(சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59
- ?. 57 உபநிடதங்கள் சிறப்பானவை என்கிறாரே ஒருவர்
- உபநிடதங்கள் எண்ணிக்கை வழக்கம்போல் மிகையாகக் கூறப்படுகின்றது. 1008 உபநிடதங்கள் உள்ளன என்றும் ஏட்டு வடிவில் உள்ளவை 108 என்றும் கூறுகின்றனர். இவற்றுள் குறிப்பிடத்தக்கன 18. அவற்றுள்ளும் சிறப்பானவை 12. அவற்றிலும் இன்றியமையாதன 10 எனப்படுகின்றது. வழக்கம்போல் இல்லாத உயர்வுகளை இவ்வுபநிடதங்களில் ஏற்றிப் பெருமை கூறப்படுகின்றது. உபநிடதங்கள் புத்த மதக் கருத்துகள் பலவற்றை உள்ளவாங்கியுள்ளன. அதனால் சில நல்ல கருத்துகளும் இடம் பெற்றிருக்கலாம். எனினும் அவை வேதங்களின் உட்பிரிவுகள்தான். எனவே, வேதங்களின் தீமைகள் இவற்றிலும் இருப்பது இயற்கைதானே. எடுத்துக்காட்டிற்கு ஒன்று கூறுவோம்.
சனாதவாதிகளால் பாராட்டப்படும் சந்தோகிய உபநிடதம், “(கடந்த பிறவியில்) இவ்வுலகில் நற்செயல்கள் செய்தவர்கள் அதற்கேற்ப நல்ல பிறப்பை அடைகிறார்கள். அவர்கள் பிராமணராகவோ, சத்திரியராகவோ அல்லது வைசியராகவோ பிறக்கிறார்கள். ஆனால், இவ்வுலகில் கெட்ட வேலைகளைச் செய்தவர்கள், நாயாகவோ, பன்றியாகவோ, சாதியற்றவர்களாகவோ பிறந்து அதற்கேற்ப கெட்ட பிறப்பை அடைகிறார்கள்.” என்கிறது. செய்யும் கருமத்திற்கேற்ப உயர் பிராமணனாகவோ ‘இழி சூத்திரனாகவோ’ பிறப்பான் என்பதை இது கூறுகிறது. இத்தகைய உடநிடதத்தைத்தான் சிறப்பானதாக மதிப்பிற்குரிய மேதை கூறுகிறார்.
முதலில் உபநிடதம் பொருளைப் பார்ப்போம். உபநிசத்து என்னும் சமற்கிருதச் சொல்லைத்தான் தமிழ் வடிவில் உபநிடதம் என்கிறோம்.
உபநிசத்து என்றால் குருவின் அருகே அமர்ந்து கேட்டல் எனப் பொருள் சொல்லுகின்றனர். மற்றொரு பொருள் விளக்கமும் தரப்படுகின்றது. இல்லாத பொருளை இருப்பதுபோல் கற்பிதம் செய்யும் முறைதான் அது. அதன்படி, உப+நி+சத்து என்னும் மூன்று சொற்களின் கலவைதான் இச்சொல்.
உப என்றால் உபதேசம் எனப் பொருளாம்.
‘நி’ என்றால், ஐயங்கள் அகலும்படி அவ்வுபதேசங்களைக் கேட்பது எனப் பொருளாம்.
சத்து என்றால் அஞ்ஞானம் அழிந்து பிரம்மத்தின் ஞானம் ஏற்படுகிறது எனப் பொருளாம்.
உப என்பது பாலிமொழிச்சொல். இதிலிருந்து சமற்கிருதத்தில் இடம் பெற்றுள்ளது. கிரேக்கம், இலத்தீன் மொழிகளிலும் இச்சொல் இடம் பெற்றுள்ளது.
தமிழில் உ என்பது சுட்டுச்சொல் மட்டுமல்ல உயர்வைக் குறிக்கவும் பயன்படுகிறது. இதிலிருந்து பிறந்த உகம், உத்தரம், உயர்வு, உச்சம் முதலான பல சொற்களும் உயர்வை அல்லது மேலே என்னும் பொருளில் அமைவனவே. எனவே, தமிழிலிருந்து பாலிக்கு இச்சொல் சென்றது எனலாம். உ விலிருந்து உப தோன்றியுள்ளது.
நான்கு வேதங்களுக்கும் பல கிளைகள் உள்ளன. அவற்றிற்குச் சாகைகள் என்று பெயர். ஒவ்வொரு வேதசாகை முடிவிலும் ஒரு உபநிசத்து இருந்திருக்க வேண்டும் என்று கூறிக்கொள்கின்றனர். பற்பல சாகைகள் இன்று இல்லாமல் போனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட உபநிசத்துக்கள் கிடைத்துள்ளன என்கின்றனர். வேதங்களிலுள்ள சடங்குகளைப்பற்றிய விவரங்களும், அவற்றில் எங்கும் அள்ளித் தெளிக்கப் பட்டிருக்கும் தெய்வ அசுர இனத்தாருடைய பரிமாறல்களும் இவற்றில் காணப்படுகின்றன. மனிதக்குலத்திற்கு எதிரான வேதங்களின் சாரமாக உபநிசத்துகள் உள்ளன என்பதிலிருந்தே இவற்றின் தகுதியின்மை நமக்கு நன்கு புரியும்.
உபநிடதங்கள் செம்மொழியிலக்கியம் அல்ல , இலக்குவனார் திருவள்ளுவன் உரை, தமிழ்க்காப்புக் கழகம்
மனிதக் குலத்திற்கு எதிரான கருத்துகள் எங்கிருந்தாலும் அவை அறியப்பட்டால் எதிர்க்க வேண்டியதே மனித நேய மாந்தர்களின் கடமை. அம்மொழியில் உள்ள அநீதியான கருத்துக்ள பிற மொழிகளுக்கு இறக்குமதி செய்யப்பெற்றுப் பிற மொழி மக்களையும் பாழ் படுத்தும் பொழுது பிற மொழியினர் கடுமையாக எதிர்க்க வேண்டியதே கடமை. தமிழில் பொல்லாங்கான சனாதனத்திற்கு ஆதரவாகக் கருத்துகள் பரப்பப்படும்பொழுது அவற்றால் மக்களுக்கு எதிர்ப்படும் தீங்குகளில் இருந்து காப்பதுதானே நம் முதற்கடமை. அக்கடமையைத்தான் தமிழர்கள் ஆற்றி வருகின்றனர்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக்.83-85
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக