்டும்.சாப்பிடும் போது, இரண்டு உதடும் சேர்ந்தே இருக்க வேண்டும். உள்ளுக்குள்ளேயே உணவு நொறுங்க வேண்டும். சாப்பிடும் போது பேசினால், காற்று உள்ளே போய், உணவுடன் கலந்து, வாயு சேர்ந்துவிடும்.காலையில் யோகா, மூச்சுப் பயிற்சி செய்துவிட்டு, அரை எலுமிச்சம்பழம், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும். இதில், உடலுக்கு தேவையான இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, லேசான கசப்பு கிடைக்கும். இது, உடம்பின் பஞ்சபூத சக்தியை ஈடு செய்யும்.காலையில் சத்தான உணவு, மதியம் மிதமான உணவு, இரவு மிக லேசான உணவு. இது தான், உடலை எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்க வைக்கும்!

வியாழன், 21 ஜூன், 2012

உணவே மருந்து! அன்றாடம் 2 மிளகு சாப்பிடுங்கள்


நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.

 
ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.
 
கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.
 
தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.
 
இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.
 
நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.
 
உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.
 
பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.
 
சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.
 

திங்கள், 14 மே, 2012

விடுதலையின் அடிப்படை உணவு இறையாண்மை ?

இறையாண்மை என்னும் சொல்லை அவரவர் விருப்பத்திற்கேற்ப பயன்படுத்துகின்றனர். இந்த இடத்தில் இந்தச் சொல் பொருந்தாது. உணவு நிறைவாண்மை என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /


விடுதலையின் அடிப்படை உணவு இறையாண்மை: எம்.எஸ். சுவாமிநாதன்

தினமணி First Published : 14 May 2012 03:28:26 AM IST


புது தில்லி, மே 13: தேச விடுதலையின் அடிப்படையே "உணவு இறையாண்மை'தான். நாடாளுமன்ற மகுடத்தின் மணியாக ஆற்றல் மிக்க உணவுப் பாதுகாப்பு மசோதா திகழும்.  எனவே, தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும். அது ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு தானியம் பெறுவதற்கான உரிமையை சட்டமாக்குகிறது என்று எம்.எஸ். சுவாமிநாதன் (மாநிலங்களவை நியமன உறுப்பினர்) குறிப்பிட்டார். நாடாளுமன்ற முதல் அமர்வின் 60வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசியவர்கள் விவரம்:  சுகேந்து சேகர் ராய் (திரிணமூல் காங்கிரஸ்): வளர்ந்து வரும் அரசியல் அவநம்பிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நாடாளுமன்றத்தின் தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் நம்பிக்கையை நாம் வெல்ல முடியும்.  மோகன் சிங் (சமாஜ்வாதி): ஜனநாயகத்தை வலுப்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  திருச்சி சிவா (திமுக): கமிட்டி முறையை கொண்டுவந்ததையும்; நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொலைக்காட்சியில் காண்பதற்கு வழி செய்ததையும் நான் வரவேற்கிறேன்.  தாரிக் அன்வர் (தேசியவாதி காங்கிரஸ்): இடையூறுகளால் 30 சதவிகித நாடாளுமன்ற நேரம் வீணடிக்கப்படுவதாகத் தெரிகிறது. நாம் ஜனநாயகத்தை வலுப்படுத்தும்போது, இடையூறுகளின்றி விவாதிக்க முடியும். ஊழல், தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மங்கள கிரண் (பிஜு ஜனதா தளம்): வேலையில்லாத் திண்டாட்டமும் பயங்கரவாதமும் தீவிரவாதமும் நல்லாட்சி இல்லை என்பதையே பறைசாற்றுகின்றன.  தேவேந்தர் கெüட் (தெலுங்கு தேசம்): நாட்டின் கூட்டாட்சித் தன்மையை உறுதிப்படுத்த ஒரு குறிப்பிட்ட அமைப்புமுறை ஏற்படுத்தப்பட வேண்டும்.