சனாதனம் – பொய்யும் மெய்யும் 54-56
- ? 54. “சனாதனம் குறித்து உதயநிதி தாலின் பேசுகிறார். இல்லாத ஒன்றை ஒழித்துக் கட்டுவதாகப் பேசுவது கடும் கண்டனத்திற்குரியது.” என்கிறாரே மேனாள் முதல்வர் பன்னீர் செல்வம்.
- சனாதனம் இல்லை என்கிறாரா? இல்லாததைப் பற்றிப் பேசினாலே பைத்தியங்கள், உளறட்டும் என்று ஒதுங்கவேண்டியதுதானே. சனாதனம் உள்ளமையால்தானே – அஃது அநீதிகளின் முழுவடிவமாக இருப்பதால்தானே, அதனை உதயநிதி சுட்டிக்காட்டும் போது, பொங்கி எழுகிறார்கள். உள்ளதைச் சொன்னால் கோபம் வருவது இயற்கைதானே அதுதான் கோபம் வருகிறது. திராவிட இயக்க வழிவந்த கட்சியின் பொறுப்பாளரான இவர் ஏன் வாய் திறக்கிறார்? பா.ச.க.வின் கடைக்கண் பார்வைக்காக ஏங்கிக் கொண்டிருப்பதால் இப்படிப் பேசுகிறார். இல்லை இல்லை. சனாதனம் இருக்கின்றது. ஆனால் பாகுபாடு இல்லை என்கிறாரா?அப்படி என்றால் சனாதனத்தில் இவருக்குள்ள இழி நிலையைப் படித்து அறியட்டும். பின்னர் உண்மை உணர்வார்.
- ? 55. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனத் தமிழிலும், வசுதைவ குடும்பகம் (உலகமே ஒரு குடும்பம்) என வடமொழியிலும் சொல்லிக் கொடுத்தது சனாதனம் என இரங்கராசு கூறுவது சரியா?
- அனைத்து ஊரையும் நம் ஊராகவும் அனைவரையும் நம் உறவினராகவும் எண்ணிப் போற்ற வேண்டியதுதான் புறநானூறு கூறும் தமிழ் நெறி. ஆனால், பிராமணர் அல்லாதவர்களை இணையாகக் கருதாச் சனாதனம் எப்படி இதற்கு ஒப்பாகும்? பிராமணர்கள் வசிக்கும் (அக்கிரகாரத்) தெருவையும் குடியிருப்புப் பகுதியையும் மட்டுமே உயர்வாகக் கூறும் பிராமணர்கள் எங்ஙனம் யாதும் நம் ஊர் என்பதைப் பொதுமை உணர்வில் ஏற்பார்கள். ஆனால், சூத்திரர்கள் சொத்துகள் யாவும் தமக்கே உரியது என எழுதியும் பேசியும் வரும் இவர்கள்( பிற பகுதிகளில் காண்க) அந்தப் பொருளில் வேண்டுமானால் யாதும் தம் ஊர் என்பார்கள்.
- வசுதைவ குடும்பகம் என்பதும் தமிழ்நெறியைப் பார்த்துச் சமற்கிருத நெறியில் புகுத்தப்பட்ட கருத்துதான்.
- ? 56. சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அறநிலையத் துறையைக் கலைத்துவிட வேண்டியது தானே? என்கிறாரே இரங்கராசு
- சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென்றால், அவற்றின் ஆணி வேராக இருக்கும் கோவில்களில் மூக்கை நுழைப்பது ஏன்? அறநிலையத் துறையைக் கலைத்துவிட வேண்டியது தானே? என்கிறாரே இரங்கராசு (பாண்டே).
- தமிழர்க்கான தமிழர்களால் அமைக்கப்பட்ட தமிழ்க் கடவுள்களுக்கான கோயில்களில் தமிழர்கள் புறக்கணிக்கப் படும் பொழுது அமைதியை எங்ஙனம் காக்க இயலும்? அப்பொழுது அரசு தன் கடமையை ஆற்றும் பொழுது எங்ஙனம் அதை மூக்கை நுழைப்பதாகக் கூற இயலும்?
- சிதம்பரத் தீட்சிதர்களின் தமிழ்ப்புறக்கணிப்பு, தமிழ் வழிபாட்டை மறுத்தல் போன்றவற்றை அறநிலையத்துறை தட்டிக் கேட்கும் பொழுது அதைக் கலைக்கவேண்டும் என்று தமிழ்ப்பகைவர்கள் கூக்குரல் எழுப்புகின்றனர்.
- கோயில்களைப் பயன்படுத்திச்சனாதனத்தைத் திணித்துக் கொண்டு அதனையே சனாதனத்தின் ஆணி வேர் என்பதா?
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
- சனாதனம் – பொய்யும் மெய்யும் பக்.81-82
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக