(சனாதனம் – பொய்யும் மெய்யும் 45-47 தொடர்ச்சி)

  • இப்படிச் சொல்பவர்கள்தான் மக்களுக்கு எதிரி. ஒரு வகுப்பாரை உயர்த்தியும் பிற வகுப்பாரையும் தாழ்த்தியும் சொல்வதிலிருந்தே பிற வகுப்பாருக்குச் சனாதனம் எதிரி என்பது புரியவில்லையா? இதன் மூலம் அந்த ஒரு வகுப்பாருக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதால் அவர்களுக்கும் சனாதனம் எதிரிதான். இந்நூலில் உள்ள பிற செய்திகளைப் படித்ததுப் பார்த்தாலே புரியும்.
  • சனாதனம் அனைத்து மதங்களையும சமமாக மதிக்கவில்லை; பிற சமயத்தவருக்கு எதிரியாகத் திகழ்கிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான எடுத்துக் காட்டுகளைக் கூறலாம். சான்றுக்கு ஒன்று.
  • குடியுரிமைச் சட்டத்திருத்தத்துக்கு எதிராகத் தில்லி சாஃகின் பக்கு(Shaheen Bagh) இடத்தில் பல நாட்களாக போராட்டம் நடந்தது. 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தில்லிச் சட்டப்பேரவை தேர்தலில் பாசக வெற்றி பெற்றால் பள்ளிவாசல்கள் இடிக்கப்படும்; உடன்பிறந்த பெண்களும் பெண் குழந்தைகளும் கற்பழிக்கப்படுவார்கள்; கொல்லப் படுவார்கள் என்று அப்போது சனாதன பாசக நா.உ.பருவேசு வெருமா(Parvesh Verma) மிரட்டினார். சனாதன அரசும் சனாதனக் கட்சியும் இவர் மீது எந்நடவடிக்கையும் எடுக்க வில்லை.

? “திருப்பாணாழ்வார் கோயிலுக்குச் சென்றால் அங்குள்ள நந்தியின் சிலை சற்று விலகி இருக்கும். ஏன் இப்படி விலகி இருக்கிறது? ஒரு கீழ்ச் சாதியை சேர்ந்த மனிதர் சிவனைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறார். அவரது சாதியைக் காரணம் காட்டி அவருக்கு அங்கிருந்தவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவனின் நந்தி (காளை), தான் அமர்ந்திருந்த இடத்தில் இருந்து சற்று விலகிச் சென்று உட்கார்ந்து கொண்டு, அந்த மனிதர் சிவனைப் பார்க்க அனுமதித்தது. இதுதான் சனாதன தருமம்” என்று அண்ணாமலை கூறியுள்ளார். 

திருப்பாணாழ்வார் கோயியில் நந்தி சிலை இருப்பதாகக் கூறுகிறார். ஆழ்வார் கோயில்களில் – வைணவர் கோயில்களில்- வாயில் முகப்பில் நந்தியா? கம்பர் இராமாயணத்தைச் சேக்கிழார் எழுதியிருக்கும் போது வைணவர் கோயில்களில் நந்தி இருக்காதா என எண்ணி நந்தி விலகிய கோயில்களின் பட்டியலைப் பார்த்தேன். இவர் குறிப்பிடும் பெயரில் கோயில் இல்லை. உண்மை என்னவென்றால், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திருப்பாணாழ்வார் தலையில் கல்லெறிந்து காயம் ஏற்படுத்திய (உ)லோகசாரங்கர் முனிவர் கனவில் கடவுள் தோன்றி அவரிடம் திருப்பாணாழ்வாரைத் தோளில் சுமந்து கோயிலுக்கு அழைத்து வரச் சொன்னார் என்பதுதான் கதை. பாணர் குலத்தைச் சேர்ந்த பாண் பெருமாள் என்னும் இறையன்பரே,  திருமால் மீது மிகுந்த பத்தி(பக்தி) கொண்டிருந்தார். எனினும்,  திருவரங்கத்தின் உள்ளே நுழைவதற்கும் அம்மண்ணை மிதிப்பதற்கும் தன் குலத்தார்க்கு அனுமதி இல்லை என்பதால் அஞ்சி காவிரியின் மறுகரையில் இருந்தவாறே பண் இசைத்துத் திருவரங்கனைப் பாடித் தொழுதார். இவரைத் தன் மீது அன்பு கொண்ட முனிவர் ஒருவர் மூலம் தோளில் சுமந்து வரச்செய்து காட்சியளித்த திருமால், புறக்கணிப்போ தீண்டாமையோ இல்லாமல் மக்கள் அனைவரும் தன்னைக் காண நடவடிக்கை எடுத்திருக்கலாமே!

  • நந்தனுக்காகத் திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயிலில் நந்தி விலகிய கதையைச் சொல்வார்கள். அதைத்தான் இவர் மாற்றிச் சொல்கிறார். நந்தியை விலகச்சொன்ன சிவபெருமான் நந்தியிடம் நந்தனாரைச் சுமந்து தன்னிடம் அழைத்து வருமாறு சொல்லி யிருக்கலாமே. கடவுள் யார், யார் தன்னைக்காண வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கேயே காட்சியளிப்பவர் என இதற்கு மழுப்பி விளக்கம் தருகின்றனர்.

ஆனால் சிதம்பரத்தில் பலரும் எண்ணுவதுபோல் நந்தி விலகவில்லை.

தீண்டத்தகாதவர் என்று பழிக்கப்படுபவரைக் கோயிலுக்குள் நுழைய சனாதனம் இடம் தரவில்லை. வெளியில் இருந்து பார்ப்பதற்குத்தான் வழி விடுகிறது.இதைச் சனாதனத்தின் பெருமை என்று சொல்பவர் எப்படிக் காவல்துறை உயர் அதிகாரியாக இருந்தார் என மக்கள் எண்ணுகிறார்கள்.

எப்படியிருந்தாலும் கடவுள், தன் அன்பருக்காக நந்தியையே விலகச்செய்து காட்சியளித்தைச் சனாதனம் என்பது சரிதான். இதனால்தான் இத்தகைய சனாதனத்தை வேண்டா என்கிறோம். இதில் கடவுளே தாழ்த்தப்பட்டவரைக் கோயிலுக்குள் வர விடவில்லை. தானும் அவர் அருகே வரவில்லை எனத் தீண்டாமையையும் நெருங்காமையும் தானே கடவுளே கடைப்பிடித்துள்ளார். எனவே, மக்களும் இவ்வாறு தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்றுதானே ஆகிறது. இத்தகைய சனாதனம் அனைவரையும் சமமாக மதிக்க வேண்டிய நாட்டிற்குத் தேவையா?

ஆளுமைத் திறன்மிக்க தினகரன் கற்றலிலும் கேட்டலிலும் நன்கு கருத்து செலுத்த வேண்டும். காலத்திற்கேற்ப மாற்றங்கள் என இவர் காலத்திற்கேற்ப பிற நூல்களில் உள்ள நல்ல செய்திகளைத் திணித்து சனாதனத்திற்கு மறுவாழ்வு தர மேற்கொண்ட முயற்சிகளைத்தான் குறிப்பிடுகிறார். எல்லா மதங்களிலும் இத்தகைய சனாதனம் இருப்பதாகக் கூறுவது அறிந்தே சொல்லும் பொய்யா? அடுத்தவர் எழுதிக் கொடுத்ததை உண்மை அறியாமல் ஒப்பிப்பதா?12