(சனாதனம் – பொய்யும் மெய்யும் 57-59 தொடர்ச்சி)
சனாதனம் – பொய்யும் மெய்யும் 60-61
- ? 60. தமிழர்கள் மட்டும்தான் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனரா?
அல்ல! அல்ல! அல்ல!
இந்தியாவெங்கும் சமற்கிருத எதிர்ப்பு காலந்தோறும் இருக்கத்தான் செய்கிறது. பிற மொழிகளில் உள்ள சமற்கிருத அறிஞர்களே, சமற்கிருதத்தின் பொய்மைகளைப் படம் பிடித்துக் காட்டுகின்றனர்.
பிராகிருத மொழியினர் எந்த அளவிற்குச் சமற்கிருதத்தை எதிர்க்கின்றனர் என்பதற்குச் சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.
பிராகிருத காவியத்தை வணங்குவோம் ! அம்மொழியில்
கவிதை யாத்தவர்களையும் வணங்குவோம்
சமற்கிருதக் காவியத்தைக் கொளுத்துவோம்! யார்
அம்மொழியில் காவியம் படைத்தார்களோ
அவர்களையும் கொளுத்துவோம்.!
– பேராசிரியர் முனவைர் ப.மருதநாயகத்தின், ‘வடமொழி ஒரு செம்மொழியா?’ என்னும் நூலிலிருந்து (தரவு: அ.கார்த்திகேயன், பிராகிருத மொழியில் மொழி உணர்ச்சி)
தமிழர்கள் சமற்கிருத இலக்கியங்களைக் கொளுதத வேண்டும் என்று கூறவில்லை. அவற்றிலுள்ள மனித வேறுபாட்டுக் கருத்துகளையும் அறமற்ற கருத்துகளையும்தான் எதிர்க்கின்றனர். சமற்கிருத நூல்களிலேயே சமற்கிருத எதிர்ப்பைக் காணலாம். சான்றாக ‘மிருச்சகடிகா’ என்னும் சமற்கிருத இலக்கியத்தில் மூக்கணாங்கயிறு கட்டாத எருமை கனைப்பதுபோல் சமற்கிருத மொழி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதைக் காணலாம். எனவே, தமிழர்கள் கண்மூடித்தனமாக எதிர்க்க விலலை என்பதையும நமக்கு அழிவு ஏற்படுத்தக் கூடியவற்றையே எதர்க்கின்றனர் என்பதையும் உணரலாம். ஆகவே சனாதன எதிர்ப்பு என்பது சமற்கிருத வெறுப்பினால் கூறப்படவல்லை என்பதையும் மனிதக் குலத்திற்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காவே என்பதையும் நாம் உணர்ந்து எதிர்ப்பாளர் அணியில் இணைந்து எதிர்க்க வேண்டும்.
- ? 61. திருமந்திரத்தைச் சனாதனம் என்கிறாரே ஒருவர்.
- யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை;
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை;
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி;
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
(திருமந்திரம்- 252)
இதனைச் சனாதனம் எனச் சேக்கிழான் என்பவர் கூறுகிறாரே!
- இறை இலக்கியங்களிலும் பிற இலக்கியங்களிலும் கூறப்படும் தமிழ் நெறிகளை வேதத்துடன் தொடர்பு படுத்தித் தவறான விளக்கத்தைப் பரப்புவதே சில தரப்பார் வழக்கம். அப்படித்தான் இதற்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.
‘இனியவை கூறல்’ என ஓர் அதிகாரத்தையே திருவள்ளுவர் திருக்குறளில் வழங்கியுள்ளார்.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். (திருக்குறள் 97) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.
நற் பயனைத் தரக்கூடிய நற் பண்பிலிருந்து விலகாத சொற்கள் அவற்றைக் கேட்போருக்கு மட்டுமல்லாமல் அவற்றைக் கூறுவோருக்கும் இன்பத்தையும், நன்மையையும் உண்டாக்கக் கூடியவை என்கிறார் அவர். இக்கருத்துகளுக்கு இடந் தராத சனாதனம் என்பதே ஆரிய வழி முறை என்னும் பொழுது தமிழ்ச் சனாதனம் என்பது எப்படிப் பொருந்தும்? தமிழ்நெறிகளை எல்லாம் ஆரியமாகக் கூறுவதுதான் ஆரியவாதிகளின் வழக்கம். அப்படித்தான் இங்கும் கூறப்பட்டுள்ளது. ஆரியத்தைச் சொன்னால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதால் தமிழ்நெறியை ஆரியமாகத் திரித்துக் கூறுகின்றனர்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
சனாதனம் – பொய்யும் மெய்யும் பக். 85-87
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக